ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888
ஒரு வாசகி,
கேள்வி.
மாலைமலர் பத்திரிகையும், அதன் ஊழியர்கள் அனைவரும் வளமும் நலமும் பெற ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். கணவர் 15 வருடங்களாக வெளிநாட்டில் இருக்கிறார். அடிக்கடி வேலை போய் விடுகிறது. பெரிய சேமிப்பு ஏதும் இல்லை. தற்போது கணவர் அங்கே மிகுந்த மனவேதனையுடன் இருக்கிறார். எங்கே போய் ஜாதகத்தை காட்டினாலும் இன்னும் ஐந்து ஆண்டுகள் அவர் வெளிநாட்டில்தான் இருக்க வேண்டும். நான்காவது சனி தசை நல்லதல்ல என்கிறார்கள். கணவருக்கு எப்போது நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்? எப்போது தாய் நாடு திரும்பலாம்? திரும்பி வந்தால் நல்லபடியாய் தொழில் செய்ய முடியுமா? இனிவரும் காலங்களிலாவது சேர்ந்து வாழ முடியுமா? எனக்கு ஜோதிடம் நுணுக்கமாக படிக்க வாய்ப்பு கிட்டுமா?
பதில்.
(தனுசு லக்னம், துலாம் ராசி, 4ல் சனி, ராகு, 5ல் சூரி, சுக், 6ல் புத, செவ், 9ல் குரு, 10ல் கேது, 11ல் சந். 10-5-1968 இரவு 10 மணி, சாத்தூர்.)
உனக்கு தனுசு ராசி, பூராடம் நட்சத்திரமாகி உன்னுடைய சொந்த நட்சத்திரத்திலேயே தற்போது சனி, ஜென்மச் சனியாகப் போய்க் கொண்டு இருக்கிறார். ஒரு பெண்ணிற்கு அஷ்டம, ஜென்மச்சனி போன்ற சாதகமற்ற கோட்சார பலன்கள் நடக்கும் நிலையில் அவளது ஆதார விஷயங்களான கணவன், குழந்தைகள் பெயரில் மன வருத்தங்களும் வேதனைகளும் இருக்கும். அந்த அமைப்பின்படி இப்போது கணவரை நினைத்து நீ கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பதால், உன்னுடைய கணவருக்கு வரும் தீபாவளி வரை நல்ல வேலை கிடைக்காது. அதுவரை எது கிடைத்தாலும் செய்வது நல்லது.
ஜாதகப்படி இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு அவர் வெளிநாட்டில் தான் இருக்க வேண்டும். 2024 ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் அவர் இந்தியாவிற்கு வர முடியும். அடுத்து வரும் புதன்தசையும் 8க்குடைய பௌர்ணமிச் சந்திரனின் சாரம் பெற்று இருப்பதால் வெளிநாட்டிலேயே நீடித்து வேலை செய்வது நல்லது.
லக்னத்தை லக்னாதிபதி குரு பார்த்து, பௌர்ணமி யோகம் அமைந்து, சுக்கிரனும் செவ்வாயும் பரிவர்த்தனையான யோக ஜாதகம் உன் கணவனுடையது. தற்போது ராகுவன் இணைவால் பாபத்துவம் பெற்ற சனியின் தசை நடப்பதால் கஷ்டங்கள் இன்னும் ஐந்து வருடங்களுக்கு நீடித்துத்தான் தீரும். நான்காவது சனி தசை நல்லது செய்யாது என்பது போன்ற பொதுப்பலன்களை நம்ப வேண்டாம். இது போன்ற பொதுவானவைகளை நான் ஒருபோதும் சொல்வதில்லை. அடுத்து நடக்க இருக்கும் குருவின் புக்தியும் தசாநாதனும், புக்தி நாதனும் 6, 8 ஆக இருப்பதால் நல்ல பலன்களை செய்யாது. ஐந்து வருடம் பொறுமையாக இருப்பது நல்லது. அடுத்த நடக்கும் புதன் தசை பரிவர்த்தனை பெற்ற சுக்கிரனின் வீட்டில் இருப்பதாலும், முழுமையான சந்திர அதி யோக நிலையில் இருப்பதாலும் நல்ல பலன்களைத் தரும். உன்னுடைய ஜாதகப்படி சந்திரனுக்கு ஏழில் புதன் இருப்பதால் உனக்கு ஜோதிடம் வரும். அதை நுணுக்கமாக படிக்க முடியும். 2024 முதல் நன்றாக, ஒன்றாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.
சம்சம்மாள் பீவி, கோரிப்பாளையம்.
கேள்வி.
பேரன் பள்ளியில் சேர்ந்த நாள் முதல் ஜீரோவாகத்தான் இருக்கிறான். படிப்பும், கல்வியும் வரவே இல்லை. எதிர்காலத்தில் படிப்பு சார்ந்த வேலைக்கு செல்வானா அல்லது தொழில் செய்வானா என்று புரியவில்லை. அவனது தந்தை அவன் மேல் பாசமும் அன்பும் இல்லாமல் எந்நேரமும் அடித்து துன்புறுத்துகிறார். கடும் சொற்களால் திட்டுகிறார். தந்தையின் மனம் மாறுமா? அவனது எதிர்காலம் எப்படி என்று என் மனம் வேதனைப்படுகிறது. தொழில் செய்வான் என்றால் எந்தத் தொழிலில் பழக்கம் ஏற்படுத்தலாம் என்பதை தயவு கூர்ந்து சொல்லவும்.
பதில்.
(துலா லக்னம், துலா ராசி, 1ல் சுக், சந், செவ், 3ல் குரு, 4ல் ராகு, 10ல் கேது, 11ல் சனி, 12ல் சூரி, புத, 1-10-2008 காலை 7-35 மதுரை)
“படித்தவன் பாட்டைக் கெடுத்தான், எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்” என்று கிராமப்புறங்களில் ஒரு பழமொழி இருக்கிறது. படித்தவர்கள் அனைவரும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதில்லை. படிக்காதவர்கள் அனைவரும் தோற்றுப் போய் விடுவார்கள் என்பதும் இல்லை. உங்கள் பேரனுக்கு புதன் உச்சம் என்றாலும், வக்கிர நிலையில் அமர்ந்து புதனுக்கு இருபுறமும் சனி செவ்வாய் அமர்ந்த நிலையில், கல்வியைக் குறிக்கும் நான்காமிடத்தில் ராகுவும் அமர்ந்து, இளம் வயதில் வரக்கூடாது என்று நான் அடிக்கடி செல்லும் ராகுவின் தசையும் இப்போது. நடக்கிறது.
ஜாதகப்படி உங்கள் பேரனுக்கு படிப்பு அறிவு இல்லை, பட்டறிவு தான் உண்டு. செவ்வாய் சனி இருவரும் சுபத்துவம் அடைந்திருப்பதால் மெதுவாக செய்யும் இயந்திர தொழில் அவருக்கு பொருந்தும். நிதானமாக செய்யக்கூடிய வேலைகளில் அவர் கெட்டிக்காரராக இருப்பார். அவருக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என்பதை 15வயதில் முழுமையாக கண்டு பிடித்து விட முடியும். 34 வயதிற்கு பிறகு குரு பார்த்த சனி தசை, அதனை அடுத்த பாக்கியாதிபதி புதன் தசை என யோக தசைகளை அமைவதால் எதிர்காலத்தில் படித்தவர்களை விட உங்கள் பேரன் நன்றாகவே இருப்பார். சிம்மத்தில் சனி அமர்ந்து, ஒன்பதாம் அதிபதியும், சூரியனும் 12-ல் மறைவதால் தந்தையின் ஆதரவு இவருக்கு குறைவுதான். அதேநேரத்தில் எவருடைய உதவியும் இன்றி உங்கள் பேரன் தானாகவே, தன்னுடைய சொந்த முயற்சியால் முன்னேறி நன்றாக இருப்பார். வாழ்த்துக்கள்.
கற்பகம், கூடுவாஞ்சேரி.
கேள்வி.
மகனுக்கு முதல் திருமணம் நிச்சயித்து பல்வேறு காரணங்களால் நின்றுவிட்டது. ராகு தசை ஆரம்பிப்பதற்குள் திருமணம் செய்ய வேண்டும் என்று ஜோதிடர்கள் சொன்னதால் தீர விசாரிக்காமல் கடந்த ஆவணியில் திருமணம் செய்து விட்டோம். பெற்றோர் இல்லாத பெண்ணிற்கு பெரியப்பாதான் திருமணம் செய்து வைத்தார். தாய் தகப்பன் இல்லாதவள் அனுசரித்து நடப்பாள் என்று தப்புக்கணக்கு போட்டு விட்டோம். இவள் குடும்பத்திற்கு ஏற்ற பெண்ணாக இல்லை. மிகவும் பிடிவாதம் கொண்டவளாக இருக்கிறாள். என் மகனும் கொஞ்சம் கோபக்காரன்தான். கடந்த பிப்ரவரியில் நடந்த சண்டையில் மகன் சில வார்த்தைகள் விட்டுவிட்டான். மருமகள் வீட்டை விட்டு வெளியேறி விடுதியில் தங்கி வேலைக்கு செல்கிறாள். மகனும் பலமுறை மன்னிப்பு கேட்டு விட்டான். நாங்கள் சொல்லியும் அவள் கேட்கவில்லை. மாறாக ஒரு வருடமானதும் விவாகரத்து தந்து விடுவதாக சொல்லுகிறாள். மகனுக்கும் எங்களுக்கும் விவாகரத்தில் விருப்பமில்லை. மிகுந்த வேதனையில் தூக்கம் இல்லாமல் இருக்கிறோம். மகனுக்கு என்ன நடக்கும்? ஒன்று சேர்வார்களா? மருமகள் மனம் திருந்தி குடும்பப் பெண்ணாக நடக்க வழி உள்ளதா? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா?
பதில் :
(கணவன் 4-11- 1989 மாலை 4-2 ஆத்தூர், மனைவி 2-7-1994 காலை 11-45 நாகை)
அடித்தாலும் பிடித்தாலும் கணவனின் காலுக்கு உள்ளேயே ஒரு பெண் கிடந்த காலம் மலையேறி விட்டது என்பதை மாமியாராகிய நீங்கள் உணரவில்லை என்பதுதான் இங்கே துரதிர்ஷ்டம். மருமகள் மனம் மாறி வருவாளா என்று கேட்பதற்கு பதிலாக, மனம் திருந்தி வருவாளா என்றுதானே கேட்கிறீர்கள்? தவறு செய்தது உங்கள் மகன் என்ற போது உங்கள் மகன் தானே மனம் திருந்த வேண்டும்? பெண் என்றைக்கு சம்பாதிக்க ஆரம்பித்தாளோ, அன்றைக்கே தெளிவாக சிந்திக்கவும் ஆரம்பித்து விட்டாள், தன்னையும், தனக்குப் பிறக்கும் குழந்தைகளையும் இவன் நன்றாக பாதுகாப்பான் என்கின்ற ஒரே காரணத்தினால்தான், ஒரு ஆணை நம்பி ஒரு பெண் சமூக நிர்ப்பந்தத்திற்காக திருமணம் என்ற பந்தத்தில் இணைய வேண்டி இருக்கிறது.
உண்மையைச் சொல்லப்போனால் திருமணம் தேவையில்லை என்கின்ற ஒரு கசப்பான கலாச்சாரத்தை நோக்கி சமுதாயம் சென்று கொண்டிருக்கிறது. அடுத்த நூற்றாண்டில் திருமணம் என்ற வார்த்தை இருக்கவே இருக்காது. சேர்ந்து வாழ்வோம், பிடித்திருந்தால் நீடிப்போம். இல்லையென்றால் பிரிவோம் என்பதுதான் இனிமேல் இந்தியாவிலும் வரப்போகிறது. ஒரு பெண் படிக்கவும் வேண்டும். வேலைக்கும் செல்ல வேண்டும், குடும்பப் பெண்ணாகவும் நடந்து கொள்ள வேண்டும், அதாவது வேலைக்கும் சென்று விட்டு, வீட்டிலும் வந்து சமைத்து, குழந்தைகளை கவனித்து, குடும்பப் பெண்ணாக நடந்து கொள்ள வேண்டும் என்றால் எப்படி அம்மா? மாமியாராகிய நீங்களும் ஒரு பெண் தானே? ஒரு பெண்ணை பெண் தானே புரிந்து கொள்ள முடியும்?
மகனுக்கு தனுசு ராசி, பூராடம் நட்சத்திரமாகி அவரது நட்சத்திரத்திலேயே சனி சென்று கொண்டிருப்பதால் வரும் அக்டோபர் மாதம் 12 ஆம் தேதிவரை இவர்கள் இருவரும் இணைவதற்கு வாய்ப்பில்லை. அதே நேரத்தில் இவர்கள் நிரந்தரமாக பிரிவதற்கும் வாய்ப்பில்லை. கன்னியா லக்னத்தில் பிறந்து புதன் 10ல் ஆட்சி பெற்ற உங்கள் மருமகள் எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்ளும் புத்திசாலி என்பதால், செப்டம்பர் மாதத்திற்கு பிறகு ஒரு நாள் நீங்கள் மட்டும் தனியாக சென்று மருமகளை சந்தித்துப் பேசி பிறகு உங்கள் மகனை சந்திக்க வையுங்கள். இருவருக்கும் விவாகரத்து அமைப்பில்லை. ஒரு பெண் என்பவள் எப்படிப்பட்டவள், அவளுக்கு என்ன பிடிக்கும், எது பிடிக்காது, பணம் என்பது என்ன என்பதை உணர்த்தும் காலகட்டம் உங்கள் மகனுக்கு நடந்து கொண்டிருப்பதால், இவைகள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்து அடுத்த வருடம் முதல் மனைவியுடன் மகிழ்வாக இருப்பார். பரிகாரங்களுக்கும் அவசியம் இல்லை. வாழ்த்துக்கள்.
(28.05.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.