adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
மிதுன ராசியினர் இப்போது திருமணம் செய்யலாமா?

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

ஜி. மீனாட்சி, மும்பை.

கேள்வி:

மகளுக்கு திருமணம் முடிந்து தோல்வியடைந்து விட்டது. அவளது பிரச்சினை குறித்து உங்களுக்கு பலமுறை கடிதம் எழுதி இருந்தும் நீங்களும் இதுவரை பதில் எதுவும் தரவில்லை. இந்த கடிதத்திற்காகவாவது பதில் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். எங்கள் பெண்ணின் நிலையைக் கண்டு நாங்கள் அடையும் வேதனை கொஞ்சநஞ்சமல்ல. 29-8-2016 அன்று அவளுக்கு திருமணம் நடந்தது. ஆனால் அவர்களுக்குள் இல்லற வாழ்வே நடக்கவில்லை. இப்போது சட்டப்படி விவாகரத்து பெற்று விட்டோம். அவளுக்கு இரண்டாவது திருமணம் நன்கு அமையுமா? எப்போது நடக்கும்? அந்த வாழ்க்கை சிறப்பாக இருக்குமா? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா?


பதில்:

(துலாம் லக்னம், ரிஷப ராசி, 2ல் சூரி, சுக், 3ல் புத, சனி, 4ல் ராகு, 8ல் சந், செவ், 10ல் குரு, கேது, 2-12-1990 அதிகாலை 5-3 சென்னை)

அடுத்த சில வாரங்களில் உங்கள் மகளின் ரிஷப ராசிக்கு அஷ்டமச்சனி ஆரம்பிக்க இருந்த நிலையில், மகளுக்கு திருமணம் செய்து வைத்த உங்களின் முட்டாள்தனத்தை என்னவென்று சொல்வது? பிறந்த ஜாதக அமைப்பின்படி திருமண அமைப்புகள் வலுவாக உள்ள ஜாதகத்தைக் கொண்டவர்களுக்கே, அஷ்டமச் சனி ஆரம்பிக்கும் நிலையிலோ அல்லது அஷ்டமச்சனியிலோ திருமணம் செய்து வைக்கும் போது சிறப்பான வாழ்க்கை அமைவது இல்லை.

அஷ்டமச்சனி என்பது மன அழுத்தத்தை தரும் ஒரு அமைப்பு என்பதால், கோட்சாரத்தில் எட்டில் சனி இருக்கும் நிலையில் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கும் போது, நல்ல ஜாதகமாக இருந்தால் கூட கணவரோ, மனைவியோ அவரைவிட்டு வெளியூர், வெளிநாடு போன்ற சுப பிரிவாக பிரிவது அல்லது கர்ப்பமாகி தாய் வீட்டிற்குச் சென்று ஒரு வருடம் இருப்பது போன்ற பிரிவினைகள் இருக்கும். அவயோக ஜாதகமாக இருந்தால் இதுபோன்ற விவாகரத்து போன்ற பிரிவுகள் இருக்கும்.

இதன் காரணமாகத்தான் நான், இன்னும் சில வாரங்களில் அஷ்டமச்சனி ஆரம்பிக்க இருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு திருமணம் செய்வதை கூடுமானவரை தவிர்க்கும்படி வலியுறுத்துகிறேன். திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பதால் ஒரு சிறு சந்தேகம் ஏற்பட்டால் கூட அதைத் தவிர்க்கவே முயற்சி செய்ய வேண்டும். அதை விடுத்து ஏதேனும் பரிகாரம் செய்து கொள்ளலாம் என்று குறுக்கு வழியில் யோசிக்கக் கூடாது.

எனவே எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இன்னும் இரண்டு ஆண்டு காலத்திற்கு மிதுன ராசிக்காரர்கள் திருமணம் செய்வதை தவிர்ப்பது நல்லது. அஷ்டமச்சனி முடிய இருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்யலாம் அல்லது செய்வதைப் பற்றி யோசிக்கலாம்.

மகளின் ஜாதகப்படி லக்னத்திற்கு எட்டில் செவ்வாய், ராசிக்கு எட்டில் சனி என்ற கடுமையான பாபத்துவ அமைப்பு இருக்கும் பொழுது, நீங்கள் அவளுக்கு 26 வயதில் திருமணம் செய்து வைத்தது குற்றம். ஏழாம் அதிபதி செவ்வாய் எட்டில் மறைந்து, ஏழாம் இடத்திற்கு எவ்வித சுபத் தொடர்புகளும் கிடைக்காத நிலையில், இரண்டாவது திருமணத்தைக் குறிக்கும் பதினொன்றாம் அதிபதியான சூரியன், சுக்கிரனோடு இணைந்து, உச்ச குருவின் பார்வையும், பௌர்ணமி சந்திரனின் பார்வையும் பெற்று அதிகமான சுபத்துவதை அடைந்துள்ள நிலையில், உங்கள் மகளுக்கு இரண்டு திருமணம் நடக்கும் என்பது ஜோதிடத்தில் ஓரளவாவது அனுபவமுள்ள குருட்டு ஜோதிடருக்கு கூட தெரிய வரும்.

ஆனால் இங்கே அனைவரும் பெண்ணிற்கு மாப்பிள்ளை ஜாதகம் வந்தவுடன் பத்துப் பொருத்தம் மட்டும் பார்க்கத் தெரிந்த ஒரு ஜோதிடரிடம் ஜாதகத்தை தூக்கிக்கொண்டு ஓடிப்போய் இவர்கள் இருவருக்கும் பொருத்தம் இருக்கிறதா என்றுதான் கேட்கிறீர்களே தவிர இவர்கள் இருவருக்கும் கல்யாணம் செய்யலாமா? என் மகளுக்கு தற்போது பெருகி வரும் இரண்டாவது திருமண அமைப்பு இருக்கிறதா என்பதை யாரும் கேட்பதில்லையே?

பத்து பொருத்தம் என்பது தவறான ஒன்று. அதைப் பார்க்கவே தேவையில்லை என்பதை அடிக்கடி எழுதுகிறேன். தற்போது சகஜமாகி விட்ட இரண்டாம் திருமணம் அமைப்பால் பத்துப் பொருத்தம் பார்ப்பது குறைந்து கொண்டே வருவது நிறைவாகவே இருக்கிறது.

உண்மையைச் சொல்லப்போனால் பத்துப் பொருத்தமும் இல்லை என்றால் கூட இருவருக்கும் லக்னம், ராசி போன்றவைகள் வலுவாக இருக்கிறதா? நல்ல தசா புக்தி அமைப்புகள் இருக்கிறதா? முக்கியமாக காவல்துறை, கோர்ட் என்று அலையும் அமைப்பு இல்லாமல் உள்ளதா? குழந்தைபாக்கியம், தீர்க்காயுள், ஓரளவிற்கு நிதி வசதி போன்றவைகள் இருக்கிறதா என்பதை பார்க்க கூடிய ஜாதக அனுகூலப் பொருத்தத்தை மட்டும் பார்த்து தாராளமாக திருமணம் செய்து வைக்கலாம்.

முந்தைய தலைமுறையில் நமது தாத்தா, பாட்டிகள் இப்படித்தான் திருமணம் செய்தார்கள். அவர்கள் பத்துப் பொருத்தம் பார்க்கவில்லை. அவர்கள் நன்றாகத்தான் இருந்தார்கள். நாம்தான் திருமண விஷயத்தில் இன்றைக்கு தடுமாறிக் கொண்டிருக்கிறோம்.  மகளுக்கு 30 வயதில் அடுத்த வருடம் திருமணம் நடக்கும். இரண்டாவது கணவர் மிகவும் நல்லவராக, மகளைப் புரிந்து கொண்டவராக, நல்ல வாழ்க்கையை தருபவராக இருப்பார். இரண்டாவது திருமணம் மகளுக்கு சந்தோஷமாக நிலைத்திருக்கும். வாழ்த்துக்கள்.

(27.08.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.