ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888
மு. நூர்தீன், கோட்டைமேடு.
கேள்வி.
வயது 69 ஆகிறது. கையால் கணக்கு எழுதும் கணக்குப்பிள்ளை வேலை செய்து வந்தேன். எல்லாம் இப்போது கணினி மயம் ஆக்கப்பட்டுவிட்டதால், தற்போது எனக்கு வேலை இல்லை. இரண்டு கடைகளில் மட்டும் கணக்கு எழுதி வருகிறேன். தொழிலும் உடல்நிலையும் முடங்கி விட்டது. குடும்பத்தை விட்டும் ஒதுங்கி இருக்கிறேன். செய்வினை செய்து உணவில் மருந்தையும் கலந்து எனக்கு கொடுத்து இருக்கிறார்கள் என்று கடவுள் என் மனதில் எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறார். யார் செய்வினை செய்தார்கள் என்பதையும் இறைவன் எனக்கு காட்டிக் கொடுத்து விட்டார். இதிலிருந்து விடுபட நான் என்ன செய்ய வேண்டும் என்பதை தாங்கள் தெரியப்படுத்த விரும்புகிறேன். எனக்குத் தீங்கு செய்பவருக்கு இறைவன் என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதையும் இறைவனே தீர்மானிக்கட்டும். நான் பழைய நிலைமைக்கு வர எனக்கு யோசனை கூறுங்கள். எனக்கு ஜாதகம் இல்லை.
பதில்
கூட்டுப் பிரார்த்தனை மூலம் மனிதர்கள் அனைவரும் சமம் என்ற உன்னத நோக்கத்தை வலியுறுத்தும் இஸ்லாமிய மார்க்கத்தில், முறையான தொழுகைகளைச் செய்யும் ஒருவரை எந்த பில்லி, சூனியமும், செய்வினைகளும், காத்து, கருப்புகளும் அண்டாது.
அல்லாஹ்வை முழுமையாக நம்பி, அவனிடம் தன்னை ஒப்படைத்துக் கொண்டவருக்கு இதுபோன்ற பில்லி, சூனியம், செய்வினை போன்ற எண்ணங்களே ஒருபோதும் வராது. அப்படியே ஒருவர் இவற்றை உங்களுக்கு செய்ய முயற்சித்திருந்தாலும் அது உங்களிடம் ஒருபோதும் பலிக்காது.
உலகம் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகிறது. இந்த மாற்றத்தை உணர்ந்து அதனோடு ஒத்துப் போகிறவர்கள் மட்டுமே வாழ்க்கையில் ஜெயிக்கிறார்கள்.. மற்றவர்கள் பின் தங்கி விடுகிறார்கள். இப்போது என்ன நடந்துவிட்டது? கையில் கணக்கு எழுதிக் கொண்டிருந்த நீங்கள் கணக்குத்துறை கம்ப்யூட்டர் மயமானவுடன் வேலை இழந்து விட்டீர்கள். அதாவது அதற்கேற்றார்போல நீங்கள் மாறத் தவறி விட்டீர்கள்.
உண்மையைச் சொல்லப்போனால் கையால் எழுதுவதை விட கம்ப்யூட்டரில் அடிப்பதுதானே மிகவும் சுலபம்? கம்ப்யூட்டர் கற்றுக்கொள்வதற்கு வயது வித்தியாசம் இருக்கிறதா என்ன? அல்லது கம்ப்யூட்டர் என்பது பெரிய மாயாஜாலமா? கம்ப்யூட்டர் என்பது ஒரு பெரிய கால்குலேட்டர், அவ்வளவுதானே?
கணக்குப் பிள்ளையாகிய நீங்கள் பெரிய கூட்டுத்தொகைக்கு கால்குலேட்டரை உபயோகப்படுத்தி இருப்பீர்கள்தானே? அதுபோலத்தான் கம்ப்யூட்டரும். நீங்கள் நினைத்தால் அதை ஒரேவாரத்தில் கற்றுக் கொள்ள முடியும். நீங்கள் என்ன கம்ப்யூட்டரில் சாப்ட்வேர் கோடிங் எழுதவா போகிறீர்கள்? சாதாரண கணக்குத்தானே? முயற்சி செய்யுங்கள். முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை.
மனதை இளமையாக வைத்திருப்பவன், ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டிருக்கும் உலகத்தோடு அப்டேட் செய்து கொண்டே இருப்பான். வருமானம் இல்லாமல் போய் விட்டதால், அதற்குரிய உண்மையான காரணங்களை ஆராயாமல் யாரோ எனக்கு எதுவோ செய்துவிட்டார்கள் என்ற எதிர்மறை எண்ணங்களின் பிடியில் சிக்கிக் கொண்டு விட்டீர்கள்.
செய்வினைக் கோளாறு, பில்லி, சூனியம் போன்ற எண்ணங்களைத் தூக்கி எறியுங்கள். வரும் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகைக்குச் சென்று, இறைவனிடம் மனதாரப் பிரார்த்தியுங்கள். தொழுகைக்கு பிறகு தனிமையான ஒரு இடத்தில் அமர்ந்து கடந்த சில வருடங்களாக நடந்தவைகளை சிந்தியுங்கள். நடப்பவை அனைத்திற்கும் நமது வருமானக் குறைவும், அதற்கு நாம்தான் காரணம் என்பதும் புரிய வரும்.
இந்த வயதில் கூட நீங்கள் கம்ப்யூட்டர் கற்றுக் கொள்ள முடியும். அதன் மூலமாக கணக்கும் எழுத முடியும். கோவையிலேயே அதற்கான கல்வி நிலையங்கள் இருக்கின்றன. புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் வந்து விட்டால், ஒவ்வொரு மனிதனும் தன்னை ஒரு இளைஞனாகவோ, மாணவனாகவோ உணருவான். அந்த வித்தியாசத்தை அனுபவியுங்கள். வாழ்க்கையில் தினமும் கற்றுக் கொண்டிருப்பவன் சோடை போவதில்லை. அவனால் வாழ்நாள் முழுவதும் சாதிக்கமுடியும். அவனது குடும்பத்தைக் காப்பாற்ற முடியும்.
ஜாதகம் இல்லாத உங்களுக்கு, இதை நான் படித்த நேரத்தில் இருக்கும் ஆரூட முறைப்படியான கிரக நிலைகளின்படி, தற்போதைய உங்கள் கஷ்டம் வரும் ஜூலை மாதம் முதல் விலக இருக்கிறது. வரும் பெருநாள் முதல் உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக விலகுவதை நீங்களே உணர முடியும்.
இறைவன் மிகப் பெரியவன். ஒவ்வொரு அரிசியிலும் அதை உண்பவரின் பெயரைப் பொறித்து வைத்திருக்கும் அல்லாஹ், உங்களுக்கான அரிசியை ஒதுக்கி வைத்துத்தான் இருப்பான். நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள். வயது என்றைக்கும் வாழ்க்கைக்கு ஒரு தடையில்லை என்பதை விரைவில் உணர்வீர்கள். செய்வினையும் கிடையாது, செய்யாத வினையும் கிடையாது. எல்லாம் நம்முடைய வினைதான் என்பது தெரிய வரும்போது நன்றாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.
Heeeee semma. Guruji arumaiya sonneenga
Guruji na guruji dhan
Super guruji arumai
அருமையான விளக்கம் குருஜி