ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 9768 99 8888
கே. தங்கவேல், தாராபுரம்.
கேள்வி:
ஐயா… நான் தனுசு ராசி, பூராடம் நட்சத்திரம். தற்போது எனது சூழ்நிலை மிகவும் மோசமாக உள்ளது. எனக்கு எப்போது விடிவு காலம் வரும்?
பதில்:
தனுசு ராசிக்காரர்கள் அனைவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஜென்மச் சனி நடந்து கொண்டிருப்பதால், அவரவர்களின் பிறந்த ஜாதக நிலையின்படி, ஏதோ ஒரு வகையில் மன அழுத்தத்தில், கஷ்டமான சூழ்நிலையில்தான் இருக்கிறீர்கள். அதிலும் சனி தற்போது பூராட நட்சத்திரத்தில் சென்று கொண்டிருப்பதால் பூராடத்தில் பிறந்தவர்கள் எதாவது ஒன்றுடன் போராடிக் கொண்டுதான் இருக்கிறீர்கள்.
வரும் டிசம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் பூராட நட்சத்திரத்தில் இருந்து சனி விலகி உத்திராடம் நட்சத்திரத்திற்குச் செல்கிறார். அதுவரை தனுசு ராசிக்காரர்களுக்கு சோதனைகள் நீடிக்கத்தான் செய்யும். பிறக்கவிருக்கும் ஆங்கிலப் புதுவருடம் முதல் தனுசு ராசிக்காரர்கள் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி நன்றாக இருப்பீர்கள். அதுவரை பொறுமையோடு இருங்கள். வாழ்த்துக்கள்.
ஏ. குமரேசன், திருப்பூர்.
கேள்வி:
எனது கடக லக்னத்திற்கு இரண்டில் உள்ள குரு, முன்பு நடந்த குரு தசையில் எண்ணெயில் பொரிக்கும் கோழியைப் போல என்னை வறுத்து எடுத்து விட்டார். சிறிய மளிகை கடை வைத்திருக்கிறேன். வியாபாரத்தில் கடன் அதிகமாகிவிட்டது. கடையை மாற்றம் செய்யலாமா? ஜோதிடத்தில் ஆர்வம் இருக்கிறது. குட்டி ஜோதிடர் ஆக முடியுமா? அடுத்து சனி தசை நன்மை தருமா? ஏழையாக இருந்தாலும் கடன் இல்லாமல் இருக்க குருநாதராகிய தாங்கள்தான் நம்பிக்கை, தைரியம், பரிகாரம் சொல்ல பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
பதில்:
(கடக லக்னம், மகர ராசி, 1ல் செவ், 2ல் சூரி, குரு, 3ல் புத, சுக், கேது, 7ல் சந், 9ல் ராகு, 10ல் சனி, 4- 9- 1968 அதிகாலை 4-20 தூத்துக்குடி)
அது என்ன குட்டி ஜோதிடர், அம்மா ஜோதிடர்? ஜோதிடர் என்று வந்து விட்டால் எல்லோரும் ஜோதிடர்தான். ஞானத்தில்தான் உயர்வு, தாழ்வே தவிர தொழிலில் இல்லை. ஜோதிடர்கள் அனைவரையும் சமமாக பார்க்க கற்றுக் கொள்ளுங்கள். ஜோதிடம் தானாகவே புரியும்.
புதன் உச்சமாக இருப்பதால் உங்களுக்கு ஜோதிடம் வரும். அதே நேரத்தில் ஜோதிடத்தை தொழிலாக செய்ய இயலாத அளவிற்கு இப்போது அரைகுறை அறிவுடன்தான் இருப்பீர்கள். இன்னும் கற்றுக் கொள்ளுங்கள். தற்போது ஆரம்பித்திருக்கும் சனிதசை உங்களுக்கு யோகத்தைச் செய்யும். கடன் தொல்லை தராது.
சனி ராசிநாதனாக இருப்பதாலும், மூன்றாமிடத்தில் கன்யா கேது எனும் யோக நிலையில் அமர்ந்திருக்கும் கேதுவின் அஸ்வினி நட்சத்திரத்தில் அமர்ந்திருப்பதாலும் கடந்துபோன குரு தசையை விட சனிதசை நன்றாகவே இருக்கும். சனிக்கு குருபார்வை இருப்பதால் கெடுதல்களைச் செய்ய மாட்டார். அதேநேரத்தில் சுயபுக்தி முடியவேண்டும்.
வரும் 2022ல் சுய புக்தியும் ஜென்மச்சனியும் முடிவதால் அதன்பிறகு நன்றாக இருப்பீர்கள். குறிப்பிட்ட பரிகாரங்கள் எதுவும் தேவையில்லை. ஜென்மச்சனி ஆரம்பிக்க இருப்பதால் அருகிலுள்ள பழமையான ஈஸ்வரன் கோவிலில் வீற்றிருக்கும் காலபைரவருக்கு சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை தீபம் ஏற்றுங்கள். அது போதும். வாழ்த்துக்கள்.
எம். வஹிதா பானு, சென்னை.
கேள்வி:
1995ல் திருமணம், 1996ல் விவாகரத்து, 2005-ல் மறுமணம், 2010ல் குறைப்பிரசவம், குழந்தையின்மை. 2012-ல் கணவர் நோய்வாய்ப்பட்டு வலது கைகால் செயலிழப்பு, வருமானம், தொழில் பாதிப்பு, 2018ல் ஆதரவாக இருந்த தந்தையும் மறைவு, இரண்டு வருடங்களாக கணவருக்குச் சொந்தமான என் பெயரில் இருக்கும் வீட்டின் மீது கணவரின் முதல்தார பிள்ளைகள் வழக்கு, கோர்ட் என்று வாழ்க்கையில் சோதனைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. வழக்கிலிருக்கும் என் வீடு எனக்கு திரும்ப கிடைக்குமா? தாங்கள் குருவாக இருந்து இந்த இஸ்லாமிய சகோதரிக்கு வழிகாட்டுவீரர்களாக...
பதில்:
(சிம்ம லக்கனம், விருச்சிக ராசி. 3ல் கேது, 4ல் சந், 8ல் சனி, 9ல் ராகு, 10ல் சுக், செவ், 11ல் சூரி, குரு, 12ல் புத, 30-6-1966 காலை 10-10 சென்னை)
2012ம் ஆண்டிலிருந்து எந்த ஒரு விருச்சிக ராசிக்காரரும், அவருடைய ஜாதக அமைப்புக்கு ஏற்றார்போல நன்றாக இல்லை என்பதே உண்மை. நீங்களும் அதே வருடம்தான் கணவருக்கு கைகால் செயலிழப்பு என்று எழுதி இருக்கிறீர்கள். கூடுதலாக நீங்கள் உங்கள் லக்னப்படி அவயோகமும், பாபத்துவமும் பெற்றுள்ள சுக்கிர தசையில் 95 முதல் மணவாழ்க்கை சரியில்லாமல் போராடிக் கொண்டிருக்கிறீர்கள். 2012 முதல் விருச்சிகத்தினரின் வாழ்க்கை கஷ்டங்களுக்கு ஒரு உதாரணமாகத்தான் இருக்கும். அதேநேரத்தில் இந்த வருடத்துடன் அனைத்து பிரச்சனைகளும் நீங்கி விருச்சிகத்தினர் அனைவரும் நன்றாக இருக்கப் போகிறீர்கள்.
உங்கள் ஜாதகத்தின்படி தற்போது லக்னாதிபதி சூரியனின் தசை நடப்பதாலும், அதில் சுக்கிர புக்தி அடுத்த ஏப்ரல் முதல் ஆரம்பிக்க இருப்பதாலும், வீட்டினைக் குறிக்கும் நான்காம் பாவகத்தில், நீச்சமாக இருந்தாலும் பௌர்ணமிக்கு அருகில் இருக்கும் சந்திரன் திக்பலமாக இருப்பதாலும், அந்த வீட்டுக்குரிய செவ்வாய் சுக்கிரனின் இணைவு, சந்திர பார்வையால் சுபத்துவமாகி, தனது வீட்டையே பார்ப்பதாலும் உங்கள் கணவர் உங்கள் பெயரில் எழுதி வைத்த வீடு உங்களை விட்டுப் போவதற்கு வாய்ப்பே இல்லை.
அடுத்து வரும் சந்திர தசையில் வழக்கு சாதகமாகும். வீடு ஒருபோதும் உங்களை விட்டுப் போகாது. கவலைப்பட வேண்டாம். அடுத்த வருடம் ஏப்ரல் 7க்குப் பிறகு முதல் தாரத்து பிள்ளைகள் ஒருவகையான சமாதானத்திற்கு வருவார்கள். இனிமேல் உங்கள் வாழ்க்கையில் துயரங்கள் இல்லை. அடுத்தடுத்து நடக்க இருக்கும் சந்திர, செவ்வாய், ராகுதசைகள் நல்லநிலையில் இருப்பதால் வாழ்க்கையின் இறுதிக்காலத்தில் மிகவும் நன்றாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.
எஸ். நிர்மலாதேவி, நிலக்கோட்டை.
கேள்வி:
பாபக் கிரகங்களுக்கு 3, 6, 10, 11, 12ம் இடங்கள் நல்ல இடங்கள் என்று நீங்கள் சொல்லும் நிலையில், எனது கணவருக்கு மீன லக்னமாகி, 3ல் கேது அமர்ந்து வீடு கொடுத்த சுக்கிரன் லக்னத்தில் உச்சமாகி, கேது தசை ஆரம்பித்தவுடன் எங்களது பொருளாதாரத்தை படுகுழியில் தள்ளி விட்டது. எப்போது மீண்டு வருவோம்?
பதில்:
(கும்ப லக்னம், மிதுன ராசி, 1ல் சூரி, 2ல் சுக், குரு, 4ல் கேது, 5ல் சந், சனி, 10ல் ராகு, 12ல் புத, செவ், 23- 2-1975 காலை 7-30 திண்டுக்கல்)
ஜோதிடத்தில் சரியான பலனைச் சொல்லவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள், தவறான வாக்கிய பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட ஜாதகத்தை வைத்து பலன் பார்க்காதீர்கள். வாக்கியப் பஞ்சாங்கம் என்பது முழுக்க முழுக்க பிழையானது என்பதை இன்னும் எத்தனை வாரங்களுக்குத்தான் சொல்லிக்கொண்டு இருப்பேனோ, தெரியவில்லை.
கணவரின் ஜாதகப்படி லக்னம், ராசி அனைத்தும் மாறுகிறது .திருக்கணிதப்படி ஜாதகத்தை கணித்துப் பார்க்கவும். கேதுதசை படுகுழியில் தள்ளி விட்டது ஏன் என்பது புரியும். மிதுன ராசிக்கு அடுத்து அஷ்டமச்சனி நடக்க இருப்பதால் இன்னும் இரண்டு வருடங்களுக்கு கஷ்டமாகத்தான் இருக்கும். 2022 வரை பொறுமை காக்கவும். கும்ப லக்னம் என்பதால் அடுத்து வர இருக்கும் சுக்கிரதசை யோகத்தைச் செய்யும். குழியிலிருந்து மீண்டு வந்து விடுவீர்கள். வாழ்த்துக்கள்.
(15.10.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.