adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
மகா பெரியவர் ஜாதகம்…D-062

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி 
கைப்பேசி : 8681 99 8888

“தெய்வம் மனுஷ்ய ரூபனா” என்ற அமரத்துவ வரிகள், தேவமொழியான சம்ஸ்க்ருதத்தில் இருக்கிறது இதற்கு “தெய்வம் மனித உருவத்தில் உள்ளது” என்று பொருள்.

மேற்கண்ட வரிகளுக்கு ஒரு கண்கண்ட உதாரணமாக, நம்மைப் போலவே ஒரு சராசரி மனிதனாகப் பிறந்து, நம் கண்முன்னே, தெய்வமாக வாழ்ந்து காட்டி, அவர் பின்பற்றிய மதத்தோடு மாற்றுக் கருத்து கொண்டவர்களும் அவரை மனதார மகாபெரியவர் என்று சொல்லும் அளவிற்கு ஒரு அவதார புருஷராக மாறி, மறைந்தவரின் ஜாதகத்தை இப்போது பார்க்கலாம்.

எப்பொழுதுமே எனக்கு மிகவும் உறுதியாகத் தெரியும், நான் நம்பும் விஷயங்களை மட்டுமே என்னைப் பின்பற்றுபவர்களுக்கும், எனது மாணவர்களுக்கும் சொல்வதும், எழுதுவதும் என் வழக்கம்.


ஒருமுறை, பெண் சுகம் என்றால் என்னவென்றே தெரியாத ஒருவரின் ஜாதகத்தை உதாரணத்திற்கு காட்ட வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்ட பொழுது, இந்த தெய்வத்தின் ஜாதகத்தையே அதற்கு எடுத்துக்காட்டாக சொல்லியிருந்தேன். அதிலும் “காமாட்சி என்ற பெயரைத் தவிர பெண்ணின் வாசனையே அறியாதவர்” என்று மகாபெரியவரை மேற்கோள் காட்டியிருந்தேன்.

ஒரு ஆண் என்பவன், பிறப்பு முதல் இறப்புவரை ஏதேனும் ஒருவகையில்  பெண்ணின் வாசனையை அறியாமல் இருக்கவே முடியாது என்பதுதான் உலக நியதி. அதிலும் அவன் பெண்ணின் வாயிலாகவே பிறக்கிறான் எனும்பொழுது, பெண்ணின் வாசனையை ஒருவன் அறியாமல் இருப்பான் என்பது இயலவே இயலாத ஒன்று.

ஆனால் தாய் என்பவள் பெண்ணல்ல. அவள் ஒரு மகாசக்தி. உண்மைக்கும் பெண்மைக்கும் அப்பாற்பட்டவள் தாய். இயற்கை நியதிப்படி தாயின் கருவறைக்குள் இருந்தே ஆண் வெளிவர வேண்டும். பிறந்தவுடன் ஒரு ஆண் சில கணமேனும் தாயின் மடியில் தவழ்ந்தே தீர வேண்டும். அவளது உடலூறும் அமுதை குடித்தே தீர வேண்டும். இத்தகைய சூழ்நிலையில் ஒரு தாயை பெண்ணென்று மட்டும் சொன்னால் பொருந்தாது.

தாய் என்பவள், ஆணுக்கும் பெண்ணுக்கும், உண்மைக்கும் பெண்மைக்கும், அப்பாற்பட்ட ஒரு மகாசக்தி. எனவே பெண்ணென்று வரும்பொழுது தாயைக் குறித்துக் காட்டத் தேவையில்லை எனும் அடிப்படையில், ஜோதிடரீதியாக சுக்கிரன் உச்சமானாலும், இருள்கிரகமான ராகுவுடன் சேர்ந்த காரணத்தினால், பெண்சுகத்தையே அறியாத ஆன்மீகச் சூழலுக்கு உள்ளான, அதன்படியே மனம் ஒப்பி நடந்த, நூறு சதவீதம் பெண் என்றால் என்னவென்றே தெரியாத இந்த தெய்வத்தின் ஜாதகத்தையே நான் உதாரணமாக காட்டியிருந்தேன்.

அனைத்திற்கும் இயந்திரங்கள் வந்துவிட்ட இந்தக் காலத்தில், இன்றைய துறவிகள் நவீன தொழில்நுட்பங்களை சாதாரண ஜனங்களை விட அதிகமாக பயன்படுத்தி சொகுசாக வாழ்ந்து வரும் இக்காலத்தில், கொண்டு வா என்றால் உலகில் தயாராகும் அனைத்துக் கார்களின் உயர்ரக மாடல்களையும் வரிசைகட்டி நிறுத்தக்கூடிய அளவிற்கு பக்தர்கள் கூட்டம் இருந்தும், கால்நடையாகவே, மூன்று முறை இந்தியாவை நடந்தே யாத்திரை சென்றவர் மகா பெரியவர் அவர்கள்.

தன் வாழ்நாள் முழுவதும் நவீன சொகுசு வசதிகளைப் பயன்படுத்தாதவர் மகா பெரியவர். அப்பழுக்கற்ற துறவு, மற்றும் ஆன்மீக வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். வேதகாலங்களில் சன்யாசிகள், மற்றும் முனிவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்பதற்கு நம் கண் முன்னே வாழும் உதாரணமாக இருந்தவர்.

எனக்குள் இருக்கும் திறமையை அறிந்து, என்னை ஊக்கப்படுத்தி என்னை எழுத வைத்தவரும், எனது எழுத்துக்களை முதன்முதலில் பிரசுரித்தவருமான, அன்றைய திரிசக்தி ஜோதிடம் வாரஇதழின் ஆசிரியர், இன்றைய ஆன்மிக உரையாளர் திரு. பி.சுவாமிநாதன் அய்யா அவர்கள் தற்போது மகாபெரியவரின் மகிமைகளை உலகெங்கும் சென்று பரப்பிக் கொண்டிருக்கிறார்.

அவர் ஒருமுறை மகாபெரியவரின் தேசாந்திர யாத்திரை பற்றிச் சொல்லும்போது, வடமாநிலங்களில், யாருமற்ற சாலைகளில், தன்னந்தனியே கையில் எப்போதும் வைத்திருக்கும் தண்டத்தின் துணையை மட்டும் கொண்டு நடந்து சென்றதையும், ஒரு கிராமம் வரை துணைக்கு வரும் பக்தர் கூட்டம் கிராம எல்லையில் அவரை விட்டு விட்டு நகர்ந்த பின்னர், அடுத்த ஊர் வரும்வரை தன்னந்தனியே அவர் நடந்து செல்வதும், அதன்பிறகு அவரை வரவேற்க அடுத்த ஊர் எல்லையில் பொதுஜனம் காத்திருக்கும் என்பதையும் விவரிக்கும்போது மெய்சிலிர்த்தது.

சந்நியாசிகளுக்கு சுவையில்லை. அதிலும் உணவை ருசியாக்கும் உப்பை அவர்கள் சேர்ப்பதே இல்லை. உப்பை உணராதவனே உண்மையான சன்யாசி. ஒருமுறை ஸ்ரீமடத்தில் காரணம் எதுவும் சொல்லாமலேயே, மூன்று நாட்களுக்கு மகாபெரியவர் உபவாசம் என அந்த உப்பில்லாத உணவையும் எடுத்துக் கொள்ளாமல் தன்னைத்தானே வருத்திக் கொண்டிருந்தார்.

மடத்தில் உள்ளவர்கள் தாங்கள்தான் ஏதேனும் தவறு செய்து விட்டோமோ, அதற்காகவே பிறரைத் தண்டித்தறியா அந்த மகாஞானி தனக்குத்தானே தண்டனை கொடுத்துக் கொள்கிறாரோ எனக் கதறி, அவரது காலில் விழுந்தபோது, மூன்று நாட்களுக்கு முன், சென்னை மாம்பலத்தில், ஒரு பக்தரின் வீட்டில் உணவருந்தும் போது, அந்த அம்மையார் பரிமாறிய உப்பில்லாத கீரையை இரண்டாவது முறையாக கேட்டு வாங்கிச் சாப்பிட்டு விட்டேன்.

“ஒரு சன்னியாசிக்கு சுவை தெரியக் கூடாது. ஆனால் என்னையும் அறியாமல் அது நன்றாக இருக்கிறது என்பதால்தானே இன்னொருமுறை கேட்டு வாங்கினேன். அதற்காகவே என்னை நானே சாப்பிடாமல் தண்டித்துக் கொள்கிறேன்”. என்றாராம் அந்த மகான்.

சன்னியாசி யோகம் என்று ஜோதிடத்தில் பலவிதமான விதி அமைப்புகள் சொல்லப்படுகின்றன. முரண்பட்ட பலவித ஜோதிட விதிகளை “சுபத்துவம்- பாபத்துவம் சூட்சுமவலு” எனும் ஒரே குடைக்குள் கொண்டுவந்து எளிமையான ஒரே ஒரு விதியாக்கி ஜோதிடத்தை விளக்கி வரும் நான், ஏற்கனவே “தெய்வ அருள் எப்போது கிடைக்கும்” எனும் கட்டுரையில், ஒருவர் சன்யாச மனநிலையில் இருக்க வேண்டுமெனில் அல்லது முற்றும் துறந்த பற்றற்ற துறவியாக இருக்க வேண்டுமெனில், அவரது ஜாதகத்தில் குரு, சனி, கேது ஆகிய மூன்று கிரகங்களும் சுபத்துவ- சூட்சும வலுவோடு அமைந்து, லக்னம்- ராசி இவற்றோடு ஏதேனும் ஒருவகையில் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறேன்.

மேற்கண்ட குரு, சனி, கேது ஆகிய மூன்று கிரகங்களின் இணைவு, பார்வை, தொடர்பு மட்டுமே ஒருவரை ஆன்மிக உயர்நிலைக்கு  “உண்மையாகவே” கொண்டு செல்லக் கூடியவை. இங்கே உண்மையாக என்ற வார்த்தையை ஏன் உபயோகப்படுத்துகிறேன் என்றால், நவீன கார்ப்பரேட் கலாச்சாரத்தில் அனைத்தும் வியாபாரம் ஆகிவிட்டதைப் போலவே ஆன்மிகமும் ஒரு தொழிலாகி விட்டது,

முற்றும் துறக்கும் நிலையும் ஒரு சொகுசாகி விட்ட இன்றைய காலகட்டத்தில் ஒருவர் உண்மையான துறவியாகவும், மகாஞானியாகவும் இருக்க வேண்டுமெனில், மேற்கண்ட குரு, சனி, கேது ஆகிய மூன்று கிரகங்களும், நான் சொல்லும் சுபத்துவ-சூட்சுமவலு நிலையோடு தங்களுக்குள் தொடர்பு கொண்டு, லக்னம் மற்றும் ராசியோடும் தொடர்பு கொள்ள வேண்டியது அவசியம்.

கீழே காஞ்சித்தெய்வம், ஸ்ரீ மகா பெரியவரின் ஜாதகத்தைக் கொடுத்திருக்கிறேன்.

சுக் ராகு சூரி, புத,குரு 
 மகாபெரியவர் 20-5-1894 பகல் 1-15 விழுப்புரம்    
செவ் ல/ 
  சந்   சனி கேது

ஸ்ரீமகாபெரியவர் 20-5-1894 பகல் சுமார் 1-15 மணியளவில் விழுப்புரத்தில் பிறந்திருக்கிறார். அவரது அவதார ஜாதகப்படி, அவருக்கு சிம்ம லக்னம், விருச்சிக ராசியாகி தெய்வத் திருவுருக்கள், அவதாரங்கள் எப்போதும் பவுர்ணமி நிலையில்தான் பிறக்கும் என்று  அடிக்கடி நான் சொல்வதன்படி பௌர்ணமிக்கு அருகில் இருக்கும் நிலையில் இவர் பிறந்திருக்கிறார்.

மகாபெரியவரின் ஜாதகத்தில் பூரண ஒளிக் கிரகங்களான சூரியனும், சந்திரனும் பவுர்ணமி யோகத்தில் நேரெதிரே இருக்கிறார்கள். ஒளிபொருந்திய பௌர்ணமி நிலை என்பது சந்திரனின் நீச்ச நிலையை சமப்படுத்துவது என்பதால் இங்கே சந்திரன் நீச்சம் என்பதை ஜோதிடரீதியாக கருத்தில் கொள்ளத் தேவையில்லை.

அதைவிட மேலாக இந்த மகானுக்கு சிம்ம லக்னமாகி, அதி உச்ச ஒளிநிலையில் இருக்கும் சூரியனும், சந்திரனும் 10-4 மிடங்களில் இருப்பதால்  இருவரும் திக்பல அமைப்பிலும் இருக்கிறார்கள். இன்னும் கூடுதலாக சுபரான குருவுடன் இணைந்து, சுபத்துவ-சூட்சுமவலு அமைப்பின் அதி உயர்நிலையிலும் இருக்கிறார்கள்.

இங்கே ஒரு மிகச்சிறந்த ஆன்மீக நிலையினைச் சொல்ல வேண்டுமெனில், பௌர்ணமி நிலையில் உள்ள சந்திரனின் பார்வையை வாங்கி, சுக்கிரனோடு பரிவர்த்தனை அமைப்பில் வலுவாக இருக்கும் குரு, தன்னுடைய ஐந்தாம் பார்வையாக கன்னியில் இருக்கும் சனி-கேது இருவரையும், ஏழாம் பார்வையாக ராசியாகிய சந்திரனையும் பார்க்கிறார்.

குரு மற்றும் உச்ச சுக்கிரனின் பார்வையைப் பெற்று சுபத்துவமான சனி, கேதுவின் இணைவைப் பெற்று சூட்சும வலு அடைகிறார். இத்தனை சிறப்பு மிக்க ஆன்மீக உயர்நிலை கொண்ட  சனி தன்னுடைய சுபத்துவ மூன்றாம் பார்வையால் சந்திரனைப் பார்க்கிறார். ஏற்கனவே நான் கன்னியில் கேது இருக்கும் நிலை “கன்யா கேது” என சிறப்பாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

அத்தகைய ஞானகேதுவுடன் இணைந்து, சிற்றின்பத்தை குறிக்கக் கூடிய ஏழாம் இடத்திற்கு எட்டில் மறைந்த சனி, குருவின் பார்வையை பெற்று தன்னுடைய மூன்றாம் பார்வையால் சந்திரனைப் பார்ப்பதும், அந்தச் சந்திரன் தனது ஏழாம் பார்வையால் குருவை பார்ப்பதுமாக ஒரு சிறப்பான முக்கோண அமைப்பு மகா பெரியவரின் ஜாதகத்தில் இருக்கிறது.

அதாவது லக்னாதிபதியையும், ராசியையும் சுபத்துவப்படுத்திய குருவுக்கு, பவுர்ணமிச் சந்திரனின்  பார்வை, ஞானகேதுவுடன் இணைந்து சூட்சும வலுப் பெற்ற சித்த கிரகமான சனிக்கு கூடுதலாக சுபத்துவ குருவின்  பார்வை, மனமாகிய சந்திரனுக்கு குரு, சனியின் பார்வை என முக்கோண அமைப்பில் குரு- சனி- கேது ஆகிய மூன்று கிரகங்களும், ராசியாகிய சந்திரனை தொடர்பு கொள்வது மிகவும் சிறப்பான ஒரு அமைப்பு.

இந்த அமைப்பால்தான் ஸ்ரீபெரியவர் அவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஜகத்குருவாக இருந்தார்கள். இந்த அமைப்பால்தான் உலகெங்கும் இருந்து மாற்று மதத்தினரும் தேடி வந்து அவரை வணங்கிச் சென்றார்கள்.

லக்னாதிபதிக்கு சுபத் தொடர்புகள் கிடைத்திருக்கும் நிலையில், பெரியவரின் ஜாதகத்தில் லக்னத்திற்கு சுப அமைப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. யோகாதிபதியான செவ்வாய் உச்சம் பெற்று, ஆறில் மறைந்து, சூட்சும வலுப் பெற்ற நிலையில், தனது எட்டாம் பார்வையால் லக்னத்தைப் பார்க்கிறார்.

லக்னத்திற்கு சுப தொடர்புகள் கிடைத்தால் ஒருவர் சுகவாழ்வு வாழ்வார். லக்னத்திற்கு சுபர் பார்வை, இணைவு கிடைக்காத அமைப்பால்தான் ஸ்ரீபெரியவர் அவர்கள் எந்த ஒரு நிலையிலும் நவீனகால வசதிகளை விரும்பாமல், அவைகள் இருந்தும் அவற்றை ஒதுக்கி ஒரு உண்மையான, பற்றற்ற துறவியாக வாழ்ந்தார்கள்.

ஆன்மிக கிரகங்களான குரு-சனி-கேது ஆகிய மூவரும் தங்களுக்குள் தொடர்பு கொண்டு, லக்னாதிபதி மற்றும் ராசியுடன் இணைந்து, பார்த்த நிலையில், முழு ஒளி அமைப்பான பௌர்ணமி நிலையோடு, எனது சுபத்துவ- சூட்சுமவலு அமைப்பில் இம்மூவரும் இருக்கும் காரணத்தினால், தன் காலத்தில் வாழ்ந்த ஞானிகள் அனைவரிலும் உயர்வாக, அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக மகா பெரியவர் அவர்கள் தெய்வநிலைக்கு உயர்ந்து சென்றார்கள்.

அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம். 

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.