adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
கணவனிடம் தாம்பத்யம் வைத்துக் கொள்ள முடியுமா?

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

ஒரு வாசகி, சென்னை.

கேள்வி.

கடவுளிடம் கூறுவது போல நினைத்து தங்களிடம் இதை பகிர்கிறேன். திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. மணமான புதிதில் நான்கு மாதங்கள் மட்டும் நானும் என் கணவரும் தாம்பத்தியத்தில் இருந்தோம். கரு உண்டான நாள் முதல் இருவரும் அதிகமாக சண்டையிட ஆரம்பித்தோம். அவருடைய தாய் மற்றும் உடன் பிறந்தவர்களின் நலனுக்காக நிறைய விஷயங்களை என்னிடம் மறைப்பார். இதனால் வரும் சண்டை என்னை தற்கொலை எண்ணம் வரை தூண்டியது. சண்டைக்குப் பிறகு சமாதானம் ஆனாலும், உடல் தேவைகளுக்காக மட்டும் என்னிடம் சமரசம் ஆகிறாரோ என்று எனக்குள் தோன்றும்படி அவர் நடந்து கொண்டார். இதனால் அவரிடமிருந்து உடலளவில் நான் விலக ஆரம்பித்தேன்.

என் தாய், தகப்பனிடம் கூட கூறாத உண்மையை தற்போது உங்களிடம் சொல்கிறேன். மணமான நான்கு மாதங்களுக்குப் பிறகு இந்த நான்கு வருடங்களில் ஒருநாள் கூட நானும் என் கணவரும் தாம்பத்திய உறவில் ஈடுபடவில்லை. அவர் சொன்ன பொய்களால் என் மனமும், உடலும் மரத்துப்போய் விட்டது. இன்று எங்களுக்குள் பெரிய சண்டைகள் இல்லை அல்லது அதை நான் கண்டு கொள்வதில்லை. எல்லாவற்றிலும் சமாதானம் ஆனாலும் உடலளவில் அவரை நெருங்க என் மனம் மறுக்கிறது. எவ்வளவுதான் சிரித்துப் பேசினாலும் இரவில் அவர் என்னை நெருங்கும்போது சூடு கண்ட பூனை போல அவரை நான் வெறுக்கிறேன்.

எனக்கு ஏன் இந்த நிலை? மற்ற பெண்களைப் போல நானும் என் கணவருடன் தாம்பத்தியத்தில் சந்தோஷமாக இருக்க முடியாதா? இதற்கான ஜோதிடக் காரணங்கள் என்ன? இந்த நிலை மாறுமா? அவருடன் காதல் வயப்பட்டு கலவியில் ஈடுபடும் நிலை எப்போது வரும்? கடவுள் ஒரு அழகான பெண் குழந்தையை எங்களுக்கு கொடுத்துள்ளார். அடுத்து ஒரு ஆண் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசையாக இருக்கிறது. எங்களுக்கு ஆண் குழந்தை யோகம் உள்ளதா? இதை எழுதும்போது கூட கண்ணீர் வருகிறது. எங்களுக்குள் தாம்பத்தியம் இல்லை என்ற விஷயத்தை பெற்றோர் உள்பட யாரிடமும் நான் பகிர்ந்தது இல்லை. என் குடும்பத்தார் அனைவரும் மாலைமலர் கேள்வி பதில் ரசிகர்கள் என்பதால் என் ஜாதக கிரகநிலை விவரங்களை மறைத்து பதில் சொல்ல வேண்டுகிறேன். அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். வேறு ஒரு ஜோதிடரை அணுகி என் சந்தேகத்தை கேட்கவும் கூச்சமாக இருக்கிறது. தங்களிடம் கேட்பது ஒரு தகப்பனிடம் கேட்பது போல பாதுகாப்பாக உணர்கிறேன். பரிகாரங்கள் இருந்தால் தயவுசெய்து குறிப்பிடுங்கள்.

பதில்

மகளே... திருமண வாழ்க்கை என்பதற்கு “கொடுத்துப் பெறுதல்” என்ற அர்த்தமும் உண்டு. அன்பைக் கொடுத்து ஆதரவை பெறுதல், உடலைக் கொடுத்து உயிரை பெறுதல் என்று எப்படி வேண்டுமானாலும் இதை நீ எடுத்துக் கொள்ளலாம். உன்னுடைய பிரச்சினைகளை பக்கம் பக்கமாக எழுதி இருக்கும் நீ, தாய் மற்றும் உடன்பிறந்தவர்களின் நலனுக்காக சில விஷயங்களை என்னிடம் மறைக்கிறார் என்று மட்டுமே உன் கணவனைக் குறை சொல்கிறாயே தவிர, எந்த ஒரு இடத்திலும் இவர் குடிக்கிறார், அடிக்கிறார், பிற பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்று ஒரு வார்த்தை கூட எழுதாததிலிருந்தும். வலுத்த குரு லக்னத்தை பார்க்கும் உன் கணவனின் ஜாதகத்தில் இருந்தும், உன் கணவன் எப்படிப்பட்ட நல்லவன் என்பது எனக்கு உள்ளங்கை நெல்லிக் கனி போலத் தெரிகிறது.

விருப்பம் இல்லாத மனைவியை அதிகாரம் செய்து அனுபவிக்காத உன் கணவனுக்காக நீ ஒரு கோவிலே கட்டலாம். ஒரு பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவனே உண்மையான ஆண்மகன். அந்தவகையில் உன் கணவன் ஒரு முழுமையான ஆண்மையாளன். ஒரு புத்திசாலி ஆணிற்கு ஒரு பெண்ணின் ஈகோவைத் தட்டி எழுப்ப ஒரு நொடி போதும். வேறு ஒரு பெண்ணிடம் பேச வாய்ப்புள்ளது போல ஒரு கோடி காட்டியிருந்தால் போதும். உனது நான்கு வருட விரதம் நாலு நொடியில் பறந்து போயிருக்கும். அதைச் செய்யாத உன் கணவனுக்காக நீ எதையும் செய்யலாம். பரிகாரம் என்ற பெயரில் அரசமரத்தை சுற்றிவருவதை விட, அரசனாகிய உன் கணவனை சுற்றி வந்தாலே போதுமே, அடுத்தடுத்து ஆண் குழந்தைகளாக பிறக்குமே?

கணவன்-மனைவிக்குள் பகலில் எத்தனை பெரிய சண்டைகள் வந்தாலும், இரவானதும் அவற்றை மறந்து, உடலும், மனமும் லேசாக தாம்பத்தியத்தில் ஈடுபடுவதே நிறைவான வாழ்க்கை. உடலுக்கும், மனதிற்கும் ஒத்தடம் தருவதற்காகவே தாம்பத்தியம் என்கின்ற அருமருந்தை பரம்பொருள் உயிர்களுக்கு தந்திருக்கிறது. நான்கு மணி நேரத்தில் தீர வேண்டிய ஒரு விஷயத்தை, நான்கு வருடங்கள் வரை இழுத்துக் கொண்டு போய், அதை முடிக்க முடியாமல் திணறும் ஒரு முட்டாள் பெண்ணாக எனக்கு கடிதம் எழுதியிருக்கிறாய் நீ. உன்னுடைய ஜாதக அமைப்பின்படி நீ கடுமையான ஈகோ உள்ள ஒரு கோபக்காரி. உன் லக்னத்திலேயே செவ்வாய் வலுப்பெற்று இருப்பதால், அனைவரும் உனக்கே பணிந்து போக வேண்டும் என்று நினைப்பவள் நீ. உன் கணவன் விஷயத்தில் இது தடுமாறி விட்டதால் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமலும், வெளியில் சொல்ல முடியாமலும் தவிக்கிறாய்.

மகளே...

ஒரு பெண் தன்னுடைய ஈகோவைத் துறக்கும் இடம் கணவனிடம் சேரும் அந்த நேரத்தில்தான். தன்னுடைய பிறவிப்பயனான தாய்மை அடையும் பேறை ஒரு பெண் தாம்பத்தியத்தின் மூலமாகவே அடைகிறாள். நல்ல கணவனிடம் ஒரு பெண் எந்த நிலையிலும் ஈகோ பார்க்க கூடாது. எலிசபெத் மகாராணியாக அவள் இருந்தாலும் கணவனுக்கு அவள் மனைவிதான். அன்பு காட்டுவதற்கும், பிற உயிர்களுக்கு சேவை செய்வதற்கும், நல்ல தலைமுறையை வளர்த்தெடுப்பதற்கும் உலகிற்கு கடவுள் கொடுத்த கொடை பெண். பெண் எனும் மகா சக்தி இல்லையெனில் இந்த உலகமே இல்லை. அப்படிப்பட்டவளுக்கு தேவையற்ற ஈகோ வந்தால் கணவனுக்கு நிம்மதி இல்லை. நான்கு வருடங்களாக நீ தாம்பத்தியத்திற்கு மறுத்தும், வேறு ஒரு பெண்ணைத் தேடாத, உன் பிரச்சனையை வெளியில் சொல்லி உன்னை விட்டும் கொடுக்காத உன் கணவனுக்காக நீ எதையும் செய்யலாம்.

கணவன் மேல் காதல் இல்லாமல் நாங்கள் எப்போது கலவியில் ஈடுபடுவோம் என்று என்னிடம் கேட்க மாட்டாய். எனக்கு காகிதத்தால் கடிதம் எழுதுவதை விட உன் கணவனுக்கு கண்களால் கடிதம் அனுப்பு. 2020 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் உனக்கு சந்திர திசையில் குரு புக்தி ஆரம்பிக்க இருப்பதாலும், கணவனின் ஜாதகப்படியும் அடுத்த வருடம் குரு புக்தி ஆரம்பிக்க இருப்பதாலும், 2021 ஏப்ரல் மாதத்திற்குள் உனக்கு ஆண் குழந்தை பிறந்தே ஆகவேண்டும். கணவருக்கு தற்போது ராகு புக்தி நடப்பதால் அவரது ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல்நாள் மாலையே ஸ்ரீகாளகஸ்தி சென்று தங்கி, அதிகாலை இறைவனையும், தாயாரையும் தரிசனம் செய். அன்று இரவே உன் எண்ணம் கைகூடும். நன்றாக இருப்பாய் அம்மா. வாழ்த்துக்கள்.

(04.06.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.