adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
புஷ்கர நவாம்சம்.-D-059

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

சென்ற கட்டுரைகளில் நவாம்சம் உள்ளிட்ட வர்க்கச் சக்கரங்களில், சுப வர்க்கம் என்பதே முதன்மையானது என்பதை விளக்கினேன். அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் புஷ்கர நவாம்சம் என்பதைப் பார்க்கலாம்.

ஜோதிட மூலநூல்களில் ஆங்காங்கே கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கும் இந்த புஷ்கர நவாம்சம் என்பது, ஒரு கிரகம் ராசியில் எந்த நிலையில் இருந்தாலும் நவாம்சத்தில் சுபர்களின் வீடுகளில் இருப்பதைக் குறிக்கிறது.

அதேநேரத்தில் சுப வீடுகள் எனப்படும் ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய குரு, சுக்கிர, புதன், வளர்பிறைச் சந்திரனின் வீடுகளில் அமரும் அத்தனை கிரகங்களும் புஷ்கர நவாம்சத்தில் இருப்பவை என்று சொல்லப் படவில்லை மேற்கண்ட சுபர்களின் வீடுகளில் அமரும் கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட நட்சத்திர பாதத்தில் இருப்பது மட்டுமே புஷ்கர நவாம்சம் எனப்படுகிறது.

பதினைந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட “ஜாதக பாரிஜாதம்” எனும் சிறப்பு வாய்ந்த நூல் புஷ்கர நவாம்சம் பற்றிக் குறிப்பிடுகிறது. வேறு சில நூல்களிலும் இது பற்றிய குறிப்புகள் உள்ளன.

ராசிச்சக்கரத்தில் கீழ்க்காணும் நட்சத்திர பாதங்களில் கிரகங்கள் அமர்ந்திருப்பின் அது புஷ்கர நவாம்சத்தில் உள்ளதாக தனித்து அடையாளம் காட்டப்படுகிறது.

பரணி 3, கிருத்திகை 1, கிருத்திகை 4, ரோகிணி 2, திருவாதிரை 4, புனர்பூசம் 2, புனர்பூசம் 4, பூசம் 2, பூரம் 3, உத்திரம் 1, உத்திரம் 4, அஸ்தம் 2, சுவாதி 4, விசாகம் 2, விசாகம் 4, அனுஷம் 2, பூராடம் 3, உத்திராடம் 1, உத்திராடம் 4, திருவோணம் 2, சதயம் 4, பூரட்டாதி 2, பூரட்டாதி 4, உத்திராட்டாதி 2 ஆகிய நட்சத்திர பாதங்களே புஷ்கர நவாம்ச பாதங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன.

இந்த நட்சத்திர பாதங்கள் முறையே சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன், சனி, ராகு ஆகிய ஆறு கிரகங்களை மட்டும் உள்ளடக்கியவை. செவ்வாய், புதன், கேது ஆகிய மூன்று கிரகங்களைக் குறிக்கும் நட்சத்திரங்களில் புஷ்கர நவாம்ச பாதங்கள் அமைவதில்லை.

இதை சுருக்கமாக வேறு வகையில் சொல்லப்போனால் சூரியனின் கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய மூன்று நட்சத்திரங்களின் முதல் மற்றும் நான்காம் பாதங்களும், சந்திரனின் ரோகினி, ஹஸ்தம், திருவோணம் ஆகியவற்றின் இரண்டாம் பாதமும், குருவின் புனர்பூசம், விசாகம், பூரட்டாதியின் இரண்டு,  நான்காம் பாதங்களும், சுக்கிரனின் பரணி, பூரம், பூராடத்தின் மூன்றாம் பாதமும், சனியின் பூசம், அனுஷம், உத்திராட்டாதியின் இரண்டாம் பாதமும், ராகுவின் திருவாதிரை, சுவாதி, சதயத்தின் நான்காம் பாதமும், புஷ்கர நவாம்சம் எனப்படும்.

360 டிகிரி கொண்ட வான்வெளியில், ஜோதிட ராசிச் சக்கரம் 30 டிகிரி கொண்ட தலா பனிரெண்டு வீடுகளாக, கற்பனைக் கோடுகளால் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பனிரெண்டைத் தவிர்த்து 120, 90 டிகிரிகள் என்ற அளவில் 4 மற்றும் 3 சம பங்கு அளவில் ராசிச் சக்கரம் பிரிக்கப்படுவதே கேந்திர, கோணங்கள் என்று சொல்லப்பட்டன.

கேந்திர கோணங்கள் எனப்படுபவை ஒளிப் பிரதிபலிப்பு மையங்கள் ஆகும். சந்திர கேந்திரம் ஏன் சிறப்பாக சொல்லப்படுகிறது என்பதை ஒருமுறை நீசபங்க ராஜயோக வீடியோவில் சொல்லியிருக்கிறேன்.

அனைத்து கேந்திர, கோணங்களின் சமமான நேர்கோட்டு ஒவ்வொரு முனையும் சிறப்பானதாகும். அதாவது கேந்திரங்களின் ஒவ்வொரு சமமான நேர் கோட்டு நான்கு முனைகளும், திரிகோணங்களின் சமமான நேர் கோட்டு மூன்று முனைகளும் ஏதாவது ஒருவகையில் தனித்துவமாகவே அமையும். புஷ்கர நவாம்ச பாதங்கள் இதுபோன்ற ஒரு கோணங்களின் முனையாக அமையும்.

கால புருஷனின் முதல் ராசியான மேஷம் மற்றும் அதன் திரிகோணங்களான  ஐந்திற்குடைய சிம்மம், ஒன்பதுக்குடைய தனுசு ஆகிய மூன்று நெருப்பு ராசிகளின் 7 மற்றும் 9 ம் பாதங்கள் புஷ்கர நவாம்சமாகும். ராசிச் சக்கரத்தின் இரண்டாவது வீடான ரிஷபத்தில் தொடங்கி, அதன் ஐந்து ஒன்பதாம் வீடுகளான நிலத் தத்துவ கன்னி, மகர ராசிகளின் 3 மற்றும் ஐந்தாவது பாதங்கள் புஷ்கர நவாம்சமாகும்.

திரிகோண காற்று ராசிகளான மிதுனம், துலாம், கும்பம் வீடுகளின் ஆறு மற்றும்  எட்டாவது பாதங்கள் புஷ்கர நவாம்சமாகவும்,. நீர் ராசியான கடகத்தில் தொடங்கும் நீர்த் திரிகோண வீடுகளான கடகம், விருச்சிகம், மீனம் ஆகியவற்றின் ஒன்று மற்றும் மூன்றாவது பாதங்கள் புஷ்கர நவாம்சமாகவும் அமையும்.

மேலே சொன்ன கேந்திர, கோணங்களின் எந்தவொரு 90 மற்றும் 120 டிகிரி கோண முனைகளில், ஒளிக் கிரகங்கள் இணைந்தோ அல்லது பார்த்துக் கொண்டோ இருக்கும்போது சிறப்பான யோகங்கள் உருவாகின்றன. இணையும் அல்லது பார்க்கும் கிரகங்களின் ஒளித்திறனுக்கு ஏற்ப அந்தக் குறிப்பிட்ட சமயத்தில் பிறக்கும் ஒருவர் பூமியில் சகல பாக்கியங்களையும் அனுபவிக்கிறார்.

புஷ்கர நவாம்ச பாதம் என்பதும் இதுபோன்ற ஒரு கோண, கேந்திர முனைகள்தான். ஒளிப் பிரதிபலிப்பு முனைகளில் அதிக ஒளித் திறனுடன் கிரகங்கள் அமர்ந்து, பாபக் கிரகங்களால் தனது சுய ஒளியை இழக்காத நிலையில், ஒருவர் பிறக்கும் நேரத்தில் அமையும் லக்னத்தின்படியும் மேற்குறிப்பிட்ட ஒளி நிலை சிறப்பானதாக அமையுமானால், அவ்வமைப்பு நல்ல யோகங்களையும், தன லாபங்களையும், அதிகாரத்தையும் தரும்.

இதில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், நான் அடிக்கடி வலியுறுத்திச் சொல்லும் சுபத்துவ, சூட்சும வலு கோட்பாட்டில் புஷ்கர நவாம்சமும் அடங்கும். கிரகங்களின் தனித்தனி சுபத்துவ நிலைகளை ஏராளமான முறைகளில் ஆராய்ந்தே, நான் சுபத்துவ, சூட்சும வலுக் கோட்பாட்டினை சொல்லியிருக்கிறேன். நவாம்சத்தில் கிரகங்கள் சுபத்துவமாக இருக்க வேண்டும் என்பதும் அதில் ஒன்று. நவாம்சத்தில் கிரகங்கள் சுபமாக உள்ள அமைப்பே புஷ்கர நவாம்சம் எனபடுகிறது.

புஷ்கர நவாம்ச அமைப்பில் உள்ள அனைத்துக் கிரகங்களும், நவாம்சத்தில் சுப வீடுகளிலேயே அமையும். இங்கே கிரகங்களின் சேர்க்கை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ராசிச் சக்கரத்தில் ஒரு கிரகம் உச்சம், ஆட்சி, நட்பு, பகை, நீசம் போன்ற எத்தகைய வலிமையில் இருந்தாலும், அது நவாம்சத்தில் சுபரின் வீடுகளில் அமரும்போது வலிமையைப் பெறுகிறது என்பதன் அடிப்படையில்தான் புஷ்கர நவாம்சம் சொல்லப்பட்டிருக்கிறது.

ராசிக்கட்டத்தில் 6, 8, 12 போன்ற இடங்களில் கிரகங்கள் மறைந்தே இருந்தாலும், நவாம்சத்தில் அவை சுப வீடுகளில் அமரும்போது சுபத்துவம் அடைகின்றன. எனவே சுபத்துவத்தின் ஒரு பகுதிதான் புஷ்கர நவாம்சமாகும். இது தவிர்த்து புஷ்கர பாகை என வேறு சில இன்னும் துல்லிய அமைப்புகளும் கிரகங்களின் சுப வலிமையைக் கணக்கிட மூல நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. அதனை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் விளக்குகிறேன்.

புஷ்கர நவாம்சத்தில் இருக்கும் கிரகங்கள் அதனுடைய தசையில் மட்டுமே பலன் தரும். தசை வராவிட்டால் பலன் இல்லை. அதேபோல எத்தனை சிறப்பாக கூறப்பட்டாலும் புஷ்கர நவாம்சம் என்பது ஒரு துணை அமைப்புதான். அதுவே ஒரு இறுதி நிலை அல்ல. புஷ்கர நவாம்சத்தில் இருந்தால் மட்டுமே கிரகங்கள் அத்தனை செல்வத்தையும் கொட்டித் தீர்த்து விடாது அல்லது ஒருவனை அரசனாக்கியோ அல்லது மிக உயர்ந்த அந்தஸ்தில் வைத்தோ அழகு பார்த்து விடாது.

புஷ்கர நவாம்சம் என்பது கிரகங்களின் சுபத்துவத்தில் ஒரு சிறிய பகுதி மட்டும்தான். இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு இந்தக் கிரகம் எனக்கு புஷ்கர நவாம்சத்தில் இருக்கிறது. ஆனால், அதனுடைய தசையில் எனக்கு நன்மைகள் நடக்கவில்லையே என்று நீங்கள் கேட்பீர்களேயானால், ஜோதிடத்தில் இன்னும் சில ஆழமான விஷயங்களை நீங்கள் உணரவில்லை என்று அர்த்தம்.

கிரகங்கள் யோகத்தைத் தரும் நிலையில் இருந்தாலும், அந்த யோகத்தை பெற்றுக் கொள்ளும் மற்றும் அனுபவிக்கும் அமைப்பில் லக்னாதிபதியும், லக்னமும் வலுவான நிலையில் இருக்க வேண்டும்.

புஷ்கர நவாம்சத்தில் இருக்கும் கிரகங்கள், அந்த லக்னத்திற்கு சுப கிரகங்களாக அமைவதே சிறப்பு. குறிப்பாக லக்னாதிபதி மற்றும் கேந்திர, கோணாதிபதிகள் எனப்படும் 4, 5, 9, 10 ஆகிய லக்ன சுபர்கள் புஷ்கர நவாம்சத்தில் இருப்பதும், அந்த கிரகங்களின் தசை நல்ல பருவத்தில் வருவதும் ஒரு மனிதனை ஏதேனும் ஒரு துறையில் உச்சத்திற்கு கொண்டு செல்லும்.

அதிலும் குறிப்பாக, சில நிலைகளில் பெருங்கேந்திரம், பெருங்கோணம் எனப்படும் ஒன்பது, பத்தாம் அதிபதிகளான தர்ம, கர்மாதிபதிகள் புஷ்கர நவாம்சத்தில் அமர்ந்து அவர்களின் தசையும் அடுத்தடுத்து நடக்கும்போது அந்தக் கிரகங்களின் காரகத்திற்கேற்ப ஜாதகர் மிக உயரத்திற்கு செல்வார்.

ஆகவே ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதியும், லக்னமும், அதனையடுத்த மிக முக்கிய சுபர்களான 5, 9 க்குடையவர்கள் புஷ்கர பாதத்தில் அமைவதும், இறுதியாக நான்கு, பத்துக்குடையவர்கள் புஷ்கர பாத அமைப்பில் இருப்பதுமே சிறப்பானது.

இது தவிர்த்து ஒரு லக்னத்தின் அவயோக கிரகங்கள் என்று சொல்லப்படும் ஆறு, எட்டு, பன்னிரெண்டுக்குடையவர்கள் புஷ்கர பாதத்தில் சுபத்துவமாக இருந்தால் தங்களது ஆதிபத்திய, காரகத்துவ கெடுதல்களைக் குறைத்துக் கொண்டு 6, 8, 12ஆம் பாவகங்களுக்குரிய சுப விஷயங்களைச் செய்வார்கள். அதேபோல தங்களுடைய காரகத்துவங்களிலும் கெட்ட காரகத்துவங்களைத் குறைத்துக் கொண்டு நல்ல காரகத்துவங்களை செய்வார்கள். ஆகவே புஷ்கர நவாம்சத்தின் இன்னொரு பகுதியையும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

சுபத்துவம் என்பது ஒரு மனிதனுக்கு எந்த ஒரு நிலையிலும் நல்ல விஷயங்களைத் தருவதற்கு மட்டுமே. ஒரு பாவகமோ அல்லது ஒரு கிரகமோ ஒருவருக்கு நல்ல, கெட்ட இரண்டு விஷயங்களையும் தருவதற்கே இருக்கின்றன. உதாரணமாக ஆறாம் பாவகம் என்பது கடன், நோய், எதிரி போன்ற தீய பலன்களைக் கொடுத்தாலும், அதுவே ஒரு மனிதனை நல்ல வேலை அமைப்பில் அமர வைக்கும் பாவமாகும்.

அதேநேரத்தில் ஆறாம் அதிபதியும், ஆறாம் பாவகமும் புஷ்கர நவாம்ச அமைப்பிலோ, அல்லது எனது சுபத்துவ சூட்சும வலுக் கோட்பாட்டின்படி வேறு விதமான சுபமான அமைப்பில் இருக்கும் பொழுதோ கடன், நோய்களைத் தராமல் ஜாதகரை ஒரு நிரந்தரமான நல்ல வேலையில் அமர்த்தி, அவருக்கு வாழ்நாள் முழுக்க ஒரு வருமானத்தை ஏற்படுத்தித் தருவார்கள்.

ஆனால் ஒரு மனிதர் வாழ்நாள் முழுவதும் வேலையில் மட்டுமே தொடர்ந்து நீடித்துக் கொண்டிருந்தால், அவரால் ஒரு உச்சநிலைக்கு செல்லவே முடியாது. ஒரு மனிதன் வேலைக்குச் செல்வது என்பது ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் வளைய வருவது மட்டுமே. ஒரு குறிப்பிட்ட தொகை மட்டுமே அவருக்கு மாதந்தோறும் சம்பளமாகக் கிடைக்கும். அதற்குள் மட்டுமே அவர் தன்னையும் தனது குடும்பத்தாரையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் அதே நபர் சொந்தமாக தொழில் செய்தாரெனில், அதிர்ஷ்டம் கை கொடுக்கும் நிலையில் எத்தகைய உயரத்திற்கும் அவரால் செல்ல முடியும். அந்தத் தொழிலை அமைத்துக் கொடுப்பது பத்தாம் பாவகம் எனப்படும் தொழில் ஸ்தானமும், அதன் அதிபதியுமான ஜீவனாதிபதியுமாகும்.

ஆகவே ஆறாம் பாவகம் சுபத்துவம் அடைந்திருந்தாலும், அந்த மனிதனை தனது கெட்ட பாவகத்திற்குரிய ஒரு குறிப்பிட்ட வளையத்திற்குள் இருத்தி வைக்கக்கூடிய வேலையை மட்டுமே செய்யும். அந்த நிலையை மீறி அவனை வளர விடாது.  

தர்ம, கர்மாதிபதிகள் எனப்படும் ஒன்பது, பத்தாம் பாவகாதிபதிகளும், ஒன்பது, பத்தாம் பாவகங்களும், புஷ்கர நவாம்சம் உள்ளிட்ட சில நிலைகளில் சுபத்துவமாக இருக்கும் போது வானமே எல்லை என்கின்ற அமைப்பில், ஒருவரை மிக உயர் நிலைக்கு கொண்டு செல்லும்.

அடுத்த வெள்ளி சந்திப்போம்.

(17.05.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.