adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
கோடீசுவரனை பிச்சைக்காரனாக்கும் அமைப்பு…D-061

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி 
கைப்பேசி : 8681 99 8888

ஆரம்பகால ஜோதிட ஆர்வலர்களைப் போலவே நானும் ஒரு கிரகத்தின் நீச்சம் என்பது மிகவும் வலிமை இழந்த நிலை எனவும், ஒரு ஜாதகத்தில் நீச்ச கிரகமே இருக்கக் கூடாது என்றும் நினைத்துக் கொண்டிருந்தேன்.

மிக முக்கியமாக லக்னாதிபதி கிரகம் நீச்சம் அடைந்தால் வாழ்க்கையே அவ்வளவுதான் எனவும் பயமுறுத்தப்பட்டிருந்தேன். நான் பிறந்தபோது கிராமத்தில் எழுதப்பட்டிருந்த வாக்கியப் பஞ்சாங்க ஜாதகத்தின்படி என் லக்னாதிபதி புதன் பதினொன்றாமிடத்தில் இருந்தது. மிக இளம்வயதில் வாக்கியத்தின்படி புதன் 11ல் இருப்பதே உண்மை என்று மனதைத் தேற்றிக் கொண்டேன்.

அனுபவமும், ஞானமும் உயர உயரவே ஒரு கிரகத்தின் நீச்சம் பற்றிய தீர்க்கமான விஷயங்கள் புரிய ஆரம்பித்தன. அதிலும் மிக நுணுக்கமாக நீச்ச பங்கத்திற்கும், நீச்சபங்க ராஜயோகம் என்பதற்கும் உள்ள நுண்ணிய வேறுபாடுகள் புரிய ஆரம்பித்தது.


என் வாழ்வில் நடந்த சில சம்பவங்களுக்கு பிறகும், என்னை போல லக்னாதிபதி அல்லது மற்ற பாவகங்களுக்குரிய கிரகங்கள் நீச்சமான ஜாதகர்களுக்கு நடக்கும், நடந்த சம்பவங்களை நேரில் பார்த்து உணர்ந்த பிறகும்தான், இதுவரை நான் எழுதிய கட்டுரைகளிலே இணையத்தில் அதிகம் படிக்கப்பட்ட கட்டுரையான (26 லட்சம் முறைகள்) “நீச்சபங்க ராஜயோகம்- சில உண்மைகள்” என்ற கட்டுரையை எழுதியிருக்கிறேன்.

வெறும் நீச்சத்தோடு நிற்கும் கிரகம், நீச்சபங்கம் மட்டும் பெற்றுள்ள கிரகம், நீச்ச பங்க ராஜயோகம் அடைந்துள்ள கோள் என்ற வித்தியாசத்தை ஒருவர் புரிந்து கொள்ளும் போது மட்டுமே ஒரு கிரகத்தின் உண்மையான வலிமையை உணர்ந்து கொள்ள முடியும்.

ஆரம்ப நிலையில் ஒரு ஜாதகத்தில் இருவேறு ஜோதிடக் கருத்துக்கள் இருக்கும்போது, உங்கள் ஜாதகத்தில் அந்தக் கிரகம் எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறதோ அதுவே சரி என்ற மனநிலை உங்களுக்கு இருக்கும். உங்களைத் திசை திருப்பும் இந்த நிலையைத் தாண்டி உண்மையை மட்டும் உணரும் நிலைக்கு வருவதுதான்  வளர்நிலை ஜோதிடர்களுக்கு உள்ள உண்மையான சவால்.

ஒரு ஜோதிடக் கருத்து தன்னுடைய ஜாதகப்படி தனக்கு சாதகமாக இல்லாதபோது பெரும்பாலானவர்களின் மனம் அதை ஒத்துக் கொள்வதில்லை. முழுக்க முழுக்க தவறான வாக்கியப் பஞ்சாங்கத்தை ஆதரிப்பவர்களும் இப்படித்தான். இதுபோன்ற மனநிலையைத் தாண்டி வரும் பொழுதுதான் உங்களால் விருப்பு, வெறுப்பற்ற, பொறுப்புள்ள, உண்மை சொல்லும் ஜோதிடராக இருக்கமுடியும்.

சனி, செவ்வாய் சுபத்துவ, சூட்சுமவலு நிலையின்றி வெறுமனே ஆட்சி, உச்சம் பெறக்கூடாது என்று சொல்லும் என்னுடைய ஜாதகத்தில், சனி 9-க்குடைய பாக்கியாதிபதியாகி, மூலத்திரிகோண நிலையில் மிக வலுவாக இருக்கிறார். ஆயினும் சனி, செவ்வாய் ஒருவருடைய ஜாதகத்தில் ஆட்சி, உச்சம் பெறக்கூடாது என்ற கருத்திலிருந்து நான் மாறவில்லை. அதுவே உண்மை நிலை.

ஒரு பாபக் கிரகம் திரிகோணத்திற்கு அதிபதியாகி, கோணத்தில் இருக்கக் கூடாது என்பதே உண்மை. “பாதகாதிபதி பற்றிய ரகசியங்கள்” என்ற கட்டுரையில் இதுவே பாதகாதிபதிகள் அமைந்த சூட்சுமம் என்பதைக் குறிப்பிட்டிருக்கிறேன்.

என்னுடைய ஒன்பதாமிடத்து வலிமை பெற்ற சனியின் அமைப்பின்படி, என்னுடைய தந்தை, ஒரு முழுமையான தந்தையாக, குடும்பப் பொறுப்புள்ளவராக இருந்ததே இல்லை. என் தாயே என் குடும்பத்தை வழிநடத்திச் சென்றார். உண்மையைச் சொல்லப் போனால் என் தந்தை இருந்தும், இல்லாதவராகத்தான் இருந்தார். ஒரு தந்தைக்குரிய கடமையை அவர் எனக்குச் செய்ததில்லை.

இந்த அமைப்பு என் ஜாதகப்படி தந்தையைக் குறிக்கும் ஒன்பதாமிடத்தில் பாபக் கிரகமான சனி, திரிகோணத்திற்கு அதிபதியாகி, அங்கே மூலத்திரிகோண நிலை பெற்று வலுத்து, செவ்வாயின் பார்வையைப் பெற்றதால் நேர்ந்தது.

இங்கே பாபத்துவ அமைப்பில் சனி இருப்பினும், சனி, செவ்வாய் இருவரின் ஆதிபத்திய நிலைகளின்படி இருவரும் ஒருவிதத்தில் 9-11ம் அதிபதிகளாகிறார்கள். அதன்படி இங்கே பாக்கிய, லாபாதிபதிகள் சமசப்தமமாக பார்த்துக் கொள்கிறார்கள். இந்த அமைப்பு ஒருவருக்கு வாழ்நாள் முழுதும் ஏதேனும் ஒருவகையில் சரிவில்லாத பொருளாதார நிலைமையைத் தரும். அது எனக்கு இருக்கிறது.

ஒரு ஜாதகத்தில் 2, 9, 11-க்குடையவர்கள் நல்லநிலையில் அமைந்து, தங்களுக்குள் தொடர்பு கொள்ளும்போது ஜாதகர் நல்ல பொருளாதார வலிமை கொண்டவராகவே இருப்பார். இதன்படி பிறந்தது முதல் எனக்கு பெரிய அளவில் பொருளாதாரக் கஷ்டங்கள் வந்ததில்லை.

ஜோதிடம் என்பது சகல நிலைகளையும் நன்கு ஆராய்ந்து பார்த்துச் சொல்ல வேண்டிய ஒரு கலை. இங்கே சனி, செவ்வாயின் நேர் பார்வை காரகத்துவ அடிப்படையில் நல்லதல்ல என்று சொல்லும்போது, அதே சனி, செவ்வாய் இருவரின் ஆதிபத்திய நிலையில் அது நன்மைகளைத் தரும் என்பதையும் நாம் உணர வேண்டும்.

அதேநேரத்தில் இதே சனி, செவ்வாய் நேர் பார்வைதான் எனக்கு 35 வயதுவரை திருமணத் தடையையும் கொடுத்தது. ஜாதகப்படி 7-க்குடைய குரு, 12ல் மறைந்து, ராகுவுடன் இணைந்து, களத்திரகாரகன் சுக்கிரனும் அஸ்தங்கம் பெற்றிருந்த அமைப்பால் என்னுடைய சந்திரதசை, சுக்கிர புக்தியில் அதாவது குடும்பாதிபதி தசை, களத்திரகாரகன் புத்தியில் எனக்குத் திருமணம் நடந்தது.

ஒரு ஜாதகத்திற்கு அவயோக தசைகள் வரக்கூடாது வந்தால் முன்னேற்றம் இருக்காது என்று எழுதும் எனக்கு, என்னுடைய ஜாதகத்தின்படி வாழ்நாள் முழுதும் அவயோக தசைகள்தான் நடந்து கொண்டிருக்கின்றன.

ஜோதிடம் அருள் அணி, பொருள் அணி என்று இரண்டு பிரிவாக பிரிக்கப்படுகிறது. இதில் அருள் அணி என்று சொல்லப்படும் சூரிய, சந்திர, செவ்வாய், குருவின், கடகம், சிம்மம், மேஷம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ஆறு லக்னங்களுக்கு சனி, புதன், சுக்கிர தசைகள் சாதகமான பலன்களைத் தருவதில்லை.

பொருள் அணி என்று குறிப்பிடப்படும் சுக்கிரன், புதன், சனியின் ரிஷபம், துலாம், மிதுனம், கன்னி, மகரம், கும்பம் ஆகிய ஆறு லக்னங்களில் பிறந்தவர்களுக்கு சூரிய, சந்திர, செவ்வாய், குரு தசைகள் வருவது முன்னேற்றத்தைத் தராது. இது ஒரு அடிப்படை ஜோதிடவிதி. இதனையே அவயோக தசைகள் என்று சொல்லுகிறோம்.

இந்த நிலைக்கு விதிவிலக்காக மேற்கண்ட அவயோகத்தை அதாவது சாதகமற்ற பலனைத் தரக்கூடிய கிரகங்கள், ஜாதகத்தில் 3, 6, 10, 11 எனும் உப ஜெய ஸ்தான வீடுகளில் இருக்கும்பொழுது நன்மைகளைச் செய்வார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக் கருத்து அனைத்து மூல நூல்களிலும் உள்ளது.

என்னுடைய இளம் வயதில் அவயோக கிரகங்கள் என்று சொல்லப்படும் ஆறு, எட்டுக்குடையவர்கள் அல்லது தீமைகளைத் தரக்கூடிய கிரகங்கள் ஆறாமிடத்தில் இருக்கும்போது கடுமையான கெடுபலன்களைத் தருவதைப் பார்த்த எனக்கு இந்த விதி மிகவும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

உதாரணமாக கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள் தன்னுடைய சந்திர தசையில் மிகக் கடுமையான பலன்களை சந்திப்பதை என்னுடைய இளம் வயதிலிருந்தே கவனித்திருக்கிறேன். அதிலும் சந்திரன் தேய்பிறையாகி எங்கிருந்தாலும் அந்த பாவகத்தை சிதைப்பது மற்றும் ஆறாமிடத்தில் இருக்கும்போது சில நிலைகளில் கடுமையான பலன்களைத் தருவதை கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

ஆறாமிடம் என்பது கடன், நோய், எதிரிகளைத் தரக்கூடியது என்ற வகையில்தான்  அதன் பெயரே ருண, ரோக, சத்ரு ஸ்தானம் எனப்பட்டது. ஒரு நிலையில் எனக்கு அறிமுகமான சென்னையைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வர வியாபாரிக்கு கும்ப லக்னம், மீன ராசியாகி ஜாதகத்தில் சுக்கிரனும், சூரியனும் உச்சநிலையில் இருந்தார்கள்.

சுக்கிர தசையில் மிக உயர்நிலை, சூரிய தசையில் ஓரளவு அது நீடிப்பு என்றிருந்த அவரது கூட்டுக் குடும்பத்தில்,  அவரது சந்திரதசையின் ஆரம்பத்தில் பாகப் பிரிவினை ஏற்பட்டு, அவருக்கென்று ஒதுக்கப்பட்ட தொழில்களில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்தார்.

சந்திர தசையின் முதல் வருடமே படிப்படியாக கடன்கள் ஏற்பட்டு வியாபாரத்தில் நஷ்டமாகி, மூன்றாம் வருடத்திற்குப் பிறகு கடன்கள் கழுத்தை நெரிக்க, முதலில் தூரத்திலிருந்த நிலங்களை விற்று, பிறகு சென்னையில் இருந்த வீடுகளை விற்று, இறுதியாக தொழில் நிறுவனங்கள் அனைத்தையும் விற்று கடனை அடைத்து ஐந்தாவது வருடமுடிவில் நடுத்தெருவில் நின்றதை நான் பார்த்திருக்கிறேன்.

இதுபோன்ற நிலைகளை நேரில் உணர்ந்ததே, என்னை மேற்கண்ட 3, 6, 10, 11ல் இருக்கும் அவயோகக் கிரகங்கள் நன்மைகளைச் செய்யும் என்ற விதியை ஆராயத் தூண்டியது. அதனடிப்படையில் இதேபோன்ற அமைப்புள்ள ஜாதகங்களை ஆராய்ந்து இந்த விதியை 3, 6, 10, 11ம் இடங்களில் இருக்கும் அவயோகக் கிரகங்கள் நட்பு நிலையில் இருந்தால் மட்டுமே நன்மைகளைச் செய்யும் என்று மாற்றிச் சொல்லியிருக்கிறேன்.

இதற்கு வேறு வகையிலும் சில விளக்கங்களை அளிக்கலாம். ஆறாம் அதிபதி ஆறாமிடத்தில் இருக்கையில் மிகக்கடுமையான கெடுபலன்களை செய்கிறார் என்றாலும் அவர் சுபத்துவமாகி, ஆறாமிடத்தைத் தவிர வேறு இடங்களில் இருக்கும் நிலைகளில் கெடுபலன்களை செய்வதில்லை.

ஒரு கிரகம் சுபத்துவம் மற்றும் சூட்சும வலுவோடு இருக்கையில், அதற்குரிய சுப ஆதிபத்திய விஷயங்களை மட்டுமே செய்யும். பாபத்துவமாக இருக்கும் பொழுது அதற்கு நேரெதிராக அதன் பாப விஷயங்களைச் செய்யும் என்பதே உண்மை. ஆறாமிடத்தின் சுபத்துவ விஷயங்கள் என்று நான் அடிக்கடி குறிப்பிடும் நல்ல வேலை, தன்னைப் பிடிக்காதவர்களின் பணம், மறைமுகமான தனலாபம் போன்றவை ஆறாமதிபதி சுபத்துவ, சூட்சுமவலுவோடு இருக்கையில் ஒருவருக்கு கிடைக்கும்.

எப்படி இருப்பினும் 6-க்கு அதிபதி ஆறாமிடத்திலேயே இருப்பது சில நிலைகளில் நன்மைகளைத் தராது. அதேநேரத்தில் அக்கிரகம் பாவத் பாவத்தின்படி தன்னுடைய ஆறாம் வீட்டிற்கு ஆறாமிடமான, பதினொன்றில் இருப்பது நன்மைகளைச் செய்யும்.

இந்த நிலையில்தான் கும்ப லக்னம், தனுசு ராசியாக இருக்கும் ஒருவருக்கு சந்திர தசை நன்மைகளைச் செய்கிறது. அதேநேரத்தில் இங்கே பதினொன்றாம் இடத்தில் சந்திரன் இருந்தாலும், அவர் ராகுவுடனோ சனியுடனோ இணைந்து தேய்பிறைச் சந்திரனாகி பாபத்துவமாக இருக்கும் நிலைகளில், குறிப்பாக அமாவாசையை நெருங்கி இருக்கும் நிலைகளில், சனி, ராகுவோடு இணைந்திருக்கும்போது நல்ல பலன்களைத் தரமாட்டார்.

ஆகவே எந்த ஒரு விதியையும், நான் சொல்லும் சுபத்துவ, சூட்சுமவலு கோட்பாட்டினை மேற்கோளாக வைத்து, அந்த விதியை சமன்படுத்தும்போது நிச்சயமாக உண்மையான பலனை நம்மால் சொல்ல இயலும்.

அந்த அமைப்பின்படி என்னுடைய ஜாதகத்தில் சூரியன், நட்பு வீடான பத்தாமிடத்தில், நான் சூட்சும வலுவாகக் குறிப்பிடும் திக்பலத்தில், சுக்கிரனை அஸ்தகங்கப் படுத்தி சுபத்துவமாக அமர்ந்திருந்ததாலும், சந்திரன் அஷ்டமி திதியில் பாதி ஒளித் திறனுடன் மூல நட்சத்திரத்தின்  இறுதிப் பகுதியில் அமைந்திருந்ததாலும் சூரிய, சந்திர தசைகள் வயதுக்கேற்ற நன்மைகளையே செய்தன.

ஆறாம் அதிபதியான செவ்வாய் மூன்றாமிடமான அதிநட்பு ஸ்தானத்தில், இருந்தது நல்ல அமைப்புத்தான். இது செவ்வாயைத் தவிர சந்திரன் போன்ற வேறு கிரகமாக இருந்திருப்பின் நல்ல பலன்களைத் தந்திருக்கும்.

ஆனால் செவ்வாய் இங்கே சகோதர காரகனாகி, அவருக்கென்றே உள்ள சிறப்பு நான்காம் பார்வையால் ஆறாமிடத்தை தொடர்பு கொண்டதாலும், காரகோ பாவ நாஸ்தி நிலையில் இருந்ததாலும், சனியின் பார்வையால் கடும் பாபத்துவத்தை அடைந்ததாலும், மூன்றில் நட்பு வீட்டில் இருந்தும் கெடுபலன்களைத் தந்தது. அஷ்டமச் சனியும் அதற்குத் துணை நின்றது.

அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.. 

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.