adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
மகன் இந்தியாவிற்காக விளையாடுவானா?

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

ராஜேஸ்வரி, சென்னை.

கேள்வி:

மகன் இப்போது ப்ளஸ்டூ படிக்கிறான். ஐந்தாம் வகுப்பு முதலே கைப்பந்து விளையாட்டில் மாநில, தேசிய அளவில் முதலிடம் பெற்று எண்ணற்ற சான்றிதழ்கள் வாங்கியிருக்கிறான். கைப்பந்துதான் என்றில்லை, அனைத்து விளையாட்டிலும் முதல் மாணவனாக இருக்கிறான். படிப்பிலும் அவன்தான் முதல் மாணவன். இயற்கையாகவே அவனுக்கு அனைத்து விளையாட்டிலும் ஈடுபாடு அதிகமாக இருக்கிறது. ஒரு நாளுக்கு 8 மணி நேரம் பயிற்சி எடுக்கிறான். கைப்பந்து விளையாட்டில் இந்தியாவிற்காக உலக அளவில் விளையாட வேண்டும் என்பது அவனது சிறுவயது கனவு. மகேந்திரசிங் தோனி போல பேரும் புகழும் அடைய வேண்டும் என்பதும் அவனது இலக்காக இருக்கிறது. அவன் கனவு பலிக்குமா?

மகனுக்கு தற்போது ராகுதசையில் சுக்கிரபுக்தி நடக்கிறது. சுக்கிர புக்தி தொடங்கியதிலிருந்தே, அவனது கை, கால் எலும்புகளில் பலத்த அடிகள் விழுகின்றன, அருகில் உள்ள ஜோதிடர் ஒருவர் சுக்கிர புக்தியில் வெளிநாட்டில் தான் அவனது கல்லூரிப்படிப்பு இருக்கும் என்று கூறினார். மேலும் அவன் பிரபலமடைந்து பெயர் புகழ் அடைவான் என்றும் கூறினார். அந்த ஜோதிடர் சொன்னது போலவே தமிழ்நாட்டில் அனைத்து கைபந்து விளையாட்டு வீரர்களும் இவனை நன்கு அறிந்திருக்கின்றனர். அனைத்து கைப்பந்து பயிற்சியாளர்களும் இவனது விளையாட்டுத் திறனை பாராட்டுகின்றனர். என் மகன் இந்தியாவிற்காக  உலக அளவில் விளையாடுவானா? அடுத்து வர இருக்கும் லக்னாதிபதி குருவின் தசை எப்படி இருக்கும்? இவனது எதிர்காலம் எப்படி? பேர், புகழ் என உலக அளவில் பிரபலம் அடையும் யோகம் மகனுக்கு உள்ளதா?

பதில்:

(மீன லக்னம், மகர ராசி, 3ல் ராகு, 4ல் சனி, 5ல் குரு, 6ல் செவ், 7ல் சூரி, புத, 8ல் சுக், 9ல் கேது, 11ல் சந், 18-9-2002 மாலை 6-20 சென்னை)

நீங்கள் பார்த்த ஜோதிடர் சொன்னது உண்மைதான். மகனது ஜாதகம் உலக அளவில் பிரபலம் அடையும் அளவிலேயே இருக்கிறது. உபய லக்னங்களுக்கு லக்னாதிபதியும் பாதகாதிபதியும் வலுப் பெறக்கூடாது என்ற விதிப்படி லக்னாதிபதி குரு ஐந்தாம் இடத்தில் தனித்து உச்சமாவது ஒருவகையில் குறைதான் என்றாலும், வளர்பிறைச் சந்திரனின் சுபத்துவ பார்வை அந்தக் குறையை நிவர்த்தி செய்கிறது.

மகன் வெற்றியை குறிக்கும் விஜயதசமி நாளுக்கு அடுத்த நாளான சித்திரை நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறார். நட்சத்திரநாதன் செவ்வாய் அதிநட்பு வீட்டில் இருக்கிறார். லக்னாதிபதியும், தொழில் ஸ்தானாதிபதியுமான குரு உச்சம்பெற்ற நிலையில், பாக்கியாதிபதியான செவ்வாய் நவாம்சத்தில் வளர்பிறைச் சந்திரனுடன் இணைந்து சுபத்துவமாகி தனது ஒன்பதாம் வீட்டையே பார்க்கிறார். 5-க்குடைய சந்திரனும் சுபராகி ஐந்தாம் வீட்டையே பார்ப்பது சிறப்பு. அனைத்திற்கும் முத்தாய்ப்பு வைத்தார் போல 9-10-க்குடைய தர்மகர்மாதிபதிகள் இருவரும் எவ்வித பங்கமும் இல்லாத நிலையில் லக்னத்தை வலுத்துப் பார்க்கிறார்கள். இது மிகப்பெரிய யோகம். அதோடு லக்னத்திற்கு உச்ச கிரகங்களின் தொடர்பும், பார்வையும் இருக்கிறது.

ஜாதகம் யோகமாக இருந்தாலும் தசா,புக்திகள் மட்டுமே யோகத்தை உறுதிப்படுத்தும் என்ற விதியின்படி, அடுத்து வர இருக்கும் குரு தசையில் உங்கள் மகன் உலக அளவில் பிரபலமாவார் என்பது உறுதி. இத்தகைய ஜாதகத்திற்கு சரியான பருவத்தில் எதிரியான சுக்கிரனின் தசை வந்திருக்குமாயின் உங்கள் மகன் இலவு காத்த கிளியாக மாறி விட்டிருப்பார். அவருடைய திறமைகள் அனைத்தும் குடத்திலிட்ட விளக்குப்போல அடக்கி வைக்கப்பட்டு, தன்னுடைய திறமைகளை வெளிக்காட்ட சந்தர்ப்பம் கிடைக்காமல், இது அவயோக ஜாதகமாக மாறி விட்டிருக்கும்.

அந்த அமைப்பு இல்லாமல் மிக முக்கிய பருவத்தில் வர இருக்கும் லக்னாதிபதி குருவின் தசை 23 வயது முதல் 39 வயது வரை அவரை விளையாட்டுத் துறையில் நேரடியாகவும் அதன் பின்னர்  மறைமுகமாகவும் வைத்திருக்கும். சுக்கிரன் மீன லக்கினத்திற்கு கெடுபலன்களைத் தரக்கூடிய கிரகம் என்பதால் சுக்கிர புக்தியில் அவருக்கு கைகால்களில் அடிபடுவது நடக்கும். ஆயினும் ஆறு, எட்டுகுடையவர்களை விட லக்னாதிபதி வலுப்பெற்றால் எதிரிகளின் தீமையை லக்னாதிபதி சமாளிப்பார் எனும்படி சுக்கிரன் மூலத்திரிகோண நிலையிலிருந்தாலும், லக்னாதிபதி உச்சமாக இருப்பதால் மகனுக்கு பெரிய அளவில் அடிபடுவது போன்ற நிலைகள் இல்லை.

சுக்கிர புக்தியில், ஜென்மச் சனி இணைவது கூடாது. எனவே மகனின் வளர்ச்சி மற்றும் படிப்பு இன்னும் இரண்டு வருடங்களுக்கு சுமாராகத்தான் இருக்கும். அதற்காக பெரிய சோதனைகள் எதுவும் வந்து விடப்போவதில்லை. அடுத்து நடக்க இருக்கும் குரு தசையில் மகனது கனவுகள் பலிக்கும்.

ஒரு நல்ல ஜாதகம் என்பது அனைத்து கிரகங்களும் தங்களது சுய இயல்பை இழக்காமல் இருப்பதாகும். அந்த அமைப்பு மகனுக்கு இருக்கிறது. யோக ஜாதகத்தைக் கொண்டவருக்கு இலக்கு இளம்வயதிலேயே நிச்சயிக்கப்பட்டுவிடும் என்பதன்படி மகனுக்கு விருப்பம் விளையாட்டுத் துறையில் சாதனை செய்வதாக இருக்கும். கண்டிப்பாக அவர் சாதிப்பார். வாழ்த்துக்கள்.

(15.10.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.