ஒருவரின் குலதெய்வத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளவும், அந்தக் குலதெய்வம் ஆண்தெய்வமா, பெண் தெய்வமா? எந்த இடத்தில் குடி கொண்டு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறது என்பதனை அறிந்து கொள்ளவும் பூர்வபுண்ணியஸ்தானம் எனப்படும் ஐந்தாம் வீட்டை ஆராய்ந்து சொல்ல வேண்டும் என வேதஜோதிடம் நம்மை அறிவுறுத்துகிறது. (பூர்வபுண்ணியம் என்றால் சென்ற பிறவியில் நாம் செய்த நல்ல காரியங்கள் என்று அர்த்தம்)
ஒருவர் எத்தனை இஷ்டதெய்வங்களை வணங்கினாலும் குலதெய்வமே அவரைக் காக்கும் முதன்மைக்கடவுள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் மாறிவரும் காலச்சூழலில் வேலைவாய்ப்பு, தொழில் விஷயமாக கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு குடியேறுவது போன்றவைகளால் சிலருக்கு தங்களது குலதெய்வத்தின் தொடர்பு விடுபட்டுப் போகிறது.
ஒரு சிலர் தலைமுறைக் கணக்கில் குலதெய்வ வழிபாடு விட்டுப் போய் குலதெய்வம் இன்னெதென்றும், அந்த மகாசக்தி எங்கே இருக்கிறது என்று அறியாமலும் இருக்கின்றனர். இது போன்றவர்கள் ஜோதிடத்தின் உதவியுடன் தங்களின் குலதெய்வம் பற்றி அறிந்து கொள்ள முடியும்.
ஒருவரின் ஜாதகத்தில் ஐந்தாம்பாவம் பெண்ராசியானால் அவரது குலதெய்வம் அம்மன் என்றும், ஆண்ராசியானால் அவரது குலதெய்வம் அய்யன் என்பதும் பொதுவான விதிகளாகும்.
மேற்படி ஐந்தாம் பாவம் ராசி அல்லது நவாம்சத்தில் சனியின் வீடுகளானாலோ அல்லது சனிபகவான் அங்கே தொடர்பு கொண்டு இருந்தாலோ, அவரது குலதெய்வம் முனீஸ்வரன், வீரன், கருப்பன் போன்றவர்களும், செவ்வாயானால் ஆயுதம் தாங்கிய எல்லை காக்கும் வீரத்தெய்வங்கள் என்பதையும் ஜோதிடம் சொல்கிறது.
ஒருவரின் ஜாதகத்தில் அவருடைய ஐந்தாம் பாவமும், ஒன்பதாம் பாவமும் பாபக்கிரக ஆதிக்கத்தில் இருப்பது, பிதுர்தோஷம் இருப்பது, சுபர்கள் பலவீனம் பெற்று ராகுவின் அசுபபலம் ஓங்கியிருப்பது போன்றவகள் மூலம் குலதெய்வத்துடனான அவரது தொடர்பு விட்டுப் போயிருக்கிறது என்பதை ஒரு முழுமையான ஜோதிடரால் தெரிந்து கொள்ள முடியும்.இப்படி பிதுர்தோஷம் அமைந்து குலதெய்வத் தொடர்பும் விட்டுப்போகும் நிலையில் அவரது குடும்பத்தில் வயது கடந்தும் திருமணம் ஆகாதநிலை, ஏற்கனவே திருமணம் ஆகாதவர்கள் நன்கு வாழாதநிலை அல்லது குழந்தையின்மை, குடும்பத்திற்கே வாரிசு இல்லாமல் போகுதல், தாள முடியாத தரித்திரம் போன்றவைகள் ஏற்படும்.
இதுபோன்ற நிலைகளில் குலதெய்வத்தைத் தெரிந்து வழிபடுவது போன்ற முறையான பரிகாரங்களை செய்வதன் மூலம் ஒருவர் மேற்கண்ட தோஷங்களைப் போக்கி நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.