adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
எல்லா ராசிகளையும் ஏழரைச்சனி கெடுக்குமா?

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

சிதம்பரம், நாகர்கோவில்.

கேள்வி.

மாலைமலர் ஆசிரியர் அவர்களுக்கு பணிவான வணக்கம். ஜோதிட சம்பந்தமான விஷயங்களை அறிவதில் மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். வாரம் ஒரு முறை வரும் ஜோதிட கேள்விபதில் பகுதிக்கு ஒரு முழுப் பக்கத்தையும் ஒதுக்கினால் அதிகமான மக்கள் பயன்பெறுவார்கள். ஆலோசிக்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். என் குடும்பத்தில் மூன்று பேருக்கு ராகுதசையும், 4 பேருக்கு ஏழரை சனியும் நடந்து கொண்டிருக்கிறது. தாயும் மகனும் ஒரே நட்சத்திரமாகவும் இருக்கிறார்கள். இது என்ன செய்யுமோ என்று பயமாக உள்ளது, குருஜி அவர்கள் தயவு செய்து பதில் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பதில்.

ராகு என்பது ஒரு இருட்டு. பாபக் கிரகங்களின் தசை நடக்கும் போது, ஒரு மனிதன் இருள் நிலையில் இருக்கிறான் அல்லது ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு ராகு தசை நடக்கும் போது அந்தக் குடும்பமே இருட்டில் இருப்பது போன்ற ஒரு நிலையில் இருக்கும் என்று நான் எழுதி இருக்கிறேன்.

ஜோதிடம் என்பது ஒரு விதியையும், அந்த விதிக்கு ஏராளமான விதிவிலக்குகளையும் கொண்டது. விதியை விட இங்கே விதிவிலக்குகளுக்கு அதிகமான முக்கியத்துவம் தர வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு ராகு தசை, ராகு புக்தி நடக்கும்போது தரித்திரம், துயரம், பிரிவு, இழப்பு போன்றவைகள் நடக்கும் என்பது ஆய்வுப்பூர்வமான உண்மை. பிறந்த ஜாதக அமைப்பின்படி இருள் நிலையான ராகு, சனி தசைகள் நடக்கும்போது, கோட்சாரத்திலும் இருள் நிலையான ஏழரைச்சனி நடக்கும்போது ஒரு மனிதனும் அல்லது அந்தக் குடும்பமும் தாங்க முடியாத கஷ்டங்களை அனுபவிக்கும்.

அதே நேரத்தில் எல்லா ராசிகளுக்கும் ஏழரைச்சனி மிகக்கடுமையான பலன்களைத் தந்து விடுவதில்லை. தான் மிகவும் எதிரியாகக் கருதும் சூரிய, சந்திர, செவ்வாயின் ராசிகளான சிம்மம், கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய நான்கு ராசிக்காரர்கள் மட்டுமே ஏழரை, அஷ்டமச்சனியின் போது மிகவும் கொடுமையான பலன்களை அனுபவிக்கிறார்கள். தனது சொந்த ராசிகளான மகர, கும்பத்திற்கு சனி மிகப் பெரிய கெடுதல்களை தருவதில்லை. மகர, கும்ப ராசிகளுக்கு சனி, ஏழரைச்சனி காலங்களில் பணம் பற்றிய அனுபவங்களை மட்டுமே தந்து, பணத்தினால் வரும் மன அழுத்தத்தை மட்டுமே கொடுக்கிறார். வேறு விதமான பிரிவு, இழப்பு, நெருங்கிய உறவினர் மரணம் போன்ற கடுமையான மன அழுத்தங்களை அவர் சொந்த ராசிகளுக்குத் தருவதில்லை.

அவர் யோகாதிபதியாக வரும் துலாம், ரிஷப ராசிக்காரர்களுக்கு அவர் தொழில் துறையில் மட்டுமே சங்கடங்களை ஏழரைச்சனி காலத்தில் தருகிறார். அதிலும் 30 வயதுகளில் வரும்போது ஒரு மனிதனுக்கு வாழ்க்கை பற்றிய அனுபவத்தை புரிய வைப்பார். அடுத்து அவரது நண்பரான புதனின் மிதுனம், கன்னி ராசிகளுக்கு ஏதேனும் ஒரு தொழிலை தந்து, அதில் சிக்கல்களையும் தந்து பணம் பற்றிய அருமை பெருமைகளைப் புரிய வைப்பார்.

தான் மிகவும் மதிக்கும் குருவின் ராசிகளான தனுசு, மீனத்திற்கு வயதிற்கு ஏற்ப வாழ்க்கையை புரிய வைக்கும் மன அழுத்தங்களை சனி தருகிறார். அதிலும் முக்கியமாக பணம் இல்லாத நிலை, பணம் பற்றிய புரிதல், உறவு, நட்புகளை பற்றிய உண்மையான நிலையை அறிதல் ஆகியவையே தனுசு, மீன ராசிக்காரர்களுக்கு ஏழரைச்சனி காலத்தில் நடக்கும். எல்லா ராசிகளுக்கும் ஒரேமாதிரியான பலன்களை சனி கொடுத்து விடுவதில்லை. ஏழரைச்சனி காலத்தில் கடுமையான கஷ்டங்களை அனுபவிப்பவர்கள் சிம்மம், கடகம், விருச்சிகம்,மேஷம் ஆகிய நான்கு ராசிக்காரர்கள் மட்டுமே.

அதேபோல ஒரு குடும்பத்தில் நான்கு பேருக்கு ராகு தசை நடந்து, நான்கு பேருமே உயர்வான நிலையில் இருப்பதையும் நான் கண்டிருக்கிறேன். அதற்கு நால்வருக்குமே ராகு மிகுந்த சுபத்துவமாக மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து ராசிகளில் இருக்க வேண்டும். முன்னர் விதிகளுக்கு விதிவிலக்கு இருக்கிறது என்று சொன்னதைப் போல, ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு, ராகு தசை நடக்க கூடாது என்ற விதி இருந்தாலும், நடக்கும் அனைவருக்கும் ராகு மிகுந்த சுபத்துவ நிலையில் இருக்கும் போது, அவர்களுக்கு ராகு மட்டுமே ராஜயோக கிரகமாக மாறி அவர்களை மிகவும் உயரத்தில் வைக்கக்கூடிய ஒரு நிலைக்கு கொண்டு செல்வார். தகப்பன், மகன், தாய், மகள் ஆகிய நால்வருக்கும் ராகு தசை நடந்து, நால்வருமே மிகுந்த செல்வச் செழிப்போடு உயர்வாக இருக்கும் ஜாதகங்களையும் நான் பார்த்திருக்கிறேன்.

இதுபோன்ற நிலையில் நான் ஏற்கனவே சொன்னபடி ராகு சுபத்துவமோ, சூட்சுமவலுவோ அடைந்து மிகவும் நல்ல பலன்களை தரக் கூடிய நிலையில் அவர்களின் சொந்த ஜாதகங்களில் இருந்திருக்கிறார் ஆகவே எல்லா நிலைகளிலும் பொதுவான பலன்களை வைத்து பலன் சொல்லகூடாது. சொந்த ஜாதகங்களில் அவரவருக்கு இருக்கும் நிலை மட்டுமே ஒருவருக்கு நல்ல அல்லது கெட்ட பலனை தரும். உங்களுக்கு விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரமாகி, கடந்த 2012 முதல் ஏழரைச் சனி நடந்து வருவதால், குடும்பத்தலைவரின் ஏழரைச்சனி மொத்த குடும்பத்தையும் பாதிக்கும் என்ற அமைப்பின்படி, கடந்த காலங்களில் உங்களுக்கு நல்ல வருமானம் இருந்திருக்க வாய்ப்பில்லை. மகளுக்கு தனுசு ராசி என்பதால் இந்த வருடம் முழுமைக்கும் சாதகமற்ற பொருளாதார நிலை உங்கள் குடும்பத்தில் நீடிக்கும். மனைவிக்கும் இன்னொரு மகளுக்கும் மகர ராசி என்பதால் அவர்களது ஏழரைச்சனியால் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது. இந்த வருடத்தோடு உங்கள் குடும்பத்தின் துயரங்கள் தீரப் போகிறது. வாழ்த்துக்கள்.

(21.05.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.