adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 237 (21.05.19)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

ஜெ.பாரதி, மதுரை.

கேள்வி.

வாழ்க்கை பற்றி கலங்கி கொண்டிருந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உனக்கு இஷ்ட திருமணம்தான் நடக்கும், எதிர்கால வாழ்வில் சிறப்பாக இருப்பாய் என்று நீங்கள் அளித்த பதில்தான் எனக்கு நம்பிக்கையைத் தந்தது. கஷ்டம், அசிங்கம், அவமானம் என்ற வார்த்தையில் கூறிவி’ட முடியாத பலவற்றைக் கடந்து இப்போது வீட்டில் சம்மதம் வாங்கி விட்டோம். வரும் ஜூன் 6 அன்று எனக்கு பெரியவர்களின் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. குழந்தையிலேயே தாயை இழந்த  எனது திருமண வாழ்க்கை நீங்கள் சொன்னதுபோல சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்.

எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள். அக்கா காதலித்துவிட்டாள், இவளும் அதுபோல எதுவும் செய்யும் முன் சீக்கிரம் இவளுக்கும் திருமணம் செய்ய வேண்டும் என்று உறவினர்கள் அப்பாவிடம் சொல்வதால் தங்கைக்கு அவசரப்பட்டு திருமணம் செய்யலாம் என்று என் அப்பா நினைக்கிறார். அவர் இருதய நோயாளியும் கூட.  தங்கையை நினைத்தால் மிகவும் பயமாக இருக்கிறது. அவசரப்பட்டு தவறான வரனை அப்பா தேர்ந்தெடுத்து விடக்கூடாது என்று பயமாக இருக்கிறது. அவளின் நான்கு வயது முதலே அவளுக்கு அக்கா என்பதை விட நான் அம்மாவாகத்தான் இருக்கிறேன்.

என் வாழ்வில் காதல் எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் நீங்கள் தந்த பதில் தான் எனக்கு பலவற்றை புரிய வைத்தது. உறவினர்கள் பயப்படுவதை போல என் தங்கைக்கு காதல் திருமணம் உள்ளதா அல்லது வீட்டில் பார்க்கும் திருமணமா? அம்மா இல்லை, அக்காவும் காதல் திருமணம் என்று உறவினர்கள் கேவலமாக பேசுகிறார்கள். அம்மா இல்லாத எங்களுக்கு நான் அவளுக்கு அம்மாவாகவும், அவள் எனக்கு அம்மாவாகவும்  இருந்து வருகிறோம். அவள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று அருள் கூர்ந்து பதில் தாருங்கள்.

பதில்.

(விருச்சிக லக்னம், ரிஷப ராசி, 1ல் ராகு, 4ல் புத, செவ், சனி, 5ல் சூரி, சுக், 7ல் சந், கேது, 12ல் குரு, 19-3-1994 இரவு 12- 8 மதுரை)

தங்கைக்கு விருச்சிக லக்னமாகி, கணவனைக் குறிக்கும் ஏழாம் அதிபதி சுக்கிரன் உச்சம் பெற்று, ஏழாமிடத்தில் கொடும்பாவி ராகு அமராமல் கேது அமர்ந்து, உச்சம் பெற்ற பாதகாதிபதி வளர்பிறை சந்திரனை பங்கப்படுத்தி கணவனைக் குறிக்கும் ஏழாமிடம் யோகமான ஜாதகம். குருவும், சுக்கிரனும் பரிவர்த்தனையாகி உள்ளது மிகவும் சிறப்பு.

பெண்களின் ஜாதகத்தில் குரு, சுக்கிரன் ஆகிய இரண்டு இயற்கை சுபர்களும் வலுத்து இருந்தாலே அவர்கள் மேன்மையுடன் இருப்பார்கள் என்பது ஜோதிட விதி. இங்கு பரிவர்த்தனை பெற்ற குரு, புதன், செவ்வாய், சனி, சந்திரன், கேது ஆகிய ஐந்து கிரகங்களுடன் தொடர்பு கொள்வது நல்ல நிலை. குருவின் நட்சத்திரத்தில் அமர்ந்து பாக்கியாதிபதியின் பார்வையைப் பெற்ற ராகு தசையில், சுக்கிர புக்தி தற்போது நடப்பதால், அடுத்த வருடம் தை மாதத்திற்குப் பிறகு தங்கைக்கு எந்த நேரத்திலும் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையுடன்  திருமணம் நடைபெறும்.

ஏழாமதிபதி அதிபதி உச்சம், ஏழாமிடத்தில் ஒரு உச்ச கிரகம், ராகு தசை நடப்பு, அதனையடுத்து பன்னிரண்டாம் இடத்தில் இருக்கும் குரு தசை, எட்டாமிடம் சுபத்துவம் ஆகிய காரணங்களால் திருமணத்திற்குப் பிறகு உன் தங்கை உன்னை விட்டுப் பிரிந்து தூர இடங்களில் மிகவும் சந்தோஷமான வாழ்க்கை வாழ்வாள். வாழ்த்துக்கள்.

சோலையன், திருவையாறு.

கேள்வி.

மகா குருஜிக்கு பணிவான வணக்கங்கள். கடந்த சில வருடங்களாக தங்களின் மாலைமலர் ஜோதிட விளக்க கட்டுரைகளைப் படித்து சிறிய அளவில் ஜோதிடம் சொல்லி வருகிறேன். என் ஒரே மகனின் ஜாதகத்தை எழுதிய ஜோதிடர் முப்பத்திரண்டு வயது வரைதான் ஆயுள் என்று எழுதியிருக்கிறார். அதைப் படித்ததிலிருந்து மிகுந்த மன உளைச்சலில் என் குடும்பம் உள்ளது. பல ஜோதிடர்களை அணுகியும் விடை தெரியவில்லை. எங்களது வேதனையும் தீரவில்லை. குருஜி அவர்கள் என் மகனுக்கு அற்பஆயுளா? மத்திம, தீர்க்காயுளா என்பதை ஜோதிட விதிகளின்படி விளக்கி எங்களுக்கு வழி காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பதில்.

(தனுசு லக்னம், கடக ராசி, 1ல் சனி, 3ல் ராகு, 4ல் செவ், 6ல் குரு, 8ல் சந், 9ல் சுக், கேது, 10ல் சூரி, 11ல் புத, 4-10-1988 காலை 11-30 திருவையாறு)

ஒருவர் அற்பாயுள் எனப்படும் 32 வயது வரை மட்டுமே பூமியில் வாழ வேண்டும் எனில், அவரது லக்னம், லக்னாதிபதி, எட்டாம் இடம், எட்டுக்குடையவன், ஆயுள்காரகன் சனி ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆயுளைக் கணிப்பதற்கு பாரம்பரிய ஜோதிடத்தில் ஏராளமான விதிகள் இருக்கின்றன. சர, ஸ்திர, உபய லக்னங்களுக்கு என தனித்தனி விதிகளும், ஆயுர்த்தாய கணக்குகளும், அஷ்டவர்க்க நிலைகளும், ஷட்பலம் எனப்படும் கிரகங்களின் ஆறுவித நிலைகளும் ஆயுளை கணிக்க உதவுகின்றன.

நான் இப்போது கூறிவரும் சுபத்துவ,  சூட்சும வலு விதிகளை உங்களால் முழுவதுமாக புரிந்து கொள்ள முடிந்தால், மேற்கூறிய ஆயுள் கணிதங்கள் அத்தனையையும் ஒரே குடையின் கீழ்க் கொண்டுவந்து, ஒரே இடத்தில் நிலை பெறச் செய்து ஆயுள் நிலையைக்  கூறி விடலாம்.

மகனின் ஜாதகப்படி எட்டாம் இடம் மிகுந்த பாபத்துவ அமைப்பில் இல்லை. லக்னமும் அப்படியே இருக்கிறது. எட்டாம் அதிபதி தேய்பிறை சந்திரனாகி ஆட்சி பெற்று இருக்க, ஆயுள்காரகன் சுப நிலையில் குருவின் வீட்டில் அமர்ந்து இருப்பது சிறப்பு. கோட்சார கிரக நிலைகளும் மகனது கடகராசிக்கு ஆயுளைக் கெடுக்கும் நிலையில் இல்லை. ஜாதக அமைப்பின்படி மகனுக்கு அற்பாயுள் இல்லை. மத்திம ஆயுளையும் தாண்டி மகன் நன்றாக இருப்பார். வாழ்த்துக்கள்.

மு. தங்கராசு, கரூர்.

கேள்வி.

ஜோதிட பிரம்மாவிற்கு வணக்கம். 43 வயது ஆகியும் இதுவரை தொழில் எதுவும் நிலையாக அமையவில்லை.  நடக்கும் சூரிய தசை எப்படி இருக்கும்? சொந்த லாரி வாங்கலாமா? என்ன தொழில் செய்தால் நன்றாக இருக்கும்? மீன ராசி என்பதால் பைனான்ஸ் தொழில் கூட்டாக செய்யலாமா? எதிர்கால வாழ்க்கைக்கு ஒரு நல்ல பதில் தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

பதில்.

(ரிஷப லக்னம், மீன ராசி, 1ல் குரு, 3ல் சனி, 4ல் சூரி, 5ல் புத, சுக், செவ், 6ல் ராகு, 11ல் சந், 12ல் கேது, 10-9-1976 இரவு 10-48 கரூர்)

எனது சுபத்துவ மற்றும் சூட்சுமவலு கோட்பாட்டின்படி ஒருவரின் ஜாதகத்தில் எந்தக் கிரகம் அதிகமான சுபத்துவத்தை அடைந்திருக்கிறதோ அதனுடைய தொழில் அமையும் அல்லது அதன் தொழிலில் அவர் சிறப்பாக சம்பாதிக்கும் நிலையை அடைவார். பத்தாமிடம், ஜீவனாதிபதி, அம்சத்தில் பத்தாமதிபதி இருக்கும் நிலை, தசாம்சம்  போன்றவைகளெல்லாம் சுபத்துவ, சூட்சுமவலுவிற்கு அப்பால்தான்.

உங்களின் ஜாதகப்படி செவ்வாய், சுக்கிரன், புதனுடன் இணைந்து குருவின் பார்வையையும், பௌர்ணமிக்கு அருகில் இருக்கும் சந்திரனின் பார்வையையும் பெற்று அதிகமான சுபத்துவ நிலையை அடைந்திருக்கிறார். எனவே செவ்வாயின் தொழில்களில் உங்களுக்கு மிகப்பெரிய லாபங்கள் கிடைக்கும். செவ்வாயின் துறைகளான ரியல் எஸ்டேட், வீடு கட்டுதல், கட்டிட பொருட்களை விற்றல், நெருப்பு, மருத்துவம் சம்பந்தப்பட்டவைகள், சிகப்பு நிறமான பொருட்கள் ஆகியவை உங்களுக்கு ஏற்றது.

குருவின் தொழிலான பைனான்ஸ் துறை உங்களுக்கு சுமாராக கைகொடுக்கும். பெரிய அளவில் வருமானத்தை தராது. சனி ராசியில் பாபத்துவமாக இருந்தாலும் அம்சத்தில் குருவின் வீட்டில் இருப்பதால் லாரி தொழில் ஓரளவு கை கொடுக்கும். 43 வயதிற்கு பிறகு புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொண்டு அதில் பிரகாசிப்பது கஷ்டம். எந்த தொழிலில் சாதிக்க நாம் பிறக்கின்றோமோ, அந்தத் துறை நமக்கு முப்பது வயதிற்குள் அறிமுகமாகி அதில் ஓரளவிற்கு அனுபவமும் ஏற்பட்டு விடும். எனவே மேலே நான் சொன்ன துறைகளில் எது உங்களுக்கு ஏற்கனவே தெரியுமோ அதைச் செய்யுங்கள். ரிஷப லக்னத்திற்கு சந்திரன் மாரகாதிபதி என்பதால் நல்ல பலன்களை செய்வதில்லை. ஆனால் பதினொன்றாம் இடத்தில் இருக்கும் போது நல்ல பலன்களை மட்டுமே தருவார். அடுத்து வரும் சந்திர தசை சூரிய தசையை விட யோகமாக இருக்கும். வாழ்த்துக்கள்.

(21.05.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.