adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 239 (04.06.19)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

எம். பிரபாகரன், சேலம்.

கேள்வி.

தாங்கள் கூறிவது போல எனக்கு எட்டாம் அதிபதி செவ்வாய் தசையும், ஜென்மச் சனியும் நடப்பதால், கடந்த ஐந்து வருடமாக என் உடல், மனம் சரியில்லை. நான்காம் இடத்தில் சூரியன், சனி, புதன், சந்திரன் ஆகிய நான்கு கிரகங்களும் சேர்ந்து இருப்பதால் என் சுகஸ்தானம் கெட்டுவிட்டதா? என் உடல்நிலை முன்னைக் காட்டிலும் மிகவும் பலவீனமாகிக் கொண்டிருக்கிறது. தாளாத மன உளைச்சல் ஏற்படுகிறது. நரம்பு, தோல், ஜீரணக்கோளாறு பிரச்சினைகளால் நிம்மதியை இழந்து விட்டேன். எனது பெற்றோர்கள் மிகவும் வருத்தப்படுகிறார்கள். என்னால் அவர்களுக்கு எந்த பலனும் இல்லை. கடந்த ஐந்து வருடங்களாக சித்தா, ஹோமியோபதி போன்ற அனைத்து மருத்துவங்களும் பார்த்துவிட்டேன். பணம் செலவாகிறதே தவிர பலனில்லை. என் உடல்நிலை முழுமையாக எப்போது சரியாகும் அல்லது சரியாகாமலேயே போய்விடுமா? எந்த மருத்துவத்தை நாட வேண்டும்? எப்போது சரியாகும்? உடல்நிலை காரணத்திற்காக திருமணத்தை தள்ளிப் போடுகிறேன். ஆனால் பெற்றோர்கள் வற்புறுத்துகிறார்கள். இந்தப் பிரச்சினைகள் எல்லாம் நீங்கி நான் எப்போது நிம்மதி அடைவேன்?

பதில்.

(கன்னி லக்னம், தனுசு ராசி, 1ல் கேது, 2ல் செவ், 4ல் சூரி, சந், புத, சனி, 5ல் சுக், 7ல் குரு, ராகு, 22-12- 1987 அதிகாலை 12-15 சேலம்)

கேள்வியும் நீங்களே கேட்டு பதிலையும் நீங்களே சொல்லி விட்டீர்கள். இடையில் நான் எதற்கு? அஷ்டமாதிபதி தசையும், ஜென்மச் சனியும் நடக்கும்போது ஒருவருக்கு கடுமையான கெடுபலன்கள் நடக்க வேண்டும் என்பது விதி. அந்தக் கெடுபலன்கள் கடன், நோய், எதிரி என்ற அமைப்பில் இருக்கும். இன்னும் இரண்டு வருடங்கள் செவ்வாய் தசை முடியும் வரை உங்களுக்கு நல்லபலன் சொல்வதற்கு இல்லை.

தாய், தந்தை வற்புறுத்துகிறார்கள் என்பதற்காக திருமணம் செய்து கொள்ள வேண்டாம். இரண்டில் செவ்வாய், ஏழில் ராகு, ராசிக்கு ஏழாமிடத்திற்கு சனி பார்வை என்ற அமைப்பின்படி உங்களுக்கு 35 வயதில்தான் திருமணம் நடக்கும். அதுவரை பொறுமையாக இருக்கவும். குருவோடு சேர்ந்து ஏழாமிடத்தில் இருக்கும் ராகுவின்  தசையில்தான் உங்களுக்கு நீடித்த தாம்பத்திய சுகம் அமையும். செவ்வாய் தசையில் கிடைக்கும் எதுவும் உங்களுக்கு நிலைக்காது. நீடித்தும் இருக்காது. எந்த முறை மருத்துவமாக இருந்தாலும் வரும் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகுதான் உடல்நிலையில் முன்னேற்றம் தெரியும். செவ்வாய் தசை முடிந்ததும் கண்டிப்பாக உடல்நலம் முற்றிலும் சரியாகும். சுபரின் வீட்டில், சுபரோடு சேர்ந்திருக்கும் ராகுவின் தசையிலிருந்து வாழ்க்கையில் மனைவி குழந்தைகள் என நன்றாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.

ம. சரவணன், திண்டுக்கல்.

கேள்வி.

2012 முதல் தங்கள் எழுத்துக்களால் கவரப்பட்டவன் நான். விவரம் தெரிந்த நாள் முதல் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியும் அனுபவிக்காதவன். எட்டு வயதில் இருந்து தோல் வியாதியால் அவதிப்படுகிறேன். அம்மாவிடம் அன்பும், அரவணைப்பும் கிடைக்காமல், அடியும் திட்டுமாய் மட்டுமே வளர்ந்தேன். தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருக்கும் அப்பா. இப்போது வரைக்கும் அசிங்கங்கள், அவமானங்களுடன் தான் இருக்கிறேன்.

ஒரு பெண்ணை விரும்பி பெற்றோர் சம்மதத்துடன் 2013ல் திருமணம் செய்தேன். விருச்சிக ராசி ஏழரை சனியும், மீன ராசி அஷ்டமச் சனியும் என்ன பாடுபடுத்த முடியுமோ அதைவிட மோசமான கஷ்டத்தை அனுபவித்து கொண்டு இருக்கிறேன். இன்னும் எவ்வளவு நாள் கஷ்டப்படுவேன் என்று கூடத் தெரியவில்லை. பட்ட கஷ்டங்கள் என்னை மனநோயாளி ஆக்கிவிட்டது. விவாகரத்து வரை சென்றும் மனம் கேட்கவில்லை. ஒரே மகளுக்கு இரண்டரை வயதில் மூளைக்காய்ச்சல் வந்து பட்ட வேதனைகள் அளவில்லாதது. அதுமுதல் அவளுக்கு காது கேட்கவில்லை. மருத்துவமும் பலனளிக்கவில்லை. தந்தைக்கு இருதய ஆபரேஷன், தாய்க்கு வயிறு ஆபரேஷன், மனைவிக்கு கர்ப்பப்பை சிகிச்சை என்று மருத்துவம் பார்த்துப் பார்த்து நொந்து விட்டேன்.

சேமித்து வைத்த பணம் அனைத்தையும் மருத்துவமனையிலேயே கொடுத்து விட்டேன். இவை அனைத்தும் கடந்த ஆறு வருடங்களில் நடந்தது. மாதாமாதம் மருத்துவச் செலவுக்கு என 5000 ஒதுக்க வேண்டியுள்ளது. வருடம் ஒருமுறை ஒன்றரை இலட்சம் மருத்துவச் செலவும் வருகிறது. ஜோதிடர்கள் எனது ஜாதகம் பாவ ஜாதகம் என்றும், வாழ்க்கை முழுவதும் நான் கடனாளியாகத்தான் இருக்க வேண்டும் என்றும், உனக்கு சுக்கிர தசையே இனி வராது, இது உன் தலைவிதி என்றும் கூறிவிட்டார்கள். என் நண்பர்களும் என்னை ராசியில்லாதவன் என்று கேலி செய்கிறார்கள். என் தோல் வியாதி குணமாகுமா? குழந்தைக்கு காது சரியாகுமா? வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்குமா? நல்ல நிலைக்கு வருவேனா? சமுதாயத்தில் அந்தஸ்தோடு வாழ முடியுமா? இழந்ததை மீட்டு எடுப்பேனா?

பதில்.

(கணவன் 2-9 1985 மாலை 6- 52 நெல்லை, மனைவி 11-5-1990 காலை 6-40 கோபி)

மனைவிக்கு அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசியாகி, உங்களுக்கு மீனராசி என்றான நிலையில் 2013ல் உங்கள் இருவரையும் பரம்பொருள் இணைத்து வைத்ததுதான் விதி என்று சொல்லப்படுகிறது. திருமணமாகி முதல் ஆறு வருடங்கள் நீங்கள் எல்லாவகையிலும் கஷ்டப்பட வேண்டும் என்பது கர்மா.

அதே நேரத்தில் உங்கள் மனைவியின் ஜாதகம் மிகுந்த யோக ஜாதகம். ரிஷப லக்னமாகி லக்னாதிபதி சுக்கிரன் தனித்து உச்சம் பெற்ற அவரது ஜாதகப்படி, 2024 ஆம் வருடம் முதல் அவருக்கு சுக்கிர தசை ஆரம்பிக்க இருக்கிறது மனைவியின் சுக்கிர தசை கணவனுக்கு மிகுந்த மேன்மையை தரும் என்பது விதி. எனவே அனைத்து கஷ்டங்களையும் பல்லைக் கடித்து பொறுத்துக் கொண்டு சில மாதங்கள் வரை காத்திருக்கவும். அடுத்த வருடம் முதல் வாழ்க்கையில் படிப்படியாக ஒரு முன்னேற்றம் வந்து 2024 ஆம் ஆண்டு முதல் வாழ்வில் நல்ல உயர் நிலைக்கு வருவீர்கள்.

உங்கள் ஜாதகப்படி கும்ப லக்னமாகி, லக்னாதிபதி சனி கேதுவுடன் இணைந்து உச்சமும், சூட்சுமவலுவும் பெற்று இருப்பது மிகவும் சிறப்பு. மனைவியின் ஏழரைச்சனி கணவனை பொருளாதாரரீதியாக பாதிக்கும் என்பதன்படி வரும் தீபாவளி வரை உங்களுக்கு கடன் தொல்லைகள் இருக்கும். லக்னாதிபதி உச்சம் பெற்ற உங்கள் ஜாதகம் யோக ஜாதகம் தானே தவிர பாவ ஜாதகம் இல்லை. அடுத்த வருடம் பிறக்கும் போதே நல்லபடியாக பிறக்கும்.

லக்னாதிபதி ராகு-கேதுக்களுடன் இணைந்து, ஆறாமிடம் அதிகமான சுபத்துவம் ஆனதால் தோல் நோய் முழுவதுமாக குணமாக வாய்ப்பில்லை. ஆனால் அடுத்த வருடம் முதல் நோய் கட்டுக்குள் இருக்கும். குழந்தைக்கும் 2020 ஏப்ரலுக்கு பிறகு காது குணமாகும். மனைவியின் சுக்கிர தசை ஆரம்பித்தவுடன் வாழ்க்கையில் ஒரு அந்தஸ்தான உயர் நிலைக்கு வருவீர்கள். இழந்ததை மீட்பீர்கள். வாழ்த்துக்கள்.

(04.06.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.