ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888
“எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்” என்றொரு பழமொழி தமிழில் உண்டு. இதற்கு ஒருவரின் விரல் அளவில் எட்டு சாண் உள்ள இந்த உடலுக்கு தலைதான் முக்கியம் என்று அர்த்தம். அதைப்போல வேதஜோதிடத்தில் பனிரெண்டு ராசி வீடுகள் இருந்தாலும், ஒருவர் பிறக்கும் லக்னமே அவற்றில் தலையாயது மற்றும் அதுவே மிகவும் அவசியமானது.
மேஷம் முதல் மீனம் வரையிலான பனிரெண்டு ராசிகளும், ஒன்றன் பின் ஒன்றாக, இடைவெளி இன்றி, ஒன்றை ஒன்று சார்நது, ஒரு வளையம் போல பூமியைச் சுற்றி அமைந்திருக்கின்றன.
பூமி சுற்றிவரும் இந்த வான் வெளி வீதி நிலையானது என்றாலும், பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டிருப்பதால், நாம் காணும் தோற்றத்தில் பூமி நிலையாக ஒரே இடத்தில் இருப்பது போலவும், பூமியை இந்த ராசி வீடுகள் எனப்படும் வான் பாதை சுற்றி வருவதாகவும் தோன்றுகிறது.
பூமி தன்னைத்தானே இருபத்தி நான்கு மணி நேரங்களுக்கு ஒரு முறை சுற்றிக் கொள்வதால் இந்த பனிரெண்டு வீடுகளும் தனித்தனியாக தோராயமாக இரண்டுமணி நேரம் பூமியைச் சுற்றி வருவது போலத் தெரியும்.
இத்தகைய தோற்றத்தில் பூமியில் ஒரு குழந்தை பிறக்கும்போது, குழந்தை ஜனிக்கும் அந்த இடத்தின் கிழக்கு வானில் எந்த ராசி வீடு தெரிகிறதோ, அதுவே அந்தக் குழந்தையின் லக்னம் எனப்படுகிறது. மேஷம் முதல் மீனம் வரையிலான இந்த வீடுகளில், குழந்தை பிறக்கும் லக்னம் எனப்படும் அந்த வீட்டின் அதிபதியே லக்னாதிபதி எனப்படுகிறார்.
மேலே நான் சொன்ன ஒரு உடலுக்கு தலைதான் முக்கியம் என்கிற பழமொழியை போல, வேத ஜோதிடத்தில் ஒரு மனிதனின் எதிர்கால பலன்களை அறிவதற்கும் அவனது உடல், மன ஆரோக்கியத்தை தெரிந்து கொள்வதற்கும், அவரது லக்னமும், லக்னாதிபதியும் மட்டுமே முக்கியம்.
லக்னம் மற்றும் லக்னாதிபதியின் சுபத்துவ, சூட்சும வலுக்களைப் பொருத்து, ஒரு மனிதனின் வாழ்க்கைத்தரமும், அவனது உடல் மற்றும் மன நிலைகளும் அமைகின்றன. ஒரு மனிதன் தன்னுடைய லக்னாதிபதி கிரகத்தின் தன்மைகளை அப்படியே பிரதிபலிப்பதாக இருப்பான். இது எந்த நிலையிலும் மாறாது.
ஒன்பது கிரகங்களில் ராகு கேதுக்களுக்கு மட்டும் ஆட்சி வீடுகள் தரப்படவில்லை. இதற்கு அவை மற்றவைகளைப் போல ஈர்ப்பு விசை கொண்ட கிரகங்கள் இல்லை என்பதே காரணம்.
திட, திரவப் பொருட்களாலான கிரகங்களுக்கு மட்டுமே ஈர்ப்பு விசை உண்டு. ராகு, கேதுக்கள் பூமி மற்றும் சந்திரனின் நிழல்கள் என்பதால் இவற்றிற்கு ஈர்ப்பு விசை எனப்படும் தன்னைச் சுற்றி ஆதிக்கம் செலுத்தும், தன்னை நோக்கி இழுக்கும் அமைப்பு கிடையாது. எனவே இவற்றிற்கு ஆட்சி, உச்ச வீடுகள் இல்லை.
சூரியன், சந்திரன் உள்ளிட்ட ஏழு கிரகங்களுக்கும், அவை ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளை ஈர்ப்பு விசையின் அடிப்படையில் உணர்ந்து, பூமியைச் சுற்றியுள்ள வான் கோளப் பாதையில் அவைகளுக்குரிய ஆதிக்க பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு, இவையே கிரகங்களின் ஆட்சிப் பகுதி எனும் ராசி வீடுகளாக ஜோதிடத்தில் சொல்லப்படுகின்றன.
லக்னமும், லக்னாதிபதியும் சுப ஒளி அமைப்புகளால் சூழப்பட்டு, அதாவது குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன் எனப்படும் சுப கிரகங்களால் பார்க்கப்பட்டு, லக்னாதிபதியும் சுப ஒளி பொருந்திய நிலையில் சுபத்துவமாகவோ, பாபக் கிரகமாக இருப்பின் சூட்சும வலுப்பெற்றோ இருக்கும் நிலையில் பிறக்கும் ஒருவர் வாழ்வில் ஆரம்பத்தில் தாழ்வு நிலையில் இருந்தாலும் பின்னர் உயர் நிலையை அடைகிறார்.
இவையன்றி பாபக் கிரகங்கள் என்று சொல்லப்படும் சனி, செவ்வாய், ராகு, கேது ஆகிய இருள் கிரகங்கள், லக்னத்தில் அமர்ந்து, லக்னத்தை இருள்படுத்தி, லக்னாதிபதி மேற்கண்ட ஒளியற்ற கிரகங்களுடன் நெருங்கி, தன்னுடைய ஒளித்தன்மையை இழந்திருக்கும் அமைப்பில் பிறக்கும் ஒருவர் வாழ முடியாதவராகவும் அல்லது வாழத் தகுதியற்றவராகவும் ஆகிறார்.
கிரகங்கள் அனைத்தும் தங்களுடைய சுய ஒளித்தன்மையோடு அமைந்து, இருளோடு நெருங்காமல், சுப ஒளி தரும் கிரகங்கள் தங்களுடைய ஒளியால் பாபக் கிரகங்களை சுபத்துவப்படுத்தும் நிலையில் பிறக்கும் ஒரு ஜீவன் ஜோதிடத்தின்படி மிக உயர் நிலையை அடையும்.
இவையன்றி லக்னமும், லக்னாதிபதி கிரகமும் பாபக் கிரகங்களான சனி, செவ்வாய், ராகு ஆகிய மூன்று கிரகங்களால் பார்க்கப்பட்டோ, இணைந்தோ இருக்கின்ற ஒரு நெருக்கடியான சூழலில் பிறக்கும் ஒரு ஜீவன் போராட்டமான வாழ்வை அடைகிறது.
ஏற்கனவே “ஜோதிடம் எனும் மகா அற்புதம்” கட்டுரைகளிலும், யூ டியூப் வீடியோக்களிலும், ஒரு பாவகம் சனி, செவ்வாய், ராகு ஆகிய மூன்று கிரகங்களின் ஒட்டுமொத்த தாக்குதலுக்கு உள்ளாகும்போது சுத்தமாக வலுவிழக்கும் என்பதைச் சொல்லி இருக்கிறேன்.
ஒரு பாவகம் முழுக்க முழுக்க சனியின் ஆதிக்கத்தில் மட்டும் இருக்கும்போது அது முப்பது சதவிகிதம் இருளடைந்து இருக்கிறது என்று பொருள். சனி அந்த பாவகத்தின் அதிபதியாக இருந்தாலும் கூட அவர் அங்கே ஆட்சியாக இருக்க கூடாது. அது சனியின் லக்னமாக இருந்தாலும், லக்னாதிபதி இங்கே ஆட்சியாக இருப்பது நன்மை என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.
சனியுடன் செவ்வாயும் அங்கே இருந்தாலோ, அல்லது பார்த்தாலோ அந்த பாவகம் ஐம்பத்தி ஐந்து சதவிகிதம் வலுவிழக்கிறது. இங்கே ஏன் ஐம்பத்தி ஐந்து சதவிகிதம் என்று குறிப்பாகச் சொல்கிறேன் என்றால் சனி முழுப் பாபர் எனும் நிலையில் செவ்வாய் முக்கால் பாபர் என்றுதான் நம்முடைய மூலநூல்களில் குறிப்பிடப்படுகிறார். எனவே பாபத்தன்மையில் சனியை விட செவ்வாய்க்கு சற்று குறைவான மதிப்பெண்களே கொடுக்கப் பட வேண்டும்.
இந்த இருவரும் ஒரு பாவகத்தோடு தொடர்பு கொண்டிருக்கும் நிலையில், முழுக்க முழுக்க இருள் கிரகங்களான ராகு, கேதுக்களும் அங்கே இவர்களுடன் சம்பந்தப்படுவார்களேயானால், அந்த பாவகம் நூறு சதவிகிதம் வலுவிழந்து விட்டது என்று பொருள். அந்த ஜாதகருக்கு அந்த வீடு எந்த பலன்களையும் தராது. அந்த வீடு சம்பந்தப்பட்ட எதுவும் ஜாதகருக்கு கிடைக்காது.
குறிப்பாக சம்பந்தப்பட்ட பாவகம் ஐந்தாம் வீடாக இருந்தால் அந்த வீட்டின் ஆதிபத்தியங்களான குழந்தை, அதிர்ஷ்டம், நல்ல சிந்தனை போன்றவைகள் ஜாதகருக்கு கிடைக்காது. சம்பந்தபட்ட வீடு ஆறாம் வீடாக இருந்தால் ஜாதகருக்கு கடன், நோய், எதிரி போன்றவைகள் இருக்காது.
சுபக் கிரகங்கள் லக்னாதிபதியாகி அங்கேயே ஆட்சியாக இருப்பது போல, சனி செவ்வாய் போன்ற பாபக் கிரகங்கள் சுபத்துவ, சூட்சும வலுவின்றி நேரிடையாக லக்னத்தில் ஆட்சியாக மட்டும் இருப்பது நன்மையைத் தருவதில்லை.
ஜோதிட மூலநூல்களில் ஒரு கிரகம், ஸ்தான பலம் எனப்படும் தன் வீட்டில் ஆட்சியாக இருப்பது நன்மை என்று பொத்தாம் பொதுவாக கூறப்பட்டிருந்தாலும், முப்பது ஆண்டுகளுக்கும் மேலான எனது பாபக் கிரகங்கள் பற்றிய ஆய்வு முடிவின்படி பாபர்கள் லக்னாதிபதியாகவே ஆனாலும் சுபத்துவமோ, சூட்சும வலுவோ இன்றி லக்னத்தில் அமர்வது நன்மைகளைத் தராது.
இருள் கிரகங்களால் ஆக்கிரமிக்கப்படும் பாவகம் லக்னமாக இருந்தால், லக்னம் முற்றிலும் வலுவிழந்து விட்டது என்று பொருள். இங்கே பாபக் கிரகங்களின் தாக்குதல் தன்மைக்கேற்ப ஜாதகரின் உடல், மனம் இரண்டும் கெட்டிருக்கும்.
கீழே ஒரு மன வளர்ச்சியற்ற இளைஞரின் ஜாதகத்தைக் கொடுத்திருக்கிறேன். இந்த இளைஞர் 2-3-1997 அன்று அதிகாலை 3-37 மணிக்கு மதுரையில் பிறந்திருக்கிறார்.
இந்த ஜாதகப்படி இந்த இளைஞருக்கு தனுசு லக்னம், விருச்சிக ராசியாகி உடல், மன ஆரோக்கியம் இரண்டையும் குறிக்கும் லக்னாதிபதியாகிய குரு நீசநிலையை அடைந்திருக்கிறார். குருவிற்கு இங்கே நீசபங்கம் முழுமையாக இல்லை.
ஒரு கிரகம் நீசபங்கம் பெற வேண்டுமெனில், அந்த கிரகமோ அல்லது அதற்கு வீடு கொடுத்தவனோ சந்திர கேந்திரத்தில் இருக்க வேண்டும் என்பது ஒரு முக்கிய விதி. இதில் மறைந்துள்ள அர்த்தம் என்னவெனில், அந்த சந்திரன் வளர்பிறைச் சந்திரனாக இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட கிரகத்தின் நீசநிலை முழுவதுமாக பங்கமாகும் எனவும், தேய்பிறை சந்திரனாக இருக்கும் நிலையில் நீசபங்கம் குறைவாக இருக்கும் எனவும் அர்த்தம்.
இங்கே குருவோ, வீடு கொடுத்த சனியோ சந்திர கேந்திரத்தில் இல்லாமல், தங்களுக்குள் பரிவர்த்தனை நிலையை அடைந்திருப்பதால் ஓரளவிற்கு குருவிற்கு நீசபங்கம் இருக்கிறது. குரு பரிவர்த்தனையில் இருப்பதால் மட்டுமே இந்த ஜாதகர் உயிருடன் இருக்கும் நிலை பெறுகிறார். அதாவது குருவின் பார்வை எட்டாம் இடத்திற்கு இருப்பதால் இவருக்கு ஆயுள் உண்டு.
நீச குருவின் பார்வைக்கு வலு இருக்கிறதா என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கிறது. குரு நீச நிலையில் இருந்தாலும் அவரது பார்வைக்கு ஓரளவிற்கு வலு இருந்தே தீரும். அதேநேரத்தில் ஆட்சி, உச்சம் என நேர்வலு பெற்ற குருவின் பார்வை பலத்தை விட கொஞ்சம் குறைவாக இருக்கும். ஆனால் பார்வை உண்டு.
இங்கே நேரிடையாக ஸ்தான பலத்தை இழந்து குரு நீசமடைந்திருந்தாலும், ஸ்தான பலத்திற்கு அடுத்த நிலையாக சொல்லப்படும் திக் பலத்திற்கு அருகில் இருப்பதாலும் நிச்சயமாக இந்த குருவின் பார்வைக்கு பலம் உண்டு.
லக்னாதிபதி வலு இழந்த நிலையில், லக்னத்தை சனி தனது பத்தாம் பார்வையாலும், செவ்வாய் தனது நான்காம் பார்வையாலும் பார்க்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் இது சிறப்பு பார்வை என்பது குறிப்பிடத்தக்கது. அதைவிட மேலாக பார்க்கும் இரண்டு பாபக் கிரகங்களும் ராகு, கேதுக்களுடன் இணைந்திருக்கிறார்கள்.
குறிப்பாக செவ்வாய் ராகுவுடன் இணைந்து பாபத்துவம் பெற்றுள்ள நிலையில், சனி கேதுவுடன் இணைந்து சூட்சுமவலு பெற்றாலும், அவருக்கு செவ்வாய் பார்வை இருப்பதால் பாபத்துவம் அடைந்திருக்கிறார். ஆக இங்கே லக்னம் சனி, செவ்வாய், ராகு ஆகிய மூவரின் ஒட்டுமொத்த தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறது.
சனி, செவ்வாய், ராகுவின் தொடர்பினாலும், லக்னத்திற்கு சுபத் தொடர்புகளே கிடைக்காததாலும், லக்னம் முழுக்க வலுவிழந்த நிலையில் லக்னாதிபதியும் நீசனாகி பலவீனமானதால் இந்த இளைஞர் மன வளர்ச்சியற்ற நிலையில் இருக்கிறார்.
ஆனால் லக்னாதிபதி குரு பரிவர்த்தனையாகி திக்பலத்திற்கு அருகில் அமர்ந்து எட்டாம் வீட்டைப் பார்ப்பதால் ஜாதகர் உயிருடன் இருக்கிறார். ஆனால் மன வளர்ச்சியற்ற நிலையில், தான் ஒரு மனிதன் என்பதை உணராத நிலையில் இருக்கிறார். மனதிற்கு காரணமான சந்திரனும் இங்கே முழுக்க நீசமாகி தேய்பிறை நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்னுமொரு முக்கிய நிலையாக இங்கே லக்னமும், லக்னாதிபதி குருவும் வலுவிழந்த நிலையில், லக்னத்திற்கு மாற்றான ராசிநாதன் எனப்படும் செவ்வாயும், பாபத்துவம் பெற்று பலவீனமாகி சனியின் பார்வையில், ராகுவுடன் இணைந்திருப்பது கவனிக்கத்தக்கது.
பாரம்பரிய ஜோதிடவிதிகளின்படி லக்னம், லக்னாதிபதி வலுவிழந்த நிலையில் அமைந்தாலும், ராசியோ, ராசிநாதனோ வலுவாக இருந்தால், அந்த நபர் வாழ்வின் முற்பகுதியில் சறுக்கி விழுந்தாலும், பிற்பகுதியில் சுதாரித்து முன்னேற்றம் காண்பார்.
லக்னம், ராசி இரண்டும் வலுவிழந்த நிலையில் அமைந்து விட்டால், இவை இரண்டின் பலவீனத்திற்கு ஏற்ப அந்த ஜாதகர் வாழ்நாள் முழுவதும் வறுமையில் உழலுவது, ஆரோக்கியம் குறைவாக இருப்பது அல்லது வாழவே தகுதியற்ற நிலையில் இருப்பது நடக்கும்.
உதாரண ஜாதகத்தில் லக்னமும், லக்னாதிபதி குருவும் வலுவிழந்த நிலையில், ராசியான விருச்சிகத்திற்கும் எவ்வித சுபத் தொடர்புகளும் கிடைக்காத நிலையில், ராசிநாதனான செவ்வாயும் ராகுவுடன் இணைந்து, சனி பார்வையில் இருப்பதால் ஜாதகர், தான் ஒரு மனிதப் பிறவி என்பதை உணர முடியாத நிலையிலும், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது, தான் எதற்காக இந்த பூமியில் பிறந்தோம் என்பதை உணர இயலாத ஒரு நிலையிலும் இருக்கிறார்.
ஒரு மனிதனின் லக்னம் மற்றும் லக்னாதிபதி, ராசி மற்றும் ராசியதிபதி பலவீனமாகும் நிலையில், அந்த வலுக்குறைவிற்கு ஏற்ப அந்த மனிதனின் வாழ்வு நிலை ஆரோக்கியமற்றதாகவோ, வறுமை நிலையிலோ இருக்கும் என்பதற்கு இந்த ஜாதகம் ஒரு நல்ல உதாரணம்.
இன்னும் சில உதாரணங்களை அடுத்த வெள்ளி பார்க்கலாம்.
மிகவும் அரூமையானமேலும் பல விளக்கங்கள் தரும்படி கேட்டு கொ ள்கிறேன் மேலும் கிரகங்களின் டிகிரி சுத்தம் பற்றி மற்றும் வலு இவைகளை பற்றி விளக்கம் அளிக்கவும்