ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888
தீனதயாளன், நாகர்கோவில்.
கேள்வி.
மாலைமலர் ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்காக அதன் நிர்வாகிகளுக்கும், ஆசிரியருக்கும் நன்றியுடன் வணக்கம். இது நான்காவது கடிதம். பள்ளியில் முதல் ரேங்க் எடுத்தும் வறுமையால் படிப்பைத் தொடர முடியவில்லை. சிறுவயது முதல் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வேலை செய்தும் பல தொழில் செய்தும் எந்த சேமிப்பும் இல்லை. சொந்தமாக வீடும் இல்லை. தினமும் உழைத்துச் சாப்பிடும் நிலை இருக்கிறது. என் ஜாதகத்தில் சனி உச்சமாக இருந்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. ஒரு ஜோதிடர் ராகுதசை வந்ததும் மூன்று கடை நடத்தலாம் என்றார். இன்னொரு ஜோதிடர் 60 வயதிற்கு மேல் இழந்தது எல்லாம் திரும்பி வரும் என்றார். இன்னொருவரோ 2015-ல் சொந்த வீடு, வளமான வாழ்க்கை அமையும் என்றார். எதுவும் நடக்கவில்லை. ஒரு பத்திரிக்கையில் ஐந்தாம் அதிபதி லக்னத்தில் இருந்து, ஒன்பதாம் அதிபதி உச்சமாக இருந்தால் அரச வாழ்க்கை அமையும் என்று எழுதியிருந்தது. அதுவும் நடக்கவில்லை .ராகு தசை எனக்கு எப்போது பலன் செய்யும்? ஒரு ஜோதிடர் செவ்வாய் தசை நடக்கும்போது பவள மோதிரம் போட்டால் நாற்பத்தி ஒரு நாளில் மேலே போய்விடலாம் என்று சொன்னார். கற்களால் கிரகங்களின் பாதிப்பை சரிசெய்ய முடியுமா? ஜோதிடம் சரியானது, ஜோதிடர்களின் கணிப்பு தவறு என எழுதுகிறீர்கள். என் கேள்விக்கு முன்னுரிமை கொடுங்கள்.
பதில்.
(மிதுன லக்னம், விருச்சிக ராசி. 1ல் சுக், 2ல் சூரி, 3ல் புத, கேது, புத, குரு. 6-ல் சந், சனி, ராகு, 10ல் செவ், 12ல் கேது, 16-8-1956 அதிகாலை 2-55 நாகர்கோவில்)
ஜோதிடத்தில் ஆர்வமுள்ளவர்கள் வாக்கியப் பஞ்சாங்கப்படியான கிரக நிலைகளை வைத்து கணிப்பதை முதலில் நிறுத்தினாலே அனைத்தும் சரியாகிவிடும். வாக்கியப் பஞ்சாங்கம் என்பது முற்றிலும் தவறானது. தென்மாவட்டங்களில் இருப்பவர்கள் வாக்கியம்தான் ஞானிகள் சொன்னது, திருக்கணிதம் மனிதர்கள் உருவாக்கியது என்ற தவறான பிரச்சாரத்தால் இன்னும் வாக்கியத்தை பிடித்து தொங்கிக் கொண்டு ஜோதிடத்தை பிழையாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
உலகம் முழுக்க வாக்கிய பஞ்சாங்கம் ஒழிக்கப்பட்டு விட்டது. பக்கத்தில் இருக்கும் ஆந்திரா, கேரளா கூட வாக்கியத்தை விட்டு விட்டன. கண்ணுக்கு எதிரே தெரியும் ஒரு மாபெரும் தவறு வாக்கியப் பஞ்சாங்கம். இதைப் புரிந்து கொண்டவர்களுக்கு தான் துல்லிய பலன் கை கைவரும்
திருக்கணிதப்படி உங்கள் ஜாதகத்தில் சனி ஆறாமிடத்தில் இருக்கிறார். சந்திரன் சனி, ராகு சேர்க்கை ஆறாமிடத்தில் இருக்கிறது. இந்த அமைப்பின்படி நீங்களே ஒரு குழப்பவாதியாகத்தான் இருப்பீர்கள். மனோகாரகனாகிய சந்திரன் நீசமாகி, சனி, ராகுவுடன் இணைந்ததால் உங்களால் எதிலும் ஒரு தெளிவான முடிவு எடுக்க முடியாமல் எல்லா துறையிலும் தோற்றுப்போய் இருப்பீர்கள். 30 வயதிற்கு மேல் நடந்த சூரிய, சந்திர, செவ்வாய் தசைகளும் உங்களுக்கு அவயோக தசைகள் என்பதால் வாழ்க்கையின் மிக முக்கியமான 30 ஆண்டுகாலம் உங்களுக்கு வீணாகப் போய் விட்டது.
ராகுவிற்கு சனி, செவ்வாய் தொடர்புகள் இருந்தாலே நன்மைகளைச் செய்ய மாட்டார். அவர் நல்லவை செய்ய வேண்டுமெனில், குரு, சுக்கிர தொடர்புகள் இருக்க வேண்டும். அதே நேரத்தில் ராகு, நீசனுடன் இணையும்போது நல்ல பலன்களைத் தருவார். இங்கே ராகு, செவ்வாயின் வீட்டில் சனியின் இணைவில் அமர்ந்ததால் உங்களுக்கு ராகு தசை சுமாரான பலன்களைத் தரும். வரும் ஜூலை மாதத்திற்கு பிறகு ஆரம்பிக்க இருக்கும் கேது புக்தி முதல் சில நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு, ராகு தசை, சுக்கிர புக்தியில் நன்றாக இருப்பீர்கள். சுக்கிர புக்தியில் தொழில் நன்றாக இருக்கும்.
பத்திரிக்கையில் வரும் பொதுப் பலன்களை வைத்து நம்முடைய ஜாதகத்தை ஒப்பிட்டுப் பார்ப்பது சரியாக வராது. ஜோதிடம் என்பது நுணுக்கமான ஒரு கலை என்பதால் சகல விதிகளும் பொருந்தி வரும் நிலையில்தான், நன்மையோ, தீமையோ நடைபெறும்.
ராசிக்கற்களைப் பற்றி மாலை மலரில் “ராசிக்கற்களா ராசிக்குக் கற்களா” என்று ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன். அதை என்னுடைய இணையதளத்தில் படிக்க முடியும். மிதுன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு செவ்வாய் தசை நடக்கும்போது பவள மோதிரம் போடச் சொன்னவர் அனுபவக் குறைவானவர். அவர் சொன்னதைப் போல போட்டிருந்தால் 41 நாளில் “மேலே” போயிருக்கலாம்.
ராசியான கல்தான் அணிய வேண்டுமே தவிர, நம்முடைய சொந்த ராசி எதுவோ அந்தக் கல் அணிவதால் பயன் இல்லை. குறிப்பாக லக்னத்திற்கு 6, 8ம் அதிபதிகளின் கல்லை அணிவது மிகவும் தவறானது. கற்களுக்கு என்று சில குணங்கள் இருப்பதால்தான் ஜோதிடத்தில் இவைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால் ஜாதகர் எந்தக் கல்லை அணிய வேண்டும் என்று சொல்வதற்கான முழுமையான ஜோதிட அறிவு இருக்கும் ஜோதிடர் சொல்லும் கல்லைத்தான் அணிய வேண்டும்.
விருச்சிக ராசி என்பதாலும், ஆறில் இருக்கும் ராகு தசை நடப்பதாலும் மிகுந்த சிரமத்தில் இருப்பீர்கள். இந்த வருட தீபாவளி முதல் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றம் உண்டாகும். லக்னத்தில் சுக்கிரன் அமர்ந்து, குரு தசை வரப்போவதால் அந்திம காலத்தில் நன்றாகவே இருப்பீர்கள். வாழ்த்துக்கள்