adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
வர்க்கோத்தமம் என்றால் என்ன?-D-057

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

ஒரு கிரகம் ராசிச் சக்கரத்தில் எத்தகைய வலுவில் இருக்கிறது என்பதைக் கணிக்கப் பயன்படும், ஷட்பலம் எனப்படும் ஆறுவித கணித முறைகளை அடுத்து, ஆதிபத்தியம், காரகத்துவம் மற்றும் நட்சத்திர ரீதியாக அக்கிரகம் எந்த நிலையில் உள்ளது என்பதை உணர நவாம்சம் உள்ளிட்ட வர்க்கச் சக்கரங்கள் துணை செய்கின்றன.

வர்க்கக் சக்கரங்களில் ஒரு கிரகம் என்ன நிலையில் இருக்கிறது என்பதை அறிய உணரும் நிலை வர்கோத்தமம் எனப்படுகிறது.

வர்க்க உத்தமம் எனப்படுவதே இணைந்து, வர்க்கோத்தமம் என்ற சொல்லானது. நவாம்சம் உள்ளிட்ட அனைத்து வர்க்க சக்கரங்களிலும் ஒரே இடத்திலும், நவாம்சத்தில் சுப இடங்களிலும் இருக்கும் ஒரு கிரகம் நன்மைகளைத் தரும் என்பதே வர்கோத்தமத்தின் அடிப்படை.

உதாரணமாக ராசிச் சக்கரத்தை மூன்று திரிகோண பிரிவுகளாகப் பிரிக்கும், மூன்று முதல் ராசிகளான மேஷம். சிம்மம், தனுசு ஆகிய வீடுகளின், முதல் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் ஆகியவற்றின், முதல் பாதத்தில் அமரும் கிரகங்கள் வர்க்கச் சக்கரங்களில் அதே இடங்களில், மிக உயர் வர்க்கோத்தம நிலையில் இருக்கும்.

ராசியில் நீச நிலையில் இருக்கும் ஒரு கிரகம், வர்க்க உத்தமம் எனப்படும் வர்கோத்தம நிலையில், நவாம்சத்தில் மற்றும் ஏனைய வர்க்கச் சக்கரங்களில் அதேஇடத்தில் இருப்பின் அந்த கிரகம் வலிமை இழக்காது.  நவாம்சம் உள்ளிட்ட வர்க்கச் சக்கரங்களின் பயன் இதுவே.

எடுத்துக்காட்டாக மேலே நான் சொன்ன அஸ்வினி, மகம், மூல நட்சத்திரங்கள் அடங்கிய மேஷம், சிம்மம், தனுசு ஆகிய ராசிகளில் மேஷம் தவிர்த்த சிம்மம், தனுசு வீடுகளில் எந்தக் கிரகமும் நீசநிலையை அடைவதில்லை. மேஷத்தில் மட்டும் சனி நீசம் பெறுவார்.  மேஷத்தில் சனி நீசம் அடையும் நிலையிலும் அஸ்வினி முதல் பாதத்தில் வர்கோத்தமம் அடைந்திருப்பின் வர்க்கச் சக்கரங்கள் அனைத்திலும் அவர் அதே மேஷ ராசியில் அமர்ந்து உயர்நிலை பெறுவார்.

இதுபோன்ற வர்க்கோத்தம அமைப்பில், ராசிக்கட்டத்தில் சனி சுபத்துவ, சூட்சும வலுவோடு அமர்ந்து, லக்னப்படி நல்ல ஆதிபத்தியமும் பெறுவாராயின் சனியின் நீசநிலை ஜாதகருக்கு மிகுந்த நற்பலனைத் தரும். இங்கே நீசம் பெறும் சனி  ஆதிபத்திய மற்றும் காரகத்துவ ரீதியில் வலிமை இழப்பதில்லை. கூடுதலாக சுபத்துவம் மற்றும் சூட்சுமவலுவினை அடைந்திருந்தால், தனது தசையில் மிகப்பெரும் பொருள் வரவை ஜாதகருக்கு கொடுப்பார்.

2011இல் நான் எழுதிய “பாபக் கிரகங்கள் எப்போது நன்மை செய்யும்” எனும் கட்டுரையில், உயர்நிலை பணக்காரர் ஒருவருக்கு இந்த அஸ்வினி ஒன்றாம் பாதத்தில் சனி நீசநிலையில் இருந்து, சிம்மத்தில் இருக்கும் குருவின் பார்வையை பெற்றிருப்பதாலும், சனி நேர்வலு இழந்து திக்பலம் எனும் சூட்சும வலுவினைப் பெற்றிருப்பதாலும் இவர் சனியின் தொழில்களில் மிக உயர் நிலையை அடைவார் என்று எழுதியிருந்தேன்.

ராகு,  சனி,    
    31-7-1968     சூரி, புத, சுக்,செவ்
   குரு
       ல/ சந், கே

மேலே உள்ள இந்த மெகா கோடீசுவரரின் ஜாதகத்தில் சனி, செவ்வாய், குரு ஆகிய மூன்று கிரகங்கள் வர்க்கோத்தமம் அடைந்துள்ளன. தற்போது இவருக்கு சனி தசை நடந்து கொண்டிருக்கிறது. சனியின் நீசத்தொழிலான மதுபானத் துறையில் கடந்த எட்டு ஆண்டுகளில் இவரது வளர்ச்சி அபாரமாக உயர்ந்து. இன்றைக்கு மதுத்துறையில் இவர் முதலிடத்தில் இருக்கிறார்.

குடிக்கக்கூடாத அல்லது குடிக்க இயலாத மது, ஆசிட் போன்ற திரவங்கள் சனியின் காரகத்துவங்களில் அடங்கும். சனி இவருக்கு மதுவின் மூலம் பெரும் பொருள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த மிகப்பெரும் செல்வந்தருக்கு துலாம் லக்னமாகி, லக்ன ராஜயோகரான சனி, எனது பாபக் கிரகங்களின் சூட்சுமவலுக் கோட்பாட்டின்படி ஆட்சி, உச்சம் எனும் நேர்வலு இழந்து, வர்கோத்தமமாகி, திக்பலம் எனப்படும் சூட்சுமவலுவினை பெற்று, வர்கோத்தம நிலையில் அதிநட்பு ஸ்தானத்தில் இருக்கும் மிகுந்த ஒளிபொருந்திய குருவின் பார்வை பெற்று சுபத்துவமும் ஆகியிருக்கிறார்.

சனி, குரு இருவரும் வேறு கிரகங்களுடன் இணையாமல் தனித்திருக்கும் நிலையில், சூட்சும வலுப்பெற்ற சனியின் தசை ஆரம்பித்ததும் இவருக்கு மதுபானத்துறைத் தொடர்புகள் உண்டாகி இன்றைக்கு இத்துறையில் இந்திய அளவில் சொல்லக் கூடிய நிலையில் இருக்கிறார். இந்த நிலைக்கு சனியின் சுபத்துவ, சூட்சும வலுக்களும், வர்க்கோத்தமுமே காரணம்.

இவரது ஜாதகத்தில் ஜீவனாதிபதியான சந்திரன் வளர்பிறை நிலையில் பனிரெண்டில் அமர்ந்து, புதனுடன் பரிவர்த்தனையாகி, கேதுவுடன் இணைந்திருப்பதால் இவர் குரு தசையில் பனிரெண்டாம் பாவகத்திற்குரிய தொழிலையும், சனிதசையில் சந்திரனின் திரவத் தொழிலையும் செய்வார் என அவரது இளம் வயதிலேயே கணித்துச் சொல்லியிருந்தேன்.

வர்கோத்தமம் பெறும் கிரகங்கள் தனது காரகத்துவம் மற்றும் ஆதிபத்திய வலிமையை கூடுதலாகத் தரும். உதாரணமாக குரு வர்கோத்தமம் பெறுவது அவரது காரகத்துவங்களான தன, மற்றும் புத்திர பாக்கியத்திற்குச் சிறப்பு. குரு வர்கோத்தமம் பெறுவதன் மூலம் ஒருவரின் நிதிநிலைமை சீராகவும், வளமாகவும் இருக்கும்.

மேலே நான் உதாரணமாகக் காட்டியிருக்கும் மெகா கோடீசுவரர் சனிக்கு முந்தைய குருவின் தசையில் நூற்றுக்கணக்கான கோடிகளை மிகச் சுலபமான ஒரு துறையில் சில ஆண்டுகளில் சம்பாதித்தார். இதற்கு தன காரகனான குரு வர்கோத்தம நிலையில், லக்னாதிபதியின் சாரத்தில் அமர்ந்து, எவ்வித பங்கமும் அடையாமல் தனக்கு மிகவும் பிடித்த அதிநட்பு வீடான சிம்மத்தில் பதினொன்றாம் இடத்தில் அமர்ந்து இருந்ததே காரணம்.

பெரும்பாலான நிலைகளில் துலாம் லக்னத்திற்கு குரு தசை வரக்கூடாது என நான் எழுதுகிறேன். அதேநேரத்தில் விதிகளை விட விதிவிலக்குகளே அதிகம்  கவனிக்கப்பட வேண்டும் என்றும் சொல்லுகிறேன்.

அதன்படி இந்த மெகா கோடீஸ்வரரின் துலாம் லக்னத்திற்கு மிகப்பெரிய தீமைகளைச் செய்யக்கூடிய கொடிய பாவியான குரு, கெடுதல்களைச் செய்யும் தனது ஆதிபத்தியமான ஆறாம் பாவகத்திற்கு ஆறில் மறைந்து, பதினொன்றாம் வீட்டில் அமர்ந்து, ஆறாம் பாவகத்தின் தீமைகளைச் செய்ய இயலாமல் வலிமை இழந்து, தனது அதிநட்பு வீடான சிம்மத்தில் லக்னாதிபதியின் சாரத்தில் அமர்ந்திருப்பதால் தனது தசை முழுவதும் தனது காரகத்துவமான மிகப்பெரிய பொருள் வரவையும், இளம் வயதிலேயே திருமணத்தின் மூலம் குழந்தை பாக்கியங்களையும் கொடுத்தார்.

ஒரு கிரகம் நல்ல நிலையில் இருக்கும்பொழுது, தனது தசையில் தனது உயிர்க் காரகத்துவத்தை கொடுத்த பின்பே, ஜடக் காரகத்துவத்தை தரும் என்பதன் அடிப்படையில் இவருக்கு மிக இளம் வயதில் திருமணமாகி, அடுத்த ஒரு வருடத்திலேயே குழந்தை பிறந்து, தந்தை என்ற நிலையை அடைந்த பிறகு குரு தசை மிகப் பெரும் பொருள் வரவைக் கொடுத்தது.

வர்கோத்தமம் என்பது ஒரு கிரகத்தின் ஆதிபத்தியம் மற்றும் காரகத்துவங்களை கூடுதலாகத் தருவதுதான். இயற்கைச் சுபராக ஒரு கிரகம் இருந்தாலும், லக்னப்படி கெடுபலன்களைத் தரும் நிலை இருக்கும்போது, அக்கிரகம் தனது காரகத்துவத்தை முறையாகத் தந்து, ஆதிபத்தியத்தின் வாயிலாகக் கெடுக்கும்.

வர்கோத்தமம் எனப்படுவது ஒரு கிரகத்தின் வலிமை மட்டும்தான். அது நல்ல, வலிமையா, கெட்ட வலிமையா என்பது அந்தக் கிரகத்தின் ஆதிபத்தியத்தைப் பொறுத்தது என்பதைப் புரிந்து கொள்வது நல்லது.

சுக்கிரன் வர்கோத்தமம் பெறுவது ஜாதகத்தில் அவரது ஆதிபத்தியத்தை வலிமையாக்கி, சொகுசு வாழ்க்கையையும், நல்ல மனைவி, பெண் சுகம், அனைத்திலும் கவர்ச்சி, கலைத்திறன், ஏதேனும் ஒருதுறையில் பிரபலம் போன்றவைகளை சுக்கிர தசையில் கொடுக்கும்

சூரியன் வர்கோத்தமம் பெறின் இயல்பாகவே ஜாதகருக்கு தலைமை தாங்கும் பண்பு இருக்கும். எதிலும் ஒரு தன்னம்பிக்கையான போக்கும், சிறந்த நிர்வாகத் திறனும் உண்டு. தந்தையின் மூலம் நன்மைகளை அனுபவித்தலும், அரசியல் உயர்வும் ஜாதகருக்கு இருக்கும். சூரியன் வர்கோத்தமமாகி சுபத்துவ, சூட்சும வலுவோடு இருப்பின் அரசு வேலை, அரச லாபம் போன்றவைகள் ஜாதகருக்கு உண்டு.

சந்திரன் வர்கோத்தமம் பெற்றால் ஜாதகர் நல்ல தாயைக் கொண்டவராக இருப்பார். தாயாரால் அனைத்து மேன்மைகளும் உண்டு. ஜாதகரின் மனவலிமை மிக நன்றாக இருக்கும். எதிலும் உடனடி முடிவு எடுத்து அதனை நல்லவிதமாக செயல்படுத்தியும் காட்டுவார். பொதுநலத்தோடு இருப்பார். சமூக அக்கறை உண்டு. சந்திரன் நல்ல ஆதிபத்தியம் பெற்றிருந்தால் ஜாதகர் பிரபலமாக முடியும்.

செவ்வாய் வர்கோத்தமம் பெற்றிருந்தால் சகோதர உறவு மற்றும் சகோதர நிலை, சகோதரரால் லாபம் போன்றவைகள் நன்றாக இருக்கும். ஜாதகர் துணிச்சல் உள்ளவராகவும், உடற்பயிற்சியில் விருப்பம் கொண்டவராகவும் இருப்பார். எதிலும் ஒரு அதிகாரத் தோரணை, தைரியம், இளமையான தோற்றத்தில் ஆர்வம்  போன்றவைகள் இருக்கும். செவ்வாய் சம்பந்தப்பட்ட துறைகளால் லாபம் வரும். மருத்துவம், நெருப்பு, விளையாட்டு, அதிகாரம் போன்ற துறைகள் ஜாதகருக்கு அமையும்,

புதன் வர்கோத்தமம் பெறுவதன் மூலம் ஜாதகர் புத்திசாலித்தனத்துடன் இருப்பார். பேச்சுத்திறமை நன்றாக இருக்கும். எதையும் சட்டென்று கிரகித்துக் கொள்ளும் குணத்தை புதன் தருவார். புதன் எந்த ஆதிபத்தியத்தை பெறுகிறாரோ அதன் மூலம் நன்மைகளோ, தீமைகளோ இருக்கும். கணிதம், சாப்ட்வேர் போன்ற துறைகளில் நிபுணராக இருப்பார். ஜோதிடம் வரும். எதிலும் வியாபாரக் குணங்கள் இருக்கும். பிறர் விரும்பும்படி நடப்பார்.

சனி நேர்வலு அமைப்பில் வர்கோத்தமம் பெற்றால் ஜாதகர் அதிக நிதானம் உடையவராக இருப்பார். மெதுவாகவும், பொறுமையாகவும் செய்யக் கூடிய வேலைகளில் திறன் உண்டு. அந்த வேலைகள் அவருக்குப் பிடிக்கும். எதிலும் அதிக யோசனை உள்ளவராக இருப்பார். சிறிய விஷயத்திற்கும் மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்வார். ஒரு முடிவு எடுப்பதற்கு ஒரு மாமாங்கம் ஆகும்.

ஆதிபத்திய ரீதியில் சனி, லக்னசுபராகி சுபத்துவமும் சூட்சும வலுவும் பெற்றிருப்பின் அவரது வர்கோத்தம நிலைமை இந்த பலனை தலைகீழாக மாற்றும்.

ராகு-கேதுக்கள் வர்கோத்தமம் பெற்றிருப்பின், அவர்கள் இருக்கும் வீட்டின் அதிபதியின் நிலையை பொருத்து பலன்கள் இருக்கும். பெரும்பாலான நிலைகளில் இந்த ராகு-கேதுக்கள் தான் இருக்கும் வீட்டின் அதிபதியின் குணத்தையும், தன்னோடு சேர்ந்திருக்கும் கிரகங்களின் அமைப்பையும் பிரதிபலிக்கும் என்பதால் ராகு-கேதுக்களின் வர்கோத்தம நிலையினை அவர்கள் இருக்கும் வீட்டின் அதிபதியின் நிலையோடு ஒப்பிட்டு கணக்கிட வேண்டும்.

ஆயினும் ராகு-கேதுக்களுக்கென தனிக் காரகத்துவங்கள் இருப்பதால், அவற்றின் காரகத்துவ அமைப்புகள் சர்ப்பக் கிரகங்களின் வர்கோத்தம நிலையில் சிறப்பான பலன்களைத் தரும். உதாரணமாக ராகுவிற்கு நல்ல பலன்களைத் தரும் இடங்களாக சொல்லப்படும் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி ,மகரம் மற்றும் கேதுவிற்கு நல்ல இடங்களான கும்பம், விருச்சிகம், கன்னி ஆகிய இடங்களில் இவர்கள் வர்கோத்தமம் அடைந்து, மேற்கூறிய இடங்களில் சுபத்துவ, சூட்சும வலுவோடும் அமைந்திருப்பின், அமர்ந்த வீட்டின் ஆதிபத்திய நிலைகளின்படி பெரும் பொருள் தருவார்கள்.

ராகு என்பவர் சாமர்த்தியமாக ஏமாற்றும் குணமுடைய கிரகம் என்பதால் ஒருவருக்கு சாதுர்யமான, சுலப வழிகளில் பொருள் தருவார். குறுக்கு வழிகளில் செல்ல வைப்பார். பிரபலமும் அடையச் செய்வார்.

வர்கோத்தம நிலையில் ராகு-கேதுக்கள், ஒரு கேந்திர வீட்டில், திரிகோண அதிபதியுடனோ, ஒரு திரிகோண வீட்டில் கேந்திராதிபதியுடனோ அமர்வது மிகுந்த சிறப்பைத் தரும். தனித்து மூன்று. பதினொன்றாமிடங்களில் சுபத்துவ, சூட்சும வலுவோடு இருக்கும் நிலையில் மிக நல்ல பலன்களைத் தருவார்கள். சில நிலைகளில் ஆறாமிட ராகு,கேதுக்கள் நன்மைகளைத் தருவதில்லை.

அடுத்த வெள்ளி சந்திப்போம்.

(03.05.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *