adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
தனம் தரும் தர்ம,கர்மாதிபதி யோகம்….! B-002

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888


ஜோதிட சாஸ்திரம் ஒரு ஜாதகத்தின் அதிர்ஷ்ட ஸ்தானங்களாக 1,5,9 ம் வீடுகளையும், செயல்  வீடுகளாக  1,4,7,10 ம் இடங்களையும் குறிப்பிடுகிறது. இவ்விரண்டு பாவங்களும் முறையே திரிகோணம் மற்றும் கேந்திர ஸ்தானங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இந்தத் திரிகோணம், கேந்திரம் இரண்டிலும் இடம்பெறும் ஒன்றாம் வீடுதான் லக்னம் என்று அழைக்கப்படுகிறது. சுருக்கமாகச் சொல்லப்போனால் இந்த ஒன்றாம் ஸ்தானமான லக்னம் என்பது நீங்கள் தான்.....!


முதல் வீடு எனப்படும் லக்னமும், அதன் அதிபதியான கிரகமும் உங்களைத்தான் சுட்டிக் காட்டுகின்றன. உங்கள் சிந்தனை, செயல்பாடு, ஆக்கத் திறன், நீங்கள் எப்படிப்பட்டவர்? கோபக்காரரா? முட்டாளா? அறிவாளியா? கருணை உள்ளவரா? ஏமாற்றப் பிறந்தவரா? ஏமாளியா? என்பது போன்ற அனைத்தையும் லக்னாதிபதியே நிர்ணயிக்கிறார்.

ஆகவே அதிர்ஷ்டமும், செயலும் இணைந்தால்தான் வெற்றி எனும் கருத்தில் முதல் வீடாகிய லக்னம் திரிகோணத்திலும், கேந்திரத்திலும் இணைக்கப்பட்டு,  இரண்டிற்கும் பொதுவானது எனப்படுகிறது.

இந்த லக்னபாவத்திற்கு, அதாவது உங்களுக்குத் துணைபுரியும் முதன்மையான அதிர்ஷ்ட மற்றும் செயல் வீடுகளாக, திரிகோணங்களில் பெரிய பாவமான  அதிர்ஷ்ட ஒன்பதாம் வீடும், கேந்திரங்களில் பெரிய வீடான, செயல் பத்தாம் வீடும் அமைகின்றன.
இதில் ஒன்பதாம் பாவம் தர்ம ஸ்தானம் எனவும், பத்தாம் பாவம் கர்ம ஸ்தானம் எனவும் குறிப்பிடப்படுகின்றன. இந்த இரு வீடுகளின் அதிபதிகளாக வரும் கிரகங்களே தர்ம,கர்மாதிபதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இந்த இரண்டு வீட்டு அதிபதி கிரகங்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோ, ஒருவருடன் மற்றவர் இணைந்தோ, ஒருவர் வீட்டில் இன்னொருவர் மாறி அமர்ந்தோ, வேறு எந்த வகையிலேனும் ஒருவருக்கொருவர் சம்பந்தம் பெறுவது அல்லது இருவரும் பலம் பெறுவது தர்ம,கர்மாதிபதி யோகம் எனப்படும் மிகச் சிறந்த யோகமாகும்.
தர்ம,கர்மாதிபதி யோகம் உள்ள ஜாதகம் சிறந்த ஜாதகமாக ஜோதிட சாஸ்திரத்தில் கருதப்படுகிறது. அந்த ஜாதகர் இப் பிறப்பில் அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கப் பிறந்த அதிர்ஷ்டசாலியாக கருதப்படுகிறார்.

இந்த யோகத்தில் சம்பந்தப்பட்ட கிரகங்கள், ஆட்சி அல்லது உச்சம் போன்ற வலிமை பெற்று அல்லது நட்பு வீடுகளில் நல்ல இடங்களில் அமர்ந்து பகை, நீசம், அஸ்தங்கம் போன்று வலிமை குன்றாமல் ராகு,கேதுக்களுடன் சேராமல் சுபத்துவமாகவும், எனது “பாபக் கிரகங்களின் சூட்சும வலுத் தியரி” ப்படி சூட்சும வலுவுடனும் இருந்து பரிவர்த்தனை, வர்க்கோத்தமம் போன்ற வலுக்களை அடைந்து, அவர்களுடைய தசையும் உரிய பருவத்தில் நடைபெறும் போது ஜாதகருக்கு யோக பலன்கள் நடைபெறும்.

இனி ஒவ்வொரு லக்னத்திற்கும் தர்ம,கர்மாதிபதிகள் யார்? அவர்கள் எப்படி, எந்த இடங்களில் இருந்தால் இந்த யோகத்தினை முழுமையாகப் பெற முடியும் என்பதைப் பார்ப்போம்.

மேஷம்:

மேஷ லக்னத்திற்கு தர்ம, கர்மாதிபதிகள் குருவும் சனியும் ஆவார்கள்.  இந்த லக்னத்திற்கு சனியும், குருவும் ஒன்பது பத்தாமிடங்களில் பரிவர்த்தனை அடைவது நல்லதல்ல.

இந்த அமைப்பில் குரு நீசம் பெறுவார் என்பதால் யோகம் கிடைக்காது. மேலும் மேஷத்திற்கு சனி பாதகாதிபதியும் ஆவார். அதைவிட இருவரும் தனித்தனியே ஒன்பது, பத்தாமிடங்களில் ஆட்சி பெற்று அமர்வது நல்ல யோகத்தைத் தரும்.

லக்னத்தில் இருவரும் இணைந்து, நீச சனி சூட்சும வலு அடைந்தால் யோகம் பழுதின்றி செயல்படும். இரண்டாமிடம் குருவின் பகைவரான சுக்கிரனின் வீடு. இது குருவிற்கு ஆகாது. ஆயினும் இங்கே சனி நட்பு நிலை பெறுவார் என்பதால் இருவரும் இங்கே சேர்ந்திருந்தால் ஓரளவு பலன்கள் கிடைக்கும். இவர்களுடன் ராசியும் சம்பந்தப்படும் பட்சத்தில் ஜாதகருக்கு ஆன்மிக மேன்மை உண்டு.

மூன்றாமிடமான மிதுனத்தில் இணைந்தால் இருவருமே ஒன்பதாம் பாவத்தைப் பார்ப்பார்கள் என்பதால் நல்ல பலன்கள் இருவரின் தசையிலும் உண்டு. இருவருமே புனர்பூசம் நட்சத்திரத்தில் அமர்ந்தால் மேன்மை. நான்காமிடமான கடகத்தில் உச்சம் பெறும் குருவுடன் சனி இணைவதும் சிறப்புத்தான். இருவரும் ஆயில்யம் நட்சத்திரத்தில் அமர்ந்தால் யோகம் பலன் தராது.

ஐந்தாமிடமான சிம்மத்தில் சனி வலு இழப்பார் என்பதால் யோகம் பங்கமாகும். உத்திரம் ஒன்றாம் பாதத்தில் இருந்தால் ஓரளவு பலன் இருக்கும், ஏழாமிடத்தில் இணைந்திருந்தால் இருவரும் லக்னத்தைப் பார்ப்பார்கள். அதில் சனி உச்சம் பெற்றிருப்பார்.

இந்த அமைப்பால் ஜாதகர் ஆன்மீக ஈடுபாட்டுடன் இருப்பார். சனி வக்ரம் பெற்றால் இதுவும் நல்ல அமைப்புதான் இவற்றைத் தவிர ஆறு எட்டில் இருவரும் இணைவது சிறப்பானது அல்ல. மறைவிடங்களில் யோகம் பலன் தராது.

ஒன்பதில் இணைந்திருந்தால், குரு ஆட்சி பெற்று லக்னத்தைப் பார்ப்பார். இந்த அமைப்பு நல்ல பலன்களைத் தரும். பத்தில் இணைவது குரு நீசம் பெறுவார் என்பதால் பலன்களைக் குறைக்கும். பதினொன்று, பனிரெண்டாமிடங்களில் இருவரும் அமர்வது நற்பலன்களைத் தரும்.

ஒரு சிறப்பு அமைப்பாக மூன்றில் சனி நட்பு நிலையில் அமர்ந்து, ஒன்பதில் ஆட்சி பெற்ற குரு அவரைப் பார்ப்பது யோகமே. அதேபோல ஏழில் சனி உச்சம் பெற லக்னத்தில் இருக்கும் குரு அவரைப் பார்ப்பதும் யோகம்தான். குரு, சனி தசைகள் இரண்டுமே இந்த அமைப்பால் ஜாதகருக்குப் பலன் தரும். கடகத்தில் குரு உச்சம் பெற, அவரை மகரச் சனி பார்ப்பது குருவின் நற்பலனைக் குறைக்கும். இதேநிலைதான் சிம்மத்தில் குருவும், கும்பத்தில் சனியும் இருந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது.

மேஷ லக்னத்தவருக்கு குருவும், சனியும் நல்ல இடங்களில் அமர்ந்து குரு தசை 16 வருடம், அதைத் தொடர்ந்து சனி தசை 19 வருடம் நடந்தால், 35 வருடங்கள் தர்ம கர்மாதிபதி யோகம் மிகப் பிரமாதமான யோகம் தரும். இந்த அமைப்பில் பிறந்த மேஷத்தினர் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.

ரிஷபம்:

பனிரெண்டு லக்னங்களில் ரிஷபத்திற்கு மட்டும் தர்ம கர்மாதிபதி யோக அமைப்பு கிடையாது. யோகம் என்பதற்கு இணைவு அல்லது சேர்க்கை என்பது அர்த்தம் என்பதால் இரண்டு கிரகங்கள் இணைவதே யோகம். ஆனால் ரிஷபத்திற்கு ஒன்பது, பத்தாமிடங்களுக்கு சனி ஒருவரே அதிபதியாக வருவதால் இந்த யோகம் கிடையாது.

ஆயினும் ரிஷபத்துக்கு சனி, புதனுடன் மட்டும் கூடி (சுக்கிரனுடன் சேராமல்) நல்ல இடங்களில் சூட்சும வலுப் பெற்று பலவீனம் அடையாமல், மகரம் தவிர்த்து மிதுனம், கன்னி, கும்பம் ஆகிய இடங்களில் பகைவர் பார்வை பெறாமல் அமர்வாரேயானால், சனி தசை 19 வருடமும், அதனையடுத்து வரும் புதன்தசை 17 வருடமுமாக மொத்தம் 36 வருடங்கள் தர்ம கர்மாதிபதி யோகத்திற்கு இணையான யோகம் தரும்.

மிதுனம்:

மிதுனத்திற்கும் தர்ம கர்மாதிபதிகள் சனியும், குருவுமே ஆவார்கள். மிதுன லக்னத்திற்கு குரு பாதகாதிபதியும், சனி அஷ்டமாதிபதியும் ஆவதால் இந்த யோகம் சற்றுக் குறைவான பலன்களையே தரும்.

இந்த லக்னத்திற்கு குருவும், சனியும் ஒன்பது, பத்தாமிடங்களில் பரிவர்த்தனையாகி  இருப்பது நல்லது. லக்னத்தில் இணைவது ஓரளவு நற்பலன்தான். இரண்டாமிடத்தில் இவர்கள் இணைத்தால்  பாதகாதிபதியான குரு  உச்சம் பெறுவது சரியல்ல என்பதால் நல்லபலன்களைத் தராது.

மூன்றில் இணைந்தால் இருவரும் ஒன்பதாமிடத்தைப் பார்ப்பார்கள் என்பதால் யோகம் செயல்படும். நான்கு, ஐந்தாமிடங்களில் இருவரும் இணைவது சனிக்கு சுப பலம் தரும் என்பதால் நற்பலன்கள் உண்டு. ஆறு எட்டில் இணைவது யோகத்தைத் தராது.

ஏழில் குருவும், சனியும் சேர்வது சரியல்ல. குருவின் பாதகாதிபத்தியம் வலுப் பெறும். ஒன்பதில் குருவும், சனியும் கூடி தசை நடத்துவது ஓரளவு சரி. பத்தில் உத்திராட்டாதி நட்சத்திரத்தில் இருவரும் இருப்பது இருவருக்குமே சிறப்பு சேர்க்கும்.

பார்வைகளால் வலுப் பெறுவது என்று எடுத்துக் கொண்டால் கன்னியிலோ, துலாத்திலோ சனி இருந்து மீன, மேஷ குருவை சம சப்தமமாக பார்ப்பது நல்ல அமைப்பு. அதேபோல கும்ப சனி, சிம்ம குரு பாத்துக் கொள்வதும் யோகம்தான். ஏழில் குரு ஆட்சி பெற. லக்னத்தில் இருந்து சனி பார்ப்பதும் குருவின் பாதகாதிபத்தியத்தை வலு இழக்கச் செய்யும் என்பதால் இதுவும் யோக அமைப்பே.    

மிதுன லக்னக் காரர்களுக்கு தர்ம கர்மாதிபதிகளான குரு, சனியின் தசைகள் 35 வருடங்களுள் ஏதாவது ஒரு தசைதான் நல்ல யோகம் செய்யும். ஒன்று யோகம் செய்தால் இன்னொன்று அவயோகம் செய்யும்.

கடகம்:

தர்ம கர்மாதிபதி யோகத்தை முழுமையாக அனுபவிக்கும் இன்னொரு லக்னம் கடகம் ஆகும். இந்த லக்னத்திற்கு ஒன்பது, பத்தாமிட அதிபதிகளான குருவும், செவ்வாயும் நண்பர்கள் என்பதால் யோகம் முழுமையாகக் கிடைக்கும்.

என்னுடைய அனுபவத்தில் ஒரு கருத்தாக, கடகத்தில் பிறந்தவர்களுக்கு 3, 11 மிடங்களில் ராகு இருந்து (கன்னி, ரிஷபம்) அந்த ராகு, சூட்சும வலுவும் பெற்றிருந்து, நல்ல வயதில் பத்துக்குடைய செவ்வாய் தசை ஏழு வருடங்களும், அடுத்து ராகு தசை 18 வருடங்களும், அதன்பின் ஒன்பதுக்குடைய குருவின் தசை 16 வருடங்களும் வருமேயானால், 41 வருடங்கள் மிகப் பிரமாதமான யோக வருடங்களாக அமையும். இப்படி அமைந்த கடகத்தினர் அதிர்ஷ்டசாலிகள்.

கடகத்திற்கு லக்னத்தில் குருவும், செவ்வாயும் சேர்ந்திருப்பது நல்ல அமைப்புத்தான். குருவால் ஹம்ச யோகமும் கிடைக்கப் பெறும். செவ்வாயும் நீச பங்கம் பெறுவார். இந்த லக்னத்திற்கு குரு ஆறுக்குடைய பாவி என்றாலும், அவர் ஆறுக்கு எட்டில் மறைந்து லக்னத்தில் உச்சம் பெற்றால், லக்னத்திலிருந்து தனது ஒன்பதாம் வீடான மீனத்தைப் பார்ப்பார் என்பதால், ஆறாமிடத்தின் கெடுபலன்கள் குறைவு பெறும். இந்த அமைப்பில் இருவரையும் மகரத்தில் இருந்து சந்திரன் பார்ப்பாரேயானால் யோகம் முழுமையாக வேலை செய்யும்.

இரண்டாமிடமான சிம்மத்தில் குரு, செவ்வாய் இணைவு நல்லதே. இருவருக்கும் இது அதி நட்பு ராசிதான். உத்திரம் 1ம் பாதத்தில் இருந்தால் இன்னும் நல்லது. அம்சத்திலும் வலுப் பெறுவார்கள். சிம்மத்தில் இருவரும் இணைந்தால் செவ்வாய் தனது எட்டாம் பார்வையால் ஒன்பதாமிடத்தையும், குரு தனது ஒன்பதாம் பார்வையால் பத்தாமிடத்தையும் பார்ப்பார். இது நன்மை தரும் அமைப்பு.

மூன்று, நான்கில் இருவரும் இணைவது பகை வீடு என்பதால் யோக வலுவைக் குறைக்கும். ஆயினும் இவர்கள் ஒன்பது, பத்தாமிடங்களைப் பார்ப்பார்கள் என்பதால் ஓரளவு அதிர்ஷ்டம் செயல்படும். ஐந்தாமிடமான விருச்சிகத்தில் இருவரும் இணைந்தால் அங்கு செவ்வாய் ஆட்சியும், குரு நட்பும் பெறுவார்கள் என்பதால் முழுமையான யோகம் உண்டு. ஆறு, எட்டு நல்லதல்ல. 

ஏழாமிடத்தில் செவ்வாய் உச்சம் பெற்றாலும் குரு நீசம் அடைவார். தர்ம கர்மாதிபதிகளில் ஒருவர் வலுவிழந்தாலும் யோகம் பங்கமாகும். ஒன்பது, பத்தாமிடங்களில் இருவரின் இணைவு ஜாதகருக்கு நிரந்தரத் தொழில் யோகங்களைத் தரும். பதினொன்று, பனிரெண்டாமிடங்கள் இருவருக்கும் பகை வீடுகள் என்பதால் யோகம் இல்லை.

பார்வை வலுவைப் பார்ப்போமேயானால் லக்னத்தில் குரு உச்சம் பெற்று ஏழாமிடத்தில் செவ்வாயும் உச்சம் பெறுவது நல்ல அமைப்பல்ல. இருவருமே வலுக் குறைவார்கள். அதைவிட நான்காமிடத்தில் செவ்வாய் வலுப் பெற்று பத்தாமிட மேஷ குரு அவரைப் பார்த்தால் சிறந்த நீதிபதியாக இருப்பார்கள்.

மூன்று ஒன்பது, நான்கு பத்தில் இருவரும் அமர்ந்து நேருக்கு நேர் பார்த்துக் கொள்வதும் நல்ல யோகம்.  ஐந்தில் குரு இருந்து, செவ்வாய் ஏழில் உச்சம் பெறுவதும் நல்ல அமைப்புத்தான். இதுபோன்ற நிலையில் குரு தனது ஒன்பதாம் வீட்டையும் லக்னத்தையும் பார்ப்பார். செவ்வாய் தனது பத்தாம் வீட்டையும் லக்னத்தையும் பார்ப்பார்.

நிறைவாக, கடகத்திற்கு ஒன்பது, பத்தாமிடங்களில் இருவரும் தனித்தனியே ஆட்சி பெறுவதைக் காட்டிலும், இருவரும் தங்களின் வீடுகளை மாற்றிக் கொண்டு பரிவர்த்தனை ஆவார்களேயானால் அது உன்னதமான யோகமாக அமையும்.

செப்  21-28, 2011. திரிசக்தி ஜோதிடம் இதழில் வெளிவந்தது.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.