adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 252 (03.09.19)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

டி. சிவா, சென்னை. 

கேள்வி:

இது எனது உறவினர் ஜாதகம். தனது 16ஆம் வயதில் 1981ம் வருடம் வீட்டை விட்டு சென்றவர் இன்றுவரை எங்கு, எப்படி வாழ்கிறார் என்று தெரியவில்லை. அவர் உயிருடன் இருக்கிறாரா என்று கூடத் தெரியாது. இவர் எந்தப் பகுதியில் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருப்பார்? மனைவி, மக்களுடன் இருக்கிறாரா? குழந்தைகள் எத்தனை பேர்? பிறந்த இடத்திற்கு திரும்ப வருவாரா? என்ன தொழில் செய்வார் என்ற எந்த விவரமும் எங்களுக்கு தெரியாது. வேத ஜோதிடத்தில் இதையெல்லாம் கண்டுணர வாய்ப்புள்ளதா? அவர் ஏன் இவ்விதம் இடம்பெயர்ந்து சென்றார்? அவர் தனது பூர்வீகம் பற்றிய எண்ணம் கூட இல்லாமல் இத்தனை வருட காலம் வாழ்கிறார். இதற்கு காரணம் என்ன?


(கன்னி லக்னம், ரிஷப ராசி, 3ல் கேது, 6ல் சனி, 7ல் சூரி, புத, சுக், 9ல் சந், குரு, ராகு 12ல் செவ், 6-4-1965 மாலை 6-20 சென்னை) 

ஆயுளை குறிக்கும் எட்டுக்குடைய செவ்வாய் பனிரெண்டில் மறைந்து நவாம்சத்தில் ராகுவுடன் இணைந்து பாபத்துவமாகி, இன்னொரு பாபரான ஆறில் இருக்கும் சனியின் பார்வையை பெற்றதாலும், பாபத்துவ சனி எட்டாமிடத்தையும், 8-க்குடைய செவ்வாயையும் பார்த்தாலும், இவர் வீட்டை விட்டு சென்ற போது நடந்த ராகுவின் தசை எட்டுக்குடைய செவ்வாயின் நட்சத்திரத்தில் அமர்ந்திருப்பதாலும், அப்போது நடந்த ஆறுக்குடைய சனியின் புக்தியிலேயே இவர் வீட்டை விட்டு வெளியேறிய சில தினங்களிலேயே மரணமடைந்து விட்டார். அற்பாயுள் ஜாதகம் இது.

பாஸ்கர், நியூஜெர்ஸி.

கேள்வி:

விவாகரத்து ஆகிவிட்டது. பணம், நகை, மானம், மரியாதை அனைத்தும் போய்விட்டது. 15 வருடம் மனைவியால் நிம்மதி இல்லை.மகனும் தாயுடன் இருக்கிறான். தொழில் செய்து பெரிய நஷ்டம். போலீஸ், கோர்ட், வக்கீல் என அலைந்து பண விரையம் செய்து நொந்து விட்டேன். 2017, 2018 வாழ்க்கையில் பெரிய சறுக்கல். எதிர்காலம் எப்படி இருக்கும்? மறுமணம் எப்போது?

பதில்:

(தனுசு லக்னம், மகர ராசி, 1ல் ராகு, 2ல் குரு, சந், 5ல் செவ், 7ல் சனி, கேது, 10ல் சூரி, குரு, 11ல் புத, 12ல் சுக், 6-10-1973 காலை 11-44 வாணியம்பாடி)

எந்த ஒரு ஜாதகத்திலும் அதிக சுபத்துவத்தைக் கொண்ட பௌர்ணமியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வளர்பிறைச் சந்திரனுடன் மிக நெருங்கி இணைந்த குரு, இவர்கள் இணைந்திருக்கும் பாவகத்தை கெடுக்கவே செய்கிறார். இது ஒரு சூட்சுமம். முதன்மைச் சுபரான குரு அதிக சுபத்துவத்தை அடையக் கூடாது என்பதன் அடிப்படையில் இது நடக்கிறது. 

குருவும், சுபச்சந்திரனும் மிக நெருக்கமாக இணைந்து குரு தசை நடக்கும் பொழுது இணைந்திருக்கும் பாவகத்தை குரு கெடுப்பதை ஏராளமான ஜாதகங்களில் பார்த்திருக்கிறேன். இதை இன்னும் ஆய்வு செய்யும்பொழுது இதிலுள்ள உண்மை தெரிய வரலாம். இந்த அமைப்புப்படிதான் உங்களுடைய ஜாதகமும் அமைந்திருக்கிறது.

குரு நீச்சமாக இருந்தாலும் செவ்வாய், சனி, ராகு-கேதுக்களின் தொடர்புகள் இன்றி, பௌர்ணமிக்கு என்னும் நான்கு நாட்களிருக்கும் வளர்பிறைச் சந்திரனுடன் இணைந்திருப்பதால், குரு தசை ஆரம்பித்த உடனேயே உங்களுக்கு தனம், வாக்கு, குடும்பம் ஆகியவற்றை கெடுக்கும் வேலைகளை செய்து விட்டார். தற்போது குரு தசையில் சந்திர புக்தி 2021 ஆம் ஆண்டுவரை நடந்துகொண்டிருக்கிறது. இன்னும் ஒன்றரை ஆண்டு காலத்திற்கு உங்களுக்கு நல்ல பலன் சொல்வதற்கு இல்லை. 8-க்குடைய சந்திர புக்தி முடிந்து செவ்வாய் புக்திக்கு பிறகு உங்களுக்கு 2021ல் நல்ல வாழ்க்கை அமையும்.

மற்ற ராசிகளுக்கு கடுமையான கெடுபலன்களை சனி செய்வதைப்போல, தனது சொந்த ராசிகளான மகர, கும்ப ராசிக்கு அவர் செய்வதில்லை. மகரராசிக்கு மிகப்பெரிய கெடுதல்கள் எதுவும் ஜென்மச் சனியில் இருக்காது. பணம் பற்றிய புரிதல்களை மட்டுமே சனி தருவார் என்பதால் சொந்த தொழில் முயற்சிகள் இன்னும் இரண்டு வருடங்களுக்கு வேண்டாம். 2022 பிறகு குடும்பம், தொழில் இரண்டிலும் செட்டில் ஆவீர்கள். வாழ்த்துக்கள்.

ஜி. பரமசிவம், மடிப்பாக்கம்.

கேள்வி:

சமீபகாலமாகத்தான் தங்கள் எழுத்துக்களை படிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. சிறப்பாக இருக்கிறது. ஜோதிடத்தின் அர்ப்பணிப்பு நன்றாக தெரிகிறது. சூரிய தசை, சந்திர புக்தியில் செப்டம்பர் 1972 எனது முதல் திருமணம் நடந்தது. சூரிய தசா, குரு புக்தியில் மார்ச் 1974-ல் முதல் மனைவி பிரிந்து சென்றார்கள். அதே தசை கேது புக்தியில் ஆகஸ்ட் 1976 இல் எனது இரண்டாவது திருமணம் சட்டத்திற்கு புறம்பாக நடந்தது. இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு திருமணமும் ஆகி எனக்கு பேத்திகள் உண்டு. சமீபத்தில் குரு தசை, சனி புக்தியில் 2017 மே மாதம் எனது முதல் மனைவியை 44 வருடங்களுக்கு பிறகு சந்திக்க நேர்ந்தது. முதல் தாரம் என்னுடன் மறுபடியும் வந்து வாழ எனது ஜாதகத்தில் வாய்ப்பு இருக்கிறதா?

பதில்:

(ரிஷப லக்னம், சிம்மராசி, 1ல் ராகு, 3ல் சனி, 4ல் சந், 7ல் குரு, கேது, 10ல் புத, சுக், 11ல் சூரி, 2-4-1947 காலை 9-56 நெல்லை)

முதல் மனைவியைக் குறிக்கும் ஏழாம் பாவகம் பலவீனமாகி, இரண்டாவது மனைவியைக் குறிக்கும் பதினொன்றாம் பாவகம் அதைவிட வலுவாக இருக்கும் நிலையில் ஒருவருக்கு இரண்டு திருமணம் நடக்கும், ,இரண்டாவது திருமணம் நிலைக்கும் என்பது விதி.

உங்கள் ஜாதகப்படி ஏழாம் பாவகத்தோடு ராகு-கேதுக்கள் சம்பந்தப்பட்ட நிலையில் பதினொன்றாம் பாவகாதிபதி இயற்கைச் சுபராகி தன் வீட்டைத் தானே பார்த்து வலுப்படுத்தி, ஏழை விட பதினொன்று பலமான நிலையில் முதல் மனைவியை வெளியில் எங்கேயாவது பார்த்துக் கொள்ளலாமே தவிர, அவர் உங்களுடன் ஒரே வீட்டில் ஒரே குடும்பமாக வந்து வாழ்வதற்கு வாய்ப்பில்லை.

நடப்பு தசாநாதன் குரு, ரிஷப லக்னத்திற்கு 8க்குடைய அஷ்டமாதிபதி என்பதால் மனைவியைக் குறிக்கும் ஏழாம் இடத்தில் அமர்ந்து உங்களுக்கு முதல் மனைவி பற்றிய மனச் சங்கடங்களையும், குற்ற உணர்ச்சியையும் இந்த 72 வயதில் தந்து கொண்டிருக்கிறார். அவ்வளவுதான். வாழ்த்துக்கள்.

(03.09.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.