adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
எனது கணவர் நல்லவர்தானா?

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888

கே. சந்தானலட்சுமி, விருதுநகர்.

கேள்வி.

எனக்கு 15 வயதில் காதல் திருமணம் நடந்தது. திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது. எனது தாய், தந்தை சொந்த ஊரில் நிறையக் கடன் வாங்கி திரும்பச் செலுத்த முடியாமல் ஊரைவிட்டுப் போய்விட்டனர். தாயும், தந்தையும் அருகில் இல்லாததால் இவர்தான் உலகம் என்று வாழ்ந்து வருகிறேன். இவரும் என் மேல் நிறையப் பிரியம் கொண்டவர்தான். ஆனால் இவருக்கு ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறது என்று மட்டும் தெரிகிறது. என்னிடம் எதுவும் சொல்ல மறுக்கிறார்.


உண்மையில் கடன்தொல்லை எதுவும் உள்ளதா அல்லது வேறு எதுவும் பெண்ணிடம் தொடர்பு உள்ளதா என்று தெரியவில்லை. திடீரென்று இரவு ஒரு மணிக்கு வருகிறார். கேட்டால் வேலையில் நேரமாகிவிட்டது என்று சொல்கிறார். எப்போதும் பொய் சொல்கிறார். உடன் வேலை செய்யும் நபர்கள் ஒன்பது மணிக்கு வீட்டுக்குச் சென்று விடுகிறார்கள். இவர் மட்டும்தான் தாமதமாக வருகிறார். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. இவரது போக்கும் பிடிபடவில்லை. நீங்கள் இருவரும் வாழவே முடியாது என்று சொன்ன எனது சமுதாயத்தின் முன் நாங்கள் வாழ்ந்து காட்டுவோமா? என் தாய், தந்தை திரும்ப வருவார்களா? நிம்மதி எப்போது கிடைக்கும்? இவருடன் வாழ்வது சரிதானா? எனக்கு வேறு யாரும் ஆதரவும் இல்லை. உங்களின் பதிலை வைத்துத்தான் அடுத்த முடிவை எடுக்க வேண்டும்.

பதில்.

சில நேரங்களில் ஜோதிடம் சொல்லும் உண்மைகளையும் தாண்டி, யதார்த்தத்தை உணர்ந்து பலன் சொல்வதே, ஒரு ஜோதிடரின் முக்கிய கடமையாக இருக்கும். அந்த நேரம் இப்போது எனக்கு வந்திருக்கிறது.

அம்மா... சந்தேகம் என்பது உடன் பிறந்தே கொல்லும் நோய். 15 வயதில் திருமணமாகி, ஏறத்தாழ பன்னிரண்டு ஆண்டுகாலம் வாழ்ந்திருக்கும் உனக்கு, உன் கணவனைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்திருக்க வேண்டும். ஆணைவிட உள்ளுணர்வு அதிகம் கொண்டவள் பெண். இது போன்ற நேரங்களில் அடுத்தவர் சொல்வதை நம்பாதே. அது ஒரு ஜோதிடராக இருந்தாலும் நம்பாதே. உன் கணவனைப் பற்றி நீதான் முடிவெடுக்க வேண்டும்.

இதுபோன்ற நேரங்களில் “கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்” என்ற தமிழ்ப் பழமொழியை நினைவுபடுத்திக் கொள். எதற்கும் அவசரப்படாதே. பொறுமையாக இரு.  முக்கியமாக வாழ்க்கை பறிபோகிவிடுமோ என்று பதட்டப்படாதே. பதறாத காரியம் சிதறாது. உன் கணவனை நிதானமாக எதிர்கொள்.

ஒரு கட்டுப்படுத்தப்பட்ட நல்ல மனநிலையில் நீ இருக்கும்போது, வேலை முடிந்து வீட்டுக்கு வரும் கணவனிடம், அவனது உணவுத் தேவைகளை நல்லவிதமாக முடித்த பிறகு, முடிந்தால் உடல் தேவையையும் பூர்த்தி செய்துவிட்டு, நிதானமாக அருகில் அமர்ந்து, அவனிடம் மனம் விட்டுப் பேசு. சமீபகாலமாய் காலங்களில் உங்களிடம் மாற்றம் தெரிகிறது என்று அவனுக்குத் தெளிவாக உணர்த்து.

எந்த ஒரு ஆணும் எதையும் முதலில் மறுக்கவே செய்வான். திரும்பத் திரும்ப நிதானமாக கேள். அவனைக் குற்றவாளி ஆக்காதே. என்னுடைய வாழ்நாள் துணை நீ. உன்னை நம்பியே நான் இருக்கிறேன். உன்னை மட்டுமே நம்பி இருக்கிறேன். உனக்கு ஏதாவது ஒன்று என்றால் நானும், நம்முடைய குடும்பமும் பாதிக்கப்படுவோம் என்ற ஒரே காரணத்தினால்தான் இப்போது உனக்கு ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறது என்பதை உணர்ந்து உன்னிடம் கேட்கிறேன் என்பதைத் தெளிவாகச் சொல்.

திரும்பத் திரும்ப உண்மையான நோக்கோடு, நிதானமாக கேட்கப்படும் ஒரு கேள்விக்கு எந்த ஒரு ஆணும் பதில் சொல்லியே தீருவான். கணவன்- மனைவிக்கு இடையே அன்பு மட்டுமே இருக்க வேண்டும். அதிகாரமும், ஆத்திரமும், ஈகோவும் அங்கே இருக்கக் கூடாது. ஒரு பெண்ணின் உண்மையான அன்பிற்கு மயங்காத ஆண் உலகில் எங்குமே இல்லை.

நீதிமன்றத்தில் கூட எந்த ஒரு குற்றமும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள். ஒரு துளி சந்தேகம் இருப்பினும் அது குற்றவாளிக்கு சாதகமாக்கப் படும் என்பதை மறந்து விடாதே. வாழ்க்கையின் மிக முக்கிய காலகட்டத்தில் இருக்கிறாய். சிறுபிள்ளைத்தனமாக ஏதாவது செய்துவிட்டு விஷயத்தை சிக்கலாக்கிக் கொள்ளாதே.

கணவனிடம் மனம் விட்டுப் பேசி பிரச்சனையை உணர்ந்துகொள்ளப் பார். முதல் சில முயற்சிகளில் தோற்றாலும், உன் கணவன் உண்மையைச் சொல்ல மறுத்தாலும், முயற்சியைக் கைவிடாதே. திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டே இரு. கண்டிப்பாக ஒருவிதமான குற்ற மனநிலையில் தன்னுடைய மனைவி இதை நம்முடைய உண்மையான நலனுக்காக மட்டுமே கேட்கிறாள், என் மீது இவள் நிஜமான அக்கறை கொண்டிருக்கிறாள் என்பதை உணரும்போது கணவன் எதையும் ஒத்துக் கொள்ளவே செய்வான்.

ஒத்துக்கொண்ட பிறகு பிரச்சனையை, அது கடனாக இருக்கட்டும் அல்லது வேறு பெண்ணின் தொடர்பாக இருக்கட்டும், பாதிப்பில்லாமல் எப்படி வெளியே வருவது என்பதை, இருவரும் இணைந்து பேசி முடிவெடுங்கள். உங்கள் இருவருக்குள் மட்டுமே நடக்க வேண்டிய இந்த விஷயத்தை வீதிக்குக் கொண்டு வந்து விடாதே. ஒருபோதும் கணவனை அடுத்தவரிடம் விட்டும் கொடுத்து விடாதே. இந்தப் பிரச்சனையை உன்னால் நிச்சயமாக சமாளிக்க முடியும். வாழ்த்துக்கள்.

(16.07.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.