adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
எதை ஏற்றுமதி செய்யலாம்?

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

எஸ். அருண், திருவண்ணாமலை.

கேள்வி:

இந்தக் கேள்வியை இறைவனிடம் கேட்க இயலாது. அதற்கு ஈடாக உங்களிடம் கேட்கிறேன். ஏற்றுமதி மற்றும் ஆன்லைன் பிசினஸ் செய்யலாமா? எது போன்ற பொருட்கள் விற்றால் லாபம் கிடைக்கும்? வீடு, வாகனம் போன்ற அடிப்படை வசதிகளோடு வாழ்வேனா? 39 வயது ஆகியும் இதுவரை திருமணம் ஆகவில்லை. இதனால் அடையும் அவமானம் கொஞ்சநஞ்சமல்ல. திருமண வாழ்க்கை உண்டா? எப்படிப்பட்ட மனைவி அமைவார்? குழந்தை பாக்கியம் இருக்கிறதா? எதிர்காலம் எப்படி இருக்கிறது? உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு துளிகூட இல்லை. இவர்களுக்கு மத்தியில் நல்லமுறையில் வாழ்ந்து காட்ட முடியுமா? எதிர்காலம் எப்படி இருக்கும்?


பதில்:

(விருச்சிக லக்னம், துலாம் ராசி, 2ல் சுக், 3ல் சூரி, செவ், கேது, 4-ல் புத, 9ல் ராகு, 11ல் குரு, சனி, 12ல் சந், 28-1-1981 அதிகாலை 3-29 திருவண்ணாமலை)

என்னதான் ஒரு ஜோதிடன் தனது ஞானத்தால் துல்லியமாக கணித்தாலும் அந்த ஞானத்தைத் தந்தது பரம்பொருள் என்பதால் ஜோதிடன் ஒரு சாதாரண மனிதன்தான். ஜோதிடன் ஒருபோதும் கடவுளுக்கு இணையாக முடியாது. என்ன நடக்கலாம் என்று கணிப்பவன் மட்டுமே ஜோதிடன். ஆனால் என்ன நடக்க வேண்டும் என்று தீர்மானித்து அதை நடத்திக் காட்டுவதுபரம்பொருள்.

என்ன பொருளை நான் ஏற்றுமதி செய்தால் லாபம் கிடைக்கும் என்று கேட்டிருக்கிறீர்கள். உங்கள் ஜாதகப்படி சனி அதிக சுபத்துவமாக இருப்பதால் சனி சம்பந்தப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.  அதே நேரத்தில் சனியின் பொருள்கள் என்றால் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.

இரும்பு, கழிவுப் பொருட்கள், குப்பைகள், பாத்ரூம் சமாச்சாரங்கள், சொல்லக் கூசும் பொருட்கள், மது, கருப்பு நிற பொருட்கள், இயற்கை விவசாயத்தால் வந்தவை,  கருப்பு நிற தானியம், கால்நடைகள், நீலம் சம்பந்தப்பட்டது, பெட்ரோல், ஆன்மீகம் சம்பந்தப்பட்டவைகள், ரோடு போட உபயோகப்படும் ஜல்லி, மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் உபயோகப்படுபவை போன்ற ஏராளமானவை சனிக்கு சொந்தம்.

சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உலகம் முழுக்க உபயோகப்படும் பிளாஸ்டிக் கூட சனியால் உண்டானதுதான். இவைகள் சம்பந்தப்பட்ட வகைகளில் நீங்கள் லாபம் சம்பாதிப்பீர்கள் என்றுதான் ஒரு ஜோதிடரால் சொல்ல முடியும். ஆனால் இதில் எந்தப் பொருளை விற்று நீங்கள் பணம் சம்பாதிப்பீர்கள் என்பது பரம்பொருள் மட்டுமே அறிந்தது.

அதே நேரத்தில் தற்போது உங்களுக்கு நாற்பது வயதை நெருங்கி விட்டதால் மேலே நான் சொன்ன எந்தப் பொருளில் உங்களுக்கு அறிமுகமும், அனுபவமும் இருக்கிறதோ அதை மட்டுமே நீங்கள் விற்பனை செய்யலாம். வாழ்வின் பாதிப்பருவத்திற்கு வந்து விட்ட நீங்கள் இனிமேல் புதிதாக ஒன்றைத் தெரிந்து கொண்டு அதன் மூலம் சம்பாதிக்க முடியாது. எதை விற்று, என்ன செய்து பிழைக்கப் போகிறீர்கள் என்பது பெரும்பாலும் முப்பது வயதிற்குள் முடிவாகி விடும் என்பதால் உங்களுக்குத் தெரிந்த தொழிலை மட்டுமே செய்வது நல்லது. 

மிக முக்கியமாக உங்களுடைய பிறந்த நேரத்தில் தவறு இருக்கிறது. நீங்கள் கொடுத்துள்ளபடி அதிகாலை 3-29க்கு விருச்சிக லக்னத்தில் நீங்கள் பிறந்திருக்க வாய்ப்பில்லை. அதன்படி பிறந்திருந்தால் மனைவியைக் குறிக்கும் ஏழாம் பாவகம் பாபத்துவம் அடையாமல் ஏழாமிடத்தைக் குரு பார்ப்பதாலும், சுக்கிரன் நன்றாக இருப்பதாலும் இந்நேரம் திருமணம் ஆகியிருக்கும்.

அதிகாலையில் பிறந்திருப்பதால் உங்கள் பிறந்த நேரத்தில் குளறுபடி இருக்கிறது. எனது கணிப்பின்படி நீங்கள் இன்னும் பத்து நிமிடம் கழித்து மூன்று நாற்பதுக்குப் பிறகே பிறந்திருக்க வேண்டும். தனுசு லக்னம் என்றால்தான் ஐந்துக்குடையவன் சூரியனுடன் இணைந்து, ஐந்தாமிடத்தை பாபத்துவ அஷ்டமாதிபதி பார்த்து, புத்திர காரகன் குருவும் சனியுடன் இணைந்து தாமத புத்திர பாக்கியம் என்ற அமைப்பு இருக்கும். விருச்சிக லக்னமாயின் ஐந்திற்குடைய குரு, லாபத்தில் அமர்ந்து தனது வீடான ஐந்தையே பார்ப்பதால் இந்நேரம் தந்தையாகி இருப்பீர்கள்.  

அதன்படி உங்களுக்கு தனுசு லக்னமாகி, இரண்டில் உச்ச செவ்வாய், சூரியன், கேது அமர்ந்து, எட்டில் ராகு இருப்பதால் தாமத திருமணம் நடக்கும். விருச்சிக லக்னம் என்றால் இந்நேரம் திருமணம் ஆகியிருக்கும். மேலும் விருச்சிக லக்னம் என்றால் நீங்கள் இதுபோன்ற ஒரு கடிதத்தை பொறுமையாக எழுதி இருக்க மாட்டீர்கள்.

நீங்கள் அனுப்பியுள்ள ஜாதகத்தின்படி கடுமையான கோபக்காரராக இருப்பீர்கள். மூர்க்கனாக எவரும் அணுக முடியாத விதத்தில் இருப்பீர்கள். தனுசு லக்னம் என்றால் நீங்கள் வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டவராக, ஏமாளியாக இருப்பீர்கள். இதில் எது சரி என்பதை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்.

தற்போது சுக்கிரனின் வீட்டில் அமர்ந்த சந்திரனின் புக்தி கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருவதால், அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்கு பிறகு உங்களுக்குத் திருமணம் நடக்கும். குடும்பாதிபதி சனியும், ஏழுக்குடைய புதனும் பரிவர்த்தனையாகி இருப்பதால், திருமணத்திற்குப் பிறகு நல்ல வாழ்க்கை அமையும்.

தற்போது 8-க்குடைய சந்திரனின் புக்தி நடைபெறுவதால் ஏற்றுமதியை பற்றிய எண்ணங்கள் உங்களுக்கு அதிகமாக இருக்கும் எட்டுக்குடையவன் லாபஸ்தானத்தில் இருப்பதால் ஏற்றுமதி தொழில் கைகொடுக்கும். அடுத்து நடைபெற இருக்கும் செவ்வாய் புக்தி முதல் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகி, 41 வயதிற்குப் பிறகு சிறப்பான எதிர்காலம் உங்களுக்கு அமையும். நான்காம் அதிபதி நான்காம் வீட்டைப் பார்த்து சுக்கிரனும் நன்றாக இருப்பதால் வீடு, வாகன யோகம் உண்டு.

லக்னாதிபதி ராகு-கேதுக்களுடன் இணைந்திருப்பதால் ஒருமுறை ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல்நாள் மாலையே ஸ்ரீ காளஹஸ்தி சென்று தங்கி அதிகாலை அம்மையப்பனுக்கு நடக்கும் ருத்ராபிஷேகத்தை தரிசித்து வாருங்கள். திருமணம் நடக்கும். வாழ்த்துக்கள்.

(17.09.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.