ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888
ஆனந்தி, கோவில்பட்டி.
கேள்வி.
எனது மகன் பூச நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறான். ஜோதிடர்கள் பூசம்.. நாசம் என்றும் இவன் அமாவாசை பிறப்பு என்றும் சொல்லி அதற்கான பரிகாரங்களைச் செய்யச் சொல்கிறார்கள். பூசம், நாசம் என்பது உண்மையா? புதன் விபரீத ராஜயோகத்தை இருக்கிறார் என்று சொன்னார்கள், ஆனால் இவன் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறான், ஏன்? கும்ப லக்னத்திற்கு சூரிய, சந்திர தசைகள் நன்மை செய்யாது என நீங்கள் சொல்லி வருகிறீர்கள். சூரியன், சந்திரன் இணைந்து அமாவாசையில் பிறந்த என் பையனின் வாழ்க்கை பிரகாசிக்குமா? லக்னாதிபதியை விட ஆறாம் அதிபதி வலுக்கக் கூடாது என்றும் சொல்லி வருகிறீர்கள். ஆறாம் அதிபதியே ராசிநாதனாக வரும்போது இதை எப்படி எடுத்துக் கொள்வது? என் மகன் சனிக்கிழமை, சனியின் நட்சத்திரமான பூசத்தில், சனி ஹோரையில், ஏழரைச் சனி நடப்பில், சனியின் இரவு வேளையில், சனியின் எண் எட்டில், சனியின் கும்ப லக்னத்தில், எல்லாமே சனியின் ஆதிக்கம் உள்ள நேரத்தில் பிறந்திருக்கிறான். இதில் ஏதாவது நுணுக்கம் உள்ளதா? என் பையன் மருத்துவம், இஞ்சினியரிங், ஐஏஎஸ் எது வேண்டுமானாலும் படிக்கலாம் என்று இங்குள்ள ஜோதிடர்கள் சொல்கிறார்கள். ஆனால் இதுதான் படிப்பான் என உறுதியாக நீங்கள்தான் சொல்வீர்கள். என் மகன் என்ன படிப்பான்?
பதில்.
(கும்ப லக்னம், கடக ராசி, 3ல் ராகு, 5ல் சுக், சனி, 6ல் சூரி, சந், 7ல் புத, செவ், குரு, 9ல் கேது, 14-8-2004 இரவு 8-16 கோவில்பட்டி)
27 நட்சத்திரங்களில் உயர்வு, தாழ்வு இல்லை. அனைத்து நட்சத்திரங்களும் உயர்ந்தவைதான். அனைத்தும் தாழ்ந்தவைதான். முற்பிறவி கர்மாவிற்கு ஏற்றபடியான பலன்களை நட்சத்திரங்களும், கிரகங்களும் வழங்குகின்றன. இதில் நீங்கள் கேட்டிருக்கும் பூச நட்சத்திரத்திற்குப் பதில் சொல்ல வேண்டுமெனில், உலகின் ஏராளமான ஜகத்குருக்கள், ஆன்மிகவாதிகள், உலகைத் திசை திருப்பிய மகான்கள், உன்னத, உயர் பிறவிகள் பூசத்திலேயே பிறந்திருக்கிறார்கள். நம்முடைய ஆழ்வார்கள், நாயன்மார்கள் உள்ளிட்ட ஆன்மீகத் திறனாளர்கள் பெரும்பாலும் பூசத்தில் பிறந்திருப்பதே இதற்குச் சாட்சி.
தமிழ் ஒரு உயர் தனிச் செம்மொழி என்பதை அடிக்கடி சொல்லி வருகிறேன். இங்கே சொல்லாடல்களுக்குப் பஞ்சமில்லை. எதுகை, மோனையில் தமிழில் விளையாடலாம். பூசம், நாசம் போன்ற பழமொழிகள் தமிழுக்காகவே ஜோதிடத்தில் உருவாயின. இவற்றையெல்லாம் காதில் போட்டுக் கொண்டு பயப்படத் தேவையில்லை. எந்த ஒரு ஜோதிடர் பழமொழிகளையும், பாடல்களையும் அதிகம் உபயோகிக்கிறாரோ அவரது ஜோதிட அறிவு முழுமை பெறவில்லை என்று அர்த்தம். பாடலைப் பாடி பலன் சொல்பவர் அவருக்கு முன்னால் இருந்தவர் சொன்னதை மட்டும் காப்பியடிக்கிறார். இவராக தனித்து சிந்திக்கவில்லை. அவருக்கு அதற்குமேல் தெரியாது அவரது ஜோதிட அறிவு அரைகுறையானது. பூசம் நாசம் போன்ற பொதுவான பலன்களுக்கு ஜோதிடத்தில் ஒருபோதும் இடமில்லை.
உண்மையைச் சொல்லப் போனால் மாலைமலரில் ஞாயிற்றுக்கிழமை நான் எழுதும் ராசிபலன் கூட வெகுஜன நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டு ஜோதிட சமரசத்திற்கு உள்ளாகி எழுதுவதுதான். இந்த ராசிபலனைப் படித்தும் சிலர் ஆறுதல் அடைகிறார்களே என்ற நல்லதைத் தவிர, வார ராசிபலனுக்கென்று தனி விசேஷம் எதுவுமில்லை. அப்படிப்பட்ட நிலையில் பூசம், நாசம் என்று ஒரு பழமொழியின் மூலம் பூசத்தில் பிறந்தவர்கள் அத்தனை பேரின் தலைவிதியை நிர்ணயிக்க முடியும் என்றால், உலகில் பூச நட்சத்திரத்தில் பிறந்த அனைவருமே நாசமாகித்தானே இருக்க வேண்டும்?
ஒரு ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதி, லக்னாதிபதி நின்ற நட்சத்திரநாதன், லக்னாதிபதிக்கு வீடு கொடுத்தவன், ராசி, ராசிநாதன், சந்திரன் நின்ற நட்சத்திரநாதன் என ஏகப்பட்ட நுணுக்கங்கள் இருக்கின்றன. இவற்றில் ஜாதகர் பிறக்கும் நட்சத்திரமும் ஒன்று. ஒருவர் பூச நட்சத்திரத்தில் பிறந்து, அவரது லக்னாதிபதி வலுவிழந்து, நட்சத்திர நாதனான சனியும் பாபத்துவமாக இருக்கும் நிலையில், ஐந்து, ஒன்பதாம் அதிபதிகளும் பலவீனமாகி, தசா, புக்தி அமைப்புகளும் கைகொடுக்காத நிலையில் ஒருவர் நாசமாவார் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். அதை விடுத்து பூச நட்சத்திரத்தில் பிறந்ததால் மட்டுமே ஒருவர் நாசமாவார் என்றால், அங்கே ஜோதிடம் இருக்காது. அருள்வாக்கும், கிளி ஜோசியமும், குடுகுடுப்பைக்காரத்தனமும்தான் இருக்கும்.
மகன் ஜாதகத்தைப் பொறுத்தவரையில் நட்சத்திர நாதனும், லக்னாதிபதியுமான சனி, ஐந்தாமிடத்தில் நட்பு வீட்டில், இன்னொரு நண்பரான சுக்கிரனின் இணைவில் சுபத்துவமாகி, வர்கோத்தம நிலையில் இருப்பதால் மிகவும் வலுவாக இருக்கிறார். ஆகவே பூசம், நாசம் என்ற பழமொழியை இங்கே ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். புதன் விபரீத ராஜயோக அமைப்பில் இல்லை. அனுப்பியிருக்கும் வாக்கிய பஞ்சாங்கத்தில்தான் ஆறில் இருக்கிறார். வாக்கியப் பஞ்சாங்கம் என்பது முழுக்க முழுக்க தவறானது. ஞானிகளின் பெயரைச் சொல்லி வாக்கியத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இளைய ஜோதிடர்களில் பெரும்பாலானோர் வாக்கியத்தின் நிலை அறிந்து மாறி வருவதால் இன்னும் சில ஆண்டுகளில் வாக்கியம் வழக்கொழிந்து போகும்.
மகனது ஜாதகப்படி கல்விக்கு அதிபதியான புதன், வக்கிர நிலையில், செவ்வாயுடன் ஆறு டிகிரிக்குள் இணைந்திருப்பதால் படிப்பு சுமாராகத்தான் வரும். பள்ளியில் அவன் முதல் மாணவனாக வருவான் என்று சொல்லி ஏமாற்ற விரும்பவில்லை. ஆயினும் கல்லூரிப் படிப்பை முழுமையாகவே முடிப்பான். ஒரு லக்னத்தின் அதிபதிக்கு எதிரிகளின் தசை நன்மைகளை செய்யாது எனும் பொதுவிதிப்படி, கும்ப லக்கினத்திற்கு சூரிய, சந்திர தசைகள் நன்மைகளைச் செய்வதில்லை. மகன் விஷயத்தில் அவனது 57 வயதில் சந்திர தசை வரும் பொழுது ஆரோக்கிய குறைவுகள் உண்டாகத்தான் செய்யும். வயதான காலத்தில் சந்திரதசை வருவது பாதகமில்லை. நடுத்தர வயதில் சந்திர தசை வந்தால் மட்டுமே கும்பத்திற்கு கடுமையான வேலை, தொழில் பாதிப்புகளும், கடன், நோய் தொல்லைகளும் இருக்கும். தசைகள் நல்லவைகளைச் செய்யாது என்றாலும் அவை எப்போது வருகின்றன என்பதும் முக்கியம்.
எந்த ஒரு ஜாதகத்திலும் லக்னாதிபதியை விட ஆறாம் அதிபதி வலுக்கவே கூடாது. ஆறாம் அதிபதி ராசிநாதனாக வரும்பொழுது, லக்னம் வலுவிழந்தால் ராசி பலன் தரும் எனும் விதிப்படி, அங்கே ஆறாமதிபதி மறைந்து ராசிநாதனாக அவர் நல்ல பலன்களையே தருவார். ஆனால் அவர் ராசிநாதனாக செயல்பட வேண்டும் எனில் லக்னாதிபதி முழுக்க வலுவிழுந்து இருக்கவேண்டும். லக்னாதிபதி எத்தகைய நிலையில் இருக்கிறார் என்பதை கணிப்பதற்கு மிகவும் நுணுக்கமான ஞானம் தேவைப்படும்.
மகன் சனிக்கிழமை, சனியின் நட்சத்திரம், சனி ஹோரை, ஏழரைச்சனி, சனியின் இரவு, சனியின் லக்னத்தில் பிறந்திருப்பது நுணுக்கமான ஒன்றுதான். இவை அனைத்தும், இந்த அமைப்பின் நாயகனான சனி சுபத்துவமாகி, நட்பு வீட்டில் நண்பருடன் அமர்ந்து, வர்கோத்தமமாக இருப்பதால், வாழ்நாள் முழுக்க நன்மைகளையே செய்யும். அப்படியே தலைகீழாக சனி பாபத்துவமாகி, பலவீனம் பெற்று, எதிர்மறையாக ஜாதகத்தில் அமைந்திருப்பின் மகன் வாழ்நாள் முழுக்க கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பான். ஆனால் சனி ஜாதகத்தில் நல்லவிதத்தில் இருப்பதால் எதிர்காலத்தில் சிறப்பாக இருப்பான். இயந்திரம் சம்பந்தப்பட்ட இஞ்சினியரிங் கல்வி படிப்பான். வாழ்த்துக்கள்.
(11.06.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.