ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 9768 99 8888
ரா. ஜெயஸ்ரீ, மதுரை.
கேள்வி:
திருமண வாழ்வில் எனக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அதில் ஏமாற்றம் கண்டேன். இன்று அதில் பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. தற்போது எல்லாவற்றையும் மறந்து ஒரு நல்ல தொழில் செய்து அனைத்துப் பெண்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்க ஆசைப்படுகிறேன். தொழில் செய்வது உறுதி என்றாலும் அதில் ஒரு “லேடிஸ் ஐகான்” போல பல கோடிகளைச் சம்பாதிக்கும் அமைப்பு எனக்கு உள்ளதா? பெண்ணுக்கு தொழில் தேவையில்லை என என்னை மட்டம் தட்டும் ஆண் உறவினர்கள் முன் சாதித்துக் காட்ட முடியுமா? சமுதாயத்தில் ஒரு விஐபி அந்தஸ்து பெறுவேனா? தொழிலில் நிரந்தர சாதனை புரிவேனா? நாம் காணும் கனவே நம்மை லட்சிய பாதைக்கு எடுத்துச் செல்லும். இது என் வாழ்நாள் கனவு. இது நிறைவேறுமா அல்லது என் மண வாழ்க்கை போல கானல் நீராய் போய்விடுமா? எனது லட்சியத்தை நான் செயல்படுத்துவது தங்களின் வார்த்தைகளில்தான் உள்ளது ஐயா. நேரில் வந்தபோது என் மணவாழ்வில் என்னை நல்வழிப்படுத்திய நீங்கள், இதிலும் வழிகாட்ட வேண்டும்.
பதில்:
(மேஷ லக்னம், சிம்ம ராசி, 1ல் செவ், 3ல் சுக், 4ல் சூரி, புத, குரு, கேது, 5ல் சந், 9ல் சனி, 10ல் ராகு, 24-7- 1990 இரவு 11-45 மதுரை)
பேராசைப்பட்டால்தான் ஆசைப்பட்டதாவது கிடைக்கும் என்பதுதான் நம் மனம் சொல்லும் நீதி. அதுவே ஒரு உளவியல் உண்மை. இதைத்தான் கனவு காணுங்கள் என்று நம்முடைய மாணவர்களுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர், மேன்மைமிகு அப்துல்கலாம் அவர்கள் கூறினார்கள்.
மேஷ லக்னத்தில் பிறந்த உனக்கு சூரியன், சந்திரன், செவ்வாய், குரு ஆகிய நான்கு மூலக் கிரகங்களும், துணைக் கிரகமான கேதுவும் வலிமையாக இருந்து அவற்றின் தசைகளும் நடக்குமாயின் நீ நினைத்ததை சாதிக்க முடியும் என்பது ஜோதிட விதி.
லக்னத்தில் செவ்வாய் சுபத்துவ, சூட்சும வலுவின்றி இருப்பினும், ஆட்சி பெற்று அமர்ந்து, சூரியனும், சந்திரனும் ஆட்சிக்கு நிகரான பரிவர்த்தனையாகி, யோகாதிபதி குரு உச்சம் பெற்று கேள யோகத்தில் அமர்ந்த உயர்தர யோக ஜாதகம் உன்னுடையது. இயற்கை சுபரான குரு உச்ச வர்கோத்தமம் அடைவது நல்லதல்ல என்றாலும் அவர் கேதுவுடன் இணைந்திருப்பது உச்ச வர்கோத்தமத்திற்கு விதிவிலக்கு.
அனைத்தையும் விட மேலாக, 20 வயதிலிருந்து உனக்கு யோகத்தை மட்டுமே தரக்கூடிய சூரிய, சந்திர, செவ்வாய், சனி, செவ்வாய் தொடர்பின்றி குருவின் பார்வையை மட்டும் பெற்ற மகர ராகு, அடுத்து குருதசை என வாழ்நாள் முழுவதும் யோக அமைப்புகளை மட்டுமே தரக்கூடிய தசா புக்திகளும் நடக்க இருக்கிறது.
திருமண வாழ்க்கை எதிர்பார்ப்புகள் தோல்வியில் முடிந்தன என்று எழுதி இருக்கிறாய். அதற்கு செவ்வாய் லக்னத்திற்கு ஏழாம் இடத்தை பார்த்ததும், ராசிக்கு ஏழாமிடத்தையும் சுக்கிரனையும் சனி பார்த்ததுமே காரணம். தொழில் ஸ்தானாதிபதியான சனி, குருவின் வீட்டில் சுக்கிரனின் பார்வையில் அமர்ந்திருப்பதால் உன்னால் மிகவும் சிறப்பாக தொழில் செய்ய முடியும்.
ஆரம்பத்தில் அவசரக்குடுக்கைத்தனமாக சில செயல்களைச் செய்து சில சரிவுகளை சந்திப்பாய். செவ்வாய் பலம் பெற்ற மனஉறுதி மிக்கவள் நீ என்பதால் உன்னால் ஒரு ஆணை விட சிறப்பாக தொழிலை உருவாக்கி நிர்வகிக்கவும் முடியும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று யாரையும் கோபப்பட்டு பேசும் உன்னுடைய குணம் மட்டுமே உனக்கு எதிர்மறையாக இருக்கும். ஆனால் அதுவும் வயது செல்லச் செல்ல பக்குவப்படும்.
தற்போது குருவோடு இணைந்துள்ள கேதுவின் நட்சத்திரத்தில் உள்ள சந்திரனின் தசை நடப்பதால், அடுத்த வருடம் முதல் உனது தொழில் முயற்சிகள் வெற்றி பெறும். வலுவாக இருக்க வேண்டிய கிரகங்கள் அனைத்தும் வலுப்பெற்ற யோக ஜாதகம் உன்னுடையது என்பதால் சமுதாயத்தில் தனித்து அடையாளம் காட்டக் கூடிய ஒரு தொழிலதிபராக நீ நிச்சயமாக இருப்பாய்.
இது உன்னுடைய நாற்பதாவது வயதில் வரும் செவ்வாய் தசை முதல் நடக்கும். பத்தாம் இடத்தோடு சம்பந்தப்பட்டிருக்கும் ராகு, குரு தசைகள் உன்னை உச்சாணிக்கொம்பில் ஏற்றி வைக்கும். நம்பிக்கையுடன் எதையும் எதிர்கொள். உன்னை மட்டம் தட்டிப் பேசும் ஆண்கள் உன் வெற்றியைப் பார்த்து வாயடைத்துப்போய் ஒருநாள் உன்னிடமே உதவி கேட்டு வந்து நிற்பார்கள். அப்போது என்னை நினைப்பாய். மிகவும் நன்றாக இருப்பாய். உன்னுடைய எண்ணம் முழுமையாக பலிக்கும் அம்மா. வாழ்த்துக்கள்.
(24.09.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.