ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 9768 99 8888
ஜோதிடத்தின் மூலக்கிரகமான புதன் இந்த ஜாதகத்தில் நீச்ச நிலையில் இருந்தாலும் தன்னுடைய சொந்த நட்சத்திரமான ரேவதியில் இருக்கிறார். அடுத்து சந்திரனுக்கு கேந்திரத்திலும், லக்ன கேந்திரத்திலும் இருக்கிறார். அதைவிட மேலாக ராசியிலும், நவாம்சத்திலும் ஒரே இடத்தில் இருக்கும் வர்கோத்தம நிலை பெற்றிருக்கிறார்.
ஒரு கிரகம் நீச்சபங்கம் அடைவதையும், நீச்சத்தின் உயர்நிலையான நீச்சபங்க ராஜயோக நிலையை அடைவதையும் ஏற்கனவே நான் வேறுபடுத்திச் சொல்லியிருக்கிறேன். அதன்படி இங்கே புதன் தன்னுடைய நண்பரான உச்ச சுக்கிரனுடன் இணைந்து நீச்சபங்க ராஜயோகம் எனும் உயர்நிலையை அடைந்திருக்கிறார்.
அதைவிட முக்கியமாக புதன், குருவின் வீட்டில் அமர்ந்து, சுக்கிரனோடு இணைந்து சுபத்துவம் அடைந்திருக்கிறார். ஒரு கிரகம் குரு, சுக்கிரன் இரண்டின் முழுத் தொடர்பையும் அடையுமாயின் அதன் சுப காரகத்துவத்தை முழுமையாகத் தரும் தகுதியைப் பெறும். புதனின் நீச்ச பங்கத்தில் இன்னொரு நல்நிலையாக புதனுக்கு வீடு கொடுத்த குரு, இங்கே சுக்கிரனுடன் பரிவர்த்தனை அடைந்து மறைமுகமாக புதனுடன் இணைந்திருக்கும் அமைப்பைப் பெறுகிறார்.
நீச்சமான ஒரு கிரகம் பங்கத்தை அடைவதற்காக வேதஜோதிடம் சொல்லும் விதிகளில் மிகப்பெரும்பாலானவைகளின்படி இந்த ஜாதகத்தில் புதன் நீச்சபங்க ராஜயோகம் என்ற நிலையை பெற்றிருப்பது சிறப்பு.
ஒரு கிரகம் தனது முழுமையான காரகத்துவத்தை தர வேண்டுமெனில், தான் இருக்கும் பாவகத்தில் நல்லதொரு நிலையில் இருக்க வேண்டும் என்பதும் வேத ஜோதிடத்தின் ஒரு விதி. அதன்படி இங்கே புதன், தான் உயிர் நண்பராக கருதும் சூரியனுடனும், தன்னை உயிர் நண்பராக கருதும் சுக்கிரனுடனும் இணைந்து நல்ல மனநிலையில் இருக்கிறார்.
எத்தனை சிறப்புகள் இருந்தாலும், அங்கே ஒரு துளியேனும் ஏதேனும் ஒரு குறை இருக்கும் என்ற நிலையில், இங்கே புதனுக்கு என்ன குறை இருக்கிறது என்பதைப் பார்த்தால், செவ்வாய் தனது எட்டாம் பார்வையால் புதனைப் பார்ப்பதை ஒரு குறையாகச் சொல்லலாம்.
மிதுன லக்னத்தின் கொடும் பாவியான, இங்கே சனியின் பார்வையைப் பெற்று கடும் பாபத்துவம் அடைந்திருக்கும் செவ்வாய், ஏழாம் பார்வையாக லக்னாதிபதி புதனைப் பார்த்திருப்பின் மேலே புதனுக்குச் சொன்ன அத்தனை சிறப்பு நிலைகளும் அடிபட்டுப் போய், செவ்வாய் பார்வையின் பாபத்துவம் மட்டுமே தூக்கலாக அமைந்து அத்தனை சிறப்புகளையும் இங்கே புதன் இழந்து விட்டிருப்பார்.
ஆனால் செவ்வாயின் எட்டாம் பார்வைக்கு மிகப் பெரிய விசேஷம் கிடையாது. கிரகப் பார்வைகளின் வலிமையின்படி செவ்வாயின் ஏழாம் பார்வை 100 சதவிகித திறனையும், நான்காம் பார்வை 50 சதவிகித திறனையும், எட்டாம் பார்வை 25% திறனையும் மட்டுமே கொண்டிருக்கும். எனவே செவ்வாயின் எட்டாம் பார்வை இங்கே புதனின் சுபத்துவ மற்றும் நீச்சபங்க வலுவைக் குறைக்க முடியவில்லை.
இத்தனை சிறப்புகளைப் பெற்றிருக்கும் புதனது தசை என்னுடைய வாழ்நாளில் வராது என்பது ஒரு மிகப்பெரிய குறை. என்னதான் நிறைகளைக் கொடுத்தாலும் பரம்பொருள் “ஆட்டுக்கு வாலை” அளந்துதான் கொடுத்திருக்கிறார். இத்தகைய சிறப்பு வாய்ந்த புதனின் தசை எனது வாழ்நாளில் வந்திருக்குமாயின் என்னால் வேத ஜோதிடத்தில் ஒரு மிகப்பெரிய நிலையை கடந்திருக்க முடியும்.
என் வாழ்நாளில் புதன்தசை நடந்திருந்தால், தசை நடக்கும் 17 வருடங்களும் ஜோதிடத்தின் மிகப்பெரிய உச்சநிலைக்கு என்னால் சென்றிருக்க முடியும். அது கூடாது என்பது பரம்பொருளின் விருப்பம். அதேநேரத்தில் எப்பொழுதெல்லாம் புதன் புக்தி என் வாழ்க்கையில் வருகிறதோ, அப்போதெல்லாம் ஏதேனும் ஒரு ஜோதிட உயர்நிலையை நான் எட்டியிருக்கிறேன்.
நான் பிறந்ததே கேது தசையின் இறுதிப்பகுதியான புதன் புக்தியில்தான். அதாவது மூல நட்சத்திரத்தின் கடைசி சில நிமிடங்களில் நான் பிறந்திருக்கிறேன். மூல நட்சத்திரத்தை ஒன்பது பங்குகள் ஆக்கும்பொழுது, அதாவது ஒரு நட்சத்திரத்தை ஒன்பது உப நட்சத்திரங்களாகப் பிரிக்கும்போது மூலத்தின் கடைசி உப நட்சத்திரமான, புதனின் பகுதியில்தான் நான் பிறந்திருக்கிறேன்.
லக்னம் திருவாதிரையில் அமர்ந்திருந்தாலும், லக்னத்தின் உப நட்சத்திரமும், ராகுவேயாகி, அந்த உப நட்சத்திரத்தின், உப-உப நட்சத்திரமும் என் ஜாதகப்படி புதனாகவே இருக்கிறது. ஆகவே மிகநுட்பமாக எனது லக்ன, ராசி நட்சத்திரங்களை பிளந்து கொண்டு சென்றாலும் அதனுடைய ஆழமான புதனின் பகுதியில்தான் நான் பிறந்திருக்கிறேன். எனவே எனக்கு ஜோதிடம் பிறவியிலேயே வந்ததும், நான் ஒரு ஜோதிடச் சூழலில் வளர்ந்ததும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
என்னுடைய 16, 17, 18 வயதுகளில் முதன்முதலாக சுக்கிர தசையில், புதன் புக்தி நடந்தது. அந்த வயதிலேயே நான் பலன் சொல்ல ஆரம்பித்திருந்தேன். அந்த மூன்று வருடங்களும் நான் ஜோதிடத்தில் முழுமையாக மூழ்கியிருந்த காலகட்டங்கள்.

முகநூலிலும், “ஜோதிடம் எனும் தேவரகசியம்” கட்டுரைகளிலும். எனது வீடியோக்களிலும் நான் குறிப்பிட்ட, எனது அனேக ரசிகர்கள் மற்றும் மாணவர்கள் என்னை சிலாகித்துச் சொல்லும், நான் “முதன்முதலாக ஜோதிடனாக உணர்ந்த” “தேள்கடி நிகழ்வு” எனது 21 வது வயதில் என் சூரியதசை, ராகு புக்தி, கேது அந்தரம், செவ்வாயின் சித்திரத்தில் நடந்தது.
அன்றைய தின கோட்சார நிலையையும் கணக்கிட்டே என்னை இன்னும் இரு தினங்களில் தேளோ, பாம்போ தீண்டும் என்பதை உணர்ந்திருந்தேன். அதைச் சொல்லவும் செய்தேன்.
அன்றைய தினம் நண்பர்கள் ஜோதிடத்தையும், என்னையும் அளவுக்குமீறி கிண்டல் செய்திருந்த நிலையில், என்னையுமறியாமல் எனக்கு நானே கொடுத்துக் கொண்ட ஒரு சாபம் போல என்னிடம் இருந்து வந்த வார்த்தைகள் இவை.
அன்றைய கோட்சார நிலையில், ராகு, செவ்வாயுடன் இணைந்து அல்லது வேறு ஏதோவகையில் மிகுந்த பாபத்துவம் அடைந்திருந்ததாக எனக்கு நினைவிருக்கிறது. சூரியதசையில், ராகு புக்தி எப்போதும் நல்ல பலன்களைத் தராது. எனது நினைவின்படி அன்றைய தினம் சந்திரனும், எனது லக்னாதிபதியான புதனும் கோட்சாரத்தில் நன்றாக இல்லை.
எனவே விஷ ஜந்துக்களால் எனக்கு ஆபத்து என்பதை முன்னரே கணித்து அது எப்போது நடக்கும் என்ற ஒருவிதமான குறுகுறுப்பான மனநிலையில்தான் அப்போது நானிருந்தேன்.
இன்னும் சொல்லப்போனால் இரவானதும் நாங்கள் அமரும் குட்டிச்சுவரின் மீதோ அல்லது ஏதேனும் ஒரு இருட்டான பகுதியில் நடந்து செல்லும்போதோ விஷக்கடி இருக்கும் என்பதை எதிர்பார்த்தேன். ஆனால் அன்று இரவு தூங்கும்போது அது என் வீட்டிலேயே நடந்தது.
இன்னும் சொல்லப் போனால் இதனையடுத்து நடைபெற்ற, சந்திரதசை, ராகு புக்தி கேது அந்தரத்திலும் இதேபோன்ற ஒரு நிகழ்வு நடந்தது. அன்றைய காலகட்டத்தில் வேறொரு நண்பர் என்னோடு ஜோதிடத்தை விவாதித்துக் கொண்டிருப்பார். இரவானதும் என்னுடன் வீடுவரை வந்து, வீட்டு வாசலிலும் வெகுநேரம் நின்று ஜோதிடத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்து விட்டு பிரிய மனமில்லாமல் அவர் வீட்டுக்குச் செல்வார்.
அன்றைய சந்திரதசை, ராகு புக்தி, கேது அந்தரத்தில் அந்த இடத்திலும் நாங்கள் விவாதித்த விஷயம், எங்கள் இருவரின் ஜாதகப்படியும். ஒரு விஷ ஜந்தைப் பார்க்க நேரிடும் என்பதுதான். அதன்படியே நாங்கள் இருவரும் நடந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அப்போதுதான் வயல்வெளியாக இருந்து வளர்ந்து கொண்டிருந்த ஒரு நகர்ப்புறப் பகுதியான அந்த இடத்தில் எங்களுக்கு முன்னால், நட்டுவாக்கிளி எனப்படும் ஒரு மிகப்பெரிய விஷ ஜந்து மிக அருகில் ஊர்ந்து கடந்ததை நின்று வேடிக்கை பார்த்தோம்.
சில நிலைகளில் ஒவ்வொரு தசாவின் குறிப்பிட்ட புக்திகளிலும், ஒரு கிரகத்தின் குறிப்பிட்ட காரகத்துவம் நடப்பதை ஜோதிடத்தை அறிந்தவர்கள் உணரமுடியும். இது எனக்கான அனுபவம் மட்டுமல்ல. ஞானமுள்ள ஜோதிடர்களுக்கு, தங்களுக்கு நடக்கப் போவது ஓரளவுக்கு முன்கூட்டியே தெரியும் என்பது உண்மைதான். தனது பகுதியில் பிரபலமான தொழில்முறை ஜோதிடரான எனது சித்தப்பா, மருத்துவமனையில் இல்லாத நிலையில் அடுத்த வியாழன் தாண்டினால் எனது கண்டம் தாண்டி விடும் என்று சொல்லி செவ்வாய் அன்று மரணமடைந்தார்.
தன்னுடைய மரணத்தை முன்கூட்டியே கணித்த ஜோதிடர்கள் இங்கே ஏராளமானோர் இருக்கிறார்கள். நம் காலத்தில் வாழ்ந்த எல்லோரும் அறிந்த உதாரணமாக குருநாதர், பாலஜோதிடம் ஆசிரியர், ஜோதிடபானு, சி சுப்பிரமணியம் அய்யா அவர்களின் திருவாயால் “ஜோதிடத்தின் சுப்ரீம் கோர்ட்” என்று புகழப்பட்ட மிகப்பெரும் ஜோதிடமேதை பி.எஸ்.
பரமசிவம் அய்யா அவர்கள் தன்னுடைய மரணத்தை தானே முன்கூட்டியே கணித்து வைத்திருந்தார்கள். அதன்படியே அவரது முடிவும் அமைந்திருந்தது.
எனது சந்திர தசையில், புதன் புக்தி நடக்கும் பொழுது எனக்கு சில மறக்க முடியாத ஜோதிட அனுபவங்கள் ஏற்பட்டன. அந்தநேரத்தில் என்னுடைய ஜோதிட ஆர்வம் மற்றும் கற்கும் திறன் மிக உச்ச நிலையில் இருந்தது. எந்த நேரமும் என்னுடைய சிந்தனை ஜோதிடத்தைப் பற்றி மட்டுமே இருந்து கொண்டிருந்த காலகட்டம் அது.
தசாபுக்தி வருடங்களை பராசர மகரிஷி எவ்வாறு அமைத்திருக்கக் கூடும் என்பதைப் பற்றிய முழு ஆய்வில் நான் எந்த நேரமும் ஜோதிடக் கணக்குகளை போட்டுக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தேன். “ஜோதிடம் எனும் தேவரகசியம்” கட்டுரைகளிலும், “உங்கள் ஜாதகம் யோகஜாதகமா” கட்டுரைகளிலும் நான் எழுதிய சுப கிரக வரிசை, சனி, செவ்வாய் பற்றிய சூட்சும நிலைகள் அனைத்தும் அந்தக் காலகட்டத்தில்தான் எனக்கு தெரிய அனுமதிக்கப்பட்டது.
செவ்வாய் தசையில், புதன் புக்தி என் வாழ்க்கையில் மிகவும் கஷ்டமான காலகட்டமாக இருந்தது. அதற்கு செவ்வாய் மற்றும் புதனின் சஷ்டாஷ்டக நிலையும் ஒரு காரணம். தவிர மிதுன லக்கினத்திற்கு செவ்வாய் ஒருபோதும் நன்மைகளைச் செய்வது இல்லை. அதுவும் அவர் ஆறாமிடத்து தொடர்புகளைக் கொண்டிருக்கும் நிலையில் மிகப்பெரிய கெடுதல்களைச் செய்வார்.
லக்னாதிபதியின் வலுவைப் பொருத்து ஒருவர் அந்த நிலையை எப்படி எதிர் கொள்வார், செவ்வாய் தரும் சங்கடங்களை அவரால் சமாளிக்க முடியுமா அல்லது துவண்டு போவாரா என்பதைச் சொல்ல முடியும்.
செவ்வாய் தசையின் 7 வருடங்களும் என் வாழ்க்கையின் இருண்ட காலகட்டமாக இருந்தது. அந்த நேரத்தில் என்னுடைய தனுசு ராசிக்கு அஷ்டமச் சனியும் நடந்து கொண்டிருந்தது. ஆறாம் அதிபதியின் தசையும், அஷ்டமச் சனியும் சந்திக்கக் கூடாது என்பதும் ஒரு ஜோதிட விதி. சந்தித்தால் மிகப்பெரிய கெடுபலன்கள் இருக்கும் என்பதோடு வாய் விட்டு கதறும் சூழல்கள் இருக்கும் என்பதையும் நான் உணர்ந்திருந்தேன்.
அதன்படியே குருவின் பார்வை இல்லாத செவ்வாய், மூன்றாமிடத்தில் வக்கிர நிலையில், எட்டுக்குடைய அஷ்டமாதிபதி சனியின் பார்வையில் இருப்பதால், “காரஹோ பாவ நாஸ்தி” எனப்படும் சகோதரனால் விரயம் அல்லது சகோதரனே விரயம் என்ற நிலை இருப்பதை அறிந்து, என்னுடைய இளைய சகோதரர்கள் மூவரின் ஜாதகங்களையும் அலசி ஆராய்ந்து, அதில் இரண்டாவது சகோதரனின் ஆயுள் 33 வயதிற்குள் என்பதை உணர்ந்தேன். அப்போது அவருக்கு வயது 32.
அன்றைய நாள் என் மனம் பட்டபாட்டை எந்த வகையிலும் சொல்ல முடியாது. என் சகோதரர்கள் மூவரிலும் நான் மிகவும் நேசிக்கும் தம்பி அவர். ஒரு ஜோதிடனாக இருப்பதன் மிகப் பெரிய சங்கடம் அதுதான். அப்போது அஷ்டமச் சனியும் நடந்து கொண்டிருந்ததால் என் மனம் ஒரு நிலையில் இல்லை.
சில தினங்கள் கழித்து எனது ஜாதக அமைப்பையும், எனது தந்தையின் ஜாதக அமைப்பின்படி அவருக்கு அப்போது புத்திர சோகம் நிகழ இருப்பதையும், எனது தம்பியின் ஜாதக அமைப்பின்படி அவனது ஆயுள் பங்கம் அடையும் என்பதனையும் தயக்கத்துடன் ஜோதிடரான எனது தந்தையிடம் தெரிவித்தேன். பதற்றமான அவர் அந்தக் கணிதங்களையும், எனது பலனையும் விவரிக்கச் சொல்லிக் கேட்டார்.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்...
(11.10.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.