ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 9768 99 8888
சுதா, நெல்லை.
கேள்வி:
அப்பா... கடந்த நான்கு ஆண்டுகளாக மாலைமலரில் உங்கள் கருத்துக்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அதன்மூலம் எனக்கும் கொஞ்சம் ஜோதிட அறிவு ஏற்பட்டுள்ளது. குடிகாரத் தந்தையால் என் குடும்பம் கஷ்டப்படுகிறது. அம்மாவும் என் தம்பி, தங்கைகளும் அவரிடம் வாங்கும் திட்டுக்கும், அடிக்கும் கணக்கில்லை. பொங்கல் தீபாவளி போன்ற நல்ல நாளும் எங்களுக்கு கெட்ட நாளாகவே அமைந்து விடுகிறது. என் அம்மாதான் பீடி சுற்றி எங்களை டிகிரி வரை படிக்க வைத்துள்ளார். என் தாய்மாமாவிற்கு என்னை பெண் கேட்கிறார்கள். புகுந்த வீட்டிலாவது கஷ்டப்படாமல் இருப்பேனா? உங்கள் பதிலில்தான் மாமாவிற்கு வாக்கப்படலாமா வேண்டாமா என்று முடிவெடுக்கப் போகிறேன். கஜகேசரி யோகம், தர்மகர்மாதிபதி யோகம் இருந்தும் நான் கஷ்டப்பட காரணம் என்ன? தற்போது பீடி சுற்றிக் கொண்டே அரசுத் தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கிறேன். அரசு வேலை கிடைக்குமா? மாமாவை திருமணம் செய்யலாமா? உங்கள் மகளின் கேள்விக்கு ஜாதகத்தில் உள்ளதை அப்படியே சொல்லுமாறு பாதம் தொட்டு கேட்கிறேன்.
பதில்:
(துலாம் லக்னம், மிதுன ராசி, 3ல் குரு, 6ல் சனி கேது, 8ல் சுக், செவ், 9ல் சூரி, சந், 10ல் புத, 12ல் ராகு, 15-7-1996 மதியம் 1-14 நெல்லை)
லக்னாதிபதி சுக்கிரன் எட்டில் மறைந்தாலும் ஆட்சி பெற்று இருக்கிறார். தசாநாதன் சனி ஆறில் மறைந்தாலும் ஆட்சி பெற்ற குருவின் வீட்டில் அமர்ந்து சூட்சுமவலுப் பெற்றிருக்கிறார். முழுமையான அமாவாசை யோகத்தில் பிறந்திருக்கிறாய். சூரியன் சந்திரன் இருவரையும் வலிமை பெற்ற குரு பார்ப்பது கஷ்டங்களை தவிர்க்கும். துன்பம் தரும் அமாவாசை யோகத்தை குரு பார்ப்பது நிவர்த்தி. அதைவிட மேலாக சந்திரனும், புதனும் பரிவர்த்தனை அடைந்து அடைந்திருப்பது உன் ஜாதகத்தில் சிறப்பான அமைப்பு.
ஒரு ஜாதகத்தில் ராசி, லக்னத்திற்கு ஏழாமிடம். மற்றும் இரண்டாமிடத்தோடு சுபர்கள் தொடர்பு கொண்டு, பாபத்துவம் இல்லாத நிலையில், தாய்மாமன் கிரகமான புதன் அங்கே தொடர்பு கொண்டால் தாய்மாமனை திருமணம் செய்யும் நிலை ஏற்படும். உன்னுடைய ஜாதகப்படி, ராசிக்கு இரண்டாம் வீட்டில் புதன் அமர்ந்து, பரிவர்த்தனை நிலையில் ஆட்சி பலம் உண்டாகி, ராசிக்கு ஏழில் குரு இருப்பதால் உனக்கு தாய் மாமனுடன் திருமணம் நடக்கும். திருமணத்திற்கு பிறகு மிகவும் நன்றாக இருப்பாய். இப்போதைய கஷ்டங்கள் எதிர்காலத்தில் உனக்கு இருக்கப்போவதில்லை.
கஜகேசரி யோகம் போன்ற குரு, சந்திரன் சம்பந்தப்பட்ட யோகங்கள் துலாம் லக்னத்திற்கு பலன் தராது. சூரியனையும், சந்திரனையும் வலுத்த குரு பார்த்து, அரச ராசியான சிம்மம் குரு, செவ்வாய் பார்வையில் இருப்பதால் உனக்கு இன்னும் ஒரு வருடம் கழித்து அரசு வேலை கண்டிப்பாக உண்டு. படிப்பதை நிறுத்தி விடாதே. உன் திருமணத்திற்கு பிறகு உன் குடும்பமும் நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள் அம்மா.
(01.10.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.