ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 9768 99 8888
ஜோதிடத்தில் அற்பாயுள் என்பது முப்பது வயதுகளில் இறப்பதையும், மத்திம ஆயுள் என்பது அறுபதுகளில் மரணமடைவதையும், தீர்க்காயுள் என்பது எண்பது வயது தாண்டி உயிர் வாழ்வதையும் குறிக்கிறது.இப்போது அற்பாயுளில் இறந்த ஒருவரின் ஜாதகத்தையும், 90 வயது கடந்தும் தீர்க்காயுளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெரியவரின் ஜாதகத்தையும் ஒப்பிட்டு ஆயுள் பற்றிய சில விளக்கங்களை பார்ப்போம்.
கீழே அற்பாயுள் எனப்படும் 33 வயதில் இறந்த ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்திருக்கிறேன். இவர் 3-6-1972 அதிகாலை 12-30 மணிக்கு மதுரையில் பிறந்தவர்.
சூரி,புத, சனி | சுக், செவ் | ||
ல/ | ஆண் 3-6-1972 அதிகாலை 12.30 மதுரை | கேது | |
சந், ராகு | |||
குரு, |
இவருக்கு கும்ப லக்னம், மகர ராசியாகி, லக்னாதிபதி சனி சுபத்துவமின்றி, பாபத்துவ வலுப்பெற்று லக்னத்தைப் பார்க்கிறார். சனிக்கு இங்கே சூட்சும வலுவும் இல்லை. லக்னாதிபதி ஆயினும் பாபத்துவம் பெற்ற சனி லக்னத்தை பார்ப்பது நல்லதல்ல என்பதை அடிக்கடி குறிப்பிடுகிறேன்.
சனி இங்கே சுக்கிரனின் வீட்டில் அமர்ந்து, புதனுடன் சேர்ந்திருக்கிறாரே எப்படி பாபத்துவமாக இருக்கிறார் என்ற சந்தேகம் எழலாம் சூரியனுடன் சேராத புதன் மட்டுமே சுபர். இங்கே புதன் சூரியனுடன் மிகவும் நெருங்கியிருக்கும் நிலையில், சனி இரண்டு பாபர்களுடன் இருக்கிறார் என்பதே சரி.
அதோடு இங்கே லக்னாதிபதி சனி, சூரியனுடன் மிக நெருங்கி அஸ்தமனம் அடைந்திருக்கிறார். சூரியனோடு தொடர்பு கொண்ட சனி மிகவும் எரிச்சல் நிலையில் இருப்பார் என்பதையும் நான் அடிக்கடி எழுதுகிறேன். சூரியன், சனி இணைவு இருவருக்குமே நல்லதல்ல. அதோடு இந்த ஜாதக அமைப்பில் ஆயுள் ஸ்தானாதிபதியான புதனும், லக்னாதிபதியான சனியும் ஏறத்தாழ இரண்டு டிகிரிக்குள் சூரியனுடன் மிக நெருங்கி அஸ்தமனம் பெற்றிருக்கிறார்கள்.
புதனுக்கு அஸ்தங்க தோஷம் இல்லை என்றாலும் அவரும் பாபத்துவம் பெற்ற சனியுடன் இரண்டு டிகிரிக்குள் இணைந்திருக்கிறார். லக்னத்திற்கோ, எட்டாமிடத்திற்கோ இங்கே எவ்வித சுபத்துவமும் இல்லை. கூடுதலாக லக்னத்தை சனி பார்க்க, எட்டாமிடத்தை இன்னொரு பாபரான செவ்வாய் பார்க்கிறார்.
இன்னொரு நிலையாக மேற்சொன்ன சூரியன், புதன், சனி மூவருமே கும்ப லக்னத்தின் கொடியபாபியான சந்திரனின் ரோகினி நட்சத்திரத்தில் இருக்கிறார்கள். சாரம் தந்த சந்திரன் தன்னுடைய ஆறாம் பாவகத்தையே பார்த்து வலுப்படுத்தும் நிலையில் பனிரெண்டில் அமர்ந்து, இருளாகிய ராகுவுடன் இணைந்து பாபத்துவம் அடைந்திருக்கிறார்.
லக்னமும் இங்கே ஆறுக்குடையவனுடன் இணைந்த ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் உள்ளது. லக்னத்தை எட்டு, பனிரெண்டுக்குடையவர்கள் இணைந்து பார்க்கிறார்கள். ஒரு ஜாதகத்தில் சுற்றிச், சுற்றி, லக்னமோ, ராசியோ, தசா புக்தி அமைப்புகளோ ஆறு, எட்டு, பனிரெண்டு இணைவு அல்லது சம்பந்தங்களை பாபத்துவமாக காட்டினால் அது வாழத் தகுதியற்ற ஜாதகம் அல்லது வாழ முடியாத ஜாதகம்.
இந்த ஜாதகர் நவம்பர் 2, 2005-ம் வருடம் தனது 33வது வயதில் விபத்தில் மரணமடைந்தார். இறப்பின்போது இவரது லக்னத்திற்கு இரண்டிற்குடையவரான குருவின் தசையில், பாதகாதிபதியான சுக்கிரனின் புக்தி நடந்து கொண்டிருந்தது. இறப்பு நாள் அன்று சுக்கிர ஹோரையில் இவரைப் பலி கொண்ட விபத்து நடந்தது. எந்த லக்னமாயினும் இரண்டிற்குடையவர் மரணத்தைத் தருவதற்கு தகுதி பெற்றவராகிறார் என்பதற்கு இந்த ஜாதகமும் ஒரு நல்ல உதாரணம்.
இரு ஆதிபத்தியம் உள்ள கிரகங்கள் எந்த ஆதிபத்தியத்தை தொடர்பு கொள்கிறார்களோ, அந்த வீட்டின் பலனை முதலிலும், இன்னொரு வீட்டின் பலனை அடுத்தும் செய்வார்கள் என்ற விதிப்படி, ஜாதகருக்கு குருவின் தசை ஆரம்பித்த முதல் எட்டு வருடங்கள், பதினொன்றாம் வீட்டின் பலன்கள் நடந்தது, பிற்பகுதி எட்டு வருடம் மாரகஸ்தானம் எனப்படும் இரண்டாமிட ஆதிபத்தியம் செயல்பட ஆரம்பித்த சில மாதங்களில் இவர் மரணமடைந்தார்.
குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில் லக்னாதிபதியும், ஆயுள் காரகனுமாகிய சனி சூரியனுடன் நெருங்கி இணைந்து பலவீனமான நிலையில், எட்டுக்குடைய புதன் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும், சனியுடன் இணைந்து பாபத்துவத்தை பெற்றதாலும், லக்னத்திற்கோ, லக்னாதிபதிக்கோ, எட்டாம் பாவகத்திற்கோ சுபர் சம்பந்தம் ஏற்படாததாலும், இவர் தன்னுடைய 33 வயதில் ஆயுளை இழக்க நேரிட்டது.
ஒருவரின் ஆயுளைக் கணிப்பதற்கு, லக்னமும் எட்டாமிடமும் துணை புரியும். அதேநேரத்தில் அவரது மரணம் எப்படி நடந்தது என்பதை எட்டு, பன்னிரெண்டாம் பாவகங்கள் இரண்டும் சுட்டிக் காட்டும். 8-க்குடையவர் இங்கே சனியுடன் இணைந்து, எட்டாமிடத்தை செவ்வாய் பார்த்ததாலும், பனிரெண்டாமிடத்தில் பாபியான ஆறுக்குடையவனுடன் இணைந்த ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் புக்திநாதன் சுக்கிரன் இருப்பதாலும் இவர் விபத்தில் மரணமடைந்தார்.
கீழே தொண்ணூறு வயதைக் கடந்து இன்றும் நிறைவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும், மிகப் பெரியவர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்திருக்கிறேன்.
தான் சார்ந்திருக்கும் மாவட்டத்தின் பெரிய பாரம்பரிய பின்னணியைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர். இவரது தந்தை, மகன், பேரன் என குடும்பமே அரசியல் தொடர்புடையது. இவரது மகன் தற்போது இவரது மாவட்டத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறார்.
எனது கணிப்பின்படி இவரது பேரனும் எதிர்காலத்தில் அரசியலில் மிக உயர்ந்த ஒரு நிலைக்கு வருவார். வாழையடி வாழையாக தான் சார்ந்திருக்கும் சமூகத்திலும், மாவட்டத்திலும் நற்பெயரை மட்டுமே தக்க வைத்து, பழி, பாவத்திற்கு அஞ்சும் குடும்பம் இவருடையது.
இவரது ஜாதகத்தில் உள்ள இன்னொரு சிறப்பம்சமாக எழுபது ஆண்டுகளாக இன்றும் நீடித்திருக்கும் தாம்பத்திய நல்வாழ்வைக் கொண்டவர் இவர். இவரது மனைவியும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்தப் பெரியவர் தொண்ணூறு கடந்தும், இன்றும் தன்னுடைய வேலைகளைத் தானே பார்த்துக் கொள்ளும் அளவிற்கு உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் சிறப்பாகவே இருக்கிறார்.
இந்தப் பெரியவர் 7-6-1928-ல் அதிகாலை பனிரெண்டு மணி, ஐம்பத்தி ஆறு நிமிடங்களுக்கு, ஈரோட்டிற்கு அருகே பிறந்திருக்கிறார்.
1900-ம் ஆண்டுகளில் ஜாதகம் எழுதுவது என்பது மிகப் பெரிய செல்வந்தக் குடும்பங்களில் மட்டும்தான் சாத்தியம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சாதாரணமானவர்களுக்கு ஜாதகம் எழுதப்படும் பாக்கியம் அன்று கிடைத்ததில்லை. இவரது பிறந்த நேரம் நள்ளிரவு 12-56 என மிகத் துல்லியமாக குறிக்கப்பட்டதிலிருந்தே இவரது குடும்பத்தின் செல்வப் பின்னணி தெரிய வரும்.
ல/ செவ் | குரு | சூரி,சுக், ராகு | புத |
ஆண் 7-6-1928 அதிகாலை 0-56 ஈரோடு | |||
சந் | சனி கேது |
மீன லக்னம், தனுசு ராசியில் பிறந்திருக்கும் இவருக்கு லக்னம் மற்றும் இரண்டு, ஒன்பது மற்றும் பத்துக்குடைய, லக்னாதிபதி குருவும், ராஜயோகாதிபதி செவ்வாயும் லக்னம் மற்றும் தனஸ்தானத்தில் பரிவர்த்தனை அடைந்திருக்கிறார்கள். இதன்மூலம் லக்னம் மற்றும் இரண்டாமிடம் வெகு சிறப்பு பெறுகிறது.
லக்னாதிபதி குரு இங்கே திக்பலத்திற்கு அருகில் இருக்கிறார். தன்னுடைய நண்பரான செவ்வாயின் இரண்டாம் வீட்டில் நட்பு நிலையில் எவ்வித பாபத்துவமும் இல்லாமல் இருக்கும் சுபரான குரு, தன்னுடைய வலிமை மிகுந்த பார்வையால் ஆயுள் ஸ்தானமான எட்டாம் இடத்தைப் பார்த்து வலுப்படுத்துகிறார்.
இன்னொரு நிலையாக செவ்வாயும் தனது எட்டாம் பார்வையால் ஆயுள் ஸ்தானத்தைப் பார்வையிடுகிறார். உண்மையில் நேரடியான வெகு சுபத்துவத்தைப் பெறாத சனி, செவ்வாயின் பார்வை கெடுதல்களையே தரும் என்றாலும் செவ்வாயின் எட்டாம் பார்வைக்கு 25 சதவிகித திறன்தான் என்பதால் இங்கே பாதிப்பு இல்லை.
ஒரு லக்னத்தின் ராஜயோகாதிபதி பாபராக இருப்பினும், அவரது பார்வை சில நிலைகளில் வளர்ச்சியைத் தரும் என்று நான் சொல்வது இது போன்ற நிலைகளில்தான்.
பார்க்கும் பாபக்கிரகம் சுபத்துவ அமைப்பில் உள்ளதா, பாபத்துவ நிலையில் இருக்கிறதா, சூட்சும வலு பெற்றிருக்கிறதா என்பதை வைத்துத்தான் பார்வையின் பலனைக் கணிக்க வேண்டும். இங்கே குருவின் வீட்டில் சுபத்துவமாக அமர்ந்த செவ்வாய் தன்னுடைய எட்டாம் பார்வையால் ஆயுள் ஸ்தானத்தைப் பார்ப்பது கெடுதல் அல்ல.
மிக முக்கிய ஒரு சூட்சும நிலையாக, இந்த ஜாதகத்தில் எட்டாமதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்ற நிலையில் இருந்தாலும், ராகுவோடு சேர்ந்து மிக நெருக்கமாக ஒரே டிகிரியில் இருப்பது முற்றிலும் வலுவிழந்த நிலை.
ஆயுள் ஸ்தானாதிபதி சுக்கிரன் அந்த வீட்டிற்கு எட்டில் மறைந்து, ராகுவுடன் மிக நெருக்கமாக ஒரே டிகிரியில் இணைந்து கிரகணமாகி, சூரியனுடன் அஸ்தமனமும் ஆகியுள்ள நிலையில் இவருக்கு தொண்ணூறு வயதுக்கு மேலும் நீடித்திருக்கும் ஆயுள் பாக்கியம் எப்படிக் கிடைத்தது?
ஜோதிடத்தில் விதியை விட விதிவிலக்குகளைத்தான் அதிகம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் பலன்களை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். அதற்கு இந்த ஜாதகமும் ஒரு நல்ல உதாரணம்.
அஷ்டமாதிபதி சுக்கிரன் வெகுவாக வலுவிழந்த நிலையில், யோகங்களில் மிக உயர்வாக நான் சொல்லும் சந்திர அதியோகநிலையில் சுக்கிரனும், புதனும் இங்கே இருப்பது கவனிக்கத்தக்கது. அதாவது பௌர்ணமியை விட்டு சற்றே விலகிய நிலையில் தொண்ணூறு சதவிகித ஒளித்திறனுடன் கூடிய சந்திரனுக்கு ஆறு மற்றும் ஏழாமிடங்களில் இங்கே சுக்கிரனும், புதனும் அமர்ந்திருக்கிறார்கள்.
சந்திரன் அதியோக அமைப்பில் எவ்வித பங்கமும் இன்றி, வர்கோத்தம நிலையில் அமர்ந்து, குருவின் பார்வையையும், குருவுக்கு நிகரான தனித்த புதனின் பார்வையும் பெற்று, தன்னுடைய பூரண ஒளி மூலம் சுக்கிரனின் பலவீனத்தை முழுமையாக நீக்கி அவரை வலுப் பெறச் செய்கிறார்.
அதியோக அமைப்பில் எட்டாம் அதிபதியை சந்திரன் வலுப்படுத்தி ஆயுளை நீட்டித்தது போலவே, ஏழாம் அதிபதியையும் பார்த்து சுபத்துவப்படுத்தி அவருக்கு சிறப்பான மணவாழ்வையும் கொடுத்திருக்கிறார். இதுவே கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக நீடித்திருக்கும் அவரது திருமண பந்தத்திற்கு காரணமான ஒன்று.
ஜோதிடத்தில் பலன் தவறுவதும், உண்மையான பலனை கணிக்க இயலாமல் போவதும் இதுபோன்ற சூட்சுமமான விதிவிலக்கு நிலைகளில்தான்.
சுபத்துவம், பாபத்துவம் சூட்சும வலு நிலைகளைப் புரிந்து கொள்ளும் நிலையில் ஒருவரால் கேந்திர, கோணங்கள், மறைவு ஸ்தானங்கள், ஆட்சி, உச்சம், நீச்சத்தையும் தாண்டி ஜோதிடத்தை ஒளியாக மட்டுமே பார்க்க முடியும். இப்போது நான் விளக்கும் விஷயத்தையும் புரிந்து கொள்ள முடியும்.
மூல நூல்கள் சொல்லும் யோகங்கள் அனைத்தும் ஒளி மற்றும் ஈர்ப்பு விசை சம்பந்தப்பட்டவையே. அதிலும் சந்திராதி யோகம் முழுக்க முழுக்க பூமியில் உள்ள உயிர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான சந்திரனின் தனிப்பட்ட சிறப்பான ஒளியைச் சொல்வது என்பதை ஒரு தனிக்கட்டுரையாகவே எழுதி இருக்கிறேன்.
எத்தகைய ஒரு பலவீனமான நிலையிலும், ஒரு கிரகத்தின் தாழ்வு நிலையை நீக்கி, அக்கிரகத்தை முழுமையாகத் தூக்கி நிறுத்தும் வலிமை சந்திரனுக்கு உண்டு.
இன்னும் சில விளக்கங்களை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM தொடர்பு எண்கள் - செல்:8681998888, 8870998888, 8428998888, 7092778888, 8754008888, 044-24358888, 044-48678888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.