adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 223 (05.02.19)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

சசிகலா, மட்டக்களப்பு.

கேள்வி

தெய்வத்தின் தூதுவனாகவும், எளியவனாகவும் இருக்கும் குருஜிக்கு வணக்கம். மாலைமலரில் உங்களைத் தொடர்ந்து படித்து வருகிறோம். எனது தம்பி வர்த்தகத் துறையில் பல்கலைக்கழகத்தில் முதல் மாணவனாக கல்வி பயின்று வருகிறார். விளையாட்டு, தலைமைத்துவம், கல்வி என்று எல்லாவற்றிலும் முதலிடம் மட்டுமே. 2017 மார்கழி மாதம் விடுமுறைக்கு வந்தபோது உடல்நலமின்றி வைத்தியசாலைக்குச் சென்றதில் அவனுக்கு இரண்டு கிட்னியும் பழுதடைந்து விட்டது, சிறிது காலம்தான் உயிருடன் இருப்பார் என்பதைக் கேட்டதிலிருந்து குடும்பம் பெரும் துன்பத்தில் இருந்து வருகிறது. நாங்கள் வறிய குடும்பம். அம்மா கூலி வேலை செய்துதான் எங்களை படிப்பிக்கிறார். தம்பி இப்போது மன விரக்தியில் இருக்கிறான். ங்கு கிட்னி கிடைக்காததால் இந்தியாவில் இருந்து வாங்கி வைப்பம் என்று கடன் பெற்றுள்ளோம். ஒன்று விட்ட நாளுக்கு ஒரு தரம் ரத்தம் சுத்திகரித்து ஏற்றி அவன் உடல் காய்ந்து சருகாகி போய்விட்டது. உங்கள் மகனுக்கு படிப்பு, விளையாட்டில் கெட்டித்தனம் என்பதால் செய்வினை செய்துள்ளார்கள் என்று கூறி, சாமியார்களிடம் சென்று பல லட்சம் செலவு செய்து, அவர்கள் நமது வீட்டிற்கு வந்து செய்வினை இருக்கு என்று சாந்தி அபிஷேகம் செய்தும் குணமடையவில்லை. பின்பு கிறிஸ்தவ பாதிரியார்கள் வந்து அவருக்கு குணமடையும் என்று சொல்லி பல ஜெபங்கள் செய்து வருகிறார்கள். தற்போது நாங்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளோம். உயிர் வேணுமென்றால் வறுமைப்பட்ட நாங்கள் என்ன செய்வது? வேறு வழி தெரியவில்லை. தம்பி உயிரற்ற பிணம் போலவே இருக்கிறான். அவனுக்கு ஆப்ரேஷன் செய்யலாமா? செய்தால் பழைய நிலைக்கு வருவானா? உயிருக்கு ஆபத்து இல்லையா? அவனுக்கு எப்போது எல்லாம் நன்றாக அமையும்?

பதில்

(மேஷ லக்னம், சிம்ம ராசி, 1ல் கேது, 5ல்சந், 6ல் புத, 7ல் சூரி, சுக், ராகு, 8ல் செவ், குரு, 11ல்சனி, 20-10-1995 மாலை 6-1 மட்டக்களப்பு)

தம்பியின் ஜாதகப்படி லக்னாதிபதிசெவ்வாயே எட்டுக்குடையவனுமாகி, ஆயுளைக் குறிக்கும் எட்டாமிடத்தில் ஆட்சி பெற்று, குருவுடன் இணைந்து சுபத்துவமான ஜாதகம். ஆகவே ஆயுள் குற்றமில்லை. நிச்சயமாக தீர்க்காயுள் உண்டு.

எனினும் லக்னாதிபதியை விடஆறாம் அதிபதி வலுக்கக் கூடாது. அப்படி வலுத்தால் கடன், நோய், எதிரித் தொந்தரவு வயதிற்கு ஏற்ற வகையில் இருக்கும். இங்கே லக்னாதிபதி செவ்வாய் ஆட்சியாக இருக்கும்நிலையில், ஆறுக்குடைய புதன் உச்சமாக இருக்கிறார். புதன் உச்சமாகஇருப்பதால்தான் புதனின் காரகத்துவப்படி படிப்பிலும் புத்திசாலித்தனத்தையும்உங்கள் தம்பி முதல் நபராக இருக்கிறார். அதே நேரத்தில் புதன் தன்னுடைய ஆதிபத்தியத்தையும் செய்வார்என்பதன்படி தம்பிக்கு இப்போது நோய் வந்து விட்டது.

லக்னாதிபதி குருவுடன் இணைந்துசுபத்துவமாக இருந்தாலும், லக்னத்தையும் ராசியையும் லக்னாதிபதியையும் ஒருசேர சுபத்துவமோ, சூட்சுமவலுவோ இல்லாத சனி பார்ப்பது பலவீனம். தற்போது தம்பிக்கு ஆறாம் அதிபதி புதனுக்கு சாரம் கொடுத்த, சனி பார்வை பெற்ற தேய்பிறைச் சந்திரனின் தசை நடந்து வருகிறது.

எனது கணிப்பின்படி சந்திரதசை, செவ்வாய் புக்தியில் உங்கள் தம்பிக்கு நோய் அமைப்புகள் தெரிய வந்திருக்கும். நோய் இந்த வருடம் டிசம்பர் மாதம் ராகுபுக்தி வரை நீடிக்கும். ராகு சுக்கிரனுடன் இணைந்திருப்பதால்இந்த வருடம் முழுவதும் அவர் சிகிச்சையில்தான் இருக்க வேண்டும். ஆபரேஷன் செய்து கொள்ளலாம். அடுத்து வருடம் ஆரம்பிக்கும் குரு புக்தி முதல் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் தெரிய வரும். நன்றாகஇருப்பார். வாழ்த்துக்கள்.

வி. நாராயணன், சேலம்.

கேள்வி.

ஜோதிட சித்தருக்கு வணக்கம். மகன் பெட்ரோலிய இன்ஜினியர் படிப்பு முடித்துள்ளார். வேலை கிடைக்கவில்லை. அவர் பிறந்த நேரப்படி லக்னாதிபதி நீசம் என்று எங்கள் ஊர் ஜோதிடர் கூறினார். மேலும் செவ்வாய் நீசம் என்பதால் மகனுக்கு வேலை கிடைக்க வாய்ப்பில்லை என்றும், லக்னத்தில் இருந்து பத்தாம் பாவகத்தில் சனி, கேது சேர்ந்திருப்பதால் உறுதியாக வேலை கிடைக்காது என்றும் சொல்கிறார். கூடுதலாக செவ்வாய், சுக்கிரன் சேர்ந்து இருப்பதால் திருமணத் தடையும் உள்ளது என்றும் சொல்கிறார். மகனின் எதிர்காலம், உத்தியோகம் பற்றி பதில் கூறுங்கள் ஐயா.

பதில்.

(மிதுன லக்,னம், சிம்ம ராசி, 2ல் சுக், செவ், 3-ல் சூரி, சந், 4ல் புத, ராகு, 7ல் குரு, 10ல் சனி, கேது. 12-9-1996 அதிகாலை 12-20 சேலம்.)

மகனுக்கு மிதுன லக்னமாகி ராசியில் உச்சம் பெற்ற புதன், அம்சத்தில்தான் நீசம் பெற்றிருக்கிறார். ஒரு ஜாதகத்தில் ராசிக்கட்டத்தில் கிரகங்கள் இருக்கும் நிலையே முதன்மையானது. அதை வைத்துத்தான் பலன் சொல்ல வேண்டும். ராசியில் உச்சமாக இருக்கும் கிரகம் அம்சத்தில் நீசம் அடைந்திருந்தால், அந்த கிரகத்தின் தசையில் கிடைக்கும் பலன்கள் நிலைக்காது என்பது மட்டுமே மூலநூல்களின் கருத்தாக உள்ளது. ராசியில் உச்சமாக இருக்கும் கிரகம், அம்சத்தில் நீச்சம் அடைந்தாலும் நிச்சயமாக நல்ல பலனைத் தரும்.

பெட்ரோலைக் குறிக்கும் சனி, கேதுவுடன் சேர்ந்து சூட்சும வலுப்பெற்று பத்தாமிடத்தில் உச்ச புதனின் பார்வையில் இருப்பதால்தான் உங்கள் மகன் பெட்ரோலியத் துறையில் படித்திருக்கிறார். சனிக்கு வீடு கொடுத்த குரு ஆட்சி பெற்றிருப்பது மிகச் சிறப்பு. மகன் ஜாதகத்தில் லக்னத்தையும், ராசியையும் வலுத்த குரு பார்ப்பது மேன்மை. செவ்வாய் இரண்டில் நீசமாக இருந்தாலும் அவர் சுக்கிரனுடன் சேர்ந்து சுபத்துவம் பெறுகிறார். லக்னாதிபதி வலுவாக இருந்தாலே எவ்வித தோஷங்களும் கெடுதலைச் செய்யாது.

மகனுக்கு வேலை கிடைக்காது, திருமணம் நடக்காது என்பதெல்லாம் ஜோதிடத்தை முழுமையாகத் தெரியாதவர்களின் கணிப்பு. அடுத்து நடக்க இருக்கும் சூரிய தசை, குரு புக்தியில்,  வரும் ஜூலை மாதத்திற்கு பிறகு வேலை கிடைக்கும். சிம்மத்தையும், சூரியனையும் குரு பார்ப்பதால் அரசு சார்ந்த வேலைக்கும் இடமிருக்கிறது. அரசுத் தேர்வு எழுதச் சொல்லுங்கள் எதிர்காலத்தில் மகன் நன்றாக இருப்பான். வாழ்த்துக்கள்.

எஸ். கல்யாணகுமார், சென்னை- 73.

கேள்வி.

ஒருவருக்கு தைரியத்தையும், தன்னம்பிக்கையும் கொடுத்து உற்சாகப்படுத்தும் தலைசிறந்த குருவிற்கு வணக்கம். 34 வயதாகியும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை. நானும் அப்பா அம்மாவுடன் சங்கரன்கோவிலில் உச்சி கால பூஜைக்கு சென்று வந்தோம். சிறுவாபுரி அம்மன் கோயில், திருநள்ளாறு போன்ற பல தலங்களுக்கு சென்று பரிகாரம் செய்தும் பலனில்லை. வயதான பெற்றோர்கள் பெரிதும் மனஉளைச்சலில் உள்ளனர். எனக்கு எப்போது திருமணம் நடக்கும்?

பதில்.

(கடக லக்னம், மகர ராசி, 5ல் சனி, கேது, 6-ல் புத, 7ல் சூரி, சந், குரு, 8ல் சுக், செவ், 11ல் ராகு, 22-1-1985 மாலை 6-55 சென்னை)

ஒருவருக்கு கடுமையான புத்திரதோஷ அமைப்புகள் இருக்கும் நிலையில் திருமணம் மிகவும் தாமதமாகும். 25 வயதில் நீங்கள் தந்தையாகும் அமைப்பு இருந்தால்  உங்களுக்கு 24 வயதில் திருமணம் நடந்து விடும். 35 வயதிற்கு மேல்தான் நீங்கள் அப்பா ஆவீர்கள் என்றால் அதற்கு ஒரு வருடம் முன்னதாகத்தான் திருமணம் நடக்கும்.

உங்களுக்கு கடக லக்னமாகி, ஐந்துக்குடைய செவ்வாய் எட்டில் மறைந்து, ஐந்தாமிடத்தில் சனி அமர்ந்து, ராகு கேதுக்கள் ஐந்தோடு தொடர்பு கொண்டு, புத்திரகாரகன் குருவும் நீசமடைந்ததால் கடுமையான புத்திர தோஷம் இருக்கிறது. ஆனால் 5, 8-க்குடையவர்கள் பரிவர்த்தனை அடைந்திருப்பதால், தாமதமான புத்திர பாக்கியம் உண்டு. அதோடு லக்னத்திற்கு எட்டில் செவ்வாய், ராசிக்கு இரண்டில் செவ்வாய் என்றாகி, தற்போது பலவீனமான குருவின் தசையும்  நடந்து வருகிறது.

புத்திரதோஷ தடை நீங்குவதற்கு ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல்நாள் மாலையே ஸ்ரீகாளஹஸ்தி சென்று தங்கி அதிகாலை ருத்ராபிஷேகத்தில் கலந்து கொள்ளவும். ஒரு திங்கட்கிழமை அல்லது பௌர்ணமி அன்று மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதிருக்கும் சோமப்பா சாமிகளின் ஜீவசமாதியில் வழிபடவும். ஒரு வளர்பிறை திங்கட்கிழமை இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள், சந்திர ஓரையில், ஓடும் நீருக்கு அருகில் ஒரு சுமங்கலிக்கு பத்து படி நெல் தானம் தரவும். உடனடியாக திருமணம் நடக்கும். வாழ்த்துக்கள்.

One thought on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 223 (05.02.19)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *