adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 255 (24.09.19)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

ஒரு ரசிகை, சென்னை.

கேள்வி:

பிடெக் முடித்து நல்ல வேலையில் இருக்கிறேன். வீட்டில் எனக்கு ஜோதிடம் பார்த்த போது, என் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையாது, அமைந்தாலும் திருப்தியாக இருக்காது என்று ஜோதிடர்கள் சொன்னார்கள். எனக்கு திருமண வாழ்க்கை உண்டா? நடந்தால் நன்றாக இருக்குமா? ஒருவரை ஒருதலைப்பட்சமாக ஆறு வருடமாக காதலிக்கிறேன். என் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று நீங்கள் சொன்னால் அவரிடம் என் காதலைச் சொல்லி அவரைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். வாழ்க்கை சிறக்காது என்றால் வெளிநாடு சென்று வேலை செய்து அங்கேயே செட்டில் ஆகிவிடலாம் என்ற எண்ணமும் இருக்கிறது. திருமண வாழ்க்கை பாதிக்கும் என்ற பயத்தில்தான் அவரிடமும் என் காதலைச் சொல்லாமல் இருக்கிறேன். என்னுடைய குழப்பத்திற்கு நீங்கள்தான் பதிலும், எப்போது திருமணம் நடக்கும் என்பதையும் சொல்ல வேண்டும்?

பதில்:

(துலாம் லக்னம், கடக ராசி, 4ல் சனி, ராகு, 5ல் செவ், 6ல் சுக், 7ல் சூரி, புத, 9ல் குரு, 10ல் சந், கேது, 1-5- 1990 மாலை 6-29 வேலூர்)

திருமண வாழ்க்கை சிறப்பாக அமையாது, அமைந்தாலும் திருப்தியாக இருக்காது என்று உன் வீட்டார் பார்த்த ஜோதிடர்கள் பலன் சொன்னது எப்படி, எந்தவிதத்தில் என்று புரியவில்லை. கண்டிப்பாக ஆண் குழந்தைதான் பிறக்கும், தவறினால் பெண் குழந்தை, என்று சொல்வதுபோல இருக்கிறது இது.  

ஜோதிடத்தில் சஜஷன் என்று எதுவும் கிடையாது. பிரடிக்ஷன் மட்டும்தான். ஒருமுறை ஒரு ஜோதிட மாநாட்டில் யதார்த்த ஜோதிடர் ஷெல்வி அய்யா அவர்கள் குறிப்பிட்டது போல என்ன நடக்கும் என்று  பலன் சொல்பவர் மட்டுமே ஜோதிடர்,  என்ன செய்யலாம் என்று ஆலோசனை சொல்லுபவர் ஜோதிடர் அல்ல, அவர் கவுன்சிலிங் செய்பவர். 

லக்னாதிபதி சுக்கிரன் தனித்து உச்சமாகி, ராஜயோகாதிபதி சனியின் நட்சத்திரத்தில் அமர்ந்து, சுக்கிர தசையும் தற்போது ஆரம்பித்துள்ள யோக ஜாதகம் உன்னுடையது. இன்னொரு இயற்கை சுபரான குரு திரிகோணத்தில் அமர்ந்து, லக்னத்தைப் பார்க்கும் நிலையில், நான் அடிக்கடி குறிப்பிடும் சூரியனும், சந்திரனும் தங்களுக்குள் கேந்திரங்களாகவும், லக்ன கேந்திரங்களிலும் உள்ளது முதல் தர யோகம்.

பாதகாதிபதியான சூரியன் ஏழில் உச்சமாக இருப்பதாலும், ராசிக்கு ஏழில் சனி, ராகு, ராசிக்கு எட்டில் செவ்வாய் என்ற அமைப்பு உள்ளதாலும், உனது திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்காது என்று உன் வீட்டார் சென்று பார்த்த ஜோதிடர்கள் சொல்லி இருக்கலாம். 

கணவனைக் குறிக்கும் ஏழுக்குடைய செவ்வாயைக் குரு பார்ப்பது ஒரு நல்ல அமைப்பு. பாதகாதிபதி பாதகத்தை செய்வது மிக அரிதான நேரங்களில் மட்டும்தான். அதிலும் தனித்து வலுவாக இருக்கும் பாதகாதிபதி மட்டுமே பாதகத்தை முழுமையாகத் தரக் கடமைப்பட்டவன்.

இங்கே உன் ஜாதகப்படி 12-க்குடைய புதனுடன் இணைந்திருக்கும், சூரியன் பாதகத்தைச் செய்ய மாட்டார். அதைவிட மேலாக லக்னாதிபதி வலுவாக இருக்கும் ஜாதகங்களில் எத்தைகைய தோஷங்களும் கெடுபலன்களைச் செய்யாது. எந்த ஒரு நிலையிலும் லக்னாதிபதியின் வலுவே முக்கியம்.

கடுமையான தோஷம் இருக்கும் ஒருவருக்கு நல்லவகையில் திருமணமாகி நிம்மதியாகவே வாழ்ந்து கொண்டிருப்பார். 

ஆழ்ந்து கவனித்தால் அவரது ஜாதகத்தில் லக்னாதிபதி தனித்த வலுவுடன் இருப்பதைப் பார்க்கலாம். அந்த அமைப்பு உனக்கு இருக்கிறது. ஒருவர் உன்னைப் போட்டு அடி அடி என்று அடித்தாலும், தாங்கும் உடல் வலிமை இருந்தால் உனக்கு ஒன்றும் ஆகாது இல்லையா? அது போன்றதுதான் இதுவும்.

கடந்த சில மாதங்களாக உனக்கு லக்னாதிபதி சுக்கிரனின் தசை ஆரம்பித்திருப்பதால் இந்த சுய புக்தியில், உன்னுடைய 30 வது வயதில், அடுத்த வருட பிற்பகுதியில், உனக்கு திருமணம் நடக்கும். திருமணத்திற்குப் பிறகு உன் வாழ்க்கை சிறப்பாகவும். சொகுசாகவும் அமையும். கவலைப்படாதே அம்மா. எதிர்காலத்தில் மிகவும் நன்றாக இருப்பாய். வாழ்த்துக்கள்.

வி. எம். சுந்தரம், சென்னை.

கேள்வி:

மகளின் முதல் திருமணம் முறிந்து விட்டது. இரண்டாவது திருமணத்திற்கு சில ஆண்டுகளாக முயற்சி செய்தும் ஒத்துவரவில்லை. ராகுகேது தோஷத்திற்கு அதேபோன்று தோஷமுள்ள ஜாதகம்தான் இணைக்க வேண்டுமா? தோஷம் இல்லாத ஜாதகத்தையும் இணைக்கலாமா? இரண்டாவது திருமணம் என்பதால் அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. என் மனப் போராட்டத்திற்கு விடை தாருங்கள்.

பதில்:

(மகர லக்னம், சிம்ம ராசி, 1ல் சுக், சனி, ராகு, 5ல் செவ், 7ல் குரு, கேது, 8ல் சந், 11ல் புத, 12ல் சூரி, 4-1-1991 காலை 8-18 ஈரோடு)

உங்கள் கேள்விக்கு ஏற்கனவே தெளிவாக, விரிவாக பதில் தந்திருப்பது என் நினைவில் இருக்கிறது. திரும்பத் திரும்ப பல கடிதங்கள் எழுதினாலும் என்னுடைய பதில் ஒன்றாகத்தான் இருக்கும். மகளுக்கு வரும் சூரிய தசை சுக்கிர புக்தியில் அடுத்த வருடம் மே மாதத்திற்கு பிறகு முப்பதாவது வயதில் திருமணம் நடக்கும். இரண்டாவது திருமணம் மிகவும் நன்றாக இருக்கும். மகள் சிறப்பாக வாழ்வாள். வாழ்த்துக்கள்.

லக்ஷ்மி, நியூயார்க்.

கேள்வி:

தங்கள் மாலைமலர் பதிவுகளின் தீவிர ரசிகை நான். என் ஜோதிட ஞானம் உங்கள் தயவில் வந்ததால் என் தலை உங்கள் பாதத்தில் எப்போதும் வணங்கும். என் வாழ்க்கையை, கர்மாவை, பாதையை புரிய வைத்ததும், மன அமைதி கொடுத்ததும் உங்களின் மாலைமலர் பதிவுகளே. 16 வருட காலம் போராட்டமாக இருந்த என் வாழ்க்கை இப்பொழுது ஒரு நிம்மதியான முடிவுக்கு வந்துள்ளது. என் ஜாதகமே வினோதமான ஒன்று. ஏழில் ஐந்து கிரகம் பாபத்துவமாக அமர்ந்து, நீங்கள் சொல்வது போல கும்ப லக்னத்திற்கு வரக்கூடாத சூரிய, சந்திர தசைகளால் கடந்த 16 வருட காலம் நான் படாத துன்பமில்லை. 2003-இல் திருமணமாகி, 2019 இல் விவாகரத்து பெற்றிருக்கிறேன். அடுத்து நடைபெற இருக்கும் செவ்வாய் தசையில் நான் தொழில் செய்வேனா? வேலையில் மாற்றம் இருக்குமா? செவ்வாய் தன் வீட்டிற்கு எட்டில் மறைவது நல்லதா? பாபக் கிரகமான செவ்வாய் திரிகோணத்தில் இருப்பது நன்மையா? என்னுடைய நவாம்சத்தில் கிரகங்கள் நல்ல நிலைமையில் இருப்பதன் பொருள் என்ன? இரண்டாம் திருமணம் மூலம் வாழ்க்கைத் தரம் உயருமா? வாழ்வில் 16 வருடம் பட்ட கஷ்டம் திரும்ப வருமா? உங்களின் தீவிர பக்தைக்கு பதில் அளிக்கவும்.

பதில்:

(கும்ப லக்னம், 1ல் கேது, 5ல் செவ், 6ல் புத, குரு, 7ல் சூரி, சந், சுக், சனி, ராகு, 22-8-1979 இரவு 7-30 சென்னை)

ஏழாமிடத்தில் ஐந்து கிரகங்கள் அமர்ந்து சூரியனும், சந்திரனும் அமாவாசை யோகத்தில் பாபத்துவமாக இருந்தாலும், அங்கே சூரிய சந்திரர்கள் இருவருடனும் ஒரே டிகிரியில், அவர்களுக்கு நடுவில் அமைந்திருக்கும் சுக்கிரனால் இருவரும் சுபத்துவம் அடைகிறார்கள். சுக்கிரன் ஒருவர் அங்கே இருப்பதால் மற்ற நால்வரும் சுபத்துவம் பெறுவதே உங்கள் ஜாதகத்தில் நுணுக்கமான விஷயம். ஆனால் சுக்கிரன் வலுவிழந்து விட்டார்.

சுக்கிரன் மட்டும் அந்த இடத்தில் இல்லை என்றால் நீங்கள் படிக்கவில்லை, உங்களுக்கு மணவாழ்க்கை இல்லை. நீங்கள் சிந்திக்கும் திறன் இல்லாத ஒரு பிறவியாக, அல்லது வாழத் தகுதியற்ற, கீழ்நிலையில் உள்ளவராக இருந்திருப்பீர்கள். சுக்கிரன் ஒருவர் அங்கே இருக்கும் ஒரே காரணத்தினால் எனக்கு என்ன நடக்கிறது, ஏன் இப்படி நடக்கிறது என்பதை ஆராய்ந்து பார்க்கும் அறிவுடன் இருக்கிறீர்கள்.

எட்டாம் அதிபதி உச்ச குருவுடன் இணைந்து, 12-ஆம் இடம் குருவின் பார்வையால் சுபத்துவப்படுவதால் நிரந்தரமாக அமெரிக்காவில் இருப்பீர்கள். கும்ப லக்னக்காரர்களின் பலவீனமே அதிகமாக மனதைப் போட்டு குழப்பிக் கொள்வதாகத்தானிருக்கும். அதற்கு நீங்கள் விதிவிலக்காக இருக்க முடியாது. ஜாதகப்படி எதையுமே எதிர்மறையாக எடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு நபராக இதுவரை இருந்திருப்பீர்கள்.கடந்த 16 வருடங்களாக  நடக்கும் சூரிய, சந்திர தசைகள் உங்கள் வாழ்வில் போராட்ட காலத்தின் உச்சமாக இருக்கும். அடுத்து வர இருக்கும் செவ்வாய் தசை உங்களுக்கு நிச்சயம் நன்மைகளை மட்டுமே செய்யும். செவ்வாய் அம்சத்தில் கேதுவுடன் இணைந்திருப்பது நன்மைகளை செய்யும் ஒரு சூட்சுமவலு அமைப்பு. 

செவ்வாய் தசை முதல் உங்களால் தொழில் செய்ய முடியும். செவ்வாய் தசை குரு புக்தியிலிருந்து உங்களுடைய பொருளாதார நிலைமைகள் மிகவும் நன்றாக இருக்கும். இரண்டாவது திருமணமும் அப்போது அமையும். ஏழாம் இடம் பலவீனமாகி, பதினொன்றாம் அதிபதி வலுப் பெற்றதால் இரண்டாவது திருமணத்தின் மூலமாக நிம்மதியை பெறும் ஜாதகம் உங்களுடையது. இரண்டாவது வாழ்க்கை நன்றாக இருக்கும். 2022 முதல் வாழ்க்கை சிக்கலின்றி செல்லும். வாழ்த்துக்கள்.

(24.09.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.