adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
அடுத்த வாரம் பிறக்கப் போகும் அரசன் D-049

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888

ஜோதிடம் எனும் ஒரு மனிதனின் எதிர்காலம் சொல்லும் இந்த மாபெரும் கலையின் ஆரம்பப் புள்ளி அந்த மனிதனின் ஜாதகத்தில் லக்னம் எனும் முதல் பாவகத்தில் ஆரம்பிக்கிறது. 
எந்த ஒரு அமைப்புக்குமே தொடக்கம் என்பது உண்டு என்பதன் அடிப்படையிலும், நல்ல துவக்கம் பாதி சுப முடிவு என்பதனாலும், எந்த ஒரு மனிதனின் லக்னம் சுபத்துவமாக அமைகிறதோ அந்த மனிதனின் வாழ்க்கை ஆரம்பம் முதற்கொண்டு இறுதிவரை சுகமாகவே அமைகிறது. 


லக்னம் செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற பாபக் கிரகங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு அல்லது லக்னத்தை பாபக் கிரகங்கள் தொடர்புகொண்டு, லக்னாதிபதியும் பாபர்களின் தாக்குதலுக்கு ஆளாகி பலவீனப்பட்டு இருக்கும் நிலையில் பிறக்கும் ஒரு ஜீவன் வாழ்நாள் முழுவதும் ஏதேனும் ஒரு வகையில் கஷ்டப்படுகிறது. 
முதலாம் பாவகம் எனப்படும் லக்னப் புள்ளியே, ஜோதிடத்தில் அனைத்திற்கும் ஆதாரமான ஆதி கர்த்தாவான விஷயமாக இருக்கும். லக்னமும், லக்னாதிபதியும் சுபத்துவமாகி, லக்னாதிபதி பாபக் கிரகமாக இருப்பின் சூட்சும வலுப்பெற்று அமைந்த ஒருவர், ஏனைய சில பாவகங்கள் வலுவிழந்து இருந்தாலும், ஏதேனும் ஒரு நிலையில் சிறப்பானவராகவே இருப்பார். 
ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வாழ்க்கை ஜோதிடத்தில் பனிரெண்டு பாவகங்களாகப் பிரிக்கப்படுகிறது. இதில் முதலாம் பாவகம் எனப்படும் லக்னம், உங்களுடைய உயிர், உடல், மனம், ஆயுள், உங்களை வழிநடத்தும் எண்ணங்கள் உள்ளிட்ட உங்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் பிரதிபலிக்கும். 

லக்னத்தின் அடுத்த பகுதியான இரண்டாம் பாவகம், உங்களுடைய நிதிநிலைமை மற்றும் உங்களின் குடும்பத்தைப் பற்றியும், அதனையொட்டிய மூன்றாம் பாவகம் உங்களின் செயல்திறன், முடிவெடுக்கும் தன்மை, மற்றவர்களிடம் இருந்து உங்களுக்கு கிடைக்கும் நற்பெயர் அல்லது கெட்ட பெயர் ஆகியவற்றை சுட்டிக் காட்டும். 
நான்காம் பாவகம் உங்களது வீடு, வாகன, கல்வி அமைப்பையும், ஐந்தாம் பகுதி பரம்பொருளின் அருளினால் முயற்சியின்றி அதிர்ஷ்டத்தின் மூலம் உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளையும், ஆறாம் பாவகம் உங்களது வேலை, கடன், நோய், எதிரி போன்றவைகளையும் காட்டும். 


ஏழாம் பாவகம் உங்களுடைய அந்தரங்க ஆசைகள், உடலுறவு நாட்டங்கள், உடன் இருப்பவர்களையும், எட்டாம் பாவகம் எத்தனை காலம் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள், எங்கே இருப்பீர்கள், வாழ்வின் மிக முக்கிய பகுதியில் திடீரென ஏதாவது பெரும்பணம் உங்களுக்கு கிடைக்குமா என்பதையும் சொல்லும். 
ஒன்பதாம் பாவகம் பணம் கிடைத்தாலும் அதை நீங்கள் அனுபவிப்பீர்களா? அல்லது உங்களது அடுத்த தலைமுறைக்கு அந்த செல்வத்தை விட்டுச் செல்வீர்களா? நீங்கள் கஞ்சனா, செலவாளியா என்பதையும், பத்தாம் வீடு தொழில் செய்வீர்களா, அதில் சாதிப்பீர்களா, தொழிலில் பத்தோடு பதினொன்றுதானா அல்லது தனித்துத் தெரிவீர்களா என்பதை அறிவிக்கும். 
பதினொன்றாம் வீடு வேலை, தொழில் மூலம் உங்களுக்கு கிடைக்கும் வருமானத்தின் அளவு, வழக்கு, போட்டி ஆகியவற்றில் கிடைக்கும் வெற்றி, தோல்வி, உங்களின் நோய் குணப்படும் தன்மை போன்றவைகளையும், இறுதி பாவகமான பன்னிரண்டாம் பகுதி உங்கள் வாழ்வின் இறுதிப் பகுதி எவ்வாறு இருக்கும், ஒரு நாளின் இறுதி நிலையான தினசரி இரவு உங்களுக்கு நிம்மதியாக இருக்குமா இல்லையா, எதையும் விரையம் செய்வீர்களா என்பதையும், வெளிதேச வாசம் மற்றும் உங்களின் அந்திம காலம் தொந்தரவின்றி இருக்குமா என்பதையும் குறிப்பிடுகிறது. 
ஒரு மனிதன் லக்னப் புள்ளியில் குழந்தையாகத் தொடங்கும் அவனது வாழ்க்கை, பன்னிரண்டாம் வீட்டின் இறுதி புள்ளியில், அவன் அற்பாயுளில் இளைஞனாகவோ, நடுத்தர வயதிலோ அல்லது தீர்க்காயுள் நிலையில் முதுபெரும் பருவத்தில் இறக்கும் வரையிலான அத்தனை நிலைகளையும் மிகத் துல்லியமாக சுட்டிக்காட்டி ஒரு வளையம் போல நிறைவுறும். 
ராசிகள் எனப்படும் இந்த காலச்சக்கரத்தின் பனிரெண்டு பிரிவுகளே ஒரு மனிதனின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்றன. இதில் பாபக் கிரகங்கள் எனப்படும் சனி, செவ்வாய், ராகு-கேதுக்கள் தங்களுடைய இருள் தன்மையை எந்த பாகத்தின் மீது அதிகமாக செலுத்துகின்றனவோ, அந்த பாவகத்தின் தன்மை நலிந்து, அந்த வீட்டின் நன்மை, தீமைகள் ஜாதகருக்கு கிடைப்பதில்லை. 
சுப கிரகங்கள் எனப்படும் குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன் ஆகியோர் எந்த வீட்டின் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்களோ, அந்த வீட்டின் நன்மை, தீமைகள் அந்த மனிதனின் மேல் ஆதிக்கத்தை செலுத்தி, ஆதிபத்தியம் எனப்படும் அந்த வீட்டின் தன்மையை குறைவின்றி தந்து அந்த மனிதனின் நல்ல, கெட்ட வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. 
ஒரு மனிதன் பிறக்கும்போது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறைச் சந்திரன் ஆகிய கிரகங்கள் முழு ஒளித்திறனுடன் இருந்து தங்களது பார்வை அல்லது இணைவு எனும் ஆதிக்கத்தை சனி, செவ்வாய், ராகு-கேதுக்களின் மீது செலுத்தும் போது மேற்கண்ட பாபக் கிரகங்கள் தங்களின் கெடுதல் தரும் தன்மைகளை இழந்து, நன்மை சேரும் தரும் அமைப்புகளை தனது ஆளுமைக் காலம் எனப்படும் தனது தசா, புக்தி வருடங்களில் தருகின்றன. பாபர்கள் லக்ன சுபராகவும் இருக்கும் பட்சத்தில் நன்மைகள் கூடுதலாக அமைகின்றன. 
சனி, செவ்வாய் போன்ற கிரகங்கள் நன்மைகளைச் செய்வது இது போன்ற ஒரு சூழ்நிலையில்தான். எந்த ஒரு நிலையிலும் சனி, செவ்வாய் போன்ற பாபக் கிரகங்கள் தனித்து ஆட்சியாகவோ, உச்சமாகவோ இருக்கும் நிலையில் சுபத் தன்மைகளை தருவதில்லை. 

இதுவரை பிறந்து விட்ட ஜாதகங்களை உதாரணமாக காட்டிய நான், இந்த வாரம் வித்தியாசமாக இனி பிறக்க இருக்கும் ஒரு ஜாதகத்தை உதாரணமாகக் காட்ட இருக்கிறேன். 
கீழ்காணும் அபூர்வமான உன்னத கிரக நிலை வரும் 12, 13ம் தேதிகளில் அமைகிறது. மேற்கண்ட நாட்களில் பிறக்கப்போகும் ஒரு குழந்தை, ஏதேனும் ஒரு துறையில் உச்சத்தைத் தொடும். அதில் ஒன்று நிச்சயமாக அரசனாகும். 
சிசேரியனுக்கு நாள் குறிக்க என்னைத் தேடி வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்ட நிலையில், கீழ்காணும் நேரத்தையே இந்த மார்ச் மாதம் பிறக்க இருக்கும் குழந்தைகளுக்காக நான் கொடுத்திருக்கிறேன். லக்னத்தின் தனித்துவத்தை உணர்த்துவதாகவும் கீழ்க்காணும் விளக்கம் அமையும். 
அடுத்த வாரம் பிறக்கப்போகும் ஒரு எதிர்காலக் குழந்தையின் இந்த ஜாதகத்தில், கடகம் லக்னமாகி, லக்னாதிபதி சந்திரன் வளர்பிறை நிலையில், சூரியனுக்கு கேந்திரத்தில் பன்னிரண்டாம் தேதி உச்சமாகவும். மறுநாள் மூலத் திரிகோண அமைப்பிலும் சுபத்துவமாக இருக்கிறார். 
லக்னத்தையும், லக்னாதிபதியையும், உச்ச சந்திரனின் பார்வையைப் பெற்ற பங்கப்படாத தனித்த குரு தனது 9-ஆம் பார்வையாகவும், எவருடனும் சேராத சுக்கிரன் தனது ஏழாம் பார்வையாகவும், ராஜயோகாதிபதி செவ்வாய் தனது பத்தாம் பார்வையாகவும் பார்க்கிறார்கள். இதில் குருவும், சுக்கிரனும் நட்பு நிலையில் அமர்ந்து, செவ்வாய் ஆட்சி அமைப்பிலிருந்து பார்ப்பதால் லக்னம் மிகவும் வலுப்பெறுகிறது. தர்ம, கர்மாதிபதிகள் லக்னத்தை பார்ப்பது வெகு சிறப்பு. 
லக்னமும், லக்னாதிபதியும் வலுத்துவிட்ட நிலையில், மற்ற கிரகங்கள் ஐந்தாமிடத்தில் தொடங்கி பன்னிரெண்டாம் இடம் வரை அமைந்து கிரகமாலிகா யோகத்தைத் தருகின்றன. ராசிக்கு பத்தாமிடத்தில் சூரியன் அமர்ந்து தனது சிம்ம வீட்டைப் பார்ப்பது வெகு சிறப்பு. சனியின் மூன்றாம் பார்வை சூரியனுக்கு இருந்தாலும் சனி, கேதுவுடன் இணைந்து சூட்சும வலுப்பெற்றுள்ளதால் சனியின் பார்வை இங்கே முழு பாபத் தன்மையோடு இருக்காது.

அடுத்தடுத்து இந்த குழந்தைக்கு சூரிய, சந்திர, செவ்வாய், ராகு, குரு என யோக தசைகளே அமைகின்றன. அதிலும் முக்கியமாக பெரும்பாலான கிரகங்கள் யோக சாரத்தில் அமைந்துள்ளன. அம்ச நிலையை எடுத்துக் கொண்டால் குருவும், செவ்வாயும் ஆட்சியாக இருக்க, சூரியன் சுக்கிரனுடன் இணைந்து சுபத்துவமாகி, புதனின் வீட்டில் இருப்பது சிறப்பு. 
எந்த ஜாதகத்திலும் பலவீனங்கள் இல்லாமல் இருப்பது இல்லை. இங்கே பலவீனம் என்று பார்த்தால் அறிவையும், புத்தி சாதுர்யத்தையும் கொடுக்கக்கூடிய புதன் நீச நிலையில் இருந்தாலும், அவர் இங்கே தனித்து இருக்கிறார். ஆகவே சுபராகிறார் மேலாக தனித்த குருவின் பார்வையில் தன்னுடைய நீசத் தன்மை நீங்கி தன்னுடைய அறிவு காரகத்துவங்களை இந்த எதிர்கால அரசனுக்கு தரும் நிலையிலேயே இருக்கிறார். 
மிக முக்கியமாக இந்த ஜாதகத்தில் பாவத் பாவ அமைப்பு ஏறக்குறைய முழுமையாக இருக்கிறது. லக்னாதிபதி, லக்னத்திற்கு 11-ல் இருக்கிறார். இரண்டாமதிபதி இரண்டிற்கு ஏழில் இருந்து இரண்டைப் பார்க்க, மூன்றோனும் மூன்றுக்குக்கு கேந்திரத்தில் அமர்ந்து தன் வீட்டைப் பார்க்கிறார். நான்கோன் நான்கிற்கு கேந்திரத்தில் இருக்க, ஐந்தாம் அதிபதி திரிகோணத்திற்கு அதிபதியாக பாபர் வந்தால் அவர் அந்த வீட்டிற்கு 6,8,12ல் மறைய வேண்டும் எனும் விதியின் படி ஐந்திற்கு ஆறில் இருக்கிறார். 
ஆறாமதிபதி ஆறுக்கு 12-ல் மறைய, ஏழோன் 7-க்கு பனிரெண்டில் மறைவது ஒரு குறைதான். ஆயுளைக் கொடுக்கும் எட்டாம் வீட்டோன் எட்டிற்கு 11ல் அமர, பாக்கியத்தான் ஒன்பதுக்கு ஒன்பதிலும், பத்துக்குடையவன் பத்தாம் கேந்திரத்திலும், 11க்குடையவன் சுபராகி, 11க்கு ஒன்பதிலும், 12க்குடையவன் 12க்கு 10ம் இடத்திலும் மிக மிகச் சிறப்பாக அமைந்திருகிறார்கள். 
மேற்கண்ட நாளில் பிறக்கும் குழந்தைகள் தனது துறையில் முதன்மையானவனாகவும், அவர்களில் ஒருவர் உலகின் எங்கோ ஒரு பகுதியில் நிச்சயமாக அரசனாகவும் ஆவார் என்பது உறுதி. 


மீதி விளக்கங்களை அடுத்த வெள்ளி பார்க்கலாம்.