ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 9768 99 8888
ஒருவர் தொழில்முறை ஜோதிடராக வேண்டுமாயினும், ஜோதிடத்தில் அவருக்கு ஆர்வம் உண்டாக வேண்டும் என்றாலும், அவரது ஜாதகத்தில் புதன் மிகுந்த சுபத்துவம் பெற்றிருக்க வேண்டும்.
ஜோதிடத்திற்கான மூல கிரகங்கள் புதன், குரு மற்றும் கேது ஆகும். ஜோதிடம் என்பது ஒரு விஞ்ஞானரீதியிலான கலையாக இருந்தாலும் ஒருவகையில் இங்கே மெய்ஞானத்தோடு தொடர்புபடுத்தப்பட்டிருப்பதால், ஆன்மீகத்தின் முதல் மற்றும் மூன்றாம் நிலைக் கிரகங்களான குருவும், கேதுவும் இங்கே ஜோதிடத்தோடு சம்பந்தப்படுகின்றன.
கேது என்பவர் மறைந்து கிடக்கும் உண்மைகளைக் குறிக்கக் கூடியவர் என்பதாலும், ஜோதிட சாஸ்திரமே எவரும் கண்டிபிடிக்க இயலாத ஆழமான ஒரு இடத்தில் புதையுண்டு கிடக்கும் மனித வாழ்க்கையின் உண்மைகளை உணருவதுதான் என்பதாலும் ஒருவர் ஜோதிடராவதற்கு கேதுவின் சுபவலு மிகவும் அவசியம்..
புதன் என்பவர் முழுக்க முழுக்க கணிதம் சம்பந்தப்பட்ட ஒரு கிரகமாவார். ஒன்றைப் புதிதாய் கண்டுபிடிப்பதற்கான காரணகர்த்தா இவர்தான். விஞ்ஞானிகளையும், பிறவிக் கணிதமேதைகளையும் இவர்தான் உருவாக்குகிறார். வானவியல் இவருடையது.
ஸ்தான பலத்தோடு, பலவீனமாகாமல், புதன் சுபத்துவமாக இருக்கும் நிலையில் ஒருவருக்கு முழுமையான பிரபஞ்ச அறிவைக் கொடுப்பார். இதுபோன்ற அமைப்பில் புதன் ஆட்சி, உச்சம் போன்ற நேர்நிலை ஸ்தான பலத்தை அடைந்திருக்கும்போது ஜாதகரை அறிவால் பிழைக்கும் நிலை, சாப்ட்வேர், கணிதத்துறை, நாசா போன்ற விண்வெளித்துறையில் ஈடுபடுத்துவார்.
அதே புதன் மறைமுகமான ஸ்தான பலத்தில் இருக்கும்போதோ, நேர்வலு இழந்து மீனத்தில் முறையான நீசபங்க வலுவோடு இருக்கும் பொழுதோ அல்லது வேறு வகைகளில் சுபத்துவம் பெற்றிருக்கும் போதோ ஒருவருக்கு மிக உன்னதமான, எளிதில் அறிய முடியாத, எந்நாளும் முழுமை பெற முடியாத மனிதனின் எதிர்காலத்தை அறியும் ஜோதிடக் கலையை அருளுவார்.
உயிர்களுக்கெல்லாம் தாயைப் போன்ற கிரகமான சந்திரனுக்கும் இவருக்கும் உள்ள தொடர்பை வைத்து ஒருவருடைய ஜோதிடத் திறமையை மதிப்பிட்டு விடலாம்.
சந்திரனுக்கு 1, 4, 7, 10 போன்ற கேந்திரங்களில் இருக்கும் புதன் ஒருவரை ஞானமுள்ள ஜோதிடராக்குவார். ஒரு நல்ல ஜோதிடரின் ஜாதகத்தில் தங்களுக்குள் கேந்திரங்களில் சந்திரனும், புதனும் இருப்பார்கள். அப்படி இல்லாவிட்டால் இருவரும் தனித்தனியே சுயமாக வலுப் பெற்றிருப்பார்கள்.
சந்திரனும், புதனும் பரிவர்த்தனை பெற்றிருப்பது, சந்திரன், புதன் சேர்ந்திருப்பது, சந்திரனுக்கு கேந்திரத்தில் புதன் இருப்பது, இருவரும் தனித்தனியே இருப்பினும் வலுவான ஸ்தான பலம் பெற்றிருப்பது போன்றவைகள் ஒருவரை ஜோதிடத்தை பெரிதும் அறிய வைக்கும்.
இத்தனை எளிமையாக ஜோதிடத்தை விளக்கும் இவரது ஜாதகம் எப்படி இருக்கும் என்ற ஆர்வம் அதிகரித்து, சமீப காலமாக மாலைமலர் மற்றும் இணையத்திலும், சமூகவலைத்தளங்களிலும், என்னுடைய ஜாதகத்தை விளக்கச் சொல்லக் கோரியும், எனது பிறந்தநாள், நேரம் என்ன என்று கேட்டும் அதிகமாக கமெண்ட்கள் வருவதால் ஒரு தொழில்முறை ஜோதிடரான என்னுடைய ஜாதகத்தையே முதலில் ஒரு ஜோதிடரைப் பற்றி விளக்க எடுத்துக் கொள்கிறேன்.
25-3-1965 காலை 11-55 மணிக்கு நான் மதுரையில் பிறந்தேன்.
ஜோதிடரையும், ஜோதிட ஆர்வலர்களையும் கொண்ட எனது குடும்பத்தில், நான் பிறந்த மருத்துவமனையின் பிரசவ அறைக்கு வெளியே என்னுடைய தாய்வழித் தாத்தா, கையில் கடிகாரத்தை வைத்துக் கொண்டு, எனது பிறப்பு நேரத்தை அறிவதற்காக காத்துக் கொண்டிருந்தார் என்று என்னுடைய தாய் அடிக்கடி சொல்வதுண்டு. எனவே என்னுடைய பிறந்த நேரம் துல்லியமானது.
ஜோதிடத்திற்கே உரிய மிதுன லக்னத்தில் நான் பிறந்திருக்கிறேன். (கன்னி வானவியலுக்கும், சாப்ட்வேருக்குமானது) எனது ராசி தனுசு. லக்னம் திருவாதிரை நட்சத்திரத்தில் அமர்ந்திருக்க, சந்திரன் மூலம் நட்சத்திரத்தின் இறுதியில் அமர்ந்திருக்கிறார்.
ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் ராகு-கேதுக்களின் நட்சத்திரத்தில் அமர்ந்திருப்பின், நிழல் கிரகங்கள் சுபத்துவம் அடைந்திருக்க வேண்டும் என்பது மிக முக்கிய விதி. அதன்படி இந்த ஜாதகத்தில் லக்னம் அமர்ந்த நாதனான ராகு, சுபராகிய சுக்கிரன் வீட்டில் அமர்ந்து குருவோடு இணைந்திருக்கிறார். ராகுவிற்கும், குருவிற்கும் 23 டிகிரி வித்தியாசம் இருக்கிறது.
ஜோதிடத்தின் முதன்மைக் கிரகமான புதன், இந்த ஜாதகத்தில் நீச்ச பங்க ராஜயோக அமைப்பில் இருக்கிறார். புதனுக்கு மட்டும் அஸ்தங்க அமைப்பு இல்லை என்றாலும் அவர் சூரியனை விட்டு ஓரளவிற்கு விலகி இருக்கும் சூழலில் அவரது முழுத்திறனும் ஜாதகருக்கு இருக்கும் என்பது உண்மை.

இங்கே புதன் நீச்ச அமைப்பில் இருந்தாலும், சூரியனை விட்டு 17 டிகிரி விலகி அஸ்தங்கம் ஆகாமல் இருக்கிறார். அதைவிட மேலாக தன்னுடைய சொந்த நட்சத்திரமான ரேவதி நான்காம் பாதத்தில் வர்கோத்தம நிலையில் இருக்கிறார்.
ஒரு கிரகத்தின் நீச்ச நிலை என்பது மிக முக்கியமான சூட்சும அமைப்பு என்பதை அடிக்கடி எனது கட்டுரைகளிலும் வீடியோக்களிலும் வலியுறுத்தி வருகிறேன்.
ஜோதிடத்தில் உள்ள ஏராளமான முரண்பாடு நிலைகளில் ஒரு கிரகத்தின் நீச்சம், உச்சம் போன்ற நிலைகள் உண்டு. ஜோதிடத்தை முறையாகப் புரிந்து கொள்ளாதவர்கள் அல்லது புரிந்து கொள்ள இயலாதவர்களே ஒரு கிரகத்திற்கு உச்சம், நீச்சம் போன்ற நிலைகள் இல்லை என்று சொல்கிறார்கள்.
ஜோதிடமே முரண்பாடுகளைக் கொண்டதுதான். இரண்டு வேறுவேறு முனைகளை இழுத்துப் பிடித்து நீங்கள் இணைக்கும் பொழுதுதான் ஒரு முழு வளையம் உருவாகி, அந்த வளையத்திற்குள் பலன் என்கின்ற ஒரு மாபெரும் உண்மை புலப்படும். அப்படிப்பட்ட முரணான முனைகளில் ஒன்று ஒரு கிரகத்தின் நீச்ச நிலை என்பது.
இதைத்தான் எனது “நீச்சபங்க ராஜயோகம், சில உண்மைகள்” எனும் கட்டுரையில் ஒரு கிரகத்திற்கு 100 மதிப்பெண் கொடுப்பதாக இருந்தால், அதன் உச்சம் என்பது முழுமையான மதிப்பான 100 ஆகவும், முழுமையான நீச்சபங்கம் என்பது கொடுக்கவே முடியாத மதிப்பெண்ணான 120 ஆகவும் குறிப்பிட்டிருந்தேன்.
ஆகவே ஒரு முரண்பட்ட சூழ்நிலையில், முழுமையான நீச்ச பங்கத்தைப் பெற்றிருக்கும் ஒரு கிரகம், உச்சத்தை விட மேலான ஒரு நிலையை அடைந்தே தீரும். அப்போது அந்தக் கிரகம் தன்னுடைய அதி உயர்நிலை காரகத்துவத்தை அபரிமிதமாக ஜாதகருக்கு வழங்கும்.
ஒரு கிரகம் என்னவிதமான பலன்களை ஜாதகருக்கு வழங்கும் என்பதை துல்லியமாக அறிந்து கொள்வதில்தான் ஜோதிடத்தின் அடிநாதம் உள்ளது. நான்கு கிரகங்கள் உச்சமாக இருந்தும் இந்த ஜாதகரின் வாழ்க்கை சரியில்லை என்று ஒரு ஜோதிடர் குழம்புவது, கிரகங்களின் நிஜமான தன்மையை அறிந்து கொள்ள முடியாததால்தான்.
உச்சம் பெற்ற கிரகங்கள் அனைத்தும் நிஜமாகவே அந்த ஜாதகத்தில் உச்சத்தில்தான் இருக்கிறது என்று அர்த்தமல்ல. உச்சம் பெற்ற கிரகம் வக்ரமாக இருந்தால் மாறுபாடான பலன்களை தரும் என்று நமக்கு போதிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல அந்த ஜாதகத்திற்கு, அந்தக் கிரகம் உச்சமடைய வேண்டுமா என்பதும் ஒரு மிக முக்கிய விதி.
லக்ன சுபர்கள் வலுத்தும், லக்ன அசுபர்கள் வலுவிழந்தும் இருப்பதே யோக ஜாதகம். ஒரு உச்சனைப் பற்றிய கணிப்பு தவறுகிறது என்றால் அந்த உச்சக் கிரகம் வக்ரம் அடைந்திருக்கலாம், சனி, செவ்வாய், ராகுவின் இணைவு பெற்று பாபத்துவம் அடைந்திருக்கலாம், தனக்கு முற்றிலும் ஆகாத பகைக் கிரகங்களின் சம்பந்தத்தை பெற்றிருக்கலாம்.
ஒரு கிரகம் நல்லவிதத்தில், தன்னுடைய காரகத்துவத்தை முழுமையாகத் தர இருக்கும் சூழலில் சுபத்துவமாக அமைந்திருக்கும் நிலைகளில் மட்டுமே மிகப் பெரிய உயர்நிலைகளை தரும். அது உச்சமாக இருக்கிறது, நீச்சமாக இருக்கிறது என்பது இரண்டாம் அமைப்புதான்.
கிரகங்கள் எவ்விதமான பலனைத் தரும் என்பதைப் புரிந்து கொள்வதற்காகவே நம்முடைய ஞானிகள் அவற்றை மனித உறவுகளாக வகைப்படுத்தி அவற்றிற்குள் பகை, நட்பு, சமம் போன்ற நிலைகளைச் சொன்னார்கள். மனிதனை இயக்கும் கிரகங்களை, மனிதனைப் போன்றே உறவுகளுக்கு கட்டுப்பட்டவனாக்கியது மிகவும் பொருத்தம்தான்.
எப்போது நீங்கள் கிரகங்களுக்கு இடையே இருக்கும் பகை, நட்பு, அதிநட்பு, ஜென்ம விரோதம் போன்ற நுணுக்கமான உறவுகளை முழுமையாகப் புரிந்து கொள்கிறீர்களோ அப்போதுதான் ஒரு கிரகம் ஜாதகருக்கு என்ன விதமான பலன்களைத் தரும் என்பதை துல்லியமாக கணிக்க முடியும்.
உதாரணமாக அதி நண்பரோடும், இரண்டாம் நிலை நண்பரோடும் இருக்கும் கிரகம் நல்ல மனநிலையில் இருக்கும் என்பதால், ஜாதகருக்கு தனது தசையில் நல்ல பலன்களைத் தரும். தனது காரகத்துவத்தையும் ஜாதகருக்கு அதனால் முழுமையாகச் செய்ய இயலும். கூடுதலாக அந்தக் கிரகம் தன்னுடைய சொந்த வீட்டிலோ, உச்ச வீட்டிலோ இருக்கும்போது அதிகமான நற்பலன்கள் இருக்கும்.
இதை நீங்கள் உங்களுடைய சொந்த வீட்டில், செல்வாக்கோடு, உங்களுடைய உயிர் நண்பர் மற்றும் உங்களை உயிராக நினைக்கும் நண்பருடன், சந்தோஷமான மனநிலையில் இருக்கும்பொழுது, உதவி கேட்டு வரும் ஒருவருக்கு என்ன செய்வீர்களோ அதைப் போன்று பொருத்திப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கிரகம் என்ன செய்யும் என்பதைக் கணிக்க பாரம்பரிய ஜோதிடத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஆறுவகையான ஷட்பலம் என்பது நான் சொல்லும் சுபத்துவ, சூட்சுமவலு கோட்பாட்டிற்கு அப்பாற்பட்டது.
ஒரு கிரகம் சுபத்துவமாக இருக்கும் நிலையில் அது நீச்சமாக இருந்தாலும், பகை அமைப்பில் இருந்தாலும், பகைவரின் வீட்டில் இருப்பினும் தன்னுடைய சுப காரகத்துவங்களை ஜாதகருக்கு செய்யும். அதேநேரத்தில் உச்சமாக இருப்பினும் பாபத்துவமாக இருக்கும் நிலையில் அது நல்ல பலன்களைச் செய்யாது.
ஒரு கிரகத்தின் சுபத்துவத்தை முழுமையாக அறிந்து கொள்ளும் போதும், அந்த கிரகம் பாபக்கிரகமாக இருப்பின் கூடுதலாக சூட்சுமவலுவோடு இருக்கிறதா என்பதைப் புரிந்து கொள்ளும்போதுதான், அது ஜாதகருக்கு எத்தகைய பலன்களை செய்யும் என்பதைக் கணிக்க முடியும். இயந்திரத்தனமான ஷட்பல கணக்குகளை கொண்டு நீங்கள் ஒரு கிரகத்தின் முழுத்திறனையும் கணக்கிட்டு விட முடியாது.
இதுபோன்று சொல்வதால் ஷட்பல கணிதங்களை நான் குறை சொல்கிறேன் என்று அர்த்தமல்ல. கிரகங்களின் பலத்தை அறிவதற்கு நமது மூல நூல்கள் சொல்லும் ஷட்பல கணிதத்தை விட துல்லியமாக அவற்றின் நிலைகளை சுபத்துவ, சூட்சும வலு கோட்பாட்டின் மூலமாக அறிந்து கொள்ள முடியும் என்பதே நான் சொல்ல வருவது.
சில நிலைகளில் ஷட்பல கணக்குகளில் ஒரு கிரகம் முதன்மை நிலையில் இருந்தும், அந்த ஜாதகருக்கு அக்கிரகம் கெடுதல்களைச் செய்வதற்கு எனது சுபத்துவ, பாபத்துவ, சூட்சும வலுக்கோட்பாடு முழுமையான பதிலைத் தரும். ஷட்பலத்தில் கடைநிலையில் ஒரு கிரகம் இருந்தாலும் கூட அக் கிரகம் சுபத்துவமாகவோ, சூட்சும வலுவுடனோ இருக்கும் நிலையில், நல்லவைகளை மட்டுமே செய்யும். இதனை எந்தவொரு ஜாதகத்திலும் உறுதி செய்து கொள்ளலாம்.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்
(04.10.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.