adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
பாதகாதிபதி பற்றிய ரகசியங்கள்..! (A-002)

#adityagurujitamilarticle

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888

ஜோதிடத்தில் உள்ள ஏராளமான ரகசியங்களில் ஒன்று பாதகாதிபதி கிரகம். “மிகப் பெரிய கொடுமை” களைத் தரக் கூடியவர் என்ற அர்த்தத்தில் இந்தக் கோள் “பாதகாதிபதி” என்று அழைக்கப்படுகிறது.


சர லக்னங்களுக்கு 11-க்குடையவரும், ஸ்திர லக்னங்களுக்கு 9-க்குடையவரும், உபய லக்னங்களுக்கு 7-க்குடையவரும் பாதகாதிபதியாக வருவார்கள்.

மேஷம்ரிஷபத்திற்கு – சனியும்

மிதுனம்கன்னிக்கு – குருவும்

கடகம்கும்பத்திற்கு – சுக்ரனும்

சிம்மம்மகரத்திற்கு – செவ்வாயும்

தனுசுமீனத்திற்கு – புதனும்

துலாமிற்கு – சூரியனும்

விருச்சிகத்திற்கு – சந்திரனும்

முறையே பாதகாதிபதி ஆவார்கள்.

ஸ்திர லக்னங்களுக்கு (ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம்) பாக்யாதிபதியே (ஒன்பதுக்குடையவர்) பாதகாதிபதியாக வருவார்.

யோகத்தைச் செய்யக் கூடிய ஒன்பதுக்குடையவனே, பாதகாதிபதியாக வருவதால் யோகத்தைத் தருவாரா? பாதகம் செய்வாரா? என்று கணிப்பதில் மிகப் பெரிய சிரமம் ஏற்படும். அதே நேரத்தில் எல்லோருக்கும், எல்லா நிலைகளிலும் பாதகாதிபதி கிரகம்  கொடுமைகளைச் செய்து விடுவதில்லை. ஜோதிடத்தில் உள்ள கணிக்கச் சிக்கலான நிலைகளில் ஒன்றாக இந்த பாதகாதிபதியையும் சொல்லலாம்.

பாதகாதிபதி வலுவான இடங்களில் அமர்ந்து, ஸ்தானபலம் பெற்று, அதிக சுபத்துவம் பெறுவது நல்லதல்ல. அப்படி வலுவானால் முதலில் அனைத்து நல்லவைகளையும் நடத்தி, முடிவில் பெரும் பாதகத்தை செய்வார். அதாவது வலுப் பெற்ற பாதகாதிபதி, மரணம் அல்லது மரணத்துக்கு நிகரான துன்பத்தை தனது தசையில் செய்வார்.

அதேநேரத்தில் இங்கே கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக, பாதகம் என்பதை நீங்கள் “மிகப் பெரிய கொடுமை” என்கின்ற அர்த்தத்தில் பார்க்க வேண்டும்.

ஒரு கொலை நடக்கிறது, அல்லது கொள்ளை நடக்கிறது என்பது தீமை. ஆனால் ஒரே இடத்தில் கொலையும் நடந்து, அதில் கொள்ளையும் அமைந்து, அங்கே கற்பழிப்பும் இருக்குமாயின் அது பாதகம் ஆகும். இது எல்லோருக்கும் நடந்து விடாது. மிகவும் அபூர்வமானது. அதுபோல பாதகாதிபதி எப்பொழுதும், எல்லோருக்கும் கொடுமைகளை செய்வது இல்லை. மிக அபூர்வமாக லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே “அதிக சுபத்துவம்” பெற்ற நிலைகளில் கொடும் தீமைகளைச் செய்கிறார்.

பாதகாதிபதி தசையில் திருமணமாகி, ஆறே மாதங்களில் உயிரிழந்த ஒருவரின் ஜாதகத்தையும், ஏழாமிடம் வழுவிழந்ததால் மாங்கல்யம் இழந்த அவர் மனைவியின் ஜாதகத்தையும் கீழே உதாரணமாகக் காட்டியிருக்கிறேன்.

இந்த ஜாதகருக்கு பாதகாதிபதி சந்திரனின் தசையில், அஷ்டமாதிபதியாகிய புதனின் புக்தியில் திருமணமாகி, அதேபுக்தியில் ஆறு மாதங்களுக்குள் திடீரென மரணமடைந்தார்.

விருச்சிக லக்ன பாதகாதிபதி சந்திரன், இங்கே வளர்பிறை நிலையில், மாரக ஸ்தானமான இரண்டாமிடத்தில், குரு மற்றும் சுக்கிரனின் பார்வைகளை ஒரே நேரத்தில் பெற்று, குருவின் சுப வீட்டிலும் அமர்ந்து அதிக சுபத்துவமானார். இங்கே சந்திரனுக்கு வேறு எந்த பாபிகளின் தொடர்போ, இணைவோ இல்லை.

ஜாதகருக்கு சந்திர தசை ஆரம்பித்ததுமே நல்ல பலன்கள் நடைபெற ஆரம்பித்தன. படிப்பு முடிந்ததுமே மிகப்பெரிய சம்பளத்துடன் நல்ல கம்பெனியில் வேலை கிடைத்தது. புரமோஷனுக்கு மேல் புரமோஷனும் வந்தது. வீடு வாங்கினார். நிலம் வாங்கினார். அனைவராலும் கொண்டாடப் பெற்றார். புத்திசாலியான மிகவும் ஒழுக்கமான இளைஞர்.

புதன் புக்தியில் இவருக்குத் திருமணமாகியது. புதன் அஷ்டமாதிபதியாயிற்றே... எப்படி திருமணத்தைக் கொடுத்தார் என்ற கேள்வி எழலாம். ராசிக்கு புதன் ஏழுக்குடையவர் என்பதால் திருமணம் தரும் அதிகாரம் பெற்றார்.

திருமணம் முடிந்த ஆறே மாதங்களில் இவர் மரணமடைந்தார். பாதகாதிபதி தசையில், அஷ்டமாதிபதி புக்தியில் இவரது மரணம் நிகழ்ந்தது. புதன் இங்கு லக்னப்படி அஷ்டமாதிபதி என்பதால் தசை, புக்தி நாதர்கள் இருவருமே பாதகத்தை செய்யக் கூடியவர்கள் ஆனார்கள்.

இவருடைய மனைவியின் ஜாதகத்தைப் பார்ப்போம்.

இந்தப் பெண்ணும் மிகப் பெரிய கம்பெனியில் பெரும் சம்பளம் வாங்குபவர்தான். இவருடைய ராகு தசை, செவ்வாய் புக்தியில் திருமணம் நடந்தது.

பொதுவாக ராகு தசை சீராகச் சென்றால் அவரது தசையின் கடைசி புக்திகளான சூரிய, சந்திர, செவ்வாய் புக்திகள் நன்மைகளைச் செய்யாது. பதினைந்து வருடங்கள் நன்றாக யோகம் செய்து வந்த ராகு, கடைசி மூன்று வருடங்கள் சோதனைகளைச் செய்வார். சூரிய, சந்திர, செவ்வாய் மூவரும் லக்ன பாபிகளாக இருந்தால் சிரமம்தான்.

இந்தப் பெண்ணிற்கு மகரம் லக்னமாக அமைந்து, அதன் பாதகாதிபதி செவ்வாய் பாதக ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று வலுவானார். பள்ளிப் பருவத்தில் இந்தப் பெண்ணிற்கு ஆரம்பித்த ராகு தசை ‘ஓஹோ’ வென யோகம் செய்தது. வளர்பிறை சந்திரனின் சுப பார்வை பெற்ற கடக ராகு என்பதால் நன்கு படித்தார். நல்ல சூழ்நிலையில் வளர்ந்தார். குடும்பத்திற்கே ஒரே பெண் என்பதினால் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டார். ராகு தசையில் கேட்டது எல்லாம் கிடைத்தது.

ஆனால் கேந்திர கோணங்களில் இருக்கும் ராகு,கேதுக்கள், தனது தசையில், தானிருக்கும் வீட்டைக் கெடுப்பர் என்பதால், ஏழாம் வீட்டைக் கெடுக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்த ராகு,கேதுக்கள் தகுந்த நேரம் பார்த்து பாதகாதிபதியின் புக்தியில் திருமணத்தை முடித்து அதே புக்தியில், அந்த திருமணத்தைத் துயரமாகவும் ஆக்கி விட்டனர். 

பாதகாதிபதி எந்த இடத்தில் “அதிக” சுபத்துவமாக இருக்கிறாரோ, அந்த இடம் அவரது தசை, புக்திகளில் கெடும். தனுசு, மீன லக்னத்திற்கு சுக்கிரன் எவ்வளவு கெடுதல் செய்கிறாரோ அதைவிட கும்ப லக்னத்திற்கு அதிக வலுவும், சுபத்துவமும் பெற்ற சுக்ரன் கெடுதல்களைச் செய்வார். ரிஷப, துலா லக்னங்களுக்கு குரு செய்யும் கெடுதல்களை விட, மிதுன லக்னத்திற்கு அதிவலுப் பெற்ற குரு துன்பங்களைத் தருவார்.

இன்னொரு ஜாதகத்தைப் பாருங்கள்.

இந்தப் பெண்ணின் சனிதசை, குருபுக்தியில் திருமணம் நடைபெற்று, அதே புக்தியிலேயே கணவனை இழந்தார். கொடுத்துக் கெடுத்தார் குரு. மிதுன லக்னத்திற்கு பாதகாதிபதியான குரு, இரண்டில் உச்சம் பெற்று, சுபரான தனிப்புதனுடன் இணைந்து, அதிக சுபத்துவமாகி மேற்படி பாதகத்தைச் செய்தார்.

இன்னொரு முக்கியமான விஷயத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.

நமது மூலநூல்களில் அரிய பல விஷயங்கள் முழுமையாகச் சொல்லப்படாமல், உங்களுடைய கணிப்பிற்கும், யூக அறிவுக்கும் மட்டுமே தென்படுமாறு, மறைபொருளாகச் சொல்லப்பட்டிருக்கும். அதாவது ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு உன்னதமான வாக்கியம் சொல்லப்பட்டிருக்கிறது என்றால், இன்னொரு உயர்ந்த கருத்து அதனுடன் சொல்லப்படாமல் தொக்கி நிற்கிறது என்று அர்த்தம்.

உதாரணமாக இயற்கைச் சுபர்கள், கேந்திரங்களுக்கு அதிபதிகளாக வரக்கூடாது என்றால், இயற்கைப் பாபர்கள் திரிகோணங்களுக்கு அதிபதிகளாக வரக்கூடாது என்ற அர்த்தம் அங்கே ஒளிந்து கொண்டு இருக்கிறது. ஒரு ஜாதகத்தில் குரு, சுக்கிரன் போன்ற சுபர்கள் வலுவடைய வேண்டும் என்றால், சனி, செவ்வாய் போன்ற பாபர்கள் வலுவடைவது நல்லதல்ல என்ற அர்த்தமும் அங்கே மறைந்திருக்கிறது.

நமது ஞானிகள் ஒன்றும் கணக்கு வாத்தியார்கள் அல்ல.. உங்களின் காதைப் பிடித்துத் திருகி அனைத்து ஜோதிட ரகசியங்களையும் சொல்லித் தருவதற்கு...

அவர்களுக்கு, அவர்களின் மெய்ஞான அனுபவங்களின் மூலமாக பிரபஞ்சத்திலிருந்து நேரிடையாக கிடைத்த அனேக விஷயங்கள், உங்களின் யூகத்திற்கும், அறிவார்ந்த அனுபவத்திற்கும் மட்டுமே புரிவதற்காக அநேக இடங்களில் கோடிட்டு மட்டும் காட்டப்பட்டிருக்கின்றன.

பாதகாதிபதி விஷயமும் அப்படித்தான். நான் மேலே சொன்ன ஒரு கருத்து பாதகாதிபதி விஷயத்தில் மறைந்திருக்கிறது. அதாவது சுபர்கள் கேந்திரங்களுக்கு அதிபதிகளாகவும், பாபர்கள் திரிகோணங்களுக்கு அதிபதிகளாகவும் வரக்கூடாது என்ற கருத்து மறைமுகமாக பாதகாதிபதிகள் விஷயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

உதாரணமாக கடகம், கும்பத்திற்கு நான்காமிட கேந்திரத்திற்கு அதிபதியாக சுக்கிரனும், ரிஷப, சிம்மத்திற்கு முறையே சனியும், செவ்வாயும் ஒன்பதாமிட பெருங்கோணத்திற்கு அதிபதிகளாகவும் வருவதாலேயே பாதகாதிபதி ஆகிறார்கள்.

அப்படியானால் கடகத்திற்கு, செவ்வாய் ஐந்துக்குடையவராகவும், மிதுனத்திற்கு சனி ஒன்பதுக்குடையவராகவும் ஆவார்களே, அது எப்படி? என்ற கேள்வி வரும்.

அது வேறு சூட்சுமம்...

கடகத்திற்கு செவ்வாய் ஐந்துக்குடையவர் ஆனாலும், அவர் ஐந்தாமிடத்தில் ஆட்சி பெற்றால் யோகம் செய்ய மாட்டார். அவயோகம்தான் செய்வார். ஐந்தாமிடம் கெடும்.

அதற்குப் பதிலாக,

அவர் இயற்கைப் பாபி என்பதாலும், இயற்கைப் பாபிக்கு திரிகோண வீடு ஆட்சியாக அமைந்ததாலும், ஐந்தாமிடத்திற்கு, ஆறாமிடமான (அதாவது தன் திரிகோண வீட்டிற்கு ஆறில் மறைந்து) பெருங் கேந்திரமான பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்றால் மட்டுமே யோகம் செய்வார்.

மிதுனத்திற்கு சனியும் அப்படியே…. ஒன்பதாமிடத்தில் ஆட்சி பெற்றால் ஒன்பதாமிடம் பலவீனமாகும். நற்பலன் கிடைக்காது. ஒன்பதுக்கு எட்டான நான்காம் கேந்திரத்தில் அமர்ந்து அவர் நட்பு நிலை பெற்றால் நல்லது.

இதில் குறிப்பாக உபய லக்கினங்களுக்கு குருவும், புதனும் கெட வேண்டும் என்று சொல்வதும் அவர்கள் பாதகாதிபதிகளாகவும், கேந்திராதிபதிகளாகவும் வருவதால்தான்.

அதாவது உபய லக்னங்களான மிதுனம், கன்னி, தனுசு, மீனத்திற்கு லக்ன மற்றும் பாதக, மாரக, கேந்திர அதிபதிகளான குருவும், புதனும் நேரிடையாக வலிமை இழந்து மறைமுகமாக வலிமை பெற வேண்டும். உதாரணமாக பகை, நீச்சம் பெற்று வர்க்கோத்தமம் பெறுவது, மூன்று, ஆறு, பதினொன்றாமிடங்களில் நட்பு பெறுவது, அல்லது மறைவு பெற்று பரிவர்த்தனை அடைவது போன்று இருந்தால் மட்டுமே அவர்களது தசையில் நன்மை அளிப்பார்கள்.

பாதகாதிபதி என்ற பெயரே அந்தக் கிரகம் செய்யப் போகும் பாதகம் எப்படிப் பட்டது என்பதைக் காட்டும்.

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888,044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.