ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888
வழக்கம்போலவே சென்ற கட்டுரைக்கும் சந்தேகங்களுக்கு குறைவில்லை.
வழக்கம்போலவே சென்ற கட்டுரைக்கும் சந்தேகங்களுக்கு குறைவில்லை.
“முன்பு நீங்களே ஒரு விதியை சொல்லியிருக்கிறீர்கள், அதற்கு மாறாக இப்போது இந்தக் கருத்தைச் சொல்கிறீர்கள்” என்பதாக உங்களின் சந்தேகங்கள் இருக்கின்றன. உதாரணமாக, இந்த இடத்தில் குருவின் இணைவால் இந்தக் கிரகம் சுபத்துவத்தை அடைந்திருக்கிறது, ஆனாலும் அது நல்லபலனைத் தரவில்லையே, உங்களின் பதிலும் வேறாக இருக்கிறதே என்றெல்லாம் கேட்டிருக்கிறீர்கள்.
சுபத்துவம் மற்றும் சூட்சுமவலு ஆகியவற்றின் படிநிலைகளை ஏற்கனவே சுருக்கமாக “ஜோதிடம் எனும் தேவரகசியம்” கட்டுரைகளில் சனியைப் பற்றிய அத்தியாயங்களில் குறிப்பிட்டிருக்கிறேன். ஒரு கிரகம் இரண்டு அல்லது மூன்று கிரகங்களுடன் இணைந்திருக்கும்போது அங்கே எந்தக் கிரகம் சுபத்துவமோ, சூட்சுமவலுவோ அடைந்திருக்கிறது என்பதைக் கணிக்க வேண்டியது மிக முக்கியமான ஒன்று.
அதைவிட சுப நிலையைத் தரும் அந்தக் கிரகம் வலிமையாக இருக்கிறதா என்பதையும் நிச்சயமாக கணக்கிட்டாக வேண்டும். ஒரு பாவகத்தில் கூட்டுச் சேர்ந்திருக்கும் கிரகங்களின் தனித்தனி சுப, சூட்சுமவலு நிலைகளைக் கணக்கிடுவது மகா நுணுக்கமானது. அதற்கு கிரகங்களின் நட்பு, பகை உறவு மற்றும் பாவகங்களின் உச்ச, ஆட்சி, நீச நிலை மற்றும் சர, ஸ்திர, உபய, ஆண்-பெண் பற்றிய உயர்நிலை புரிதலும் வேண்டும்.
சுபத்துவ, சூட்சுமவலு அமைப்பினை நான் பலன் சொல்வதில் உச்சபட்ச நிலையாகச் சொல்லுகிறேன். அதாவது ஜோதிடத்தில் ஜாதகபலனை அறிவதற்காக நீங்கள் போட வேண்டிய கடைசிக் கணிதங்கள் இவை. இந்த அமைப்பிற்கு அருகே நீங்கள் வரும்போது நிச்சயமாக வேத ஜோதிடத்தை ஓரளவிற்கேனும் கரைத்துக் குடித்திருக்க வேண்டும். பல நூறு ஜாதகங்களை பார்த்தறிந்திருக்க வேண்டும்.
ஒரு மனிதனின் எதிர்காலம் சொல்லும் இந்த மகா கலையில் அனுபவம் என்பது மிக மிக அவசியம். உங்கள் ஜாதகத்தை மட்டும் வைத்துக்கொண்டு சுபத்துவ, சூட்சுமவலு அமைப்பினை உங்களால் முதலில் அறிந்துகொள்ள முடியாது. சந்தேகம் உள்ளவர்கள் அனைவரும் கேள்வி கேட்பதை விடுத்து முதலில் ஆராய ஆரம்பியுங்கள்.
குறிப்பாக நீங்கள் அறிந்த ஜாதகங்கள் அனைத்தையும் தொகுத்து வைத்துக் கொண்டு, ஜாதகர் இருக்கின்ற நிலை, அவரது குண அமைப்பு, அவருக்கு வருமானம் வரும் வழிகள் அனைத்தையும் தனித்தனியே ஒரு நூறு ஜாதகங்களை வைத்து நீங்கள் ஆராயும்போது நான் சொல்லும் சுபத்துவம் மற்றும் சூட்சும வலுக் கோட்பாட்டின் உண்மைத்தன்மை புரிய வரும்.
சென்ற வார “ஒளியிழந்த லக்னம்” கட்டுரையில் இன்னுமொரு சந்தேகமும் எழுப்பப்பட்டிருக்கிறது. லக்னம் வலுவிழந்தால் ராசி பலன் செய்யும் என்றுதானே சொன்னீர்கள், இங்கு இராசி நன்றாகத்தானே இருக்கிறது அப்போது ஏன் நீங்கள் ராசிக்குப் பலனைச் சொல்லவில்லை, நீங்களே உங்களுடைய கருத்தை மறுத்து எழுதியிருக்கிறீர்களே என்றெல்லாம் அதிகமான கருத்து மறுப்புகள் தொலைபேசி மூலம் கேட்கப்பட்டிருக்கின்றன.
கட்டுரையைப் படிப்பவர்கள் ஆழமாக படிப்பதில்லை, மேலோட்டமாகத்தான் படிக்கிறீர்கள் என்பது தெரிகிறது. நான் அடிக்கடி சொல்வது ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் என்னுடைய கட்டுரைகளைத் திரும்பத் திரும்ப படிப்பதன் மூலம் புரியாத சில விஷயங்களை புரியும் நிலைக்கு வருவீர்கள் என்பதுதான்.
சென்ற உதாரண ஜாதகத்தின் ஆரம்பக் கட்டுரையில் அதன் ராசியைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். லக்னத்தைப் போலவே ராசியும் வலுவிழந்த ஜாதகம் அது. ராசி மேம்போக்காக வலுவாக இருப்பதாகத் தெரிந்தாலும், ராசிநாதனாகிய செவ்வாய் மூன்று பெரும் பாபர்களுடன் கூடி வலிமை இழந்திருக்கிறார்.
செவ்வாய் உச்சமாக இருப்பினும் அங்கே, சனி, புதன், ராகு-கேதுக்களுடன் இணைந்து கடுமையான பாபத்துவ அமைப்பில் இருக்கிறார். செவ்வாய் கேதுவுடன் இணைந்திருப்பது சூட்சுமவலுதான் என்றாலும், தனித்து செவ்வாயும், கேதுவும் இருக்கும் நிலையில்தான் அதை முழுமையான அமைப்பாகச் சொல்ல முடியும்.
மற்ற பாபர்களுடன் சேர்ந்திருக்கும் நிலையில் அங்கே பாபத்துவமே மேலோங்கி நிற்கும். சூட்சுமவலு பின்னுக்குத் தள்ளப்படும். இங்கே ராசிநாதனான செவ்வாய், சனியுடன் இணைந்து அதிகமான பாப அமைப்பில் இருக்கிறார் என்பதே சரி. ஆகவே லக்னமும், ராசியும் வலுவிழந்த ஜாதகம் அது.
கீழே இன்னொரு உதாரண ஜாதகத்தை கொடுத்திருக்கிறேன். சென்ற வார எடுத்துக்காட்டான ஜாதகத்தைப் போலவே இவருக்கும் திருமணம் ஆகவில்லை. திருமணத்தில் விருப்பமும் தற்போது இல்லை. அதைவிட குறிப்பாக நாற்பது வயதாகியும் பெண் என்றால் என்னவென்றே தெரியாத, பெண் சுகம் கிடைக்காத ஜாதகம் இது. இந்த ஜாதகர் 18-3-1979 காலை மணி 8-40க்கு மதுரையில் பிறந்திருக்கிறார். சென்ற ஜாதகத்தில் லக்னம் ஒளியிழந்த நிலையில், லக்னாதிபதி ஒளியிழந்த அமைப்பு இது.
ஜாதகருக்கு மேஷலக்னம், துலாம் ராசியாகி, லக்னாதிபதி செவ்வாய் பதினொன்றாமிடமான சனியின் வீட்டில் அமர்ந்து கேதுவுடன் இணைந்திருக்கிறார். லக்னாதிபதி இங்கே சூட்சுமவலுவுடன் இருக்கிறார் என மேம்போக்காக தெரிந்தாலும், சென்ற ஜாதகத்திற்கு நான் சொன்னதைப்போல, சனியின் பார்வையை செவ்வாய் பெற்றதால் சூட்சுமவலு இங்கே வலுவிழந்து, பாபத்துவம் மட்டுமே மேலோங்குகிறது. ஆக இங்கே லக்னாதிபதி செவ்வாய், சனி, ராகு- கேதுக்களுடன் இணைந்து கூடுதலான பாப அமைப்பில் இருக்கிறார் என்பதே சரி.
இவருக்கும் திருமணம் ஆகவில்லை என்று சொன்னேன். திருமணத்தில் ஆர்வமும் இவருக்கு இல்லை. இல்லறம் என்பதும் அதில் நாட்டம் இருப்பதும் தனக்கு ஒரு வாரிசு உருவாக வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகத்தான். ஒருவருக்கு குழந்தையைத் தருவது ஐந்தாம் பாவகமும், அதன் அதிபதியும், புத்திர காரகனாகிய குருவும்தான்.
இந்த ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் முற்றிலும் வலுவிழந்து இருக்கிறது. ஒரு வீட்டோடு சனி, செவ்வாய், ராகு ஆகிய மூன்று கிரகங்களும் ஒட்டுமொத்த தாக்குதல் நடத்துமாயின் அந்த பாவகம் முற்றிலுமாக வலுவிழக்கும் என்பதை ஏற்கனவே நான் எழுதி இருக்கிறேன்.
அந்த அமைப்பின்படி இந்த ஜாதகத்தில் ஐந்தாமிடத்தில் சனி, ராகு அமர்ந்த நிலையில் ஐந்தாமிடத்தை செவ்வாய் பார்க்கிறார். முப்பெரும் பாவிகளான சனி, செவ்வாய், ராகு மூவரும் புத்திர ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் தாக்குதல் நடத்துவதால் ஜாதகருக்கு திருமண அமைப்பில் ஆர்வம் குறைந்து விட்டது.
ஐந்தாம் பாவகம் வலுவிழந்த நிலையில் ஐந்திற்கு அதிபதியான சூரியன், தன் வீட்டிற்கு எட்டிலும், லக்னத்திற்கு பனிரெண்டிலும் மறைந்து, இந்த லக்னத்தின் முழுமுதற் பாவியான புதனுடன் இணைந்திருக்கிறார். புதனுக்கு வீடு கொடுத்த குரு உச்சநிலையில் இருப்பதால் புதனுக்கு நீசபங்கம் இருக்கிறது. மேஷ லக்னத்திற்கு புதன் நீசபங்கம் அடைவது சில நிலைகளில் நன்மைகளைத் தராது.
நீசபங்கம் அடைவதன் மூலம் புத்திக்காரகன் புதன் அறிவு உள்ளிட்ட சில நல்ல விஷயங்களை செய்தாலும், தனது தசையில் ஆறாமிடத்து கொடிய பலன்களை முழுமையாக தருவார். காரக ரீதியில் நற்பலன்களைத் தரும் புதன், தனது தசையில் ஆதிபத்திய பலன்களை கடுமையாக செய்து, குறிப்பாக கடன், நோய் பிரச்சினைகளை தந்து ஜாதகரை வதக்குவார்.
இந்த ஜாதகத்தின் முழுமையான எதிரியான புதனின் இணைவு, பார்வை கிடைக்கும் எவரும் நன்மைகளைச் செய்ய முடியாது. அதேபோல புதனின் வீடுகளில் இருக்கும் தசா புக்திகளும், புதனின் வலுவிற்கு ஏற்ப மேஷ லக்னத்திற்கு கெடுதல்களைச் செய்யும்.
அடுத்து புத்திர காரகனாகிய குரு உச்சமாக இருப்பதைப் போலத் தோன்றினாலும், வக்ரம் பெற்ற நிலையில் முழுக்க நீச நிலையில் இருக்கிறார். அதைவிட மேலாக நான் அடிக்கடி சொல்லும் குரு, சுக்கிர நேருக்கு நேர் பார்வை இந்த ஜாதகத்திலும் இருக்கிறது.
குரு, சுக்கிரன் இருவரும் சம சப்தமமாக இருக்கும்போது ஜாதகருக்கு தாம்பத்திய சுகம் மறுக்கப்படும் அல்லது விருப்பம் இல்லாது போகலாம். இருவரில் யார் அந்த ஜாதகத்திற்கு யோகாதிபதி என்பதைப் பொருத்து, தாம்பத்திய சுகம் அல்லது புத்திரசுகம் இவற்றில் எது குறைவு படும் என்பதைக் கணிக்கப் பட வேண்டும்.
ஆக புத்திர பாவகம் வலுவிழந்து போனதாலும், குரு, சுக்கிரன் நேருக்கு நேர் அமைவதாலும், இந்த ஜாதகருக்கு பெண் சுகத்தில் நாட்டமில்லை. அதைவிட மேலாக இதுவரை பெண் சுகமே கிடைக்காத ஜாதகம் இது. லக்னத்திற்கு ஐந்தாம் இடம் வலுவிழந்ததைப் போலவே, ராசிக்கு ஐந்தாமிடத்திலும் செவ்வாய், சனி, ராகு தாக்குதல் இருப்பதால், ஜாதகருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அவருக்கு திருமண அமைப்பிலும் தற்போது ஆர்வமில்லை.
மேலும் ஒரு கருத்தாக, தசாபுக்தி அமைப்புகளே வாழ்க்கைச் சம்பவங்களை நிர்ணயிக்கின்றன என்பதையும் விளக்கி இருக்கிறேன். இவருக்கு மிக முக்கிய நடுத்தர வயது காலகட்டமான 32 வயது முதல் 49 வயதுவரை மேஷ லக்னத்திற்கு வரக்கூடாது என்று நான் சொல்லும் புதன் தசை நடந்து கொண்டிருக்கிறது
புதன் நீசபங்க நிலைபெற்று ஆறாமிடத்தைப் பார்த்து தசை நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த அமைப்பில் நடுத்தர வயதில் ஜாதகருக்கு கிடைக்கக் கூடிய அனைத்தையும் புதன் தடுப்பார். இதுபோன்ற அவயோக தசைகள் நடக்கும் போது ஜாதகருக்கு எந்த பாவகம் பலவீனம் பெறுகிறதோ அதன் செயல்கள் முற்றிலும் கிடைக்காமல் தடுக்கப்படும்.
இதையே தலைகீழாக சொல்லப்போனால் யோக தசை நடக்கும்போது எந்த பாவகங்கள் வலுவாக இருக்கிறதோ, அந்த பாவகங்கள் மூலம் அனைத்து நன்மைகளும் ஜாதகரின் வயதிற்கு ஏற்ப கிடைக்கும். நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் விதி ஒன்றுதான். நாம்தான் நம்முடைய அனுபவத்திற்கேற்ப அதனை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த வார உதாரண ஜாதகத்தில் ராசி வலுவாகவே இருக்கிறது. ராசிநாதன் நட்பு வீட்டில் வலுவாக இருக்கிறார். லக்னத்தையும், பெளர்ணமிக்கு அருகில் இருக்கும் ஓரளவிற்கு ஒளி பொருந்திய சந்திரன் பார்க்கிறார். ஆகவே ஜாதகருக்கு நற்சிந்தனைகளும், ஓரளவிற்கு பொருளாதார வசதிகளும், அடிப்படை தேவைகளான உணவு, இருப்பிடம் போன்றவைகளுக்கும் குறை இருக்காது.
ஜாதகரே ஏதேனும் ஒரு துறையில், ஒரு தொழிலில் தன்னுடைய தேவைகளைத் தானே பூர்த்தி செய்து கொள்ளும் அளவிற்கு நன்றாகவே இருப்பார். ஆனால் ஐந்தாம் பாவகம் வலுவிழந்ததாலும், புத்திர, களத்திர காரகர்கள் குரு, சுக்கிரன் இருவரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டதாலும் ஜாதகருக்கு திருமண, புத்திர அமைப்பு கிடைக்காது
மேலும் லக்னம் இங்கே கேதுவின் நட்சத்திரத்திலும், ராசி குருவின் நட்சத்திரத்திலும் அமர்ந்து, 13 வயது முதல் ராசியைப் பார்த்த சனிதசை நடப்பதாலும், தற்போது அதே சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் அமர்ந்த புதனின் தசை நடந்து கொண்டிருப்பதாலும் ஜாதகர் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவராக இருக்கிறார்.
அதற்காக இவர் சாமியார் அளவிற்குச் சென்று விடவில்லை. இதே சனி கேதுவோடு சேர்ந்திருப்பின் ஜாதகர் நிச்சயமாக சாமியாராகவே ஆகியிருப்பார். இப்போது துறவுநிலைக்கும், இல்லற நிலைக்கும் நடுவே அவரது மனம் அல்லாடிக் கொண்டிருக்கிறது. தராசுத் தட்டு ஆன்மீகத்தின் பக்கமே அதிகமாக இறங்கிக் கொண்டிருக்கிறது.
ஐம்பது வயதுக்குப் பிறகு குருவின் நட்சத்திரத்தில் அமர்ந்த கேதுவின் தசை நடக்க இருப்பதால் இவருக்கு நிச்சயமாக திருமணம், புத்திர பாக்கியம் போன்ற அமைப்புகள் இல்லை. 56 வயதிற்கு பிறகு வருகின்ற வலுவற்ற சுக்கிரனால் தாம்பத்திய சுகத்தைக் கொடுக்க முடியாது.
நம்முடைய மூலநூல்கள் காமத்தைக் தருகின்ற சுக்கிரனின் தசை ஒருவருக்கு உடலும் மனமும் உறுதியுடன் காமத்தை அனுபவிக்கும் வயதான 32 முதல் 52 வயதில் வர வேண்டும் என்று சொல்கின்றன. ஆகவே ஒரு தசை வர வேண்டும் என்றாலும் அந்த கிரகம் தருகின்ற ஆதிபத்தியத்தை நாம் அனுபவிக்கும் வயதில்தான் வர வேண்டும். இதற்காகவே போகக் காரகனாகிய ராகுவின் தசை சிறுவயதில் வந்தால் நன்மைகளைத் தராது என்றும் சொல்லப்பட்டது.
ஜோதிடம் என்பதே பலவிதமான உள் நிலைகளை அறிந்து பலன் சொல்வதுதான். மேம்போக்காக ஒரே ஒரு விதியை மட்டும் வைத்து பலன் அறிவது என்பது எக்காலத்திலும் நடக்காது.
அடுத்த வெள்ளி சந்திப்போம்.
(12.04.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.