ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888
தமிழ்ச்செல்வன், சென்னை- 97
கேள்வி.
மூன்று ஆண்டுகளாக தங்களது மாலைமலர் கட்டுரைகள், காணொளிகளின் ரசிகன் நான். கடந்த கோவை ஜோதிட பட்டிமன்றத்தில் ஒருவர் ஐந்தாமிடத்தில் ராகு கேதுக்கள் மற்றும் 5ல் குரு இருந்தால் சொந்தப் பிள்ளை இருக்காது, தத்துப்பிள்ளைதான் என்று பேசியதைக் கேட்டது முதல் என் தூக்கம் போய்விட்டது. என் ஜாதகத்தில் 5ல் குரு, கேது இருப்பதால் அவர் சொன்னது, எனக்கே சொன்னது போல உள்ளது. நீங்கள் சொல்லும் விதிவிலக்குகளை எங்கே எப்படிப் பொருத்திப் பார்ப்பது என்று எனக்குத் தெரியவில்லை. ஜாதகப்படி என் ரத்தத்தில் பிறக்கும் சொந்தப் பிள்ளை எனக்கு உண்டா அல்லது தத்துப் பிள்ளைதானா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். தயவு செய்து உண்மையை மறைக்க வேண்டாம். ஒருவேளை எனக்கு குழந்தை உண்டு என்றால் திருமணம் எப்போது செய்யலாம்? சனி புத்தியிலா, புதன் புத்தியிலா? தாங்களும் ஒரு பெண்ணிற்கு தந்தை என்பதால் ஒரு பெண்ணின் வாழ்க்கையை பாழ் செய்ய விரும்பாத என் எண்ணத்தை புரிந்து கொண்டு உண்மையை மட்டும் சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன். அடிக்கடி லண்டனுக்கு தற்காலிகமாக சென்று வருகிறேன். நிரந்தரமாக வசிக்கும் வாய்ப்பு உள்ளதா?
பதில்.
(மீன லக்னம், மேஷ ராசி, 1ல்சுக், 2ல் சந், 3ல் செவ், 5ல் குரு,கேது, 11ல் சனி, ராகு, 12ல் சூரி, புத, 21-2-1991 காலை 8-15 சேலம்)
கத்தியை வைத்து கழுத்தையும் வெட்டலாம், ஆப்பிளையும் நறுக்கலாம் என்பது எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும். ஜோதிட பலன் என்பது எப்படி விதிகளோடு சொல்லப்பட வேண்டும் என்று மாலைமலரில் ஒரு விளையாட்டுப் போல எழுத ஆரம்பித்தது, இன்று உன்னைப் போல ஆர்வம் உள்ளவர்களும் அதை தலைகீழாகப் புரிந்து கொண்டு எனக்கு கடிதங்கள் எழுதுவது அதிகமாகிக் கொண்டே வருகிறது. உண்மையில் கேள்வி கேட்டு வரும் கடிதங்களை விட, உன்னைப் போல அரைகுறையாக ஜோதிடத்தை புரிந்து கொண்டு, சந்தேகம் கேட்டு வரும் கேள்விகளே தற்போது அதிகமாக வருகின்றன.
மாலைமலரில் இந்தப் பகுதி ஒரு ஜாதகத்தை எப்படி கணித்துப் பலன் சொல்ல வேண்டும் என்று ஜோதிடத்தை தொழிலாக கொண்டவர்கள் மற்றும் ஜோதிடம் சம்பந்தப்பட்டவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது தானே தவிர, உன்னைப்போன்ற படித்து நல்ல வேலையில் இருக்கும் இளைஞர்களுக்காக அல்ல.
ஒரு விதிக்கு ஆயிரம் விதிவிலக்குகள் இருக்கின்றன. விதியை விட விதிவிலக்குகளே முக்கியம் என்று நான் அடிக்கடி எழுதி வரும் நிலையில், இன்னும் திருமணமாகாத நீ எனக்கு குழந்தை பிறக்குமா, அப்படி குழந்தை பிறக்காது என்றால் திருமணமே செய்து கொள்ளாமல் இருந்து விடவா என்று கேட்கிறாய். பரிகாரம் என்ற பெயரில் சிலர் பயமுறுத்துவதில் தவறே இல்லை.
ஒரு 28 வயது வாலிபன் உடலும், மனமும் “கிண்” ணென்று முறுக்கேறிய நிலையில் இருக்க வேண்டாமா? உனக்கு பிள்ளை இல்லை என்று ஒருவன் சொன்னால் கூட “அடப் போய்யா... இப்போதே திருமணம் செய்து வை. பத்து நாளில் குழந்தை பெற்றுக் காட்டுகிறேன்” என்று சவால் விட்டு பேச வேண்டாமா? என்ன இளைஞன் நீ?
வாழ்க்கையில் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது. வல்லவனாகவும் இருக்க வேண்டும். “களவும் கற்று மற” என்று அவ்வை சொன்னது ஒரு இளைஞனுக்காகத்தானே தானே தவிர, இறைவனுக்காக அல்ல. பெண் சுகத்தைக் கொடுக்கும் கிரகமான சுக்கிரன் உச்சம் பெற்ற நீ இன்னும் திருமணமாகாதவனாக இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக இன்னும் நீ பிரம்மச்சாரி இல்லை.
குழந்தை பாக்கியத்திற்கு தேவையானது தாம்பத்தியத்தில் ஈடுபடும் ஆர்வமும், அதற்கான தகுதியும்தான். ஜோதிடப்படி இரண்டும் உன்னிடம் முழுமையாகவே இருக்கிறது. யாரோ ஒருவர் மேடையில் பேசினார் என்பதற்காக, அதை அரைகுறையாக புரிந்து கொண்டு, உன்னுடைய ஜாதகத்தோடு ஒப்பிட்டு பயந்து கொண்டிருந்தால், இந்த விஷயம் மட்டுமல்ல, எந்த விஷயத்தையுமே வாழ்க்கையில் நீ எதிர்கொண்டு வாழ முடியாது. முதலில் தன்னம்பிக்கை என்றால் என்னவென்று கற்றுக் கொள். முடியாத ஒன்றைக் கூட முடிய வைத்துக் காட்டுவதுதான், படியாத ஒன்றைக் கூட படியவைத்து காட்டுவதுதான் இளமையின் வேலை.
ஜாதகப்படி புத்திர ஸ்தானாதிபதியான ஐந்தாம் வீட்டிற்கு அதிபதி சந்திரன், சனி, செவ்வாய், ராகு போன்ற பாப கிரகங்களின் தொடர்பினைப் பெறாமல், இரண்டாம் வீட்டில் வளர்பிறை நிலையில் அமர்ந்து, புத்திரகாரகன் குரு, ராகுவுடன் இணையாமல் கேதுவுடன் ஐந்தில் இருப்பதால், உனக்கு ஆண், பெண் என இரண்டு குழந்தைகளும் உண்டு. முதல் குழந்தை ஆண் குழந்தை.
ஐந்தில் குரு தனித்து இருப்பதுதான் காரகோ பாவ நாஸ்தி நிலையில் குழந்தை பாக்கியத்தை தாமதப்படுத்தும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இங்கே குரு, கேதுவுடன் சேர்ந்து இருப்பது மிகச் சிறப்பான கேள யோகம். இந்த அமைப்பு உன்னுடைய 40 வயதில் வரும் குரு தசையில் சிறப்பான பலன்களைத் தரும். ராசிக்கு இரண்டில் செவ்வாய், 7க்குடையவன் 12ல் மறைவு என்ற அமைப்பு உள்ளதால், உனக்கு ராகு தசை புதன் புக்தியில் 30 வயதில் திருமணம் நடக்கும். எட்டுக்குடையவன் உச்சம், 12க்குடையவன் ஆட்சி என்ற நிலையில், இருவரையும் உச்சம் பெற்ற குரு பார்ப்பதால், திருமணத்திற்கு பிறகு உனக்கு நீடித்த வெளிநாட்டு வாழ்க்கை அமையும். அடுத்தடுத்து சர ராசியில் அமர்ந்த கிரகங்களின் தசைகள் நடக்க உள்ளதால், நீ நிரந்தரமாக ஒரு மேற்கு நாட்டில் செட்டிலாவாய். வாழ்த்துக்கள்.
(28.05.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.