ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888
மரணம் எப்போது வரும் எனும் சென்ற வாரக் கட்டுரையைப் படித்தவுடன், ஆயுள் காரகனான சனி, ஆயுள் ஸ்தானம் எனப்படும் எட்டாமிடத்தைப் பார்ப்பது நல்லதுதானே என்ற சந்தேகம் உங்களில் பலருக்கு வந்திருப்பதை பின்னூட்டங்களிலிருந்து அறிகிறேன்.
உண்மையில் சனி எட்டில் இருப்பதுதான் கூடுதல் ஆயுளைத் தரும் என்று சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, எட்டாமிடத்தை சனி பார்த்தால் தீர்க்காயுள் என்று நம்முடைய மூலக் கிரந்தங்களில் எங்குமே சொல்லப்படவில்லை. அப்படிப்பட்ட ஒரு விதி இருந்திருப்பின், இரண்டில் சனி அமர்ந்து எட்டைப் பார்த்த ஜாதக அமைப்பினைக் கொண்ட ஜெயலலிதா மத்திம ஆயுள் எனப்படும் அறுபத்தி எட்டு வயதில் இறந்திருக்க மாட்டாரே?
ஜெயலலிதாவின் ஜாதகம் மிகப்பெரும் ராஜயோகங்களைக் கொண்ட ஒரு பழுதற்ற ஜாதகம். அப்பேர்ப்பட்ட ஜாதகத்தைக் கொண்ட அவருக்குக் கூட ஆயுளைக் குறிக்கும் எட்டாம் பாவகம் வலிமையாக இல்லை. தனது குடும்பத்தினர் யாரும் அறுபது வயதிற்கு மேல் உயிர் வாழ்ந்தது இல்லை. தான் அறுபதைத் தாண்டி இன்னும் உயிர் வாழ்வதே பரம்பொருள் தனக்கு அளித்த கொடை என்று அவர் சொல்வதுண்டு என்பதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஒரு ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதி, எட்டுக்குடையவன், ஆயுள்காரகன் சனி இவர்கள் நால்வரும் சுபத்துவ, சூட்சும வலுவோடு இருக்கும் நிலையில்தான் ஒருவர் தீர்க்காயுள் எனப்படும் எண்பது வயதுகளைத் தாண்டி உயிரோடு இருக்க முடியும்.
இவர்கள் அனைவருக்கும் தனித்தனியே இருபத்தி ஐந்து மார்க் கொடுத்து நால்வரும் வலுவாக இருந்தால் அவர் நூறு வயதை எட்டுவார் எனவும், மூவர் வலுவானால் அவர் எழுபத்தி ஐந்து என்றும், இருவர் மட்டும் வலு எனில் ஆயுள் ஐம்பதுகளில் என்றும், ஒருவர் மட்டும் வலு என்றால் குழந்தைப் பருவத்தில் ஜாதகர் இறந்து விடுவார் என்பதையும் உறுதியாகச் சொல்ல முடியும்.
உதாரணமாக நாம் அனைவரும் அறிந்த ஒரு தீர்க்காயுள் கொண்டவராக, மறைந்த கலைஞர் அவர்களைச் சொல்ல முடியும். கலைஞர் அவர்கள் தொண்ணூறு வயதுகளைத் தாண்டி நிறை ஆயுள் இருந்தவர். அவரது ஜாதகத்தில் கடக லக்னம், ரிஷப ராசியாகி, லக்னாதிபதி சந்திரன் உச்சத்திற்கு அருகில் வளர்பிறை நிலையில் அமர்ந்து, வலுவான குருவின் பார்வையில் இருந்தார். லக்னமும் குருவின் பார்வையில் இருந்தது.
ஆயுள்காரகனாகிய சனியே கலைஞரின் ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானத்திற்கும் அதிபதியாகி, நான்காவது கேந்திரத்தில் உச்சமாகி, தனிப்புதனின் பார்வையில் சுபத்துவமுமாகி, வக்ர நிலையில் சூட்சும வலுவும் அடைந்திருந்தார்.
ஆக, லக்னமும், லக்னாதிபதியும் குருவின் பார்வையில் சுபத்துவம், லக்னாதிபதி சந்திரன் உச்சத்திற்கு அருகில் இருக்கும் ஆட்சியை விட மேம்பட்ட மூலத்திரிகோண நிலை, அவருக்கு வளர்பிறை நிலை, எட்டாம் அதிபதி உச்சம், எட்டாமிடத்தில் எதையும் வளர்க்கும் கேது என்ற நிலை இருந்ததால்தான் கலைஞர் அவர்கள் தொண்ணூறு வயது எனும் நிலையைத் தாண்ட முடிந்தது. எட்டாமிடத்தில் கேதுவிற்குப் பதில் ராகு இருந்திருந்தால் கூட இங்கே நிறை ஆயுள் இல்லை.
கலைஞரை விட மூத்தவரான பேராசிரியர். அன்பழகன் அவர்கள் இன்றும் நல்ல நிலையில் இருக்கிறார். அவரது ஜாதகம் எனக்குத் தெரியாது. அவரது ஜாதகத்திலும் இப்போது நான் சொல்லும் நான்கு அமைப்புகளும் பூரண நிலையில் வலுப் பெற்றுத்தான் இருக்கும். அவரது ஜாதகத்திலும் இதை நிரூபிக்க முடியும்.
சனியின் பார்வை எந்த நிலையிலும் கெடுக்கும் என்பதற்காகத்தான் வேறு எந்தக் கிரகத்திற்கும் சொல்லப்படாத புராணக்கதைகள் சனிக்கு சொல்லப்பட்டன. தன் வீட்டைத் தானே பார்க்கும் கிரகம் அதை வலுப்படுத்தும் என்றாலும் அது சனிக்கு பொருந்தாது. அடிக்கடி நான் சொல்வது போல விதிகளை விட விதிவிலக்குகளை என்றைக்கு உங்களால் உணர்ந்து கொள்ள முடிகிறதோ, அப்போதுதான் ஜோதிடத்தின் இறுதி நிலையான பலன் சொல்வது என்பதன் பக்கத்தில் நீங்கள் வர முடியும்.
பிரபஞ்சம் முழுமைக்கும் இருவேறு முரண்பட்ட எதிர்நிலைகள் இருப்பதைப் போல, ஜோதிடத்தில் சூரியனையும், பூமியையும் விட்டு அதிக தூரத்தில் இருக்கும் இரண்டு கிரகங்களான, குருவும், சனியும் மனித வாழ்க்கையை இரண்டு முரண்பட்ட விதத்தில் பாதிக்கக்கூடிய கிரகங்கள் ஆவார்கள். இதில் ஒருவர் நன்மைகளைச் செய்வதற்கென்றே இருப்பவராகவும்.
இன்னொருவர் எந்த நிலையிலும் தீமைகள் செய்வதற்கென்றே இருப்பவராகவும் ஜோதிடத்தில் சுட்டிக் காட்டப்படுகிறார்கள். குரு என்பவர் முழுமையான சுப கிரகம் என்பதைப் போல சனி என்பவர் சந்தேகத்திற்கிடமின்றி முழுமையான பாபர் என்பது ஜோதிடத்தில் தெளிவாகச் சொல்லப்படுகிறது.
சனியைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ளும் ஒருவரால்தான் ஜோதிடத்தை ஓரளவுக்காவது அறிந்து கொள்ள முடியும். சனியைப் புரிந்து கொள்ளாதவரை ஜோதிடத்தின் மிகப்பெரும் உயர்நிலையான பலனறிதல் என்பது உங்களுக்கு கை வரவே வராது.
“சனியின் பார்வை சர்வ நாசம்” என்பதே ஜோதிடம் சொல்லும் உண்மை. இந்தப் பார்வை விஷயத்தில் உள்ள விதிவிலக்கு அவர் சுபத்துவம் அடைந்து பார்க்கிறாரா, சூட்சும வலுவுடன் இருக்கிறாரா என்பதுதான். ஜெயலிதாவின் ஜாதகத்தில் சுபத்துவ, சூட்சும வலுவற்ற சனி எட்டாமிடத்தைப் பார்த்ததால்தான் அவரது ஆயுள் கெட்டது.
அனைத்தும் கிடைத்த, எதையும் சாதிக்க வல்ல, மிக உயர் அந்தஸ்து கொண்ட ஜெயலலிதாவினால் தீர்க்காயுள் வாழ இயலாமல் போனது சனியின் எட்டாமிட பார்வையால்தான். லக்னம், ராசி, லக்னாதிபதி மூன்றும் உயர்நிலை சுபத்துவம் அடைந்த அவரது ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானமான எட்டாமிடம் சுபத்துவம் பெறவில்லையே? எட்டை சனி பார்த்ததால் அந்த பாவகம் பாபத்துவம் தானே அடைந்தது? ஒரு ஜாதகத்தில் எல்லா பாவகங்களையும் குரு பார்க்க முடியாதுதானே? ஒன்றிருந்தால் ஒன்று இல்லை என்பதுதானே உலக நியதி?
சுபர் சேர்க்கை, சுபர் சம்பந்தமின்றி பகை, நீசம், மறைவு, ஆட்சி போன்ற நிலைகளில் இருக்கும் சனியின் பார்வை மிகுந்த கெடுதலைத் தரும். உச்சம் இதற்கு விதிவிலக்கு. ஏனெனில் அவர் உச்சமாவது சுக்கிரனின் சுப வீட்டில் என்பதால். அதேநேரத்தில் சனி உச்சநிலையில் இருந்தாலும் ராகு போன்ற பாபருடன் இணைந்திருந்தால், அந்தப் பார்வையும் கெடுதல்களைத் தரும். அது அவருடைய வீடாக இருந்தாலும் சரி.
எந்த ஒரு கிரகமும், தன் வீட்டைத் தானே, எதிர் ஏழாமிடத்தில் இருந்து பார்க்கும்போது, பகை நிலை பெற்றுத்தான் பார்க்கும். ஒவ்வொரு கிரகத்திற்கும் எதிர்வீடு பகை வீடாகத்தான் அமையும். அதிலும் சனி, தன்னுடைய மகர, கும்ப வீடுகளை ஏழாம் வீட்டில் இருந்து பார்க்கும்போது தன்னுடைய ஜென்ம விரோதிகளான சூரிய, சந்திரனின் சிம்ம, கடகத்தில் இருந்து பார்ப்பார்.
கடகமும் சிம்மமும் சனிக்கு கடுமையான பகை வீடுகள் எனும் நிலையில், அங்கே சனி தனித்திருக்கும் போது மிகப்பெரிய பாபத்துவ அமைப்பில் இருப்பார். இங்கே சனியின் பார்வை நன்மைகளைத் தர வேண்டுமெனில், அவரை மீனத்தில் இருந்து குரு பார்க்க வேண்டும்.
குருவின் பார்வையைப் பெற்ற சனி அல்லது குருவின் இணைவு, சுக்கிரன், தனித்த புதன், வளர்பிறைச் சந்திரன் போன்ற மற்ற சுபர்களின் தொடர்பினைப் பெற்று சுபத்துவமான சனியின் பார்வை மட்டுமே நன்மைகளைத் தரும். தனித்திருக்கும் சனி தான் பார்க்கும் இடங்கள் அனைத்தையும் கெடுப்பார்.
உதாரணமாக விருச்சிகத்தில் தனித்திருக்கும் சனி கடுமையான கெடுபலன்களை தருவார். அங்கிருந்து அவர் தனது பத்தாம் பார்வையாக சிம்மத்தை பார்க்கும் நிலையில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்காது. ஆனால் இந்த சனியை மீனத்தில் இருந்து ஒன்பதாம் பார்வையாக குரு பார்த்தார் எனில், சனியின் பலன்கள் தலைகீழாக மாறும்.
இது போன்ற அமைப்பில் சனியின் பார்வை கெடுதலைத் தருவதற்கு பதிலாக நன்மைகளைத் தரும். மற்ற கிரக நிலைகளும் பொருந்தி வரும் போது இந்த அமைப்பில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை நிச்சயமாக உண்டு. சிம்மத்தில் சனி இருந்து அவரை வலுப்பெற்ற குரு பார்த்தாலும் இந்த நிலைதான். எந்த நிலையிலும் சுபத்துவ, சூட்சுமவலு பெறாத சனியின் பார்வையால் ஒருவருக்கு தீமைகள் மட்டுமே இருக்கும்.
ஜோதிடம் என்பது நுணுக்கமான கணிதச் சமன்பாடுகள் அடங்கிய ஒரு மாபெரும் கலை. இதில் உள்ளவை அனைத்தும் உங்களுக்கு சுலபமாக புரிய வேண்டும் என்கிற அவசியமில்லை. நான் எளிமையாக ஒரு விஷயத்தை உங்களுக்கு விளக்கினாலும் அதைப் புரிந்து கொள்ளும் தகுதி உங்களுக்கு இருந்தால்தான் உண்மைகள் விளங்கும்.
அதேபோல அனைவருக்கும் ஒரே மாதிரியான ஜோதிட ஞானம் வரும் என்பதும் நிச்சயமில்லாத ஒன்று. உங்களின் ஞானத்திற்கு ஏற்பத்தான் நீங்கள் ஜோதிடத்தை புரிந்து கொள்வீர்கள்.
ஜோதிடம் என்றைக்கும் ஒரு மனிதனின் எதிர்கால பலனை உண்மையாக வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. நீங்கள் அதை புரிந்து கொள்ளும் விதத்தில்தான் ஜோதிடத்தை பொய்யாக்குகிறீர்களே தவிர, ஜோதிடம் ஒருபோதும் பொய்யாவதில்லை. அது என்றென்றைக்கும் நிலையான, சத்தியமாகத்தான் இருக்கிறது.
ஜோதிடத்தின் மேல் நம்பிக்கையின்மை குற்றச்சாட்டை வைப்பவர்கள் அனைவரும் சொல்லுவது என்னவெனில், எல்லோருக்கும் பொருந்துவது போன்ற விதிகள் ஜோதிடத்தில் இல்லை, தங்களது இஷ்டம் போல ஒவ்வொருவரும் வளைத்துக் கொள்ளக் கூடிய, விளக்கம் தரக்கூடிய விதிகள் ஜோதிடத்தில் இருக்கின்றன என்பதுதான். இதனால்தான் ஜோதிடம் நம்பகத்தன்மை அற்றது என்று பகுத்தறிவாளர்கள் கூறி வருகிறார்கள்.
அதற்கு ஏற்றார்போல எல்லோருக்கும் மாரக, பாதகாதிபதிகளின் தசை, புக்திகளில் மரணமோ அல்லது மரணத்திற்கு நிகரான துன்பமோ நடந்து விடுவதில்லையே ஏன்?
இதற்கு நான் அடிக்கடி சொல்லும் ஜோதிடத்தின் மிக உயர்நிலை புரிதலான சுபத்துவம் மற்றும் சூட்சும வலு மட்டுமே பதில் சொல்லும்.
ஒரு கிரகத்தின் சுப மற்றும் பாபத்துவ, சூட்சும வலு அமைப்புகளை வைத்துத்தான் அந்த கிரகம் நல்ல, கெட்ட எந்தச் செயலைச் செய்யும் என்பதை துல்லியமாகக் கணிக்க முடியும். இந்த சுப, பாப அமைப்பில்தான் ஒருவருக்கு மரணம் வரும் அல்லது வராது என்பது இருக்கிறது.
மேலோட்டமாக ஆட்சி, உச்சம். பகை, நீசம், கேந்திரங்கள், திரிகோணங்கள், ஆறு, எட்டு, பனிரெண்டு போன்ற மறைவு ஸ்தானங்களோடு ஜோதிடம் முடிந்து விடுவதில்லை. இவை அனைத்தையும் நீங்கள் கற்றபின் ஒரு கிரகத்தின் அல்லது ஒரு பாவகத்தின் சுபத்துவ, பாபத்துவ, சூட்சும வலுக்களில்தான் உண்மையான ஜோதிடம் துவங்குகிறது. இதை அறிந்தவனே பாக்கியவான்.
“ஜோதிடம் எனும் மகா அற்புதம்” கட்டுரைகளில் இதுவரை உயர்நிலையில் இருப்பவர்களின் ஜாதகத்தையே உதாரணமாக காட்டியிருக்கிறேன். தற்போது சமூகத்தில் சாதாரண அமைப்பில் இருக்கும் இரண்டு பெண்மணிகளுக்கு மாரக, பாதகாதிபதி அமைப்பில் என்ன பலன்கள் நடந்திருக்கிறது என்பதையும், மாரக பாதகாதிபதிகள் எவ்விதமான பலன்களை எப்போது செய்வார்கள் என்பதையும் அடுத்த வெள்ளிக்கிழமை பார்க்கலாம்
மதிப்பிற்குறிய குருஜி அவர்களுக்கு வணக்கம். தங்களது விளக்கம் மிக அருமையாக உள்ளது.
சனி ஆனவர் 11ம் பாவத்தில் லாப ஸ்தானத்தில் இருந்து (சுபத்துவம் இல்லாமல்)ஆயுள் பாவத்தை பார்த்தால், ஆயுள் பாவகம் எவ்வாறு இருக்கும். மற்றுமொறு கேள்வி, அட்டமாதிபதி (செவ்வாய், சனி தவிர்த்து)மாரக ஸ்தானத்தில், அதாவது 2ம் வீட்டில் இருந்து தன் வீட்டை பார்வை செய்தாதால் ஆயுள் பலம் கூடுமா அல்லது குறையுமா..
இந்த அமைவு சர, ஸ்திர, உபய லகினங்களுக்கு வேறுபடுமா..
விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Sir your article about Saturn is good. But I saw one horoscope in this horoscope Saturn in second house no beneficial aspect. But now he age is 79. His dob-14-11-1939 time 3.31pm Chennai. What is reason.
Miga thelivana purithal aiya nandri
ஆம் ஐயா செல்வி ஜெயலலிதாவின் ஜாதகத்தில் சனி நவாசம்த்திலும் சுபர் வீட்டில் இல்லாமல் மூலதீரிக்கோணத்தில் பாபத்துவமாக உள்ளார்.