adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 248 (06.08.19)

அனிதா, வேலூர்.

கேள்வி:

2010ல் திருமணமாகி அடுத்த வருடமே கணவனை பிரிந்தேன். இன்றுவரை குழந்தையுடன் தாய் வீட்டில் இருக்கிறேன். சிறுவயதில் அறிவு முதிர்ச்சி இல்லாமல் கணவனை கொடுமைப்படுத்தி கோர்ட், கேஸ் என்று படுத்தி எடுத்து விட்டேன். கணவருடன் சேருவேனா? அவர் வாழ மாட்டேன் என்று போய் விட்டார். மறுமணம் உண்டா? இருப்பின் மறுமணம் நன்றாக இருக்குமா?


பதில்:

(ரிஷப லக்னம், கடக ராசி, 1ல் சுக், 2ல் சூரி, புத, 3ல் சந், செவ், 5ல் கேது, 7ல் சனி, 11ல் ராகு, 12ல் குரு, 29-6-1987 அதிகாலை 4-50 வேலூர்)

லக்னத்திற்கு ஏழில் பாபத்துவ சனி, 7க்குடையவன் நீச்சம், இராசிக்கு 7-ஆம் இடத்திற்கு செவ்வாய், சனி பார்வை என கடுமையான தோஷம் அமைப்பு கொண்ட உங்கள் ஜாதகத்திற்கு 23 வயதில் திருமணம் செய்தது மிகப் பெரிய தவறு. தற்போது சுக்கிர தசை நடப்பதால் மீண்டும் 

கணவருடன் இணைய முடியும். வரும் 2020 பிப்ரவரி மாதம் ஆரம்பிக்க இருக்கும் சூரிய புக்தி முதல் நல்ல பலன்கள் இருக்கும்.

பெரியவர்கள் மூலமாக கணவருடன் மீண்டும் தொடர்பு கொள்ளுங்கள். நடந்தவை அனைத்துக்கும் மனப்பூர்வமாக மன்னிப்பு கேளுங்கள். 33 வயதிற்கு பிறகு நன்றாக இருக்கும் ஜாதகம் உங்களுடையது. ஒரு முறை ஸ்ரீரங்கம் சென்று வாருங்கள். அங்கே அன்னை ரங்கநாயகியை தரிசித்து, அடுத்தமுறை வரும்போது கணவருடன் வருவதாகவும், அதை சீக்கிரம் நிறைவேற்றி வைக்க வேண்டியும் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். நல்லவை நடக்கும். வாழ்த்துக்கள்.

பிரகாஷ், திருவண்ணாமலை.

கேள்வி:

2013 முதல் தீராத வயிற்று உபாதையும், அல்சர், வயிற்றுப் போக்கு போன்ற தொல்லைகளும் இருக்கின்றன. எங்கேயும் வெளியே செல்ல முடியாத நிலையில் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறேன். எதிர்காலம் பற்றிய எந்த சிந்தனையும் வரவில்லை. எனக்கு உடல்நிலை முன்னேறி வேலை அல்லது தொழில் அமையுமா? தொழில் செய்ய முடியும் என்றால் என்ன தொழில் செய்யலாம்? சராசரி ஆணுக்கு இருக்க விருப்பமாகவே எனக்கும் திருமணம் நடக்குமா? நடந்தால் எப்போது? பொருளாதார நிலை உயருமா?

பதில்:

(மேஷ லக்னம், விருச்சிக ராசி, 2ல் புத, சுக், குரு, 3ல் சூரி, 5ல் கேது, 8ல் சந், 9ல் சனி, 11ல் செவ், ராகு, 27-6-1988 அதிகாலை 1-55 திருக்கோவிலூர்)

லக்னாதிபதி செவ்வாய், ராகுவுடன் இணைந்து பாபத்துவமாகி, சனியின் பார்வையும் பெற்று முழுக்க வலுவிழந்த ஜாதகம். 5க்குடையவருக்கு சனி பார்வை, ஐந்தாம் இடத்திற்கு ராகு, கேது, செவ்வாய்  தொடர்பு, ஒன்பதாம் இடத்தில் சனி என ஜாதகமே கடுமையான குற்ற அமைப்பில் இருக்கிறது.

போதும் போதாததற்கு மேஷ லக்னத்திற்கு வரவே கூடாது என்று நான் சொல்லும் புதன் தசை தற்போது நடந்து கொண்டிருக்கிறது. நோய் ஸ்தானாதிபதியான புதன், குரு, சுக்கிரன் இணைவு, வளர்பிறை சந்திரனின் பார்வை என கடுமையான அமைப்பில் இருக்கிறார். புதன் தசை முடியும் காலமான 2024 வரை நோய்த் தொந்தரவுகள் இருந்துதான் தீரும்

அதே நேரத்தில் கடுமையான ஏழரைச்சனி இந்த வருடத்தோடு முடிவதால், அடுத்த வருட ஆரம்பத்திலேயே உங்களின் நோய் குறையும், மருத்துவத்திற்கு நோய் கட்டுப்படும். வீட்டுக்குள்ளேயே இருக்கும் நீங்கள் வெளியே வரும் அளவிற்கு நோய் தொந்தரவுகள் குறையும். வரும் டிசம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கும் குரு புக்தியில் சில மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் உணருவீர்கள். புதன் தசை முடியும் வரை சொந்தத் தொழில் செய்வது கூடாது. கிடைக்கும் வேலைக்குச் செல்லுங்கள். ஜாதக அமைப்புபடி 33 வயதிற்கு பிறகுதான் திருமணம் நடக்கும். அதுவரை உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். வாழ்த்துக்கள்.

கே. சரவண பாபு, சென்னை.

கேள்வி:

இவர் அரசாங்க வேலையில் இருக்கிறார். பதவி உயர்வை எதிர்பார்க்கிறார். பதவி உயர்வு கிடைக்குமா? உடன் வேலை செய்பவர்கள் இடைஞ்சல் தருகின்றனர். அது எப்போது நீங்கும்? குரு, சுக்கிரன் சேர்ந்து இருக்கும் அமைப்பு யோகம் என்கின்றனர். ஆனால் இதுவரை சொந்தவீடு கூட இல்லை. இது யோக ஜாதகம்தானா? இவரது ஆயுள் பாவம் எப்படி?

பதில்:

(தனுசு லக்னம், கும்ப ராசி, 3ல் சந், 4ல் ராகு, 5ல் சனி, 8ல் சூரி, புத, செவ், 9ல் சுக்,குரு 10ல் கேது, 10-8-1968, மாலை 4-20 கோவை)

அரசுப்பணியை குறிக்கும் சிம்மத்தில், குருவும், சுக்கிரனும் இணைந்து, பௌர்ணமிக்கு அருகில் இருக்கும் சந்திரனின் பார்வையை வாங்கி சிம்மம் சுபத்துவமாகியதால்தான் இவர் அரசு வேலையில் இருக்கிறார். குருவும், சுக்கிரனும் இணைந்தது இவருக்கு யோகம்தானே? ஜாதகம் யோகமாக இருந்தாலும் நடைபெறும் தசா புக்திகள் யோக அமைப்பில் இல்லையே?

தற்போது இவருக்கு எட்டில் மறைந்து, சூரியன் நீச்ச செவ்வாயுடன் இணைந்து பாபத்துவம் பெற்றுள்ள புதன் தசை 2020 வரை நடைபெறுகிறது. இன்னும் ஒரு வருடத்திற்கு இவருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பில்லை. அடுத்த கேது தசையில் தான் இவருக்கு பதவி உயர்வு கிடைக்கும். சொந்த வீடு அமைப்பு கேது தசை சுக்கிர புக்தியில் 2022-ல் உண்டு. எட்டுக்குடையவனையும், ஆயுள் காரகனையம் வலுப்பெற்ற குரு பார்த்து, லக்னாதிபதி சுபராகி லக்னத்தை பார்ப்பதால், இவருக்கு 75 வயது தாண்டிய ஆயுள் அமைப்பு உண்டு. வாழ்த்துக்கள்.

கே.பானுப்பிரியா, திருவண்ணாமலை.

கேள்வி:

தாய், தந்தை ஐந்து வருடங்களுக்கு முன் இறந்து விட்டனர். கடந்த மூன்று வருடமாக திருமணத்திற்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் எதுவும் அமையவில்லை. எனக்கு மூல நட்சத்திரம் என்பதால் தோஷம் என்று சொல்லி ஒதுக்குகிறார்கள். எனக்கு திருமணம் நடக்குமா? எப்பொழுது நடக்கும்? வரும் கணவர் அன்பாக நடந்து கொள்வாரா? ஏழரைச் சனியால் மிகவும் துன்பப் படுகிறேன். விடிவுகாலம் எப்போது?

பதில்:

(விருச்சிக லக்னம், தனுசு ராசி, 1ல் ராகு, 2ல் சந், 4ல் சனி, 5ல் சுக், 6ல் சூரி, புத, 7ல் கேது, 9ல் செவ், 11ல் குரு, 9-5-1993 இரவு 7-54 திருவண்ணாமலை)

மூல நட்சத்திரம் என்பதால் உனக்கு திருமணம் தாமதமாகவில்லை. ஜாதகப்படி உனது ராசிக்கு எட்டில் நீச செவ்வாய், லக்னத்திற்கு ஏழில் ராகு-கேது என்ற அமைப்பு இருப்பதால்தான் திருமணம் தாமதமாகிறது. வரும் மார்ச் மாதம் உனக்கு சூரிய தசையில் சுக்கிர புக்தி ஆரம்பிக்க இருப்பதால் அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் உனக்கு திருமணம் நடக்கும்.

7க்குடையவன் உச்சமாகி குருவின் பார்வையில் இருப்பதால், மிகச்சிறந்த நல்ல கணவர் அமைவார். திருமணத்திற்கு பிறகு இரண்டாம் வீட்டில் இருக்கும் பாக்கியாதிபதி சந்திரனின் தசை உனக்கு நடக்க இருப்பதால் திருமண வாழ்க்கை உனக்கு மிக நன்றாகவே இருக்கும். வாழ்த்துக்கள்.

ஆர்.முருகேசன், மதுரை.

கேள்வி:

குருஜிக்கு பணிவான வணக்கங்கள். தாங்கள் இந்த கடிதத்தை படிக்கும் இந்த வினாடியின் லக்னம், நட்சத்திரம், திதி, ராசி போன்ற அனைத்தும் மீண்டும் வருவதற்கு சந்தர்ப்பம் இருக்கிறதா என்பதைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

பதில்:

சாத்தியமே இல்லை. இந்த நொடியின் அனைத்து அமைப்புகளும் மீண்டும் திரும்ப வருமாயின் இந்த வினாடியில் பூமியில் பிறக்கும் ஒரு ஜீவன் மீண்டும் பிறந்தே ஆக வேண்டுமே. நீங்கள் கேட்கும் இந்தக் கேள்வியைத்தான் நமது மூலநூல்கள் ஒருவரின் ஜாதகத்தை போல இன்னொருவரின் ஜாதகம் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றன.

உங்களது இந்த கேள்விக்கான பதிலை ஏற்கனவே “ஜோதிடர்கள் அனைத்தும் அறிந்தவர்களா?” என்ற கட்டுரையில் விரிவாக விளக்கி இருக்கிறேன். அதை இங்கே சுருக்கமாக விளக்குவதாக இருந்தால் பரந்து பட்ட, எண்ணிப் பார்க்க முடியாத அளவு பிரம்மாண்டமான  இந்த பிரபஞ்சத்தில் 10 ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட கேலக்சிகள் எனப்படும் மண்டலங்கள் இருக்கின்றன.

இந்த 10 ஆயிரம் கோடி கேலக்சிகளுள் பால்வெளி வீதி என்று பெயரிடப்பட்ட நம்முடைய மண்டலமும் ஒன்று. நம்முடைய பால்வெளிவீதி மண்டலத்தில் மட்டும் சுமார் பத்தாயிரம் கோடி நட்சத்திரங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று நம்முடைய சூரியன். இந்த 10 ஆயிரம் கோடி நட்சத்திரங்களுக்கும் நம்முடைய பூமி போன்ற கிரகங்கள் இருக்கின்றன.

பொழுது போகவில்லை என்றால் ஓரமாக உட்கார்ந்து நம்முடைய மண்டலத்தில் மட்டும் எத்தனை பூமிகள் இருக்கும். நம்முடைய மண்டலம் தவிர்த்து வெளியே இருக்கும் இரண்டாயிரம் கோடி கேலக்சிகளில் உள்ள சூரியன்களுக்கும் எத்தனை பூமிகள் இருக்கும் என்று விரல்விட்டு எண்ணிப் பாருங்கள்.

ஒரு மாபெரும் வெடிப்பில் பிறந்த இந்த பிரபஞ்சத்தினுள் அடங்கிய கேலக்சிகள் அனைத்தும் அவற்றினுள் அடங்கியுள்ள பூமி, சூரியன் உள்ளிட்டவைகளை  இழுத்துக் கொண்டு ஒன்றை ஒன்று அதிவேகத்தில் விலகிச் சென்று கொண்டிருப்பது தற்போது நிரூபிக்கப்பட்டிருப்பது. அதாவது நினைத்துப் பார்க்க இயலாத ஒரு பெருவெடிப்பின் நிகழ்வுகள் இன்னும் முற்றுப் பெறாமல் அதனுள் நட்சத்திரங்களும் கிரகங்களும் உருவாகிக்கொண்டே விலகிக் கொண்டிருக்கிறன.

நம்முடைய பிரபஞ்சம் வினாடிக்கு 5 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் விரிவடைந்து கொண்டிருக்கிறது. அனைத்தும் ஒன்றை விட்டு ஒன்று விலகி ஓடிக் கொண்டிருக்கும் அமைப்பால் ஒரு இடத்தில் இருக்கும் எதுவும் மீண்டும் அதே இடத்திற்கு வராது. பூமியும் மற்ற கிரகங்களும் சூரியனை சுற்றி வருவது செக்கு மாட்டு தடத்தைப் போல ஒரே பாதை எனத் தோன்றினாலும் அது “ஒரே இடத்தில்” இல்லை. (இதை விட எளிமையாகவும் விளக்க முடியாது.) இதன் காரணமாகவே நீங்கள் கேட்கும் லக்னம், நட்சத்திரம், திதி, ராசி போன்றவை மீண்டும் அதே போல அமையாது.