ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888
நவீன உலகில் தங்களது குழந்தை என்னவிதமான கல்வி பயின்று பிற்காலத்தில் எந்தத் துறையில் இருக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ள ஆசைப்படாத பெற்றோர்களே இல்லை.
கடந்த காலங்களில் எட்டிப் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்த இன்ஜினீயரிங் மற்றும் மருத்துவப் படிப்புக்கள், தற்போது கைக்கெட்டும் தூரத்தில் இருப்பதால் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை, டாக்டருக்கோ இன்ஜினீயருக்கோ படிக்க வேண்டும் என்று நினைப்பதும் இயல்பான ஒன்றுதான்.
ஒரு குழந்தை டாக்டராகவோ, இன்ஜினீயராகவோ தொழில் செய்ய வேண்டுமெனில் ஜாதகப்படி அதற்கு என்ன அமைப்பு இருக்க வேண்டும்? பூமியில் பிறந்த அனைவருக்கும் அந்த வாய்ப்புக் கிடைக்கின்றதா?
இது பற்றிய ஜோதிட சூட்சுமங்கள் என்ன?
முதலில் ஒருவர் கல்வியில் சிறப்பான நிலை பெற வேண்டுமென்றால், அவருக்கு நிபுணன் என்றும் வித்தைக்கு அதிபதி என்றும் நமது ஜோதிட நூல்கள் புகழ்ந்து கூறும் புதனின் அருள் வேண்டும். ஜாதகத்தில் புதன் வலுவான சுபத்துவ நிலையைப் பெற்றிருக்க வேண்டும். புதன் சுபபலம் பெற்றிருந்தால்தான் ஒருவருக்கு தடையற்ற கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
அதேபோல கல்வி ஸ்தானம் என்று சொல்லப்படும் நான்காம் வீடும், அதன் அதிபதி கிரகமும் பலம் பெற்றும், இந்தக் கல்வியால் கிடைக்கும் பாக்கியங்களை அனுபவிக்க பாக்ய ஸ்தானம் எனப்படும் ஒன்பதாம் வீடும், அதன் அதிபதியும் வலுப்பெற்று இருக்க வேண்டும்.
ஜாதகத்தில் புதன் மிதுனம், கன்னி ராசிகளில் ஆட்சி, உச்சம் பெற்றும், மீனத்தில் முறையான நீசபங்கம் பெற்றும் அமையப் பெற்றவர்கள் புத்திசாலிகளாக இருப்பார்கள். இது போன்ற அமைப்புள்ள குழந்தைகள் எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும்.
வகுப்பில் முதல் மார்க் எடுப்பதும், மாநில அளவில் சாதனைகள் புரிவதும் புதன் வலுப்பெற்ற குழந்தைகள்தான். அதேபோல ஜாதகத்தில் புதன் வர்க்கோத்தமம், அம்சத்தில் ஆட்சி, உச்சம் என சுப பலம் பெற்ற குழந்தைகள் ஏதேனும் ஒரு விஷயத்தில் பிறவி மேதைகளாகவும் இருப்பார்கள்.
ஒருவர் மருத்துவராக வேண்டுமெனில் அவருடைய ஜாதகத்தில் சிகப்பு நிறப் பொருளான இரத்தம் போன்றவைகளுக்கு காரணமான செவ்வாய் சுபத்துவமோ அல்லது எனது “பாபக் கிரகங்களின் சூட்சும வலுக் கோட்பாட்டின்படி” சூட்சும வலுவோ அடைந்திருக்க வேண்டும்.
ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் சுபத்துவ, சூட்சும வலுப்பெற்று இருந்தால்தான் அவர் இரத்தத்தைக் கண்டு பயப்படாத நிலையையும், ஆயுதங்களை உயிர் காக்கும் விஷயங்களுக்காக கையாளும் அமைப்பையும் பெறுவார். அதாவது மருத்துவர் எனும் தகுதி பெறுவார்.
ஜீவன ஸ்தானம் என்று சொல்லப்படும் பத்தாம் வீடே ஒருவர் என்ன துறையில் வேலை அல்லது தொழில் செய்வார் என்பதைக் குறிப்பிடுகிறது. இந்த தொழில் பாவகமான பத்தாம் வீட்டோடு செவ்வாயும், குருவும் முதல்தரத் தொடர்பும், சூரியன் இரண்டாம்தரத் தொடர்பும் கொண்டிருந்தால் அந்த ஜாதகர் நிச்சயம் மருத்துவத்துறையில் இருப்பார் என்று கண்ணை மூடிக் கொண்டு சொல்லி விடலாம்.
இதில் தொடர்பு என்பது குரு, செவ்வாய், சூரியன் ஆகிய மூவரில் ஒருவர் லக்னத்திற்கோ, ராசிக்கோ பத்தாம் வீட்டு அதிபதியாக இருப்பது, இவர்கள் மூவரும் பத்தாம் வீட்டில் இருப்பது, பத்தாம் வீட்டைப் பார்ப்பது அல்லது ஜீவனாதிபதியோடு சம்பந்தம் பெறுவது போன்ற இன்னும் சில நுணுக்கங்களைக் குறிக்கிறது.
சுப கிரகமான குரு எந்த ஒரு வேலையையும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் மதியூகத்துடனும் செய்ய வைப்பவர். மேலும் எடுத்துக் கொண்ட துறையில் ஒருவரை புகழ் பெற வைப்பவரும் குருதான். எனவே ஒருவர் புகழ் பெற்ற டாக்டராக வேண்டுமெனில் குரு அவரது ஜாதகத்தில் நிச்சயம் பலம் பெற்று இருக்க வேண்டும்.
அடுத்து செவ்வாய், குருவுடன் தொடர்பு கொள்ளாமல் சனியுடன் பத்தாம் வீட்டோடு தொடர்பு கொள்ளும் நிலையில் ஒருவர் இஞ்சினியரிங் படிப்பார். இந்த அமைப்பில் செவ்வாயின் பலம் அதிகமானால், சிவில் இஞ்சினியரிங் எனப்படும் கட்டிடம் கட்டும் துறையிலும், சனி பலம் அதிகமானால் வேறுவகையான இஞ்சினியரிங் துறையிலும் படிப்பு அமையும்.
ஒருவர் சிவில் இன்ஜினியர் என்று சொல்லப்படும் கட்டிடப் பொறியாளர் ஆவதற்கும் செவ்வாயின் தயவுதான் வேண்டும். ஏனெனில், இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நான் சொன்னபடி சிகப்பு நிறப் பொருட்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் உள்ளவை என்பதால் கட்டுமானத் துறையின் மூலப்பொருளான செங்கலைக் குறிப்பவரும் செவ்வாய்தான்.
உயரமான இடங்களில் பணியாற்றுதல், மலையேறுதல் போன்றவைகளுக்கும் செவ்வாய்தான் காரணம். செவ்வாய் வலுப்பெற்ற ஒருவருக்கு உயரமான இடங்களில் வேலை செய்வதற்கு தயக்கம் இருக்காது. உயரமான இடத்தில் இருந்து கீழே பார்ப்பதற்கும் பயம் இருக்காது. இப்போதைய பல மாடிக் கட்டங்களைக் கட்டுவதற்கான சிவில் இன்ஜினியர்களை உருவாக்குபவர் முற்றிலும் செவ்வாய்தான். அதேநேரத்தில் காலிமனைகளுக்கும், இரும்புப் பொருட்களுக்கும் சனி காரணமானவர் என்பதால் பத்தாமிடத்தோடு சனியும் தொடர்பு கொண்டால்தான் ஒருவர் கட்டிடப் பொறியாளர் ஆக முடியும்.
பொதுவாக சனி நுணுக்கமான மெக்கானிச வேலைகளுக்கு காரணமானவர். சனி சூட்சும வலுப் பெற்றால் ஒருவர் பொறுமையான நிதானமான வேலைகளைச் செய்வார். சனி பலம் பெற்றவர்களால் ஒரு பொருளை தனித்தனியாகப் பிரித்து மீண்டும் அதேபோல இணைக்க முடியும்.
சில குழந்தைகள் சிறுவயதிலேயே செல்போன், டேப்ரிக்கார்டர், விசிடி பிளேயர் போன்றவைகளை கழற்றி மாற்றுவதில் ஆர்வத்துடனும் திறமையுடனும் இருப்பதைப் பார்க்கலாம். இத்தகையோர் சனிபலம் பெற்றவர்களே. சனியின் பலம் மேலோங்கி செவ்வாயின் பலம் சிறிது குறையும் அமைப்பில் ஒருவர் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் போன்ற படிப்பில் ஆர்வம் காட்டுவார். ஜாதகத்தில் இதுபோன்ற அமைப்புடையவர்கள் கார், மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களிலும், மிகப் பெரிய இயந்திரங்கள் உள்ள தொழிற்சாலைகளிலும் வேலை செய்வார்கள்.
இன்னொரு முக்கிய அமைப்பாக உயர் கல்வி மற்றும் வேலைக்காக தற்போது இளைஞர்கள் வெளிநாடு செல்வதும் அதிகமாகி வருகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் சர ராசிகள் என்று சொல்லப்படும் மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய வீடுகளில் கிரகங்கள் இருந்து, அந்த கிரகங்களின் தசை நடக்கும் போதோ அல்லது ராகு-கேதுக்களின் தசை, புக்தி நடக்கும் போதோ, சுபத்துவமான எட்டு மற்றும் பனிரெண்டாம் அதிபதிகளின் தசை, புக்தி நடப்பில் இருக்கும் போதோ ஒருவர் வெளிநாடு செல்வார்.
எட்டு, பனிரெண்டாம் அதிபதிகள் சுபத்துவமாகி, ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு, அந்த பாவகங்களும் சுபத்துவமாக இருக்கும் நிலையில், சர ராசிகளில் இருக்கும் கிரகங்களின் தசை தொடர்ச்சியாக வருமானால் ஒருவர் வெளிநாட்டிலேயே தங்கி அந்த நாட்டின் குடிமகனாக ஆவார். அதாவது கடகத்தில் ராகு, மேஷ குரு, மகர சனி, துலா புதன் என அடுத்தடுத்து வர இருக்கும் தசாநாதர்கள் சரராசிகளிலேயே இருப்பார்களேயானால் அந்த ஜாதகர் நிரந்தரமாக வெளிநாட்டில் தங்கி விடுவார்.
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.