adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
பாபக் கிரகங்களின் சூட்சும வலு…! (A-003)

#adityagurujitamilarticle

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

இயற்கைப் பாபர்களான சனியும், செவ்வாயும் ஒரு ஜாதகத்தில் நேர்வலு எனப்படும் ஆட்சி, உச்சத்தை “மட்டும்” அடைவது அவர்களது தசையில் அதிர்ஷ்டத்தைத் தருவது இல்லை. உண்மையில் இயற்கைப் பாபர்களான சனியும், செவ்வாயும் ஸ்தான பலத்தை அடையும் பொழுது “நன்மை” களைத் தருவதற்குப் பதிலாக அவர்களது “தன்மை” களை மட்டுமே தருவார்கள்.


அதிலும் “ஷட்பலம்” எனப்படும் ஆறுவித கிரக பலங்களில், முதன்மை பலமான ஸ்தான பலத்தை பாபர்கள் கேந்திர, கோணங்களில் அடைவது நல்லது அல்ல. லக்னாதிபதியாகவே இந்த கிரகங்கள் அமைந்தாலும், சுபத்துவமோ, சூட்சும வலுவோ பெறாமல் அவை ஆட்சி, உச்சம் எனப்படும் ஸ்தான பலம் மட்டும் பெற்று வலுப் பெறுவது நன்மைகளைத் தராது.

சனியும், செவ்வாயும் ஒரு ஜாதகத்தில் ஸ்தான பலம் இழந்து (ஆட்சி, உச்சம் பெறாமல்) திக்பலமோ, சுபர்களின் பார்வை மற்றும் சேர்க்கை எனப்படும் சுபத்துவத்தையோ அடைந்திருப்பது நன்மைகளைத் தரும். ஆட்சி, உச்சம் பெற்றால் மறைவிடங்களில் இருப்பதும், ராகுவுடன் சேராமல் கேதுவுடன் இணைவதும் (சூட்சுமவலு) சிறந்த யோகத்தையும், ஜாதகருக்கு நல்ல குணங்களையும் தரும்.

ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கும் மேலான  (2011ல் எழுதப்பட்டது) எனது ஜோதிட ஆய்வில் நான் கண்டுணர்ந்த இதையே “பாபக் கிரகங்களின் சூட்சும வலுக் கோட்பாடு” எனக் குறிப்பிடுகிறேன்.

பொதுவாக சனியும், செவ்வாயும் குணக்கேடுகளுக்கு காரணமானவர்கள். தனித்து வலிமை பெற்ற செவ்வாயால் ஒரு முரட்டுத்தனமான முன்கோபக்காரனையும், ஆட்சி, உச்சம் மட்டும் பெற்ற சனியால் ஒரு முட்டாள்தனமான பிடிவாதக்காரனையும் மட்டுமே உருவாக்க முடியும்.

கிரகங்கள் சுபர்கள், பாபர்கள் என்று ஏன் பிரிக்கப்பட்டன?

மனித வாழ்விற்குத் தேவையான நல்ல செயல்பாடுகளைத் (காரகத்துவங்கள்) தரும் கிரகங்கள் சுபர்கள் எனவும், தேவையற்ற குணங்களையும், பிறருக்கு துன்பம் தரும் செயல்களையும் தரும் கிரகங்கள் பாபர்கள் என்றும் வகுக்கப் பட்டன. இதில் சுபரானாலும், பாபரானாலும் முக்கிய பலமான ஸ்தான பலத்தை (ஆட்சி, உச்சம்) அடைந்தால் தங்களின் செயல்பாடுகளை ஜாதகருக்கு முழுமையாகச் செய்வார்கள்.

இதற்கு நேரிடையான அர்த்தம் என்னவெனில், குரு லக்னாதிபதியாகி ஸ்தான பலம் பெற்றால், அல்லது லக்னத்தோடு சம்பந்தப்பட்டால் ஜாதகர் கருணை, பெருந்தன்மை, ஒழுக்கம் போன்ற குணங்களோடும், புதன் வலுப்பெறின் அறிவாளியாகவும், செவ்வாய் வலுப் பெற்றால், கோபக்காரனாகவும், அசட்டுத் துணிச்சல் கொண்டவனாகவும், சனி வலுத்தால் பிடிவாதக்காரனாகவும் தன்னைத்தானே புத்திசாலி என நினைத்துக் கொள்ளும் முட்டாளாகவும் இருப்பார்.

ஒரு நல்ல ஜாதகத்தில் சுபர்கள் நேரிடையாக வலுப் பெற வேண்டும். பாபர்கள் நேர்வலு அடையக் கூடாது.

பாபக் கிரகங்கள் நேர்வலு “மட்டும்” அடைந்த ஏறத்தாழ பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஜாதகங்களை அலசிய என்னுடைய நீண்ட ஜோதிட ஆய்வில் சனி, செவ்வாய் உச்சம் மட்டும் அடைந்த எந்த ஒரு ஜாதகருமே அவர்களுடைய தசையில் மேன்மையான பலன்களை அடைந்தது இல்லை.

சனி உச்ச பங்கம் அடைந்திருந்தாலோ, அல்லது குருவின் பார்வை, இணைவையோ, அல்லது வேறு சுபர்களின் தொடர்பையோ பெற்று சுபத்துவம் பெற்றிருந்தாலோ அல்லது கேதுவுடன் இணைந்தோ,  வேறு வழிகளிலோ, சூட்சும வலு அடைந்திருந்தால் மட்டுமே சுக வாழ்வை அளிப்பார். செவ்வாயும் அப்படித்தான். இயற்கைச் சுபர்களைப் போல தனித்து அதிர்ஷ்டம் தரும் வல்லமை பாபர்களான சனிக்கும், செவ்வாய்க்கும் கிடையாது.

துலாம் லக்னத்திற்கு லக்னத்தில் தனித்து உச்சம் பெற்று, சுபத்துவமோ, சூட்சும வலுவோ பெறாத சனி, தனது தசையில் சாதாரண வாழ்வையே அளிப்பார். லக்னத்தோடு சம்பந்தப்பட்டு வலிமை பெறும் சனி, உயரம் குறைந்த தன்மையையும், பிடிவாத குணத்தையும், தன்னைச் சுற்றி உள்ளவர்களோடு ஒத்துப் போகாமல் குதர்க்கவாதம் பேசுபவர்களையும், ஒன்றுமில்லாத தன்னைப் பற்றி பெரிதாக நினைப்பவர்களையும் உருவாக்குவார்.

அதேபோல செவ்வாயும் உச்ச பலமோ, ஆட்சி பலமோ மட்டும் பெற்று, லக்னத்தோடு சம்பந்தப்பட்டால் அந்த நபர் வீரம் என்ற பெயரில் குற்றச் செயல்களை செய்பவராக இருப்பார். ஆயுதங்களை கையாள்வதில் விருப்பம் உள்ளவராகவும், முன்யோசனையில்லாமல் அசட்டுத் துணிச்சலுடன் கூடிய செயல்களைச் செய்பவராகவும், கடுமையான கோபக்காரனாகவும், முரடனாகவும் இருப்பார். உச்சபங்கம், மறைவு பெறுதல், அல்லது சுபத்துவம், சூட்சும வலு ஆகியவை மட்டுமே இந்த குணங்களை மாற்றும். பாபத்துவம் இக் குணங்களைக் கூடுதலாக்கும்.

உச்சம் பெறும் அனைத்துக் கிரகங்களுமே நன்மை செய்யும் என்றால் நமது ஞானிகள் சுபர், அசுபர்கள் என கிரகங்களைப் பிரித்திருக்க வேண்டிய அவசியமே இல்லையே...!

ஒரு கிரகம் ஸ்தான பலம் எனும் ஆட்சி, உச்சம் பெறுகிறது என்றால் அதன் செயல்பாடுகள் அதாவது  அந்தக் கிரகத்தின் காரகத்துவங்கள் வலிமை பெறுகின்றன என்று அர்த்தம். அந்த நிலையில் மனிதனுக்கு தேவையான எந்த வித நல்ல   காரகத்துவங்களும் இல்லாமல், வெறுமனே வறுமை, பிணி, தரித்திரம், கடன், அடிமை வேலை, உடல் ஊனம் ஆகியவற்றை மட்டுமே தன் செயல்பாடுகளாகக் கொண்ட சனி, ஸ்தான வலுப்பெற்றால் உங்களுக்கு எதைத் தருவார்? அதைப்போலத்தானே செவ்வாயும்?

(சனியிடம் ஆயுள் பலம் இருக்கிறதே என்று நீங்கள் என்னைக் கேட்கலாம். அதுவும் தவறுதான். அதைப் பற்றிய விளக்கத்தை ஏற்கனவே “சனி எப்படி ஆயுளுக்கு காரகன் ஆனார்” என்ற தலைப்பில் தனியாக விளக்கியிருக்கிறேன்.)

ஜாதகத்தில் செவ்வாய் தனித்து வலிமை பெற்று, லக்னம் அல்லது ராசியோடு தொடர்பு கொள்ளும் நிலையில், ஒருவருக்கு, செவ்வாயின் செயல்பாடுகளான முரட்டுத்தனம், ஆயுதங்களை கையாளுவதில் விருப்பம், வன்முறையில் நாட்டம், அசட்டுத் துணிச்சல், இரக்கமற்ற அதிகாரம், கடின மனம், முன்யோசனையின்றி எதையாவது செய்து சிக்கலில் மாட்டிக் கொள்ளுதல் போன்ற குணங்களே இருக்கும்.

மேஷ லக்னத்திற்கு பத்தாமிடத்தில் உச்சமும், திக்பலமும் அடைந்து எவ்வித சுபர் பார்வையும் சேர்க்கையும், இல்லாமல் தனித்திருந்து செவ்வாய் லக்னத்தைப் பார்க்கும் நிலையில், ஜாதகர் கொடூர மனம் உள்ளவராக இருப்பார். கண்டிப்பு எனும் பெயரில் மூர்க்கத்தனம் இருக்கும். கருணையும், மனிதநேயக் குணங்களும் இன்றி மகா கோபக்காரராக ஜாதகர் இருப்பார். செவ்வாய் வக்ரமடைந்து, வேறு வகையில் பலவீனம் அடைந்திருந்தால் மட்டுமே இந்த பலன்கள் மாறும்.

நமது மூலநூல்கள் செவ்வாய் வலுப் பெற்றவனை, சேனாதிபதி, மகாவீரன், யுத்தத்தில் எதிரிகளின் தலைகளை பந்தாடுபவன், கரடு முரடானவன், அதிகாரம் செய்பவன் என்றுதான் சொல்கின்றனவே தவிர, இவன் நல்லவன், இளகிய மனம் உடையவன், வசதி படைத்தவன், சொகுசு வாழ்க்கை வாழ்பவன், அன்பே வடிவானவன் என்று சொல்லவே இல்லையே...!

சனி ஸ்தான பலம் மட்டுமே பெற்று தனித்து உச்சம், ஆட்சியாக இருக்கும் நிலையில் கடுமையான பலன்களைச் செய்வார். அவரின் காரகத்துவங்களான வறுமை, தரித்திரம், நோய், அடிமை நிலை, கடன், உடல் ஊனம், அழுக்கான இடங்களில் வேலை போன்றவைகளை வலுவாகத் தருவார்.

உச்ச நிலையில் வக்ரம் பெறுவது, சுபத்துவம், சூட்சும வலு போன்றவை மட்டுமே மேற்கண்ட பலன்களை மாற்றும். உச்சத்தில் வக்ரம் என்பது ஒருவிதமான பலமிழந்த நிலையைக் குறிக்கும் என்பதால், சனியின் கொடிய பலன்கள் இல்லாமல் அதற்கு நேர்மாறான பலன்கள் இருக்கும்.

மேஷத்தில் நீச்சம் பெறும் சனி, சுபத்துவம் அடைந்தால், சிறந்த சொகுசு வாழ்க்கையை அளிப்பார். எவ்வித சுப சம்பந்தமின்றி தனித்து நீச்சம் பெற்றால் கூட தனது கொடிய காரகத்துவங்களை தரும் சக்தியின்றி அதற்கு நேர்மாறான கடனற்ற, வறுமையற்ற, நோயில்லாத வாழ்க்கையை சனி அளிப்பார்.

சரி..

சனியும் செவ்வாயும் ஆட்சி, உச்சம் பெறுவது எதற்காக? அவர்கள் ஸ்தான பலம் மட்டும் பெற்றால் நல்ல பலன்களே இல்லையா என்று கேட்பீர்களேயானால், ஜாதகத்தில் அவர்களுடைய ஆதிபத்தியங்கள் நிச்சயம் வலிமை பெறும். அவர்களுடைய தசையில் அவர்களின் கொடிய காரகத்துவங்கள் நடைபெறும் என்றாலும், ஜாதகரின் எந்த ஆதிபத்தியங்களுக்கு அவர்கள் உரியவர்களோ அந்த இடங்கள் மேம்படும்.

உதாரணமாக மேஷ லக்னத்திற்கு பத்தில் உச்சம் பெற்ற செவ்வாய் தசையில் நல்ல பலன்கள் கிடைக்காவிட்டாலும், அவர் லக்ன, அஷ்டமாதிபதி என்பதால் உறுதியான உடலும்,  நீடித்த ஆயுளும் இருக்கும். தனித்த செவ்வாய் தசையில் அதிர்ஷ்டங்கள் கிடைக்காது. ஜாதகர் உடற்பயிற்சியில் விருப்பமாகி உடலைப் பேணுவதும், ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுபவராகவும் இருப்பார்.

துலாத்திற்கு, லக்னத்தில் உச்சம் மட்டும் பெற்ற சனியின் தசையில், ஜாதகர் அதிர்ஷ்டங்களை அடைய மாட்டார். சனி 4, 5 ஆம் இடங்களுக்கு உரியவர் என்பதால் சனி தசையில் ஜாதகரின் புத்திரர்கள், கல்வி, தாயார் வழியில் ஜாதகருக்கு நல்ல பலன்கள் இருக்கும். அவ்வளவே...!

இன்னுமொரு முக்கிய சூட்சுமமாக, ஒரு ஜாதகத்தில் பாபக் கிரகங்கள் பலம் பெறுவது எவ்வாறு நன்மை செய்யும் என்றால், நமது ஜோதிட விதிகளின்படி ஒரு தசை நன்மையான பலன்களைத் தர வேண்டும் எனில் அந்த தசாநாதனுக்கு வீடு கொடுத்த கிரகம் வலிமை அடைய வேண்டும் என்பது முக்கியமானது. 

அதன்படி சனி, செவ்வாயின் ராசிகளான மேஷம், விருச்சிகம், மகர, கும்பங்களில் அமர்ந்து தசை நடத்தும் ஒரு கிரகம் நற்பலன் தர வேண்டும் என்றால் அந்தக் கிரகத்திற்கு வீடு கொடுத்த சனியும், செவ்வாயும் வலுப் பெற வேண்டும்.

உதாரணமாக  ராகு, சர ராசிகளில் (மேஷம், மகரம்) மூன்று, பதினொன்றாமிடங்களில் இருக்கும்போது, ராகுதசை மிகப் பெரிய பணவரவை அளிப்பதற்காக, ராகு இருக்கும் வீட்டின் அதிபதிகள் வலுப்பெற வேண்டும் என்ற நிலையில் சனியும், செவ்வாயும், உச்ச வலுப் பெற்றே ஆக வேண்டும்.

அந்த நிலையில் கூட எனது சூட்சும வலுக் கோட்பாட்டின்படி அவர்கள் எட்டு, பனிரெண்டாமிடங்களில் மறைந்துதான் உச்சம் பெறுவார்கள். அப்போதுதான் ராகு தசை முழுக்க நன்மை செய்யும். இந்த அமைப்பை நான் அரசியல்வாதிகள் அல்லது அவர்களை அண்டிப் பிழைப்போரின் ஜாதகங்களில் பார்த்திருக்கிறேன்.

அதாவது விருச்சிக லக்னத்திற்கு மூன்றான மகரத்தில் (சர ராசி) ராகு அமர்ந்து, ராகுவுக்கு வீடு கொடுத்த சனி, துலாத்தில் லக்னத்திற்கு பனிரெண்டில் மறைந்து உச்சம் பெற்றும், மிதுனத்திற்கு பதினொன்றான மேஷத்தில் ராகு இருந்து, அவருக்கு இடமளித்த செவ்வாய், மகரத்தில் எட்டில் மறைந்து உச்சம் பெறும் நிலையில் ராகுதசை மறைமுகமான தனயோகத்தை அளிக்கும்.

இந்நிலையில் ராகு, விருச்சிகத்திற்கு பாக்கியாதிபதியான சந்திரனின் சாரமும், மிதுனத்திற்கு ஐந்துக்குடைய சுக்கிரனின் சாரமும் பெற்றிருப்பார். ராகு யோகம் தரும் இடங்களாக மூலநூல்களில்  சொல்லப்படும் ஆமேடம், எருது, சுறா, நண்டு, கன்னியும், 3, 11 ம் ஸ்தானங்களும் இதில் அடங்கும்.  

சனி, செவ்வாயின் உச்ச நிலைகள் இது போன்ற நிலைகளுக்கு மட்டும்தான் பயன்படுமே தவிர அவர்கள் நேரிடையாக அதிர்ஷ்டம் தருவதற்கு அல்ல.

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888,044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

(ஆக 17-23, 2011 திரிசக்தி ஜோதிடம் வார இதழில் வெளிவந்தது)