adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 245 (16.07.19)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888


கா. அசோக் குமார், மதுரை.

கேள்வி

2010ல் ஏதோ ஒரு ஜோதிடப் புத்தகத்தில் நீங்கள் எழுதிய பிரபஞ்சம் பற்றிய ஜோதிடக் கட்டுரை என்னை பிரமிக்க வைத்தது. அன்றிலிருந்து இன்றுவரை உங்களையும், உங்கள் எழுத்துக்களையும் நேசித்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான ஜீவன்களில் நானும் ஒருவன்.


செவ்வாய். வெள்ளிக்கிழமைகள் வந்துவிட்டாலே நீங்கள்தான் என்னை முழுவதுமாக ஆக்கிரமித்து நிற்பீர்கள். அந்த இரண்டு நாட்களும் மாலைமலர் வாங்கியவுடன் முதலில், உங்கள் கட்டுரையைப் படித்து விட்டுத்தான் செய்திக்குச் செல்வேன். மார்ச் மாத ஆரம்பத்தில் நீங்கள் எழுதிய அடுத்த வாரம் பிறக்கப்போகும் அரசன் கட்டுரையைப் படித்துவிட்டு இறைவனே இறங்கி வந்து என் குழந்தை பிறப்பிற்கு நாள் குறித்துக் கொடுத்தது போல உணர்ந்தேன். எனது மனைவிக்கும் அதுவே பிரசவ நேரம் என்பதால் நீங்கள் சொல்லியிருந்த அன்று மூன்று முதல் நான்கு மணிக்குள் எங்கள் குழந்தைக்கு சிசேரியன் நேரம் குறிக்கப்பட்டது. 

ஆனால் மயக்க ஊசி போடும் மருத்துவர் அரைமணி நேரம் தாமதமாக வந்ததால், என்னுடைய பெண் குழந்தையை நாலரை மணிக்கு பிரசவிக்க செய்தார்கள். நீங்கள் கொடுத்ததை விட அரைமணி நேரம் கழித்து என் குழந்தை பிறந்தாலும், நீங்கள் சொன்ன அதே லக்னத்தில்தான் பிறந்திருக்கிறாள். அந்தக் கட்டுரையில் நீங்கள் சொன்ன பலன் என் குழந்தைக்குப் பொருந்துமா அல்லது அரை மணி நேரம் தாமதம் என்பதால் பலன் மாறுமா?

பதில்.

இதுபோன்று மருத்துவர் தாமதமாக வருவது போன்ற சில சிக்கல்களுக்காகத்தான் ஒரு லக்னத்தின் நேரமான இரண்டு மணி நேரத்தில், முன்பின் அரைமணி நேரம் தவிர்த்து நடுப்பகுதியான ஒரு மணி நேரத்தை குழந்தை பிரசவிக்கும் நேரமாக குறித்துக் கொடுக்கிறேன். அந்தக் கட்டுரையிலும் கடக லக்னத்தின் நடுப்பகுதியான 3 முதல் 4 மணிக்குள் குழந்தை பிறப்பதற்கான நேரம் என்பதைக் குறிப்பிட்டிருந்தேன். 

நீங்கள் சொன்ன அன்று ஏறத்தாழ நான்கு மணி, நாற்பது  நிமிடம் வரை கடக லக்கனம் இருப்பதால், உங்கள் குழந்தை கடகத்தில்தான் பிறந்திருக்கிறாள், என்ன... லக்னம் முடியும் தருவாயில் பிறந்திருக்கிறார் அவ்வளவுதான்.! மற்றபடி நான் அந்தக் கட்டுரையில் சொன்ன சிறப்பான பலன்கள் அனைத்தும் உங்கள் குழந்தைக்கும் பொருந்தும். எதிர்காலத்தில் எதிலும் மிகவும் நன்றாக வரக்கூடிய குழந்தைகளில் இவளும் ஒருத்தியாக இருப்பாள். வாழ்த்துக்கள்.

தியாகராஜன், ராஜபாளையம்.

கேள்வி.

82 வயதினை கடக்கப் போகும் எனக்கு, வீடுபேறு அடைவதற்கான பிராப்தம் உண்டா? அடியேனுக்கு மறுபிறவி இருக்கிறதா? மரணம் எப்போது சித்திக்கும்?

பதில்.

(மகர லக்னம், மிதுன ராசி, 3ல் சனி, 5ல் கேது, 6-ல் சந், சுக், 7ல் சூரி, 8ல் புத, 11-ல் செவ்1 ராகு 12ல் குரு 4-8-1937 மாலை 6-40 ராஜபாளையம்)

லக்னாதிபதி சனியே ஆயுள் காரகனுமாகி, ராசியில் குருவின் வீட்டில் சுபத்துவமாக தனித்து பாபர்கள் தொடர்பின்றி அமர்ந்து, அம்சத்தில் உச்சமான நிலையில், ஆயுள் ஸ்தானமான எட்டில் தனித்த புதன் அமர்ந்து, அந்த பாவகத்தை வலுத்த குருவும் பார்ப்பதால் தீர்க்காயுள் அமைப்பு கொண்ட ஜாதகம் உங்களுடையது. லக்னத்திற்கு 12ல் சுபரான குருவும், ராசிக்குப் பன்னிரெண்டில் சுபர் வீட்டில் அமர்ந்த கேதுவும் இருப்பதால் உங்களுக்கு மறுபிறவி கிடையாது, வீடுபேறும் உண்டு.

வரும் செப்டம்பர் மாதம் முதல் உங்களுக்கு மாரகாதிபதியான ஏழுக்குடைய சந்திரனின் தசை ஆரம்பிக்க இருப்பதாலும், மாரகாதிபதி தசையின் போது, அடுத்த வருடம் முதல் அஷ்டமச்சனி நடக்க இருப்பதாலும், தசாநாதனும், புக்திநாதனும் சஷ்டாஷ்டக நிலைகொண்ட வரும் சந்திர தசை, ராகு புக்தியில் 2021 ஆம் ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் உங்களுடைய நல் முடிவு இருக்கும்.

எஸ். ராமகிருஷ்ணன், திண்டுக்கல்.

கேள்வி.

மகள் எம்இ படித்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு வரன் தேடிக் கொண்டிருக்கிறோம். அவள் பிஇ படிக்கும்போது தோழியின் அண்ணனுடன் பழக்கம் ஏற்பட்டு, பின்பு காதலாக மாறியிருக்கிறது. இது எங்களுக்குத் தெரியவில்லை. இப்போதுதான் செல்போன் பேச்சு, போட்டோவை வைத்துத் தெரிந்து கொண்டோம். இன்றுவரை எங்கள் பெண் எங்களிடம் எதுவும் சொல்லவில்லை. நாங்களும் எதுவும் தெரியாதது போல வரன் தேடிக் கொண்டிருக்கிறோம். நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதால் காதல் திருமணம் செய்ய விருப்பம் இல்லை. நாங்கள் பார்க்கும் வரனை இவர் ஏற்பாரா அல்லது அவர் விரும்பும் வழியில் செல்வாரா என்பது எங்களுக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. மிகவும் பயத்துடனும், வருத்தத்துடனும் இருக்கிறோம். ஏடாகூடமாக எதுவும் நடந்துவிடுமோ என்று அஞ்சுகிறோம். தாங்கள்தான் ஒரு தந்தையாக இதற்கு விடை தர விரும்புகிறோம்.

பதில்

(ரிஷப லக்னம், சிம்ம ராசி, 1ல் சுக், 2ல் சூரி, செவ், 3ல் புத, 4ல் சந், ராகு, 10ல் கேது, 11ல் குரு, 12ல் சனி, 30-6-1998 அதிகாலை 4-20 வத்தலகுண்டு)

மகளுக்கு தற்போது காதல் உறவு, திருமணம் போன்றவைகளைக் குறிப்பிடும் ஏழாமிட அதிபதி செவ்வாயின் தசை நடந்து கொண்டிருக்கிறது. தசாநாதன் செவ்வாய் பகை வீட்டில் சூரியனுடன் இணைந்து அஸ்தங்கம் ஆகி, நீச்ச சனியின் பார்வையும் பெற்று தன்னுடைய சொந்த நட்சத்திரத்தில் இருக்கிறார். குடும்ப வீடான இரண்டாம் பாவகத்தில் செவ்வாய் அமர்ந்து, நீச்ச சனி பார்த்த நிலையில் செவ்வாய் தசை நடந்து கொண்டிருக்கிறது. இந்த அமைப்பு பெற்றோருக்கு சாதகமான ஒன்றல்ல.

வரும் நவம்பர் மாதம் முதல் செவ்வாய் தசையில் அஷ்டமாதிபதி குருவின் புத்தி மகளுக்கு ஆரம்பிக்க இருக்கிறது. அதனை அடுத்து நீச்ச சனியின் புக்தி நடக்கும். ஜாதக அமைப்புப்படி மகளுக்கு நல்லதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. பெற்றோர்களில் யாருக்காவது அஷ்டமச் சனியோ, ஏழரைச் சனியோ நடந்து கொண்டிருக்குமாயின் அல்லது அடுத்த வருடம் நடக்க இருக்கும் சனிப்பெயர்ச்சியில் உங்களில் யாருக்காவது அஷ்டம, ஏழரைச்சனி அமைப்புகள் ஆரம்பித்தால் நிலைமை சிக்கலாகும்.

இப்போதிருந்தே மகளை மனம் மாற்றும் சமாதான வேலைகளில் இறங்கவும். மகளைக் கண்டிக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் நிலைமையை இன்னும் சிக்கலாக்கி விட வேண்டாம். லக்னத்தில் லக்னாதிபதி தனித்து வலுப்பெற்று நல்ல அமைப்பில் இருப்பதால், முறைப்படி எதையும் எடுத்துச் சொன்னால் கேட்டுக் கொள்ளும் மன நிலைமையில்தான் மகள் இருப்பாள்.

எதிலும் அவசரப்பட வேண்டாம். நிதானமாக நடந்து கொள்ளவும். ஒருபுறம் தாய் கண்டித்தால் தந்தை அரவணைப்புடனும், இன்னொருபுறம் தந்தை கண்டித்தால் தாய் அணைத்துக் கொள்ளும் பாங்குடனும் இருக்கும் நிலையில், குழந்தையை மீட்டெடுத்து விடலாம். உங்களால் அதைச் செய்ய இயலும். வாழ்த்துக்கள்.

ஆர். குமரன், சென்னை-20.

கேள்வி.

தங்கள் மாலைமலர் ஜோதிட வகுப்பின் சீடன் நான். ஒவ்வொரு வருடமும் அடுத்த வருடம் நன்றாக இருப்போம் என்ற எதிர்பார்ப்புகளோடு வாழ்க்கையை தனிமையில் நகர்த்தி, இன்று 52 வயதில் வந்து நிற்கிறேன். மனிதனுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகள் ஒன்று கூடப் பூர்த்தியாகவில்லை. நல்லதைத் தரும் என்று எதிர்பார்த்த பாக்கியாதிபதி சூரிய தசையும், அஷ்டமச்சனி நடந்ததால் பலனில்லாமல் போய்விட்டது. சென்னையில் சுயதொழில். மெக்கானிக் வருமானம், சிறு வீட்டு வாடகை, உணவு என்று சரியாக உள்ளது. நடக்கும் செவ்வாய் தசை எதிர்கால நன்மைக்கு ஏதேனும் சேமித்து வைக்க வாய்ப்பு தருமா? ராகு தசை நன்மைகளை செய்யுமா?

பதில்.

(தனுசு லக்னம், விருச்சிக ராசி, 4ல் சனி, 5ல் ராகு, 8ல் புத, சுக், செவ், குரு, 9ல் சூரி,11ல் கேது, 12ல் சந், 24-8-1966 மதியம் 3-30 கடலூர்)

சிலவிதமான ஜாதகங்களைப் பார்க்கும் பொழுது எத்தனை விதமான கர்மாக்களை அனுபவிக்கச் சொல்லி பரம்பொருள் கட்டளை இட்டிருக்கிறது என்பதை உணர முடியும். அதுபோன்ற ஜாதகம் உங்களுடையது. 15 வயது முதல் தனுசு லக்னத்திற்கு வரக்கூடாத சுக்கிரதசை, 40 வயது முதல் பரிவர்த்தனையான நீச்ச சந்திர, செவ்வாய் தசை என கிட்டத்தட்ட முக்கால்வாசி ஆயுள்காலம் சரியில்லாத தசை அமைப்புகளாலேயே முடிந்து விட்டது.

கடுமையான களத்திர தோஷமும், புத்திர தோஷமும் இருப்பதால் வாழ்நாள் முழுக்க தனிமை ஒன்றே உங்களுக்கு துணையாக இருக்கும். தற்போது நடக்கும் செவ்வாய் தசையும் பரிவர்த்தனையாகி இருப்பினும், நீச்சமாகி எட்டாம் இடத்தில் இருப்பதால் நல்ல பலனைச் சொல்வதற்கில்லை. அடுத்து நடைபெறும் ராகு தசையும் நீச்சனின் வீட்டில் அமர்ந்த தசைதான். பூர்வ ஜென்ம கர்ம வினைகளின்படி இந்த ஜென்மத்தில் இத்தகைய நிலைமையை அனுபவிக்க பிறந்த அமைப்பு உங்களுடையது. அடுத்த ஜென்மத்தில் அனைத்தும் கிடைக்கும். வாழ்த்துக்கள்.