adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
தெய்வ அருள் எப்போது கிடைக்கும்..? (A-007)

#adityaguruji

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888

ஒருவருக்கு ஆன்மீக ஈடுபாடோ அல்லது தெய்வ கடாட்சமோ     பூரணமாக அமைவதற்கு, அவருடைய ஜாதகத்தில் குரு, சனி, கேது ஆகிய கிரகங்கள் சுபத்துவம் மற்றும் சூட்சும வலுப் பெற்று லக்னம் அல்லது ராசியோடு தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.


ஒரு ஜாதகத்தில் ஐந்தாமிடம் என்று சொல்லப்படுவது பூர்வபுண்ணிய ஸ்தானம் எனவும், ஒன்பதாமிடம் எனப்படுவது பாக்கியஸ்தானம் அல்லது தர்மஸ்தானம் எனவும் அழைக்கப்படுகிறது.

ஒருவரின் சிந்தனை, செயல், நடத்தை, அதிர்ஷ்டம் மற்றும் சென்ற பிறவியில் அவர் செய்த பாவ, புண்ணியம் போன்றவற்றை ஐந்தாம் பாவகமும், அவரது ஆன்மீக ஈடுபாடு, ஒழுக்கம், செய்யப் போகும் நற்காரியம், பெறப்போகும் பாக்கியங்கள், ஆலயப் பணிகள், அவரின் முன்னோர்களின் நற்செயல்கள் போன்றவற்றை ஒன்பதாம் பாவகமும் குறிக்கின்றன.

இப்படிப்பட்ட நல்ல தன்மைகளைக் கொண்ட ஐந்து மற்றும் ஒன்பதாம் பாவகங்களும் இயற்கைச் சுபக் கிரகங்களின் வீடுகளாகி, அந்த பாவகங்களில் நல்ல கிரகங்கள் அமர்ந்து அல்லது சுபக் கிரகங்களின் பார்வை கிடைத்து பலம் பெறுமாயின் அந்த ஜாதகர் இந்த பூமியில் பரம்பொருளின் கருணையைப் பெற்றவராக இருப்பார்.

இயற்கைச் சுபரான குரு ஒரு ஜாதகத்தில் வலிமை பெற்று, லக்னத்தையோ, ராசியையோ, மேலே குறிப்பிட்ட ஐந்து, ஒன்பதாம் பாவகங்களையோ பார்வையிட்டால், அந்த நபர் நேர்மையான குணங்கள் மற்றும் ஆன்மீக ஈடுபாடு கொண்டவராகவும், பெரியோர்களால் பாராட்டப் படுபவராகவும், ஆலயத் திருப்பணிகள் செய்யக் கூடிய வாய்ப்பைப் பெற்றவராகவு இருப்பார்.

ஞானிகளிடம் நெருக்கமாக இருந்து அவர்களுக்கு பணிவிடை செய்வதையும், மதிப்பு வாய்ந்த பெரியோர்களின் அறிமுகம் கிடைப்பதையும் குறிக்கும் கிரகம் குருவே ஆவார்.

ஒருவருடைய ஜாதகத்தில் குரு நல்ல ஆதிபத்தியம் பெற்று வலிமையோடு இருக்கும் நிலையில் அந்த ஜாதகருக்கு நேர்மையான வழிகளில் எல்லாவிதமான பாக்கியங்களையும் தருவார் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

முதன்மைச் சுபரான குருவைப் போலவே, பாபரான சனியும் ஆன்மீக உணர்வுகளுக்கு காரணமான கிரகம்தான். வேதாந்த அறிவு, பிரம்மத்தை அறிதல் போன்றவைகளுக்கு குரு காரணமாவதைப் போல அமானுஷ்ய சக்திகள், சித்து வேலைகள், யட்சிணி உபாசனை, மாந்த்ரீகம், கிராம தேவதைகளை வணங்குதல், அருள்வாக்கு மற்றும் குறி சொல்லுதல் போன்றவைகளுக்கு சனி காரணம் ஆவார்.

சனி ஒருவருடைய ஜாதகத்தில் சுப பலமோ அல்லது சூட்சுமவலுவோ பெற்று ஐந்து ஒன்பதாம் இடங்களைப் பார்க்காமல், வேறுவகையில் தொடர்பு கொள்ளும் நிலையில் மேலே நான் சொன்ன பலன்களைச் செய்வார்.

மேலும் கூடு விட்டுக் கூடு பாய்தல், குண்டலினி சக்தி போன்றவைகளிலும், சில வகையான முடிவற்ற ஆன்மீகத் தேடல்களிலும் ஆர்வத்தைத் தருபவரும் சனிதான். குறிப்பாக, இறப்பிற்குப் பின் மனிதனின் நிலை என்ன? என்பது போன்ற சிந்தனைகளுக்கு சுப பலம் அல்லது சூட்சுமவலு பெற்ற சனி காரணமாக அமைவார்.

சனி தனது நட்பு வீடுகளான ரிஷபம் அல்லது கன்னியில் தனித்தோ, குரு அல்லது கேதுவுடன் இணைந்தோ அல்லது குருவின் திரிகோணப் பார்வையில் இருப்பது இது போன்ற அமைப்பைக் குறிக்கும்.

அடுத்து ஆன்மீக அறிவையும், பரம்பொருளிடம் தன்னை முழுக்க அர்ப்பணிக்கும் உணர்வையும், பிரம்ம ஞானத்தையும் தரும் கிரகம் கேது. பெரும்பாலான ஆழ்வார்கள், நாயன்மார்கள், மகான்கள், மதகுருக்கள் போன்ற ஆன்மீகத் திருவுருக்கள் இவரது அஸ்வினி, மகம் மூலம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களே.

கேது சுபத்துவம் பெற்று கன்னி அல்லது கும்பம் போன்ற ராசிகளில் இருந்தாலோ அல்லது சுபரான குரு மற்றும் சனியுடன் குறிப்பிட்ட சில டிகிரி இடைவெளியில் இணைந்திருந்தாலோ அபரிமிதமான ஆன்மீக ஈடுபாட்டைத் தருவார்.

மேற்குறிப்பிட்ட அமைப்புகளில் கேது இருக்கும் பாவகம் ஐந்து ஒன்பதாமிடங்களாக இருப்பது, அல்லது இரண்டு, பனிரெண்டாம் இடங்களை கேது தொடர்பு கொள்வது ஜாதகரை ஆன்மீகத்தில் மிகப்பெரிய உச்சநிலைகளுக்குக் கொண்டு செல்லும்.

கேது ஒருவர் மட்டும் ஜாதகத்தில் பரிபூரண சுப நிலையில் இருந்தாலே அந்த ஜாதகரை “மனித உருவில் நடமாடும் தெய்வம்” என்று பிறர் போற்றக்கூடிய புனிதராக, பகவானாக மாற்றுவார். முழுமையான ஆத்ம ஞானத்தை தருவார். பிரம்மத்திற்கு அருகில் செல்ல வைப்பார். எல்லாம் தெரிந்து தெளிய வைப்பார். முற்றும் துறக்கும் பற்றற்ற நிலையை உருவாக்குவார். அனைத்தும் அறிந்தும் அடக்கமாக இருக்க வைப்பார்.

இன்னொரு அமைப்பையும் தெரிந்து கொள்ளுங்கள்...

“நாம் ஒரு நிலையில் உயர்வடைய வேண்டும் எனில், அதன் எதிர்நிலை தாழ்வடைய வேண்டும்” என்பது ஜோதிடத்தில் மிக  முக்கியமான ஒரு சூட்சுமம்.

அதன்படி ஆன்மீக வாழ்வில் ஒருவர் சிறப்படைய வேண்டும் என்றால், இல்லற வாழ்க்கைச் சுகங்களில் ஆர்வத்தைத் தரக் கூடியவனும், காமம், பெண்சுகம், உல்லாசம், சொகுசு வாழ்க்கை போன்றவைகளுக்கு அதிபதியுமான சுக்கிரன் அந்த ஜாதகத்தில் பலவீனம் அடைந்திருக்க வேண்டும்.

அப்போதுதான் அந்த ஜாதகர் வேறுவகையான சிந்தனைகள் இன்றி, பரம்பொருளிடம் பரிபூரண சரணாகதி அடைந்து தெய்வத்தின் அருளை முழுமையாகப் பெறுவார்.

2019- நவம்பரில் நடக்கும் வெகு அபூர்வமான குரு, சனி, கேது சேர்க்கை.

ஸ்ரீ கிருஷ்ணர், புத்தர், நபிகள், இயேசு போன்ற அவதாரங்கள் பிறக்கக் காரணமான கிரக சேர்க்கை.

நல்ல ஆன்மீக நிகழ்வுகளுக்கும், உயர் ஆன்மீக சிந்தனைகளுக்கும் காரணமான குரு, சனி, கேது ஆகிய மூன்று கிரகங்களின் உன்னத இணைவு வரும் நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி அன்று நடக்க இருக்கிறது.

தற்போது விருச்சிக ராசியில் குரு இருக்கிறார். அதனையடுத்த தனுசு ராசியில் சனி, கேது ஆகிய இரண்டு கிரகங்களும் இணைந்திருக்கின்றன. வரும் குருப் பெயர்ச்சி நாளான 5-11-2019 அதிகாலை குரு கிரகம் தற்போதைய விருச்சிக ராசியில் இருந்து பெயர்ச்சியாகி, தனுசுக்குள் நுழைந்து ஏற்கனவே அங்கிருக்கும் சனி, கேது ஆகியோருடன் இணைவார்.

இந்தச் சேர்க்கை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் தேதி வரை நீடிக்கும். அன்றைய நாளில் சனிப்பெயர்ச்சி நடப்பதால், இந்த மூன்று கிரகங்களின் சில வார இணைப்பிலிருந்து சனி விலகி, மகர ராசிக்குச் செல்வார். ஆக இந்த ஆண்டு நவம்பர் 5 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 24 வரை, சில வாரங்களுக்கு குரு, சனி, கேது ஆகிய கிரகங்களின் சேர்க்கை இருக்கும்.

இந்த இணைவின் சிறப்பம்சமாக மேலும் சிலவற்றைச் சொல்லலாம்.

வெகு காலத்திற்கு பிறகு மிகவும் அபூர்வமாக இந்த இணைவு தனுசு ராசியில் நடக்கிறது. இந்த மூன்று கிரகங்களின் இணைவு ஆன்மீக உயர்நிலையையும். ஆன்மீக உன்னதத்தையும் குறிக்கும் என்றாலும், 12 ராசிகளிலும் இறைவழிபாட்டையும், ஆன்மீகத்தையும், நல்ல தன்மை, மற்றும் ஒழுக்கத்தையும் குறிக்கும் தனுசு ராசியில் இந்தச் சேர்க்கை நடப்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது ஆன்மீகத்திற்கு முழுமுதல் காரணமான மூன்று கிரகங்களின் உன்னத கூட்டுச் சேர்க்கை, ஒரு முழுமையான ஆன்மீக ராசியில் நடக்கிறது. இந்த நிகழ்வு மிகவும் அபூர்வமானது. இந்த அபூர்வமான ஆன்மிக கிரகங்களின் இணைவு நடக்கும் சில வாரங்களில் பிறக்கும் குழந்தைகள், அவற்றின் லக்ன மற்றும் ராசி  அமைப்பிற்கேற்ப ஆன்மிகத்தில் மிகவும் உயர்நிலையை அடையும்.

குறிப்பாக இந்தச் சேர்க்கை நடக்கும் தனுசு ராசியினை லக்னம் அல்லது ராசியாகவோ அல்லது இவற்றின் ஐந்து, ஒன்பதாம் இடங்களான மேஷம், சிம்மம், போன்றவற்றை லக்னம் அல்லது ராசியாகவோ கொண்டு பிறக்கும் குழந்தைகள், அல்லது சனி, குரு தொடர்பு கொண்ட லக்னம், ராசிகளில் பிறக்கும் குழந்தைகள்  மிகப்பெரிய ஞான அமைப்பினை கொண்டு பிறக்கும்.

சுருக்கமாகச் சொல்லப் போனால் இந்த இணைவு நடக்கும் சில வாரங்களுக்குள் பிறக்கும் ஏதேனும் ஒரு குழந்தை ஸ்ரீ கிருஷ்ணர், புத்தர், நபிகள் நாயகம், ஏசு, ஸ்ரீராகவேந்திரர், பகவான் ரமணமகரிஷி, சீரடிபாபா, காஞ்சி மகாபெரியவர் போன்ற அதி உன்னத ஞானிகளாகவோ, மிகப்பெரிய ஜகத்குருவாகவோ ஆவார்கள்.

ஜோதிடம் மதங்களுக்கு அப்பாற்பட்டது என்பதால் இந்த ஆன்மீக கிரகங்களின் இணைவினால் இந்து மத ஜகத்குருக்கள்தான் அவதரிப்பார்கள் என்பதில்லை. பிற மதங்களான இஸ்லாம், கிறிஸ்துவம் போன்ற மார்க்கங்களையும் தோற்றுவித்த, வளர்த்தெடுத்த மகான்கள் போன்றவர்கள் அந்தந்த மதங்களில் அவதரிப்பார்கள்.

எந்த ஒரு முழுமையான பலனும் வானில் கிரகங்கள் இணையும் தூரத்தைப் பொறுத்தது. அதாவது சம்பந்தப்பட்ட கிரகங்கள் எத்தனை டிகிரியில் வானில் இணைகின்றன என்பதை உள்ளடக்கியது. கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று எட்டு டிகிரிக்குள் இணைந்தால் அது ஒரு பூரண இணைவு. 13 டிகிரி இடைவெளியில் இணைந்தால், அது சம்பந்தப்பட்ட கிரகங்களின் சுய இயல்பை இழக்க வைக்காமல் சேரும் ஒரு நிகழ்வு, 22 டிகிரிக்கு மேல் கிரகச் சேர்க்கை இருக்குமானால் அங்கே சேர்க்கை சரியான பலனைத் தராது.

அதேபோல ஒரு செயலைத் தரும் முக்கூட்டு கிரகங்களின் அமைப்பில், மற்றொரு எதிர் நிலை கிரகம் இணையுமானால், அனைத்துக் கிரகங்களின் செயலும் பங்கமடையும்.

அதன்படி குரு, தனுசு ராசிக்குள் நுழையும் நாளில் சனி வெகுதூரம் இருக்கிறார். கேது 15 டிகிரி அமைப்பில் இருக்கிறார். எனவே இந்த அமைப்பு சில வாரங்களுக்கு நீடித்தாலும், தற்போதைய வெகு அபூர்வமான குரு, சனி, கேதுவின் உண்மையான சேர்க்கை நிலை நவம்பர் ஐந்து முதல் நவம்பர் 20 வரை 15 நாட்களுக்கு மட்டுமே இருக்கும்.

அதன் பிறகு நவம்பர் 21 ஆம் தேதி இவர்களுடன், ஆன்மீக நிலைக்கு எதிர்க் கிரகமான சுக்கிரன் இணைந்து இந்த மூவரின் தனித்தன்மையை இழக்க வைப்பார். அதனையடுத்த சில நாட்களில் மார்கழி 1 ஆம் தேதி சூரியனும் இவர்களுடன் இணைந்து அனைவரையும் அஸ்தங்கப்படுத்தி, வலிமை இழக்கச் செய்து இந்த குரு, சனி, கேது சேர்க்கையினை முழுக்க ஸ்தம்பிக்கச் செய்வார்.

ஆகவே மேம்போக்காக சில வாரங்கள் இந்த இணைவு இருப்பதாக தோன்றினாலும், இந்த இணைவின் உன்னத நோக்கம் நவம்பர் 5 முதல் நவம்பர் 20 வரை மட்டுமே இருக்கும். இந்த இரண்டு வாரங்களில் பிறக்கும் ஒரு குழந்தை உலகில் ஏதோ ஒரு மூலையில் ஆன்மீக உயர்நிலையை கண்டிப்பாக அடையும்.

அது நான் மேலே சொன்னதைப் போல பகவான் கிருஷ்ணர், நபிகள் நாயகம், இயேசுபிரான் போன்ற அவதார புருஷர்களாக இருக்கலாம்.

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.