ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888
எம். பரணிதரன், ஈரோடு.
கேள்வி.
மானசீக குருநாதரின் திருப்பாதங்களுக்கு வணக்கம். மாலைமலரில் வெளி வரும் ஜோதிடப் பகுதிகள் அனைத்தையும் விடாமல் பத்திரப்படுத்தி வருகிறேன். தொடர்ந்து படித்தும் வருகிறேன். ஒரு மாறுதலுக்காக என்னுடைய ஜாதகத்தை பார்த்து எனக்கு திருமணம் ஆகி விட்டதா இல்லையா, நடந்திருந்தால் எத்தனை குழந்தைகள் இருக்கின்றன, எந்தத் துறையில் வேலை செய்கிறேன், எப்போது வேலை கிடைத்திருக்கும், என்னுடன் பிறந்தவர்கள் எத்தனை பேர் என்பதைச் சொல்ல வேண்டுகிறேன். தவறாக நினைக்க வேண்டாம். உங்களால் சொல்ல முடியும் என்பதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காகத்தான் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன்.
பதில்.
(மகர லக்னம், மேஷ ராசி, 2ல் ராகு, 4ல் சந், 6ல் குரு, 7ல் சூரி, புத, 8ல் சுக், செவ், கேது, 12ல் சனி. 26-7-1989, மாலை 6-35, ஈரோடு)
ஜோதிடம் என்பது மருத்துவத்திற்குச் சமமான ஒரு எதிர்காலம் பற்றிய உண்மையைச் சொல்லும் கலை. மருத்துவத்தில் உடல் சரி செய்யப்படுகிறது என்றால், ஜோதிடத்தில் மனம் சரி செய்யப்படுகிறது. டாக்டரிடம் போய் யாரும் கையை நீட்டிக் கொண்டு, டாக்டர் எனக்கு என்ன நோய் இருக்கிறது என்பதைக் கண்டு பிடித்து மருந்து கொடுங்கள் என்று சொல்வதில்லை. இடுப்பில் வலிக்கிறது, காலில் வலிக்கிறது, தலை பாரமாக இருக்கிறது டாக்டர் என்று குறைகளைச் சொல்லித்தான் நிவாரணம் தேடுகிறீர்கள்.
ஜோதிடரிடம் மட்டும்தான் என் உடன் பிறந்தவர்கள் எத்தனை பேர் என்று கேட்கிறீர்கள். ஜோதிடத்தை நன்கு உணர்ந்த அனுபவமான ஜோதிடரால் எதையும் சொல்ல முடியும். என்ன, கொஞ்சம் கூடுதலாக நேரம் எடுத்து கணிக்க வேண்டியிருக்கும். அனுபவமும் ஞானமும்தான் இங்கே முக்கியம்.
உங்களுக்கு மகர லக்னமாகி பத்தாமிடத்தை குரு, சந்திரன் இருவரும் பார்த்து, ராசிக்கு பத்தாமிடத்தை சூரியன் பார்த்து, சிம்மம் சுபத்துவமாக இருப்பதால், 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் ஏப்ரலுக்குள் அரசு சார்ந்த துறையில் சொல்லிக் கொடுக்கும் வேலை கிடைத்திருக்கும். சுக்ரன், செவ்வாய், கேது மூவரும் இணைந்து செவ்வாய் சுபத்துவமாக இருப்பதால் என்ஜினீயரிங் படித்திருப்பீர்கள். இதுவரை திருமணம் ஆகவில்லை. திருமணம் என்னும் ஒன்றரை வருடம் தாமதமாக ராகு தசை சுயபுத்தி இறுதியில் 2020ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பரில் நடக்கும். ராகுதசை, குரு புக்தியில் 2022 ஆம் ஆண்டு தந்தை ஆவீர்கள்.