ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888
கேள்வி.
ஜோதிடத்தை சுவாசமாக கொண்ட குருஜி அவர்களுக்கு வணக்கம். 2018 ஜூலை மூன்றாம் திகதி மாலைமலரில் எனது கேள்விக்கு, அண்ணாவிற்கு அக்டோபரில் வேலை அமையும் என்று சொன்னீர்கள். அதுபோலவே அவனுக்கு அரபு நாட்டில் நல்ல வேலை கிடைத்துள்ளது. மாலைமலரின் ஊடான பதிலுக்கு மிக்க நன்றி. நான் ஆசிரியர் தொழில் செய்து வருகிறேன். 26-1-2019 அன்று சந்திரதசை, சந்திர புக்தியில் எனக்குப் பிடித்தமான இந்த அரச தொழில் கிடைத்தது. இத்தொழிலில் பெரிய பதவிகள் கிடைக்குமா? படிப்படியாக பதவி உயர்வு வருமா? எப்போதும் உடலில் ஒரு சோர்வு, பயம், தலைவலி, நெஞ்சு நோவு இருந்து வருகிறது. சிறுவயதில் சைக்கிளில் விழுந்து காலில் அடிபட்ட காயத்தில் வீக்கம் தற்போதும் உண்டு. அதிலும் தற்போது நோவு இருக்கிறது. அதனால் ஏதாவது தீராத வியாதி இருக்குமோ என்று மனம் பயப்படுகிறது. எனது பலனில் அவ்வாறு உண்டா? சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய், ஏதாவது தீராத வியாதி எனக்கு உண்டா? எனது ஆயுள் பலம் எவ்வாறு உள்ளது?
பதில்.
(துலாம் லக்னம், மேஷ ராசி, 3ல் சனி, செவ்வாய், 4ல் புத, 5ல் சூரி, 6ல் சுக், ராகு, 7ல் சந்திரன், குரு, 12ல் கேது, 21-2-1988 இரவு 11-23 அம்பாறை, இலங்கை.)
சந்திரனுக்கு கேந்திரத்தில் புதன் அமர்ந்து, அம்சத்தில் ஆட்சி பெற்றுள்ளதால், உனக்கு ஓரளவிற்கு ஜோதிடம் தெரியும். அரைகுறையாய் ஜோதிடம் தெரிந்தாலே ஆபத்துதான். இதுபோல குழப்பங்கள் வந்து விடும். என்னுடைய சுபத்துவ, சூட்சுமவலுக் கோட்பாட்டின்படி சிம்மம் வலுத்த குருவின் பார்வையால் சுபத்துவமாகி, சிம்மாதிபதி சூரியன் சிமமத்தை பார்ப்பதால், ஜீவனாதிபதி சந்திரனின் தசையில் உனக்கு அரசு வேலை கிடைத்திருக்கிறது.
சந்திரன் வளர்பிறையாகி குருவுடன் இணைந்து, வேலையைக் குறிக்கும் ஆறாமிடத்திற்கு பத்தில் குரு பரிவர்த்தனையாகி உள்ளதால், அடுத்தடுத்து உனக்கு வேலையில் மேன்மைகளும், பதவி உயர்வும் நிச்சயமாக உண்டு. லக்னாதிபதி உச்சம் ஆனாலும் 6ல் அமர்ந்து, ராகுவுடன் இணைந்து பாபத்துவமாக இருப்பதால் ஊரில் இருக்கும் அனைத்து வியாதிகளும் நமக்கு வந்துவிடுமோ என்ற பயத்தில் இருக்கிறாய். இதுபோன்ற தீராத வியாதிகள், உயிர்க்கொல்லி நோய்கள் எதுவும் உனக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை. மனிதர்களுடைய சிறுசிறு மருத்துவ சங்கடங்கள் உனக்கும் உண்டு. எதிர்காலத்தில் மிகவும் நன்றாக இருப்பாய். வாழ்த்துக்கள்.
மாலினி, அமெரிக்கா.
கேள்வி.
2003ல் திருமணமாகி 2019 விவாகரத்தாகி விட்டது. 14 வயது மகன் இருக்கிறான். என்னை மறுமணம் செய்து கொள்ள கூறுகிறான். எனக்கு மறுமணம் நடக்குமா? எப்போது? இனி வரும் கணவர் நல்லவராக இருப்பாரா? என்ன துறையில் இருப்பார்? இந்தியரா அல்லது வெளிநாட்டவரா? நாங்கள் சந்தோஷமாக இருப்போமா? 14 வருடம் மிகவும் அவதிப்பட்டேன். இன்னொரு சந்தோஷம் இல்லாத திருமணம் கனவிலும் வேண்டாம். நேரில் வர முடியாத இந்த வாசகிக்கு பதிலளியுங்கள். உங்கள் நல்லாசி பதிலுக்கு காத்திருக்கிறேன்.
பதில்.
(கும்ப லக்னம், சிம்ம ராசி, 1ல் கேது, 5ல் செவ், 6ல் புத, குரு, 7ல் சூரி, சந், சுக், சனி, ராகு, 22-8-1979 இரவு 7-30 சென்னை)
முதல் திருமணத்தைக் குறிக்கும் ஏழாமிடமும், ஏழாம் அதிபதியும் வலுவிழந்து இரண்டாம் அமைப்பைச் சொல்லும் பதினொன்றாம் அதிபதி உச்சமான களத்திர தோஷ அமைப்புள்ள ஜாதகம். ஏழாமிடத்தில் அமாவாசை சந்திரன், சனி, ராகு அமர்ந்து பாபத்துவமாகி, ஏழாம் அதிபதி சூரியனும் அங்கே பாபர்களுடன் இணைந்து பலவீனமானதால் முதல் திருமணம் நிலைக்காது.
இரண்டாவது கணவனைக் குறிக்கும் பதினொன்றாம் அதிபதி குரு உச்சமானதால் இரண்டாவது வாழ்க்கை நன்றாகவே இருக்கும். ஜாதகப்படி லக்னமும். லக்னாதிபதியும் பாபக்கிரக ஆக்கிரமிப்பில் இருப்பதால் நீ கடுமையான குணங்கள் கொண்ட பெண்ணாக இருப்பாய். உன்னால் வாழ்க்கையில் அனுசரித்துப் போகவே முடியாது. மற்றவர்களைப் புரிந்து கொள்ளாமல் உன் வழிக்கே மற்றவர்கள் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் கடுமையான பிடிவாதக்காரி நீ. முதல் திருமணம் தோல்வியில் முடிந்ததற்கு உனது குணமும் ஒரு காரணமாக இருக்கும். அதே நேரத்தில் ஏழுக்குடையவன் கடுமையான பாபத்துவம் பெற்றதால் முதல் கணவனும் சரியானவன் அல்ல. 15 வருடங்கள் நீ தாக்குப் பிடித்ததே ஆச்சரியம்.
பதினொன்றாம் அதிபதி குருவாகி, உச்சம் பெற்று, தனிப் புதனுடன் இணைந்ததால் இரண்டாவது வாழ்க்கை நன்றாகவே இருக்கும். வர இருக்கும் கணவன் தனது அறிவால் பிழைக்கும் உத்தியோகத்தில் இருப்பார். இந்தியர்தான். கும்பலக்னத்திற்கு வரக் கூடாது என்று நான் சொல்லும், வம்பு, வழக்குகளை குறிக்கும் சந்திர தசை முடிந்து விட்டதால் அடுத்து வர இருக்கும் செவ்வாய் தசையில், தசாநாதன் செவ்வாய் பதினொன்றாம் இடத்தை பார்ப்பதால் அடுத்த திருமணம் நடக்கும். இரண்டாவது திருமணம் உனக்கு நன்றாக இருக்கும். கடந்த 10 ஆண்டுகளாக சந்திர தசையில் நீ பட்ட துயரங்கள் இனி உன் வாழ்க்கையில் வரப்போவது இல்லை. எதிர்காலத்தில் நன்றாகவே இருப்பாய். வாழ்த்துக்கள்.
எஸ். மஞ்சுளா, நெசப்பாக்கம்.
கேள்வி.
2015ல் திருமணமாகி இதுவரை நானும் கணவரும் சேர்ந்து வாழ முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம். எப்போதும் பிரச்சனையும் வேதனையுமாக இருந்து வருகிறது. 2016இல் என்னுடைய முதல் குழந்தையை சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்க முடியாததால் பிறந்தவுடன் இறந்து விட்டது. 2017ல் பிறந்த அடுத்த குழந்தையை நன்றாக கவனித்துக் கொள்ள மருத்துவ வசதி இருக்கும் இடத்திற்கு குடும்பத்துடன் இடம் பெயர்ந்து செல்லலாம் என்று கணவரிடம் கேட்டதிலிருந்தே மிகப் பெரிய சண்டையாகி 2018 மார்ச் மாதம் முதல் நாங்கள் பிரிந்து வாழ்கிறோம். முதல் குழந்தையின் இறப்பு என் மனதில் பாதிப்பையும் பயத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டாவது பிறந்த குழந்தையையாவது நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மனதில் உறுத்திக் கொண்டே இருக்கிறது. இந்தக் குழந்தை பிறந்த நாளன்று கூட என்னுடன் அதன் தந்தை இல்லை. குழந்தையை பார்க்காமலும் அதன் நினைவு கூட இல்லாமலும் என் கணவர் இருக்கிறார். கடந்த தீபாவளி அன்று என்னையும் என் குழந்தையையும் வீட்டுக்கு வெளியே நின்று பார்த்துவிட்டு சென்றதோடு சரி, இதுவரை எட்டிக்கூட பார்க்கவில்லை. குழந்தையும் நானும் அம்மா வீட்டில் இருக்கிறோம். பார்க்கும் ஜோதிடர்கள் எல்லாம் மாங்கல்ய தோஷம், செவ்வாய் தோஷம் இருக்கிறது. காளகஸ்தி, திருநள்ளாறு, திருமங்கலக்குடி, சூரியனார் கோவில், திருவெண்காடு கோவில்களுக்கு சென்று பரிகாரம் செய்யுங்கள். பங்குனி மாதத்தில் மாங்கல்ய தானம் செய்து புது மாங்கல்யம் கட்டிக் கொள். நீயும் கணவரும் ஒன்று சேர்ந்து விடுவீர்கள் என்று சொல்கிறார்கள். 2017 முதல் ஏற்பட்ட இழப்புகளையும், உறவினர்களிடையே பட்ட அவமானங்களையும் வேதனைகளையும் சொல்ல அளவே இல்லை. குழந்தையின் எதிர்காலம் என்னவாகும்? கணவர் வீடு மாற்றுவாரா? என் மீதும் என் குழந்தை மீதும் அன்பு செலுத்துவாரா? ஏன் குழந்தையின் மீது அக்கறை இல்லாமல் இருக்கிறார்? நாங்கள் மூவரும் எப்போது ஒன்று சேர்ந்து வாழ்வோம்? தயவுசெய்து வாழ்க்கைக்கும் வேதனைகளுக்கும் வழி கூறுங்கள்.
பதில்.
(ரிஷப லக்னம், தனுசு ராசி, 1ல் செவ், 3ல் குரு, கேது, 8ல் சூரி, சந், புத, 9ல் சுக், சனி, ராகு, 13-1-1991 மதியம் 3-5 சென்னை)
வாக்கியப் பஞ்சாங்கப்படி விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் என தவறாக கணிக்கப் பட்ட ஜாதகம். உண்மையில் நீ மூல நட்சத்திரம் தனுசு ராசியில் பிறந்திருக்கிறாய். உன்னுடைய ஜாதகத்தைக் கணித்த ஜோதிடர் நீ பிறந்த அன்று சென்னையில் சூரிய உதயம் 6-42 என்று தவறாக கணித்திருக்கிறார். அன்று சூரிய உதயம் 6-34 தான்.
தனுசு ராசியில் பிறந்த உனக்கு கடந்த 2015 முதல் தற்போது கடுமையான ஜன்மச்சனி அமைப்பு நடந்து வருகிறது. எங்கு வலிக்குமோ அங்குதான் சனி அடிப்பார் என்பதன்படி ஒரு பெண்ணுக்கு மிகவும் மன அழுத்தத்தை தரக்கூடிய கணவர், குழந்தை விஷயங்களில் உனக்கு கஷ்டங்களை சனி தருகிறார். கடுமையான ஜென்மச்சனி நடக்கும் போது பிறந்த ஜாதகம் செயலற்றுப் போய்விடும் என்பதையும் அடிக்கடி எழுதி வருகிறேன். அதன்படி உனக்கு கணவரும் குழந்தையும் சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை.
2020 ஏப்ரல் மாதம் வரை உனக்கு நல்ல பலன் சொல்வதற்கு இல்லை. இந்த வருடம் தீபாவளிக்கு பிறகு உன்னுடைய மனம் சந்தோஷமாக இருப்பதற்குரிய மாற்றங்கள் ஏற்படும். அதுவரை பொறுமையாக இரு. ஜாதகப்படி வேலை, தொழில் நிலைமைகளில் உன்னுடைய கணவரும் நன்றாக இல்லை. வீடு மாற்றுவது என்பது பொருளாதாரம் சம்பந்தப்பட்டது. மனைவி நினைத்தவுடன் வீட்டை மாற்றுவதற்கு கணவன் பாக்கெட்டில் பணம் இருக்க வேண்டும். அது இப்போது உன்னுடைய கணவனிடம் இருக்காது. ஜாதகப்படி அவர் குழந்தையிடம் பாசம் இல்லாதவர் இல்லை.
மனைவிக்கு கடுமையான ஜென்மச்சனி நடக்கும்போது கணவனுக்கு வேலை, தொழிலில் குறைகளும், கடன் போன்ற பிரச்சினைகளும் இருக்கும். ஆகவே உன்னையும் குழந்தைகளையும் கவனிக்க நேரமின்றி, தன்னுடைய உயிர் வாழும் போராட்டத்தில் தன்னைக் கவனிக்கவே அவருக்கு நேரம் சரியாக இருக்காது. பொறுமையாக இரு. எந்த பரிகாரமும் ஜென்மச்சனி முன் எடுபடாது. அடுத்த வருடம் இதே மாதம் முதல் கணவருடன் சேர்ந்து சந்தோஷமாக இருப்பாய். பொறுத்தார் பூமியாள்வார் என்பதை மனதில் வைத்து வாழ்க்கையை இன்னும் சில மாதங்கள் சகித்துக் கொள்.
சனிக்கிழமை தோறும் அருகில் இருக்கும் பழமையான ஈஸ்வரன் கோவிலில் அருள் பாலிக்கும் காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வா. வரும் தீபாவளி முதல் மாற்றங்கள் தெரியும். கணவர் குழந்தைகளுடன் எதிர்காலத்தில் சந்தோஷமாக இருப்பாய். வாழ்த்துக்கள்.
(16.04.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
ஐயா,வணக்கம்.உங்கள் பதிவுகள் அருமை.ஜோதிடத்தில் ஆர்வம் சற்று அதிகம்.எய்ட்ஸ்,புற்றுநோய்
முதலிய நோய்களால் பாதித்த ஜாதக
அமைப்புகளை பற்றி கூறவும். காரணமான கிரகங்கள் எவை…?