adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 257 (08.10.19)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

எஸ். ராமசாமி, திருநெல்வேலி டவுன்.

கேள்வி:

மாலைமலரில் வெளிவரும் தங்களின் கேள்வி-பதில் பகுதிகளை கட் பண்ணி வைத்து திரும்பத் திரும்ப படிக்கிறேன். கடந்த ஜூன் மாதம் ஒரு வாசகரின் கேள்விக்கு 12-ஆம் இடத்தில் உள்ள குரு எட்டாம் இடத்தையும், எட்டாம் அதிபதியையும் பார்ப்பதால் நிரந்தரமாக தமிழ்நாட்டை விட்டு வெளியே இருப்பீர்கள் என பதில் கொடுத்துள்ளீர்கள். என்னுடைய பேரன் ஜாதகத்திலும் குரு எட்டாமிடத்தில் ஆட்சியாக உள்ளது. ஐந்தாம் பார்வையாக குரு 12-ஆம் இடத்தையும், ஒன்பதாம் பார்வையாக பன்னிரெண்டாம் அதிபதி சந்திரனையும் பார்க்கிறார். இதனால் அவனுக்கு வெளிநாட்டு யோகம் உண்டா? எட்டாம் அதிபதி குரு ஆட்சி பெற்றமையால் தீயபலன்கள் உண்டா?


பதில்:

(கடக லக்னம், விருச்சிக ராசி, 1ல் சூரி, 2ல் புத, ராகு, 5ல் சந், 8ல் கேது, 9ல் குரு, 10ல் சனி, 12ல் சுக், செவ், 2-8-1998 காலை 6-39 நெல்லை)

உங்கள் ஊரில் ஜாதகம் கணிக்க பயன்படும் வாக்கியப் பஞ்சாங்கத்தை வைத்துக்கொண்டு ஒருபோதும் சரியான ஜாதகத்தை எழுதவும் முடியாது. துல்லியமான பலனைச் சொல்லவும் முடியாது. பேரன் காலை 6-39 க்கு பிறந்ததாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். அந்த நேரப்படி கடக லக்னம்தான் வருகிறது. ஆனால் நீங்கள் சிம்ம லக்னம் என்று சொல்லியிருக்கிறீர்கள்.

பேரன் ஜாதகம் தவறான வாக்கிய பஞ்சாங்கத்தின்படியோ அல்லது சரியாக கணிக்கத் தெரியாத ஜோதிடராலோ எழுதப்பட்டிருக்கலாம். முதலில் ஜாதகத்தை சரியாக எழுதுங்கள். சுவர் சரியாக இருந்தால்தானே சித்திரம் ஒழுங்காக வரைய முடியும்? லக்னம் மாறுவதால் பலன்கள் அனைத்தும் மாறிவிடும். சிம்மத்தின் படி எட்டில் குரு இருந்தால் வெளிநாட்டு யோகம் எனும் அமைப்பு லக்னம் கடகமானால் வாழ்நாள் முழுக்க வெளிநாடே போக முடியாது என்று மாறிவிடும்.

ஜோதிடரின் கணிப்பு தவறிப்போய், ஜோதிடத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழப்பது இதுபோன்று வாக்கியப் பஞ்சாங்கம் மாற்றிச் சொல்லும் நட்சத்திரம், திதி, லக்னம், ராசி போன்றவைகளால்தான். பேரனின் லக்னம் எதுவென்று திருக்கணிதப்படி சரி செய்து கொண்டு மறுபடியும் கேள்வியை கேளுங்கள். பதில் தருகிறேன்.

ஏ. சசிகுமார், சின்னசேலம்.

கேள்வி:

10 ஆண்டுகாலமாக மாமனார் வீட்டில் இருக்கிறேன். வாழ்க்கையில கஷ்டம் என்றால் என்னவென்று தெரியாமல் இருந்த எனக்கு இன்று கஷ்டத்தை தவிர வேறு இல்லை. மனைவி கழுத்தில் தாலி கூட மிச்சமில்லை. எட்டரை லட்சம் கடன் இருக்கிறது. வேலைக்கு பணம் கட்டி ஏமாந்து பாதி கடன் உண்டானது. மீதி பணத்தை சொந்தபந்தம் ஏமாற்றியது. சொந்தமாக வீடு நிலம் எதுவும் இல்லை. இரண்டு பிள்ளைகள் மட்டும்தான். கடன் கொடுத்தவர்கள் எல்லாம் சொல்லி வைத்தாற்போல ஒன்றாக டார்ச்சர் கொடுக்கிறார்கள். மகன்- மகள் மாற்றிக் கொள்ள துணி கூட இல்லாத எனக்கு எப்படி கடனைத் திருப்பித் தருவது என்று புரியவில்லை. 100% தற்கொலை எண்ணத்தில் இருக்கிறேன். நல்லவேலை இல்லை. தினமும் பட்டினி. சொந்தபந்தம் கூடப் பிறந்தவர்கள் யாரும் மதிப்பதில்லை. பேசுவதும் இல்லை. கடனை அடைக்க முடியுமா? பிறர் மதிக்கும் அளவிற்கு வருவேனா? யாரும் இல்லாத அனாதையான எனக்கு உங்கள் பதில்தான் வாழ்க்கையின் மூலதனம்.

பதில்:

(மகர லக்னம், மகரராசி, 1ல் சந், 2ல் சுக், 4ல் சூரி, புத, 6ல் ராகு, 9ல் செவ், சனி, 10ல் குரு, 12ல் கேது, 17-4- 1982, அதிகாலை 1-15 சேலம்)

ராகுதசையின் நிறைவுப்பகுதியான சூரிய, சந்திர, செவ்வாய் புக்திகள் லக்னத்திற்கு ஏற்றாற்போல கடுமையான பலன்களைத் தரும் என்பதை ஏற்கனவே எழுதி இருக்கிறேன். உங்கள் ஜாதகப்படி 2015ல் ஆரம்பித்த ராகுதசை, சூரிய சந்திரர்களின் புக்தி முதல் கடுமையான கடன் தொல்லைகளில் மாட்டி இருப்பீர்கள். 2021 வரை கடன் தீருவதற்கு வழி இல்லை. வரும் ஜனவரி மாதம் மகர ராசிக்கு ஆரம்பிக்க இருக்கும் ஜென்மச் சனியும்  நல்ல பலன் தருவதற்கு இல்லை

40 வயதிற்கு பிறகு உங்களுடைய வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வாழ்வின் பிற்பகுதியில் நல்ல நிலைமையில் இருக்கக்கூடிய ஜாதகம் உங்களுடையது. இன்னும் இரண்டு வருடங்களுக்கு பரம்பொருளின் துணையோடு வாழ்க்கையை சமாளியுங்கள். நீங்கள் பயப்படுவது போல ஒன்றும் ஆகாது. பணம் என்றால் என்ன? உறவுகள், நட்புகள் எப்படிப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளும் காலகட்டத்தில் இருக்கிறீர்கள். கவலைப்படாதீர்கள். 2022க்குள் பிறகு நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்.

ஸ்ரீ கிருஷ்ணா, காஞ்சிபுரம்.

கேள்வி:

நவீனகால ஜோதிட மகரிஷிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம். 2013 வரை நடந்த ராகு தசை, சுக்கிர புக்தியோடு என்னுடைய நிம்மதி அழிந்து விட்டது. தொடர்ந்து வந்த சூரிய, சந்திர, செவ்வாய் புக்திகளினாலும், அடுத்து வந்த அஷ்டமச் சனியாலும் நிலைகுலைந்து போயிருக்கிறேன். கல்லூரி முடித்ததிலிருந்து இதுவரை நிலையான வேலை இல்லை. கடுமையாகப் போராடி ஏதாவது வேலை கிடைத்தாலும் உடல் பிரச்சினை ஏற்பட்டு அந்த வேலை கைவிட்டுப் போய் விடுகிறது. தற்போது நடக்கும் குருதசை, சனி புக்தியில் சனி 6-7-க்குடையவர் என்பதால் வேலையையும், திருமணத்தையும் தருவாரா? சூரியன், செவ்வாய்க்கு சனியின் பார்வை இருப்பதால் என் தந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமா? லக்னாதிபதி சூரியன், நவாம்சத்தில் குரு-சுக்கிரனுடன் இணைந்திருப்பது நல்ல அமைப்பா? வரும் காலத்தில் என்னுடைய ஆன்மீகத் தேடலில் அற்புதம் நிகழுமா? பரம்பொருளின் பாதம் சேரும் பாக்கியம் இந்த ஜென்மத்தில் கிடைக்குமா?

பதில்:

(சிம்ம லக்னம், ரிஷப ராசி, 2ல் குரு, 3ல் சூரி, 4ல் புத, ராகு, 5ல் சுக், 6ல் சனி, 10ல் சந், கேது, 12ல் செவ், 13-11-1992 காலை 1-10 காஞ்சிபுரம்)

உண்மையான ஜோதிடபலனைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் திருக்கணித பஞ்சாங்கத்தை மட்டுமே உபயோகப்படுத்துங்கள், வாக்கியப் பஞ்சாங்கத்தில் கணித்த ஜாதகத்தை வைத்து சரியான பலன் சொல்ல முடியாது என்பதை சொல்லிச் சொல்லி அலுத்து விட்டது. இனிமேல் வாக்கிய பஞ்சாங்க ஜாதகத்தின்படி கேள்வி கேட்பவர்களுக்கு மாலைமலரில் பதில் சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன்.

நீங்கள் அனுப்பியுள்ள வாக்கியப் பஞ்சாங்க ஜாதகத்தின்படி, சூரியனும் புதனும் 3-ல் சேர்ந்திருக்கிறார்கள். சந்திரனுக்கு ஆறில் நீச்ச சூரியனுடன் புதன் இணைந்திருக்குமாயின் உங்களுக்கு ஜோதிடம் சுட்டுப் போட்டாலும் வராது. சந்திர கேந்திரத்தில் இருக்கும் புதனால் ஜோதிட ஆர்வமும் ஞானமும் கூடுதலாக இருக்கும். திருக்கணிதப்படி உச்ச சந்திரனுக்கு நேரெதிரே புதன் இருப்பதால்தான் உங்களுக்கு ஜோதிட ஆர்வமும் நல்ல ஞானமும் இருக்கிறது.

லக்னாதிபதி பலவீனமான நிலையில் அவரை விட 6ஆம் அதிபதி வலுக்கக் கூடாது. உங்கள் ஜாதகப்படி சூரியன் நீச்சமாகி, ஆறாம் அதிபதி சனி ஆட்சி பெற்றதால் வாழ்நாள் முழுவதும் ஏதாவது உடல் பிரச்சினை உங்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். அடுத்து நடக்க இருக்கும் சனி தசையும், அம்சத்தில் சனியோடு சேர்ந்திருக்கும் சூரியனும் இதனை உறுதி செய்கிறது.

அதேநேரத்தில் சூரியன் தனது நீச்ச பாகையான இருபது டிகிரியைத் தாண்டி விட்டதாலும், நீச்ச செவ்வாயின் நான்காம் பார்வையைப் பெற்றதாலும் ஓரளவிற்கு வலுவாகவே இருக்கிறார். ஆனால் அவருக்கு ராசியிலும் சுபத்துவம் கிடைக்காமல் அம்சத்திலும் சனியுடன் இணைந்து பாபத்துவம் பெற்றது ஆரோக்கியத்திற்கு கேடு. ஆனால் சனி வலுப்பெற்று எட்டாம் அதிபதி சுபராகி எட்டைப் பார்ப்பதால் ஆயுள் குற்றம் இல்லை.  

நவாம்சம் பற்றி நீங்கள் கேட்டிருக்கும் எந்தக் கேள்விக்கும் என்னால் பதில் சொல்ல இயலாது. நவாம்சத்தில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அத்தனை கிரக நிலைகளும் திருக்கணிதப்படி மாறுகின்றன. நடப்பு சனி புக்தியில் உங்களுக்கு திருமணம் நடப்பதற்கு வாய்ப்பில்லை.

இரண்டில் குரு அமர்ந்து, சனி, சந்திரன், கேதுவை ஒருசேரப் பார்ப்பதால் உங்களுக்கு ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும். லக்னாதிபதி நீச்சம் என்பதால் எதிலும் இலக்கின்றி, தன்னம்பிக்கை இன்றி மேம்போக்காக இருப்பீர்கள். புதன் புக்தி முதல் நல்ல நிலைக்கு வருவீர்கள். அஷ்டமச்சனி முடிந்து விட்டதால் இனி சோதனைகள் இருக்காது. வாழ்வின் பிற்பகுதியில் ஆன்மீக எண்ணங்கள் மற்றும் தொடர்புகளோடு நிம்மதியாக இருக்கும் ஜாதகம் உங்களுடையது. வாழ்த்துக்கள்.

(08.10.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.