adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 236 (14.05.19)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி 

கைப்பேசி : 8681 99 8888

தங்கவேலு, மதுரை.

கேள்வி.

சில வாரங்களுக்கு முன் திருமணம் முடிந்த எனது மகள்-மருமகன் ஜாதகங்களை அனுப்பி இருக்கிறேன். இருவரின் ஜாதகத்தை இணைக்கலாமா என திருமணத்திற்கு முன்பு ஒரு ஜோதிடரிடம் கேட்டிருந்தேன். இருவருக்கும் சஷ்டாஷ்டக ராசியாக 6-8 ஆக உள்ளது. இந்த அமைப்பால் அடிக்கடி சண்டை, சச்சரவு, கருத்துவேறுபாடு வரும். வாரிசு யோகம் இருக்காது. இதனால் இருவரையும் கண்டிப்பாக சேர்க்க கூடாது என்று அவர் பதில் சொல்லியிருக்கிறார். திருமணம் முடிந்த பிறகுதான் இந்த பதில் கிடைத்தது. பதிலைப் படித்ததிலிருந்து பைத்தியம் பிடிக்கும் நிலையில் உள்ளேன். பெற்றவனுக்கு இது ஒரு தண்டனை போல தெரிகிறது. பரிகாரம் எதுவும் உண்டா? தங்களின் மாலைமலர் கட்டுரைகளை தொடர்ந்து படித்து வருகிறேன். வழி காட்டுங்கள்.

பதில்

(கணவன் 24-6-1986, மாலை 4 மணி, மதுரை. மனைவி 21-2-1989, அதிகாலை 5-15 பரமக்குடி)

கணவன், மனைவி இருவருக்கும் சஷ்டாஷ்டக ராசிகள் கூடாது என்பது உண்மையில் எதற்காகச் சொல்லப்பட்டது என்றால், ஒருவரின் ராசி இன்னொருவருக்கு 6, 8 ஆக அமையும் நிலையில், ஒருவருக்கு ஜென்மச்சனி நடக்கும் பொழுது, இன்னொருவருக்கு அஷ்டமச் சனி நடக்கும் என்பதால்தான்.

உதாரணமாக கணவர் தனுசுராசி, மனைவி ரிஷபராசி என இருவர் இராசிகளும் சஷ்டாஷ்டக நிலையில் அமையும் பொழுது, கணவருக்கு ஜென்மச்சனி நடந்தால் மனைவிக்கு அஷ்டமச் சனி நடக்கும். இதுபோன்ற நிலையில் அந்த நேரங்களில் குடும்பத்தில் பிரிவு, துயரம், தரித்திரம் போன்ற விஷயங்கள் நடக்கும் என்பதற்காகவே சஷ்டாஷ்டக ராசி தவிர்க்கப்படவேண்டும் என்று சொல்லப்பட்டது. தனுசு, ரிஷபம் ஆகிய இரண்டு ராசிகளைக் கொண்ட கணவன் மனைவியாக இருப்பவர்கள் தற்போது கடந்த இரண்டு வருடங்களாக மன அழுத்தத்தில்தான் இருக்கிறார்கள்.

சஷ்டாஷ்டக அமைப்பிலும் விதிவிலக்குகள் இருக்கின்றன. இதே தனுசு ராசிக்கு எட்டாவது ராசியான கடகத்தைச் சேர்த்தால் இந்த நிலை வராது. தனுசுக்கு ஜென்மச் சனி நடக்கும்போது கடகத்திற்கு யோகமான ஆறாமிடத்தில் சனி இருப்பார். ஆகவே தனுசையும், கடகத்தையும் இணைப்பது முழுமையான சஷ்டாஷ்டகம் ஆகாது. அதுபோலவே உங்களின் மகளுக்கும், மருமகனுக்கும் சிம்ம ராசி, மகர ராசியாகி இது  முழுமையான சஷ்டாஷ்டக அமைப்பு என்று சொல்ல முடியாது.

அடுத்து ஒருவரின் ராசி, இன்னொருவரின் லக்னம் எனும் நிலையில் கருத்தொற்றுமை இருந்தே தீரும். அதன்படி உங்கள் மகளின் மகர லக்னம், மருமகனின் மகர ராசி என்பதால் இங்கே தீர்க்க முடியாத கருத்து வேற்றுமைகள், சண்டை, சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பில்லை.

மகளுக்கு 5-ல் குரு அமர்ந்து, ஐந்தாம் அதிபதி சுக்கிரன் லக்னத்தில் சுபத்துவமாகி குருவின் பார்வையில் உள்ளதால் புத்திர தோஷமும் இல்லை. மருமகனின் ஜாதகப்படியும் பெரிய தோஷங்கள் எதுவுமில்லை. குறிப்பாக ராகு கேதுக்கள் ஐந்தாமிடத்தைப் பாதிக்கவில்லை. இருவரின் ஜாதகப்படி 2020ஆம் ஆண்டு பிற்பகுதியில் வாரிசு உண்டு.

மிக முக்கியமாக மகளின் மகர லக்னத்திற்கு வரக்கூடாத சூரியதசை முடிந்து விட்டதாலும், ஏழாமதிபதி சந்திரன், ராகுவோடு பாதிக்கப்படாமல் கேதுவுடன் இணைந்து பௌர்ணமிச் சந்திரனாக இருப்பதாலும், ஏழாமிடத்திற்கு சுபநிலையிலுள்ள தர்மகர்மாதிபதிகளின் பார்வை இருப்பதாலும், மகளின் மண வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும். பரிகாரங்கள் எதுவும் தேவையில்லை. வாழ்த்துக்கள்.

எஸ். உதயகுமார், மடிப்பாக்கம்.

கேள்வி.

அயனிங் வேலை செய்து கொண்டிருக்கிறேன். எனது பிறந்த வருடமே இன்றுதான் எனக்குத் தெரியும். அண்ணன், தம்பி, தங்கைகள் இருந்தும் தனியாக அனாதை போல்தான் வாழ்கிறேன். எந்த ஆதரவும் இல்லை. என் திருமணத்தை பற்றி அண்ணன்களிடம் பேசினால் சரியான பதில் இல்லை. எப்போதும் அண்ணன்கள் குடித்துக் கொண்டுதான் பேசுகிறார்கள். வாழ்க்கையே முடிந்து விடப் போகிறதோ என்ற எண்ணம் வருகிறது. சிலநேரம் அனைத்தையும் விடுத்து காவி வேஷ்டி கட்டிக்கொண்டு திருவண்ணாமலையில் சன்னியாசியாகி விடலாமா என்றும் தோன்றுகிறது. இதுவரை வாழ்க்கையில் தோல்வியை மட்டுமே அதிகம் சந்தித்திருக்கிறேன். எதுவுமே எனக்கு சரியாக அமையவில்லை. போகாத கோவில் இல்லை. செய்யாத பரிகாரம் இல்லை. எந்த பலனும்தான் இல்லை. என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும்?

பதில்

(கும்ப லக்னம், சிம்ம ராசி, 4ல் சூரி, செவ், 5ல் புத, சுக், 6ல் ராகு, 7ல் சந், எட்டி8ல் குரு சனி 12ல் கேது 9-6- 1981, இரவு 11-30 சென்னை)

பிறந்தது முதல் 40 வயதுவரை அவயோக தசைகள் மட்டுமே நடந்து, பிற்கால வாழ்க்கையில் நன்றாக இருக்கப் போகும் ஒரு பின் யோகஜாதகம் உங்களுடையது. வாழ்க்கையின் சரியான பருவத்தில் 22 வயதில் இருந்து 40 வயதுவரை அவயோக கடக ராகுவின் தசை நடப்பதால் இதுவரை திருமணம், புத்திர பாக்கியம் போன்றவை கிடைக்கவில்லை.

கும்பத்திற்கு சந்திரனின் தொடர்பு கொண்ட எந்தக் கிரகமும் நற்பலன்களைச் செய்யாது. சந்திரனின் வீட்டில் அமர்ந்த கிரகங்களும் நன்மைகளை தருவதில்லை. அப்படிச் செய்ய வேண்டுமாயின் கடகம் அல்லது சந்திரனோடு குரு தொடர்பு கொண்டு சுபத்துவமாகி இருக்க வேண்டும். அடுத்த வருட பிற்பகுதியில் சுக்கிரனின் வீட்டில் அமர்ந்த செவ்வாயின் புத்தி உங்களுக்கு ஆரம்பிக்க உள்ளதால் உங்களுக்கு திருமண அமைப்பு நாற்பது வயதில் உண்டு. லக்னாதிபதியுடன் இரண்டு டிகிரியில் இணைந்த குருவின் தசையில் புத்திர பாக்கியமும் உண்டு. மனதை தளர விட வேண்டாம்.

குரு, சனி இணைந்ததால் அதிகமான ஆன்மீக எண்ணங்களோடு, எப்போதும் ஒரு விட்டேத்தியான மனப்பான்மையில் இருப்பீர்கள். 38 வயதாகும் நிலையிலும் ஏன் மற்றவர்கள் உங்களுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? ராசிக்கு இரண்டில் சனி, லக்னத்திற்கு எட்டில் சனி என்ற அமைப்பு இருப்பதால் உங்களுக்கு தாமத திருமணம்தான். 40 வயதில் தந்தையாகும் அமைப்பு இருப்பதால் நிச்சயம் திருமணம் நடக்கும். கவலைப்பட வேண்டாம். திருமணத்திற்கு பிறகு யோகமாக இருப்பீர்கள். மனைவி அமைந்தவுடன் அனைத்தும் கிடைக்கும் ஜாதகம் உங்களுடையது. வாழ்த்துக்கள்.

சரண்யா, புதுச்சேரி.

கேள்வி.

தாங்கள் கூறியபடியே ஒன்றரை வருடங்களுக்கு முன்பு எனக்கு திருமணம் நடந்தது. இந்த ஒன்றரை வருட காலத்தில் இதுவரை என் கணவர் குடும்பத்திற்காக என்னிடம் மூவாயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்திருக்கிறார். மீதி எல்லாம் அவருடைய தாயார், நாத்தனார், அண்ணனுக்கு கொடுக்கிறார். அவரை நம்பி எப்படிக் குடும்பம் நடத்துவது என்று தெரியவில்லை. நான் எது கூறினாலும் அவர் கேட்பதில்லை. அவர் தந்தை, அண்ணன், அண்ணி பேச்சைக் கேட்கிறார். என்னிடம் உண்மை எதையும் சொல்வதில்லை. வாயில் வருவதெல்லாம் பொய், பித்தலாட்டமாக இருக்கிறது. என்னைக் கடுமையாகத் திட்டுகிறார். என் அப்பா, அம்மாவை கேவலமாகப் பேசுகிறார். என்னையும் என் குழந்தையும் இவர் பத்திரமாக பார்த்துக் கொள்வாரா? அவரை எந்த அளவுக்கு நான் நம்பலாம்? எதிர்காலத்தை நினைத்து பயமாக இருக்கிறது.

பதில்.

(மிதுன லக்னம், மிதுன ராசி, 1ல் சந், 2ல் சூரி, சுக், குரு, கேது, 3ல் புத, 7ல் சனி, 8ல் ராகு, 11ல் செவ், 17-8- 1990, அதிகாலை 1-55 பாண்டி)

கணவரின் ஜாதகப்படி பாபத்துவ சனி 12ல் மறைந்து, வாக்குஸ்தானமான இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் அவர் பொய் சொல்பவராகத்தான் இருப்பார். உன்னிடம் மட்டுமல்ல எல்லோரிடமும் அவர் அப்படித்தான். கடகம் மற்றும் ரிஷப ராசிக்காரர்கள் தாயாருக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பதை அடிக்கடி பேசுகிறேன், எழுதுகிறேன். உன்னுடைய கணவர் கடக ராசி என்பதால் அம்மாவின் பேச்சைத்தான் கேட்பார். இது போன்றவர்களை உண்மையான அன்பைக் காட்டி மெதுவாகத்தான் மாற்ற முடியும்.

திருமணமான ஒரு வருடத்திற்குள் எல்லோரும் தலைகீழாக மாறி விட வேண்டும் என்று நினைப்பதால் தான் இதுபோன்ற சிக்கல்கள் வருகிறது. நீ வருவதற்கு முன் உன் கணவர் அவரது அம்மா, அண்ணன், தங்கை பேச்சைத்தான் கேட்டுக் கொண்டிருந்தார். இவர்கள் அனைவரும் பிறந்தது முதல் அவருடன் இருப்பவர்கள். அவர்களைப் பற்றி அவருக்கு நன்றாக தெரியும். அதனால் அவர்களின் பேச்சைக் கேட்கிறார். நீ வந்து ஒரு வருடம்தான் ஆகிறது. இன்னும் உன்னை அவர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அதாவது அவர் உன்னைப் புரிந்து கொள்ளும்படி, உன் மீது நம்பிக்கை வரும்படி நீ இன்னும் நடந்து கொள்ளவில்லை.

சரியோ, தவறோ கணவரின் நம்பிக்கையை பெறும்படி இணக்கமாக நடந்து கொள். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் அமைப்பில்தான் வாழ்க்கை நன்றாக இருக்கும். என்ன இருந்தாலும் இவர்தான் கணவர் என்ற நிலையில் சூழ்நிலைக்கு ஏற்றார் போல நடந்து கொள்வதில் தப்பில்லை. மனைவி வாயாடும்போதுதான் கணவன், மனைவியின் குடும்பத்தாரை இழுக்கிறார். அது போன்ற சந்தர்ப்பங்களைத் தவிர்த்துக் கொள்.

உனக்கு ஏழாமதிபதி உச்சமாக இருப்பதாலும், மகளின் ஜாதகப்படி சூரியன் ஆட்சியாகி, ஒன்பதாம் அதிபதி உச்சமாக இருப்பதாலும் உங்களுக்குள் பிரிவு என்பது கிடையாது. உன்னுடைய மிதுன ராசிப்படி 2020, 2021 இரண்டு வருடங்கள் நீ நினைப்பது  நடக்காத கடுமையான காலகட்டமாக இருக்கும். அந்த நேரங்களில் உனக்கு மன அழுத்தம் வரும் என்பதால் இன்னும் இரண்டு வருடங்கள் மட்டும் பொறுமையாக இரு. 2022 முதல் வாழ்க்கையில் நன்றாக இருக்கக்கூடிய ஜாதகம் உன்னுடையது. வாழ்த்துக்கள்.

எஸ். உதயா, பொள்ளாச்சி.

கேள்வி.

நன்றாகப் படிக்கக்கூடிய மகள் கடந்த இரண்டு வருடங்களாக விடுதிவாசம் பிடிக்கவில்லை என்றும், முதலில் மருத்துவராக விருப்பம் கொண்டவள் தற்போது இல்லை என்றும் சொல்கிறாள். எந்த முடிவையும் எடுக்கத் தயங்குகிறாள். எதிர்காலத்தில் இவள் எந்தத் துறையில், எப்படி இருப்பாள்? வரும் காலங்களில் கல்விக்காக எங்களைப் பிரிந்து சென்றால் குழப்பமின்றி இருப்பாளா? இவளது வாழ்க்கை எப்படி இருக்கும்? தன்னம்பிக்கை உள்ள பெண்ணாக மிளிர்வாளா?

பதில்.

(மகர லக்னம், கடக ராசி. 2ல் செவ், 5ல் சனி, 6ல் குரு, ராகு, 7ல் சந், 11ல் சூரி, புத, சுக், 12ல் கேது, 5-12-2001 காலை 9-59 பொள்ளாச்சி)

தசாநாதனும், புக்திநாதனும் சஷ்டாஷ்டக நிலைகளில் இருக்கும்போது ஒருவருக்கு நல்ல பலன்கள் நடப்பதில்லை. மகளுக்கு தற்போது நடந்து வரும் புதன் தசையில், குரு புக்தி ஆறுக்கு, எட்டாக இருப்பதால், கடந்த இரண்டு வருடங்களாக மகளின் வயதிற்கு ஏற்றார் போல கல்வி விஷயங்கள் தடுமாற்றமாகத்தான் இருக்கும்.

இந்த மே மாதம் முதல் புதன் தசையில் லக்னாதிபதி சனியின் புக்தி ஆரம்பித்திருப்பதால் இனிமேல் மகளின் கல்வி நன்றாகவே இருக்கும். மகளுக்கு மருத்துவத் துறையே ஏற்றது. ஜூலை முதல் மகளிடம் நல்ல மாற்றங்கள் தெரியும். வருங்காலங்களில் இது போன்ற குழப்பங்கள் எதுவும் இன்றி, எதிர்காலத்தில் மிகவும் நன்றாக இருப்பாள். வாழ்த்துக்கள்.

(14.05.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.