adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
லக்னம் எனும் ஆரம்பம்.-D-052

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

லக்னமும், அதன் அதிபதியுமே ஜோதிடத்தில் அனைத்திற்கும் ஆதாரப் புள்ளியாக விளங்குகிறது. இவை இரண்டும் முழுக்க வலு இழந்தவர் ஏதேனும் ஒரு வகையில் குறைபட்டவராகவே இருக்கிறார்.

ஒரு ஜாதகத்தின் அஸ்திவாரம் எனப்படுவது லக்னமும், அதன் அதிபதியும்தான். எப்படி அஸ்திவாரம் சரியில்லாத கட்டிடம் நிலைக்காதோ, அதேபோல லக்னம், லக்ன நாயகன் வலுவில்லாத ஜாதகம் நிலையற்றது. அது நிறைவான பலன்களைத் தராது.

பிறப்பிலிருந்து ஆரம்பிக்கும் மனித வாழ்க்கை, கல்வி, வேலை, திருமணம், புத்திர பாக்கியம், வசதிவாய்ப்பு, முதுமை, மரணம் என வரிசைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. லக்னம், லக்னாதிபதி வலுவிழந்த ஒருவருக்கு இந்த வரிசை சரியாக அமைவதில்லை. அதிலும் மனித வாழ்வின் அடிப்படை நோக்கமே சந்ததி விருத்திதான் எனும்போது, மனித சமூகத்தின் தொடர்ச்சிக்கு ஆதார நிகழ்வான குழந்தை பிறப்பிற்கு அந்த மனிதன் தகுதியற்றவன் ஆகிறான்.

லக்னாதிபதியும், லக்னமும் சுபத்துவ, சூட்சும வலுப் பெற்றவர்களுக்கு, மேலே நான் சொன்ன வரிசையான, கல்வி, வேலை, திருமணம், குழந்தை போன்றவை அதிகமான முயற்சியின்றியே, நேர்மையான முறையில், சரியான பருவத்தில் கிடைக்கிறது. இரண்டும் வலுவிழந்தவர்களுக்கு, குறையும் வலுவிற்கேற்ப இவை சீராக அமைவதில்லை அல்லது முழுமையாக கிடைப்பதில்லை.

பிரபஞ்சத்தில் அனைத்திற்குமே இணை அமைப்புகள் இருப்பதைப் போல, ஜோதிடத்தில் லக்னம், அதன் அதிபதி இரண்டுமே இணையான அமைப்புகள். இரண்டில் ஒன்றாவது வலுவாக இருக்க வேண்டும். இரண்டுமே பலமிழக்கக் கூடாது.

ஜாதகத்தில் லக்னம் வலுவிழந்து இருக்கும் நிலையில், அதன் அதிபதி கிரகம் பலமாக இருக்கும் ஒருவருக்கு வாழ்க்கையில் அவரது முயற்சிகளுக்கு ஏற்ப வாழ்க்கைத் தரம் அமைகிறது. அதேபோல லக்னேசன் பலவீனமாக இருந்தாலும் அவரது வீடான லக்னம் சுபர் பார்வை, இருப்பு, தொடர்பு என்ற அமைப்பில் சுபத்துவமாக இருந்தால், லக்ன நாயகனின் பலவீனம் ஈடு செய்யப்பட்டு அந்த மனிதருக்கு வாழ்க்கையின் முறையான பாக்கியங்கள் கிடைக்க அனுமதிக்கப் படுகிறது.

லக்னம் அதன் நாயகர் இரண்டும் வலுவிழந்த ஜாதகருக்கு முயற்சிகள் செய்தாலும் எதுவும் அமைவது இல்லை. இதையே ஜோதிடம் கர்மா எனக் குறிப்பிடுகிறது.

லக்னம், லக்ன நாயகன் இரண்டும் வலுவிழந்தவரின் சிந்தனைகள் ஒரு நேர் கோட்டில் அமைவதில்லை. அவரது மனம் இருள் நிரம்பியதாக இருக்கும். ஜாதகத்தில் இது போன்ற அமைப்பினைக் கொண்டவர், இளம் வயதில் முழுக்க முழுக்க துன்பச் சம்பவங்களைக் கொண்ட வாழ்க்கையைக் கொண்டிருப்பார். அதன் மூலம் இளமைப் பருவத்தில் இருந்தே அவருக்கு எதிர்மறை எண்ணங்களும், தாழ்வு மனப்பான்மையும் இருக்கும்.

இத்தகைய ஜாதகர் உலகத்தை வெறுப்புக் கண்ணோட்டத்துடன் பார்ப்பார். இதன் மூலம் அவர் தனித்துத் தெரிவார். அவருக்கு மேலே சொன்ன கல்வி, வேலை, திருமணம், குழந்தை, வசதி வாய்ப்பு இவை எதுவும் சரியாக அமையாமல், எதற்கும் அடுத்தவர் கையை எதிர்பார்த்து தினசரி வாழ்க்கையை நடத்தும் நபராக இருப்பார்.

ஆனால் லக்னம், லக்னாதிபதி இவை இரண்டும் வலுத்து சுபத்துவ, சூட்சும வலுவோடு அமையப் பெற்ற ஒருவருக்கு முயற்சியின்றியே அனைத்தும் கிடைக்கின்றன. அவர் பிறவியிலேயே நல்ல வசதியான பெற்றோருக்கு பிறந்திருப்பார். இளமை முதல் செல்வச் செழிப்புடன் வளர்க்கப்பட்டு, படிக்கிறாரோ இல்லையோ நல்ல கல்விச்சூழல் அமைந்து, சரியான பருவத்தில் விரும்பிய பெண் மனைவியாக கிடைத்து, உரிய நேரத்தில் வாரிசு உண்டாகி அவரது வாழ்க்கை மிகவும் சீராகச் செல்லும்.

லக்னமும், அதன் அதிபதியும் இரண்டு இணை கோடுகள் என்பதால், நான் சொல்லும் சுப, சூட்சும வலுவிற்கேற்ப லக்னம் நூறு சதவிகிதம், லக்னாதிபதி நூறு சதவிகிதம் என முழுமையான வலுவோடு பிறந்தவர்கள் உயர்குடி அமைப்பில் இருக்கிறார்கள்.

இவை இரண்டின் வலிமை குறையக் குறைய, ஒரு மனிதனின் வாழ்க்கைத் தரமும் குறைந்து கொண்டே வந்து, லக்ன, லக்னாதிபதியின் வலிமை  மிகவும் குறைவாக இருக்கும் போது, அந்த மனிதன் வாழத் தகுதியற்றவனாக, வாழ்க்கையை வெறுக்கின்றவனாக, வசதியும் குடும்பமும் இன்றி, வாரிசு இன்றி, பிறந்ததன் நோக்கம் நிறைவேறாமல், இறுதிவரை தனி மனிதனாக இருந்து முடிவில் இறந்து போகிறான்.

கீழே ஒரு உதாரண ஜாதகத்தைக் கொடுத்திருக்கிறேன். இந்த ஜாதகர் 27-2-1962 மாலை மணி 4-30க்கு குன்னூரில் பிறந்திருக்கிறார். கடக லக்னம், விருச்சிக ராசியில் பிறந்த இவருக்கு 56 வயதாகியும் இதுவரை திருமணம் நடக்கவில்லை. ஜாதகர் பெரிய அளவில் வசதியாகவோ, ஒரு சாதிக்கும் திறனோடும் இல்லை. இந்த உலகத்தில் இருக்கிறார். அவ்வளவுதான்.

இவரது லக்னத்தில் ராகு அமர்ந்து, லக்னத்தை செவ்வாய் உச்சமும், சனி ஆட்சியும் பெற்றுப் பார்க்கிறார்கள். ஒரு பாவகத்தோடு செவ்வாய், சனி, ராகு-கேது மூவரும் தொடர்பு கொண்டால், அந்த பாவகம் வலுவிழந்து அது தரும் நன்மைகள் எதுவும் ஜாதகருக்கு கிடைக்காது என்பதை சென்ற கட்டுரைகளில் விளக்கியிருக்கிறேன்

“பாபக் கிரகங்களின் சூட்சும வலுத் தியரி” ப்படி சனி இங்கே கேதுவுடன் இணைந்து சூட்சும வலுவோடுதானே இருக்கிறார் என்ற சந்தேகம் வரலாம். எதற்கும் ஒரு விதிவிலக்கு உண்டு என்பதன்படி தனித்திருக்கும் சனி அல்லது செவ்வாய் மட்டுமே கேதுவுடன் இருக்கும்போது சூட்சும வலுவினை அடைவார்கள்.

சனியை விட சற்றுக் குறைவான பாபத்துவம் கொண்ட செவ்வாய், சனியுடன் இணைந்திருக்கும் போது, அதுவும் வலிமையான பாபத்துவம் கொண்ட உச்ச செவ்வாய் இணைந்திருக்கும் போது, இங்கே சனியின் சூட்சும வலு எடுபடாது. ஒரு பாவகத்தில் சனி, செவ்வாய் இருவரில் ஒருவர் வலுப்பெற்று இணைந்தாலே அந்த பாவகம் வலிமை இழக்கும்.

அதேநேரத்தில் இணையும் வீடு சுபரின் வீடானால் சனி, செவ்வாயின் தன்மை மாறும். வீடு கொடுத்த சுபரின் வலிமைக்கேற்ப சனி, செவ்வாயின் பாபத்துவம் இருக்கும். அதாவது ரிஷப, துலாம், தனுசு, மீனத்தில் இணையும் சனி, செவ்வாயின் கொடூர குணங்கள் சற்று அடங்கி இருக்கும்.

மேஷம், விருச்சிகம், மகர, கும்பத்தில் இணையும் சனி, செவ்வாய் அந்த வீட்டினை, அதன் ஆதிபத்தியங்களை முழுமையாக கெடுப்பார்கள். கடகத்தில் இவர்கள் இணையும் போது வீடு கொடுத்தவர் பவுர்ணமிச் சந்திரனாக இருப்பின் அந்த பாவகத்தின் ஆதிபத்தியங்கள் முழுமையாகக் கெடாது. அமாவாசை சந்திரனாக இருந்தால் அந்த வீட்டின் பலன்கள் ஜாதகருக்கு இருக்காது.

இரண்டுக்கும் நடுவில் தேய்பிறை, வளர்பிறைச் சந்திரனாக இருக்கும் போது சந்திரனின் வலுவிற்கேற்ப அந்த பாவகம் பலன் தரும். இதுபோலவே புதனின் வீடுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். ஜாதகத்தில் சுபரோடு சேர்ந்த புதன் அல்லது தனித்த புதனாக இருக்கும் போது மிதுன, கன்னியில் சனி, செவ்வாய் இணைவு இருப்பின் பாதகமில்லை.     

மேலே சொன்னபடி உதாரண ஜாதகத்தில் 1, 7-ஆம் பாவகங்களோடு செவ்வாய், சனி, ராகு-கேதுக்கள் தொடர்பு கொண்டு, லக்னமும், ஏழாமிடமும் முழுமையாக வலுவிழந்து இருக்கின்றன. லக்னத்திற்கு எவ்விதமான சுபத் தொடர்புகளோ அல்லது சுபரின் இருப்போ, சுபப் பார்வைகளோ இல்லை.

பாபக் கிரகங்கள் லக்னாதிபதியாக ஆனாலும் ஆட்சி பெறக்கூடாது மற்றும் தனது வீட்டையே பார்க்கக் கூடாது என்று நான் சொல்லும் கருத்தில் பெரும்பாலானவர்கள் குழப்பம் அடைகிறீர்கள் என்பது நன்றாகத் தெரிகிறது. தன் வீட்டைத் தானே பார்க்கும் கிரகம் அந்த வீட்டை வலுப்படுத்தும் என்பது  ஒரு பொது விதி என்பதால் வரும் குழப்பம் இது.

அனைத்துப் பொதுவிதிகளையும் உணர்ந்து, எந்த விதி எங்கே பொருந்தும் என்பதை சரியாக தேர்ந்தெடுத்து, அதனோடு விதிவிலக்குகளை பொருத்தி, பின் உண்மையை அறிவதில்தான் ஒருவரின் ஜோதிட ஞானம் முழுமை பெறுகிறது.

மூலநூல்களில் தன் வீட்டைத் தானே பார்க்கும் கிரகம் அதனை வலுப்படுத்தும் என்று என்று பொதுவிதியாக கூறப்பட்டிருந்தாலும், சனி மற்றும் செவ்வாயின் பார்வை பார்க்கும் இடங்களைக் கெடுக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பாக சனி பார்வை சர்வ நாசம் என்பதே உண்மை. இதில் எது, எந்த இடத்திற்கு பொருந்தும் என்பதை நம்முடைய ஞானத்தைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்.

அது போலவே கிரகங்கள் ஆட்சி, உச்சம் என்ற ஸ்தான பலம் பெறுவது நல்லது என்று ஆதார நூல்களில் கூறப்பட்டிருந்தாலும், இன்னொரு பக்கத்தில் ஒரு ஜாதகத்தில் சுப கிரகங்கள் வலுவாகி, பாபக் கிரகங்கள் வலுக் குறைந்திருப்பது நன்மை என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆகவே எந்த விதி எந்த இடத்தில் பொருந்தும் என்பதை மிகச் சரியாக கணிப்பதில்தான் ஜோதிடரின் மேதமை இருக்கிறது. இதை விடுத்து தன் வீட்டை பார்க்கும் கிரகம் அதனை வலுப்படுத்தும் என்று பிடிவாதமாக நினைத்துக் கொண்டு பலன் அறிய முற்பட்டீர்களேயானால் பலன் சரியாக வராது.

உதாரணமாக எட்டாம் வீடு குரு, சுக்கிரன் போன்ற சுபர்களின் வீடாகி, அதனை குருவோ, சுக்கிரனோ பார்க்கும்போது அந்த வீடு வலுப்பெற்று, ஒருவருக்கு ஆயுள் கூடும். ஜாதகர் தீர்க்காயுள் எனப்படும் எண்பது வயது தாண்டிய நிலையை அடைய முடியும். மாறாக அதே எட்டாம் வீடு சனியின் வீடாகி அதனை சனி பார்க்கும் போது அவருக்கு ஆயுள் குறையும்.

இதே சனி, குருவின் பார்வையைப் பெற்று அல்லது மற்ற சுப கிரகங்களான சுக்கிரன், வளர்பிறை சந்திரன், புதனின் தொடர்பு பெற்று, அந்த வீட்டைப்  பார்க்கும் போது, சனியின் சுப, சூட்சும வலிமைக்கேற்ப அந்த பாவகமும் வளரும்.

ஆனால் முழுக்க முழுக்க சுபத்துவமோ, சூட்சுமவலுவோ இல்லாத சனி எட்டாம் வீட்டைப் பார்ப்பாரேயானால், அது அவருடைய வீடாக இருந்தாலும் ஜாதகருக்கு தீர்க்காயுள் அமைப்பு இல்லவே இல்லை. இதற்கு மறைந்த ஜெயலலிதாவின் ஜாதகம் நல்ல உதாரணம்.

ஜெயாவின் ஜாதகப்படி, இரண்டில் சனி பாபத்துவமாக அமர்ந்து, அவருக்கு குடும்பம் அமைய விடாமல் தடுத்து, தனது எட்டாம் வீட்டைத் தானே பார்த்து தீர்க்காயுளும் வாழ விடாமல்,  மத்திம ஆயுள் எனப்படும் அறுபத்தி எட்டு  வயதில் அவரை மரணம் அடையச் செய்தார்.

இந்த சனி பவுர்ணமிச் சந்திரனின் வீடான கடகத்தில் இருந்த காரணத்தினால் இரண்டாம் பாவகத்தின் ஜடக் காரகத்துவமான தனத்தைக் கொடுத்து, உயிர்க் காரகத்துவமான குடும்பத்தைக் கெடுத்திருந்தார். இங்கே சனி, சூட்சும வலுப் பெற்று குருவின் தொடர்போடு இருந்து சுபத்துவமாகி எட்டாம் வீட்டைப் பார்த்திருப்பாராயின் அவரின் ஆயுளும், குடும்பமும் கெட்டிருக்காது.

ஜோதிடம் என்பதே பலவிதமான நுணுக்கமான சமன்பாடுகள் அடங்கிய, புரிவதற்கு மிக ஆழ்ந்த அறிவும், ஞானமும் தேவைப்படும் ஒரு கலை. மேலோட்டமான ஞானம் உள்ளவர்கள் நான் சொல்லும் இந்தக் கருத்துக்களை புரிந்து கொள்வது கடினம். அதேநேரத்தில் பலதரப்பட்ட ஜாதகங்களை பார்த்துப் பார்த்து அனுபவம் கூடும்போது, நான் சொல்லும் சுபத்துவ, சூட்சும வலுக்களின் உண்மைத் தன்மை புரியும்.

உதாரண ஜாதக விளக்கத்தை அடுத்த வெள்ளி பார்க்கலாம்.

(29.03.2019) அன்று மாலைமலரில் வெளிவந்தது.

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

One thought on “லக்னம் எனும் ஆரம்பம்.-D-052

  1. ஐயா இந்த ஜாதகத்தில் மகாதன யோகம் உள்ளதே..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *