ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888
மு. கௌரிசங்கர், திருச்செங்கோடு.
கேள்வி.
அரசுப் பணிக்கு முயற்சி செய்கிறேன். எப்போது கிடைக்கும்? சொந்த வீடு கட்டும் யோகம் எப்போது? திருமணம் எப்போது? எந்த ராசி, எந்த லக்னம், எந்த, எந்த எழுத்து உள்ள பெண்ணை திருமணம் செய்தால் வாழ்வில் மிக உயரமான நிலையை அடைய முடியும்? கோடீஸ்வரப் பெண் கிடைக்குமா? ஐஏஎஸ் அல்லது குரூப்-1 தேர்வில் நான் வெற்றி பெற முடியுமா? தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எந்த எழுத்து உள்ள பெண்ணை நான் மணக்க வேண்டும்?
பதில்.
(மிதுன லக்னம், கடக ராசி, 2ல் சூரி, சந், புத, சுக், 4ல் செவ், 6ல் குரு, 10ல் சனி, 11ல் கேது, 28-7-1995 அதிகாலை 5-11 சேலம்)
மனித மனம் எவ்வாறெல்லாம் வித்தியாசமாக சிந்திக்கும் என்பதற்கு உன்னுடைய கடிதமும் ஒரு நல்ல உதாரணம். 24 வயது இளைஞனான நீ உன்னையோ, உன் திறமைகளையோ நம்பாமல், ஏதோ ஒரு எழுத்தினை தன் பெயரில் கொண்டு, எங்கோ பிறந்திருக்கும் ஒரு பெண்ணை வைத்து உன் எதிர்காலத்தை கணக்குப் போடுகிறாய்.
ஒரு கோடீஸ்வரப் பெண்ணை மணக்க விரும்பும் நீ, முதலில் உன்னுடைய தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டாமா? ரோட்டில் போகிறவனுக்கு ஒரு கோடீஸ்வரன் தன் பெண்ணைக் கொடுத்து விடுவானா? உன்னுடைய கடிதத்தின் ஆரம்பமே, மாதமானால் எந்த சிக்கலும் இல்லாமல் சம்பளம் வரும் பாதுகாப்பான அரசு வேலையாகத்தானே இருக்கிறது? கோடீஸ்வரப் பெண் மனைவியாக வந்தால் ரெண்டு லட்சம் மதிப்புள்ள கைப் பைதான் வைத்திருப்பாள். உன்னுடைய எத்தனை மாத சம்பளத்தில் அவளுக்கு கைப்பை வாங்கித் தருவாய்?
உன்னைப் போன்ற இளைஞர்களை மேதகு. அப்துல்கலாம் கனவு காணத்தான் சொன்னார். அதற்காக இப்படியா? கோடீஸ்வரப் பெண் எனக்கு கிடைக்குமா என்பதை விட நான் கோடீஸ்வரன் ஆகி விடுவேன் என்று கனவு கண்டால், அதன்மூலம் ஒரு பெண்ணை கோடிகளில் புரள வைக்கும் வாய்ப்பு உனக்கு கிடைக்குமே?
இந்த இடத்தில், “நூறு கோடிகளுக்கு மேல் வைத்திருக்கும் ஒரு கோடீஸ்வரனை மணப்பது எப்படி? என்று இணையத்தில் ஒரு அழகிய பெண் கேட்ட கேள்விக்கு, “அன்புள்ள மேடம்.. அழகு என்பது நிலையில்லாதது. அழியக்கூடியது. எந்த ஒரு கோடீஸ்வரரும் நிலையில்லாத, அழியக்கூடிய பொருளின் மேல் முதலீடு செய்ய விரும்ப மாட்டார். எனவே ஒரு கோடீஸ்வரர் உங்களைப் போன்ற பெண்ணை மணக்க விரும்ப மாட்டார். அதற்குப் பதிலாக உங்களுடன் டேட்டிங் மட்டுமே செய்ய விரும்புவார். எனவே நீங்களே கோடீஸ்வரியாகும் முயற்சிகளில் ஈடுபடலாம்.” என்று முகேஷ் அம்பானி கொடுத்த பதில்தான் என் நினைவுக்கு வருகிறது.
நம்முடைய எண்ணங்களே நம்மை உருவாக்குகின்றன என்பதுதான் நிஜம். சரியோ, தவறோ ஒரு எண்ணத்தை, நாம் தீவிரமாக நினைக்கும்போது அந்த எண்ணம் ஆழ்மனதில் செலுத்தப்பட்டு, அதை நமது மனம் நம்ப ஆரம்பித்தவுடன், அந்த எண்ணத்தை, செயலாக்கும் சந்தர்ப்பங்களை உருவாக்கி அந்த மனிதனின் கனவைப் பலிக்க வைக்கிறது.
வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் அனைவரும் அறிந்தோ அறியாமலோ தன்னுடைய ஆழ்மனதை சரியான வகையில் பயன்படுத்தி, தங்களது எண்ணத்தை நிஜமாக்கி முன்னேறியவர்கள்தான். இந்த வித்தையை தெரிந்து கொண்டவனுக்கு கோடீஸ்வரப் பெண் கண்டிப்பாகத் தேவையில்லை. இப்படிப்பட்டவனின் மனைவி ஏழையாக பிறந்திருந்தாலும் அவனைத் திருமணம் செய்தவுடன் நிச்சயமாக கோடீஸ்வரி ஆவாள்.
உன்னுடைய ஜாதகப்படி மனைவியைக் குறிக்கும் ஏழாமிடத்தை செவ்வாய், சனி இருவரும் பார்த்து, ஏழுக்குடையவன் ஆறில் மறைந்து, ராசி, லக்னத்தின் ஏழாமிடத்திற்கு சுபர் பார்வை எதுவும் இல்லாததால், உனக்கு கோடீஸ்வர பெண் கிடைக்க வாய்ப்பில்லை. திருமணத்திற்கு பிறகு உன்னுடைய மனைவியும் கோடீஸ்வரியாக இருக்க வாய்ப்பில்லை. ஐஏஎஸ், குரூப்-1 போன்ற தேர்வுகளில் வெற்றியடைவதற்கு சிம்மமும், சூரியனும் மிகுந்த சுபத்துவ வலுவோடு இருக்க வேண்டும்.
உன்னுடைய ஜாதகப்படி வளர்பிறை அமைப்பில் சூரியனும், சந்திரனும் இரண்டாமிடத்தில் இணைந்து வலுப்பெற்ற குருவின் பார்வையைப் பெற்று, சூரியன் சுக்ரனை அஸ்தமனம் செய்திருப்பதால் அரசு வேலை கிடைக்கும். ஏழாம் இடத்திற்கு பாபத் தொடர்பு இருப்பதால் 28 வயதிற்கு பிறகு சுக்கிரதசை, சுய புக்தியில் உனக்கு திருமணம் நடக்கும். சொந்த வீடும் உண்டு. திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை ஓரளவிற்கு நன்றாகவே இருக்கும். வாழ்த்துக்கள்.
(30.07.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.