adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 251 (27.08.19)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

கு. மூர்த்தி, தாம்பரம் மேற்கு.

கேள்வி:

இந்தக் குழந்தை பிறந்த இரண்டு ஆண்டுகளுக்குள் இவனது தாய் தற்கொலை செய்து கொண்டாள். தந்தை இதுவரை இவனுக்காக மறுமணம் செய்து கொள்ளவில்லை. நார்மலான உடல்நிலையில் இருந்தாலும் இவனுக்கு ஆட்டிசம் நோய் உள்ளது. பெயரளவில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவனாகவே படிக்கவோ எழுதவோ முடியாது. பிறரின் உதவி தேவை. ஆனால் நல்ல நினைவாற்றல் உள்ளது. உறவினர்களின் பிறந்த நாளை சரியாக சொல்லுகிறான். நன்றாக சாப்பிடுகிறான். சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்கிறான். யாரைப் பார்த்தாலும் நீ காலை, மதியம் என்ன சாப்பிட்டாய் எனக் கேட்கிறான். ஆனால் ஆடை நழுவினால் அதை சரி செய்து கொள்ள தெரியவில்லை. இவனது நிலை எப்போது மாறும்? ஜோதிடரீதியாக முழுக்க குணமடைவானா?


பதில்:

(கும்ப லக்னம், சிம்ம ராசி, 6ல் கேது, 7ல் சந், சனி, 8ல் புத, 9ல் சூரி, செவ், 10ல் சுக், 11ல் குரு, 12ல் ராகு, 23- 10- 2008 மதியம் 2-38 மதுரை)

லக்னாதிபதி சனி நீச்சன் வீட்டில் அமாவாசைக்கு அருகிலிருக்கும் சந்திரனோடு அமர்ந்து பாபத்துவமாகி தனது வீட்டையே பார்த்த அவயோக ஜாதகம். தாயைக் குறிக்கும் நான்காம் வீட்டை பாபத்துவ சனி, நீச்ச சூரியனுடன் இணைந்த செவ்வாய் இருவரும் பார்த்ததால் சிறுவயதிலேயே தாய் தற்கொலை. லக்னாதிபதி மற்றும் ராசியை குரு பார்ப்பதாலும், எட்டுக்குடையவன் உச்சம் என்பதாலும் தீர்க்காயுள் இருப்பார். ஆனால் அடுத்தடுத்து சூரிய, சந்திர, செவ்வாய், ராகு என பாபத்துவம் மட்டுமே பெற்ற தசைகள் வருவதால் ஜோதிடரீதியாக இவர் குணமடைய வாய்ப்பில்லை.

அப்துல்லா, சிவகங்கை.

கேள்வி:

எனது மகன் இறகு பந்து விளையாட்டில் மிகவும் ஈடுபாடாக உள்ளான். அவனுக்கு விளையாட்டில் சாதிக்கும் திறமை உள்ளதா? எந்தத் துறையில் வேலைக்கு செல்வான்? எதில் படிக்கவைக்க வேண்டும்?

பதில்:

(மேஷ லக்னம், ரிஷப ராசி, 2ல் சந், 3ல் சூரி, 4ல் புத, சுக், சனி, 6ல் குரு, கேது, 12ல் செவ், ராகு, 4-7-2005 அதிகாலை 1-3 திருப்பத்தூர்)

விளையாட்டுக்கு அதிபதியான செவ்வாய் ஒருவரின் ஜாதகத்தில் சுபதத்துவமாக இருக்கும் நிலையில் ஒருவருக்கு விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவைகளில் அதிகமான ஆர்வம் வரும். மகனுக்கு மேஷ லக்னமாகி லக்னாதிபதி செவ்வாய் 12ல் ராகுவுடன் அமர்ந்தாலும், குருவின் பார்வையில் சுபத்துவமாக இருப்பதால் விளையாட்டுத் துறையில் முன்னேற்றம் உண்டு. உச்ச சந்திரன் வீட்டில் சுக்கிரன், புதன், சனி அமர்ந்து சிறப்பு. ஜாதகப்படி இன்ஜினியரிங் படித்து வெளிநாட்டில் வேலை செய்வார். வாழ்த்துக்கள்.

ஸ்ரீமகாலட்சுமி, மதுரை.

கேள்வி:

இவரது லக்னம் மிதுனமா, கடகமா? இவருக்கு முதல் திருமணம் 2002இல் நடந்து ஒரு நாள் கூட வாழவில்லை. இரண்டாவது திருமணம் 2016 நடந்து நான்கு மாதத்தில் தோல்வி. இரண்டும் பெற்றோர் பார்த்து வைத்த திருமணம்தான். 1988இல் தாய் தற்கொலை செய்துகொள்ள, 2017ல் தந்தை இயற்கை மரணம் எய்தினார். கடந்த 20 வருடமாக இவர் யாரிடம் பழகினாலும், அவர்கள் இவரைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறுவார்கள். எத்தனை பேர் இப்படிச் சொன்னார்கள் என்று கணக்கு எடுக்க முடியாது. ஜோதிடர்கள் இவரது ஜாதகம் சந்நியாச ஜாதகம் என்று சொல்கிறார்கள். அது உண்மையா? மூன்றாவது திருமணம் உண்டா? குழந்தை பாக்கியம் உண்டா? வருங்கால கணவர் இவரை விட மூத்தவரா, இளையவரா? இவர் இனத்தைச் சேர்ந்தவரா? சமீபத்தில் ஆருடம் பார்த்ததில் இவரிடம் மாயன் தோற்றம் உள்ளதென்றும், அதனால் ஆண் வசியம் இவருக்கு இருக்கிறது என்று சொன்னார்கள். இவர் முற்பிறவியில் தாராவாக இருந்ததாகவும் அந்நியமான கிறிஸ்துவ கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விடுவார் கடைசி காலத்தில் இத்தாலிக்குச் சென்று விடுவார் என்றும் சொன்னார்கள் இது உண்மையா?

பதில்:

(மிதுன லக்கினம், மேஷ ராசி, 2ல் செவ், சனி, 5ல் ராகு, 11ல் சந், குரு, கேது, 12ல் சூரி, புத, சுக், 26-5- 1976 காலை 9-14 மதுரை)

இவரது லக்னம் மிதுனம்தான். கடகத்தில் பிறந்திருந்தால் மூன்றாம் இடத்தில் செவ்வாய், சனி என்றாகி,  லக்னத்திலேயே லக்னாதிபதி ஆட்சி, 5-க்குடையவர் சுபத்துவம் என்ற அமைப்புகள் வந்து நிலையான திருமணமும், குழந்தை பாக்கியமும் ஏற்பட்டிருக்கும். மிதுன லக்னம் என்பதால்தான் சனி, செவ்வாய் இரண்டில் கூடி, புத்திர ஸ்தானமான 5ல் ராகு-கேதுக்கள் சம்பந்தப்பட்டு, அமாவாசைக்கு அருகிலிருக்கும் சந்திரனுடன் குரு இணைந்து, ராகு-கேதுக்களுடனும் குரு சேர்ந்ததால், இவருக்கு திருமண அமைப்புகள் நீடிக்கவும் இல்லை, புத்திர பாக்கியமும் கிடைக்கவில்லை.

22 வயதுக்குப் பிறகு 45 வயதுவரை சூரியன், சந்திரன், செவ்வாய் என கடுமையான அவயோக தசைகள் உங்கள் தோழிக்கு நடந்து கொண்டிருக்கின்றன. இந்த காலகட்டத்தில் அவருக்கு கிடைக்கும் எதுவும் நிலைக்காது. 2021 இல் ஆரம்பிக்கும் ராகுவின் தசை மட்டுமே இவருக்கு ஓரளவிற்கு நல்லது செய்யும் என்பதால் 46 வயதிற்கு பிறகு இவருக்கு அன்னிய இனத்தைச் சேர்ந்த, வயதில் குறைந்தவர் போன்ற முரண்பட்ட விதத்தில் வாழ்க்கைத் துணை அமையும்.

லக்னம், லக்னாதிபதி பலவீனமாகி வாழ்க்கையின் முக்கிய பருவத்தில் அவயோக தசை நடப்பவர்கள் கடுமையான துன்பங்களை அனுபவிப்பார்கள் என்பதற்கு இந்த ஜாதகமும் நல்ல உதாரணம். ராகுதசை ஓரளவுக்கு ஆறுதலாக இருக்கும். மதம் மாற வாய்ப்பு இல்லை. வெளிநாடு செல்வார். வாழ்த்துக்கள்.

ஏ. குமரேசன், திருப்பூர்.

கேள்வி:

தமிழர் தந்தை ஆதித்தனார் அய்யா அவர்கள் பாமர மக்களையும் படிக்கச் செய்தார்கள் என்றால், நீங்கள் ஜோதிட ஞானம் இல்லாதவர்களையும் ஜோதிடத்தைப் படிக்க வைத்திருக்கிறீர்கள். பல ஜோதிட நூல்களைப் படித்திருக்கும் எனக்கு நீங்கள் எழுதிய ஜோதிடம் எனும் தேவரகசியம் புத்தகம் மட்டுமே மிகவும் நன்றாக புரிகிறது. எனது ஜாதகமே குழப்பமாக உள்ளது. கையில் எழுதிய ஜாதகத்தில் சூரிய தசை இருப்பு என்றும், கம்ப்யூட்டரில் எடுத்தால் சுக்கிரதசை என்றும் வருகிறது. இதில் எது சரி? சிறிய கடை வைத்திருக்கிறேன். வியாபாரம் குறைந்து விட்டது. கடன் அதிகமாகி விட்டது. நீங்கள் எழுதியது போல் கடக லக்னத்திற்கு இரண்டில் குரு அமர்ந்து, குரு தசையில் வாட்டி வதக்கி விட்டார். ஆறுக்குடையவன் தசையில் மன அழுத்தம், அசிங்கம், கேவலம், இழப்புகள் எல்லாம் நடந்துவிட்டது. அடுத்து வரும் சனி தசை நன்மை தருமா? கடன் பிரச்சினை தீருமா? ஜோதிடராக முடியுமா?

பதில்:

கையால் எழுதப்பட்ட உங்கள் ஜாதகத்தில் ஏதோ தவறு இருக்கிறது. பிறந்த கிழமையை நீங்கள் எழுதவில்லை. அதிகாலையில் பிறந்தவர்களுக்கு இதுபோல் முதல் நாள் பிறந்தாரா, அடுத்த நாள் பிறந்தாரா என்ற குழப்பங்கள் ஜோதிடத்தில் உண்டு. கிழமையை வைத்துத்தான் இதைத் தீர்க்க முடியும். ஆவணி மாதம் பதினெட்டாம் தேதி என்று எழுதியிருக்கிறீர்கள். ஆனால் அன்றைய நிலையில் 19, 20 தினங்களாக வருகின்றன.

அதே நேரத்தில் சூரிய திசை இருப்பு ஒரு மாதம் 10 நாட்கள் மட்டுமே என்று நீங்கள் எழுதியிருப்பதால், ஒன்று நீங்கள் உத்திராட நட்சத்திரத்தில் பிறந்திருக்க வேண்டும் அல்லது திருவோண நட்சத்திரத்தில் பிறந்திருக்கவேண்டும். தவறான வாக்கிய பஞ்சாங்கத்தால் வரும் குழப்பம் இது. சுக்கிரனின் பூராட நட்சத்திரம் தனுசு ராசியிலும் நீங்கள் பிறந்திருக்கலாம். கையால் எழுதியுள்ளபடி சில விஷயங்கள் சாத்தியம் இல்லை. அருகில் இருக்கும் ஒரு நல்ல திருக்கணித ஜோதிடரிடம் உங்களுடைய ஜாதகத்தை எடுத்துக்கொண்டு போய் பிறந்த கிழமைப்படி ஜாதகத்தை சரி செய்யுங்கள். பிறகு பலன் பாருங்கள்.