adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
ஏ(மா)ற்றம் தரும் ஏழரைச் சனி…! A-012

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

ஏழரைச் சனி உங்களைப் பிடிக்கப் போகிறது என்றாலே அதைக் கேட்பவருக்கு சர்வ அங்கமும் ஆடிப் போய்விடும்.

சனி, சிவபெருமானை அணுகி “பரமேஸ்வரா.. தங்களை ஏழரை நிமிடம் பிடிக்க வந்திருக்கிறேன்” என்றதும் (நமக்கு ஒரு வருடம் என்பது தெய்வங்களுக்கு ஒரு நிமிடம்) அவர் “உன்னையும், சர்வ உலகத்தையும் படைத்த என்னை நீ பிடிக்க முடியுமா? ” என்றதற்கு “எவரும் எனக்கு விதிவிலக்கல்ல” என்று சனி கூற..


ஈசன் பூமிக்கு வந்து, சனி கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு ஒரு சாக்கடையின் அடியில் ஏழரை நிமிடம் ஒளிந்து கொண்டு, பிறகு வெளிவந்து எகத்தாளமாய் “பார்த்தாயா...என்னை உன்னால் பிடிக்க முடியவில்லை” என்றதும்,

சனி பணிவுடன் “என்னையும், சர்வ உலகங்களையும் படைத்த நீர் எதற்காக கேவலம் பூமியில் ஒரு சாக்கடையின் கீழ் ஒளிய வேண்டும்? அந்த ஏழரை நிமிடமே நான் உம்மைப் பிடித்தேன்” என்ற கூறியதாய் ஒரு கதை இருக்கிறது.

சரி... அனைவரும் இத்தனை பயப்படுமளவிற்கு ஏழரைச் சனிக்காலம் அவ்வளவு கொடியதா? சனி கொடுமைப் படுத்துவதையே குணமாகக் கொண்டவரா? என்றால் பதில் வேறாக இருக்கும்.

தவறு செய்த ஒருவனை காவல்துறை கைது செய்து நீதிபதியின் முன் நிறுத்துகிறது. அவன் செய்த தவறினுக்கேற்ப நீதிபதி அவனுக்கு தண்டனை விதிக்கிறார். அதாவது அவன் திருந்துவதற்கு, செய்த தவறைப் பற்றி சிந்திப்பதற்கு தண்டனை என்ற வாய்ப்பினை அளிக்கிறார். அதற்காக நீங்கள் நீதிபதியின் பேரில் குறை சொல்வீர்களா?

அதேபோல் தான் நீங்கள் செய்யும் தவறுகளுக்கு ஏழரைச்சனி காலத்தினைக் குறை கூறுவது என்பது!

ஏழரைச் சனி ஒருவருடைய வாழ்வில் முதல்முறை வரும் போது அவர் பள்ளி, கல்லூரிப் பருவத்தில் இருப்பார். (சிலருக்கு பிறக்கும் போதே ஏழரை இருக்கும். அவர்களுக்கு முப்பது வயதுகளில் இரண்டாம் சனியாக வரும். ஆனால், அதுவும் முதல் சனி கணக்குத்தான்.)

அச்சமயத்தில் படிப்பில் கவனம் குறையும். பரீட்சை ஹாலுக்குள் போனதும் படித்தது மறந்து போகும். சோம்பல் வரும். எட்டு மணிக்குத்தான் எழுந்திருக்க முடியும். தேவையற்ற பழக்க வழக்கங்கள் வந்து சேரும்.

கூடா நட்பு கேடாய் முடியும். உயிர் நண்பனுக்கு உதவுகிறேன் என்று சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். காதல் வந்து மற்ற எல்லாவற்றையும் மறக்கச்செய்து கடைசியில் தோல்வியில் முடியும். படிப்பை முடிக்க முடியாமல் அரியர்ஸ் வரும். பணம் இன்றி திண்டாடுவீர்கள்.

ஏழரைச்சனி காலத்தில் படிப்பில் கவனம் குறைவது என்பது பிற்பாடு நீங்கள் அதை உணர்ந்து, படிப்பு முடிந்ததும் சேரும் வேலையில் திறம்பட செயல்பட்டு பெயர்வாங்க வேண்டும் என்பதற்காகவே. காதல் தோல்வி என்பது எதிர் பாலினத்தைப் பற்றி நன்கு புரிந்து கொண்டு அந்த அனுபவத்தைக் கொண்டு திருமண வாழ்வை மிகச் சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே.

கூடா நட்பும் அப்படித்தான். பணத் திண்டாட்டம் வருவது எதற்காக என்றால், பிற்பாடு நீங்கள் ஏராளமாய் சம்பாதிக்க போகும் பணத்தை உருப்படியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே சனி, ஏழரைச்சனி காலத்தில் உங்களை திண்டாடச் செய்கிறார்.

சுருக்கமாய்ச் சொல்லப் போனால் அந்த ஏழரை ஆண்டு காலம் கிடைக்கும் அனுபவங்களை கொண்டு அடுத்த முப்பது ஆண்டு காலம் உங்கள் வாழ்க்கையை திறம்பட நடத்திச் செல்வதற்காகவே சனி உங்களுக்கு இந்த படிப்பினைகளைத் தருகிறார்.

ஏழரைச் சனிக்காலத்தில் முதலில் பனிரெண்டாமிடத்தில் விரயச் சனியாக வரும் சனி 2, 9, 6-மிடங்களான தன ஸ்தானத்தையும், பாக்ய ஸ்தானத்தையும், ருண ஸ்தானத்தையும் பார்வையிட்டு பணத்தால் பிரச்சனைகளையும், அலைச்சல்களையும் உண்டு பண்ணுவார்.

இந்தக்கால கட்டத்தில் சிலருக்கு தொழில் மூலம் நல்ல பணவரவு இருக்கும். ஆனால் அந்தப் பணத்தை சேமிக்க முடியாமல் விரையங்கள் இருக்கும். பின்னாளில் பணக்கஷ்டம் வரும்போது இவ்வளவு பணம் வந்தும் அதை சேர்த்து வைக்காது விட்டுவிட்டோமே என்ற மன அழுத்தம் வரும்.

அடுத்து ஜென்மச் சனியாக ராசியில் அமர்பவர் ஜாதகரின் மனதை ஆளுவார். மன உளைச்சல் தந்து தடுமாற வைப்பார். துவள வைப்பார். வாய் விட்டு கதற வைப்பார். அதிலும் ஜென்ம நட்சத்திரத்தில் சனி செல்லும் போது மிகவும் கஷ்டப்படுத்துவார். கடுமையான பலன்களைத் தருவார்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் பெரும்பாலானவர்கள் வாழ்க்கையில் அவர்கள் மிகவும் மன அழுத்தத்தோடு இருந்த காலகட்டம் அவரது ஜென்ம நட்சத்திரத்தில் சனி சென்ற ஏழரைச்சனி காலமாகவோ, அல்லது எட்டாமிடத்தில் சனி இருக்கும் காலமான அஷ்டமச் சனியின் நடுப்பகுதியாகவோ இருக்கும்.

ஜென்மச் சனி காலத்தில் ஒருவருக்கு தூக்கம் வராத நிலை இருக்கும். அதிலும் ஜென்ம நட்சத்திரத்தில் சனி செல்லும் காலத்தில் ஒருவர் எதன் மேல் அதிக விருப்பம் அல்லது பாசம் கொண்டிருக்கிறாரோ அந்த நிலை பாதிக்கப்படும். இந்த காலகட்டத்தில்தான் ஒருவருக்கு நெருங்கிய உறவினர் இழப்பு, வேலை போகுதல் அல்லது கிடைக்காமல் இருத்தல், வாழ்வின் ஆதார நிலை குறைதல், நம்பிக்கைத் துரோகம், காதல் தோல்வி, கடுமையான தொழில் நஷ்டம், கடன், ஆரோக்கியக் குறைவு, வீட்டை விட்டு வெளியே போக இயலாத அளவிற்கு மன அழுத்தம், சோம்பல், அதிகமான தூக்கம் போன்றவை நடக்கின்றன.

அதிலும் ஒருவரின் ஜென்ம நட்சத்திர பாதத்திற்கு அருகே சுமார் நான்கு மாதங்கள் சனி செல்லும்போது கடுமையான கெடுபலன்கள் இருக்கும். இந்த காலகட்டத்தில் ஒருவர் செய்யும் எத்தகைய முயற்சியும் வெற்றி பெறாது.

ஜென்ம ராசியில் சனி இருக்கும்போது அவரது கொடிய பார்வை ஏழாமிடத்தில் பதியும். ஏழாமிடம் என்பது எதிர்பாலினத்தின் இடம். கணவன் – மனைவி அல்லது காதலர்- காதலி பற்றிய இடம். இந்த நிலையால் ஜென்ம ராசியில் இருக்கும்போது சனி காதலின் இன்னொரு பரிமாணத்தை உணர வைப்பார். அதாவது காதலிப்பவரின் உண்மையான முகத்தைப் புரிய வைப்பார்.

அடுத்து அவரது பார்வை பத்தாமிடத்திலும் இருக்கும் என்பதால் தொழிலில் அல்லது வேலையில் புதுப்புது பிரச்சனைகளை உருவாக்குவார். அல்லது வேலையை விட்டு நீக்குவார். தொழில் முடக்கம், தொழிலை நடத்த முடியாத நிலை போன்றவை இருக்கும்.

ஏழரைச் சனியின் இறுதி நிலையில் பாதச் சனியாக, ராசிக்கு இரண்டாமிடத்தில் அமருபவர் எட்டாமிடத்தையும், நான்காமிடத்தையும் பார்வையிட்டு இதுவரை கொடுத்த அனுபவங்களின் கடுமையை சற்றுக் குறைப்பார்.

எட்டாமிடத்தை தனது பார்வையால் கெடுத்து இதுவரை இருந்து வந்த தலைகுனிவை தடுத்து நிறுத்துவார். மீண்டும் மனிதனாக மாறத் துணை புரிவார். பறிபோன கௌரவத்தையும் அந்தஸ்தையும் ஏழரைச்சனி முடிவில் திரும்பக் கிடைக்கச் செய்வார்.

சனியை “சனீஸ்வரன்” என்று மற்ற எட்டு கிரகத்திற்கும் இல்லாத ‘ஈஸ்வர’ பட்டம் சிலர் அளிக்கிறார்கள். அது தவறு. ‘சனைச்சர’ என்றால் சம்ஸ்கிருதத்தில் ‘மெதுவாக நகர்பவர்’ என்று பொருள். அதுவே மருவி சனீஸ்வரர் ஆகியுள்ளது.

சனிக்கு சூரிய சந்திரர்கள் என்றாலே ஆகாது. ஏழரைச் சனி நடப்பில் இருக்கும் போது சூரிய தசையோ, சந்திர தசையோ நடக்குமானால் சனியின் கடுமை இன்னும் அதிகமாக இருக்கும். கவனமுடன் இருக்க வேண்டும். ராகுதசை நடக்கும் போதும் ஏழரைச் சனி நடைபெற்றால் மோசமான பலன்களே நடைபெறுகின்றன.

பிறந்த ஜாதக அமைப்பின்படி ஆறு அல்லது எட்டுக்குடையவர்களின் தசா, புக்திகள் நடக்கும்போது ஒருவருக்கு ஏழரைச் சனி, கோட்சாரத்தில் குறுக்கிடுமானால் மிகவும் கடுமையான பலன்கள் நடக்கும். இந்த நிலையில் ஒருவரது வாழ்க்கை தலைகீழாக மாறி அவரை சனி தெருவிற்கு கொண்டு வந்துவிடுவார்.

அதேநேரத்தில் ஏழரைச்சனி நடக்கும்போது பிறப்பு ஜாதகத்தின்படி யோக தசைகள் எனப்படும் லக்னாதிபதி அல்லது 5-9-க்குடையவர்களின் தசை நடக்கும்போது சனியின் கடுமை குறைந்து இருக்கும். பெரிய கெடுதல்கள் இருக்காது. வாழ்க்கையைப் பற்றிய சில படிப்பினைகள் மட்டுமே இருக்கும்.

ஒருவரது பிறந்த ஜாதகத்தின்படி எந்த ஒரு துன்பத்தையும் தாங்கும், மனோபலத்தை அளிக்கும் சந்திரன் வலுவாக இருப்பாரேயானால், அதாவது பிறப்பு ஜாதகத்தில் சந்திரன் வளர்பிறை அல்லது பவுர்ணமிக்கு அருகில் அல்லது சுபத்துவமாக  இருப்பாரானால் அவரால் ஏழரைச்சனி காலத்து கடுமைகளை  சமாளிக்க முடியும். அதாவது ஏழரைச் சனி காலம் பெரிய கஷ்டமாக இருக்காது.

வேதனைகளைத் தரும் சனியை எப்படி சாந்தப் படுத்தலாம்?

• திருநள்ளாறு, குச்சானுர், சென்னை பொழிச்சலூரில் உள்ள அகத்தீஸ்வரர் திருக்கோவில் போன்ற சனியின் திருத்தலங்களுக்குச் சென்று சனிக்குரிய பரிகாரங்களைச் செய்யலாம்.

• ஏழரைச்சனி முடியும்வரை சனிக்கிழமை இரவில் படுக்கும் போது கைப்பிடி அளவு சனியின் தானியமான எள்ளை தலைக்கு கீழே வைத்து உறங்கி, காலை எழுந்து அந்த எள்ளை புதிதாக வடித்த சாதத்துடன் கலந்து சனியின் வாகனமான காகத்திற்கு அன்னமிடலாம்.

• சனியை திருப்திப்படுத்த மாற்றுத் திறனாளிகள், (குறிப்பாக பார்வை இழந்தவர்கள், நடக்க இயலாதவர்கள்) வயதானவர், ஆதரவற்றவர்களுக்கு உதவலாம். காலில்லாதவர்களுக்கு ஊன்றுகோல் தானம் தருவது நல்ல பரிகாரம்.

• சைவர்கள் சனிக்கிழமைகளில் காலபைரவருக்கு வெள்ளைப் புதுத்துணியில் மிளகை முடிச்சிட்டு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம். (எள் தீபம் கூடாது. எள்ளை எரிப்பது தோஷம். எரிக்கக் கூடாது)

• வைணவர்கள் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றி தொல்லைகளில் இருந்து விடுவிக்கும்படி மனமுருக வேண்டி வழிபடலாம்.

• பெருமாளுக்கு சனிக்கிழமைகளில் விரதம் இருக்கலாம்

ஏழரைச் சனி என்பது அனுபவங்களின் தொகுப்பே. அக்காலத்தில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்று நீங்கள் தெரிந்து கொள்ளும்படி உங்கள் கண்களை திறக்கிறார் சனி. அந்த அனுபவங்களை ஏற்றுக் கொண்டு, அதன் துணை கொண்டு அதன்பின் வரும் வாழ்க்கையை ஜெயிப்பதற்கே அதனை சனி தருகிறார்.

அனுபவங்களைப் பற்றிய கவியரசு கண்ணதாசனின் கவிதை இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும்.

பிறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்

பிறந்து பாரென இறைவன் பணித்தான்

இறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்

இறந்து பாரென இறைவன் பணித்தான்

மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்

மணந்து பாரென இறைவன் பணித்தான்

அனுபவித்தே தான் அறிவது வாழ்வெனில்

ஆண்டவனே நீ ஏன் எனக்கேட்டேன்

ஆண்டவன் சற்றே அருகினில் வந்து

அந்த அனுபவம் என்பதே நான்தான் என்றான்

                                                                       - கண்ணதாசன்
[ஜூலை 13-19, 2011 திரிசக்தி ஜோதிடம் வார இதழில் வெளிவந்தது.]

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.