adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 221 (22.01.19)

செல்வமணி, படூர்.

கேள்வி :

மகளின் புத்திரபாக்கியம் பற்றி குருஜிநேரம் நிகழ்ச்சியில் கேட்டதற்கு, அவளது சூரியதசை, கேதுபுக்தியில் 2018ம் ஆண்டு இறுதியில் குழந்தை பிறக்கும் என்று கூறினீர்கள். நீங்கள் சொன்னது போலவே கடந்த அக்டோபர் மாதம் குழந்தை பிறந்தது. அனைவருக்கும் மகிழ்ச்சி. ஜோதிடம் எனும் தேவரகசியம் கட்டுரைகளில் உச்ச வர்க்கோத்தமம் அடைந்த சுப கிரகங்கள் நன்மைகளைச் செய்வதில்லை என்று நீங்கள் எழுதியுள்ளதை படித்திருக்கிறேன். பேத்தியின் ஜாதகத்தில் புதன் உச்ச வர்கோத்தமம் அடைந்திருப்பதால் அவளது கல்விநிலை நன்றாக இருக்குமா என்பதை அறிய விரும்புகிறேன்.


பதில் :

(மகர லக்னம், கடகராசி, 1ல் செவ், கேது. 7ல் சந், ராகு. 9ல் சூரி, புத. 10ல் சுக், குரு. 12ல் சனி, 4-10-2018 மதியம் 2-24 சென்னை)

உச்ச வர்க்கோத்தமம் பெற்ற சுபக்கிரகங்கள்தான் நல்ல பலன்களை தருவதில்லை. பாபர்களுக்கு இது சொல்லப்படவில்லை. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்கின்ற அடிப்படையில் இது சொல்லப்பட்டது. அனுபவத்திலும் இது சரியாகவே இருக்கிறது. புதன் என்பவர் ஒரு முழுமையான சுபர் அல்ல, அவர் நிபந்தனைகளுக்கு உட்பட்ட சுபர் என்பதையும் அதே கட்டுரைகளில் எழுதி இருக்கிறேன்.

தனித்த புதனை மட்டுமே சுப கிரகமாக ஞானிகள் சொல்லியிருக்கிறார்கள். சூரியனுடன் இணைந்த அல்லது பாபருடன் இணைந்த புதன் பாபராகவே கருதப்படுவார். பேத்தியின் ஜாதகப்படி புதன், சூரியனுடன் இணைந்து பாபராக இருப்பதால் அவர் உச்ச வர்க்கோத்தமம் அடைந்தது தவறில்லை. பேத்திக்கு படிப்பு நன்றாக வரும். வாழ்த்துக்கள்.

ரித்விக், திருவள்ளூர்.

கேள்வி :

பிறந்தது முதல் வாழ்க்கையில் பெரும் சோதனைகளை சந்தித்து வருகிறேன். பொறுப்பற்ற தந்தை. விவரமறியாத தாயார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் கை, கால்கள் பாதிக்கப்பட்ட, மூளை வளர்ச்சி குன்றிய பெண்ணை ஏமாற்றி எனக்கு கட்டி வைத்தனர். வெளியூரில் இருந்ததால் என்னால் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. மருத்துவரிடம் காண்பித்து, உண்மை தெரிந்து பெண்ணைப் பெற்றவர்களிடம் கேட்டதற்கு அப்படி எதுவும் இல்லை என பெரும் ரகளை நடத்தினர். தற்போது விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. அவர்கள் மேல் தவறு இருப்பதால் வழக்கை இழுத்தடிக்கிறார்கள். வழக்கில் இருந்து விடுபடுவேனா? இரண்டாம் திருமணத்தின் மூலம் என் வாழ்க்கை நல்லபடியாக அமையுமா? எதிர்காலம் குறித்து பயமாக இருக்கிறது. உங்கள் சீடன் நல்ல பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

பதில் : 

(விருச்சிக லக்னம், கன்னி ராசி. 2ல் கேது, 3ல் சுக், 4ல் சூரி, புத. 8ல் ராகு, 11ல் சந், செவ், சனி. 12ல் குரு. 11-3-1982 அதிகாலை 12- 05 திருவள்ளூர்)

புத்திர காரகனும், ஸ்தானாதிபதியுமாகிய குரு 12-ல் பகை பெற்று மறைந்து, புத்திர ஸ்தானத்தை செவ்வாய், சனி இருவரும் பார்ப்பதால் உங்களுக்கு தாமதமாக புத்திர பாக்கியம் கிடைக்க வேண்டும். கடுமையான புத்திர தோஷம் உள்ள போது திருமண ரீதியிலான நன்மைகள் எதுவும் சீக்கிரமாக கிடைக்காது. மேலும் ராசி, லக்னத்திற்கு ஏழாமிடத்தோடு சுபத்துவமற்ற செவ்வாய், சனி இருவரும் சேர்ந்து தொடர்பு கொள்ளும் போதும் திருமணச் சிக்கல்கள் இருக்கும்.

நடக்கும் குருதசை, சுய புக்தியிலேயே உங்களுக்கு விவாகரத்து கிடைக்கும். இரண்டாவது திருமண வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும். அதன்மூலம் புத்திர பாக்கியமும் உண்டு. எதிர்காலம் நன்றாகவே இருக்கும். கவலைப்பட வேண்டாம்.

ஜெ. குருநாதன், தூத்துக்குடி-2

கேள்வி :

பூர்வீகச்சொத்து விற்பனை செய்த பங்குத்தொகை கைக்கு வந்துள்ளது. வீடுகட்ட முடிவு செய்துள்ளேன். வீட்டின் வாசல் கிழக்கு பக்கமாக இருக்கவேண்டும் என்று ஜோதிடர் சொல்கிறார். ஆனால் மனை வடக்கு வாசல் வைக்கத்தான் வசதியாக இருக்கிறது. என் ஜாதகத்தை பார்த்து தீர்வு சொல்லவும். 18 வருடமாக டீக்கடை நடத்தி வருகிறேன். வருமானம் சுமாராக உள்ளது இடமாற்றம் செய்யலாமா?

பதில் :

ஒரு வீடு என்பது அதன் குடும்பத் தலைவர் மட்டுமல்ல, ஒட்டுமொத்தக் குடும்பமும் வாழ்கின்ற இடம். நாம் வாழ்வதை விட நமக்குப் பின்னால் நம்முடைய வாரிசுகள் நன்றாக இருந்து அதில் வாழத்தான் நாம் வீடு கட்டுகிறோம். உலகை விட்டுப் போகும் போது இது எனக்கு மட்டும் சொந்தமான வீடு என்று யாரும் வீட்டைத் தோளில் தூக்கிக் கொண்டு போவதில்லை.

நம்முடைய ஜாதகப்படி ஒரு திசை யோகம் இல்லாததாக இருந்தாலும், வாரிசுகளின் ஜாதகப்படி அந்த திசை யோகம் செய்யுமானால், அதன்படி வாசல் வைக்கலாம். அப்படி அமைக்கப்படும் வீடு உங்களுக்கு சங்கடங்களைத் தராது. மகனின் ஜாதகப்படி வடக்கு திசை மட்டுமே யோக திசை என்பதாலும், நீங்கள் கட்டப்போகும் வீட்டில் உங்களுக்குப் பிறகு அவன்தான் நீடித்து வாழப் போகிறான் என்பதாலும் நீங்கள் தாராளமாக வடக்கு வாசல் வைக்கலாம். வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு இடமாற்றம் செய்யலாம். இதே டீக்கடைத் தொழில் மற்றும் உடனுக்குடன் சூடான உணவுகளைத் தரும் ஹோட்டல் அல்லாத பாஸ்ட்புட் தொழில் உங்களுக்கு ஏற்றது.

கோ. காளியப்பன், கணக்கன்குப்பம்.

கேள்வி :

குருஜி அய்யா அவர்களுக்கு எனது தாழ்மையான வணக்கம். எத்தனையோ ஜோதிடப் புத்தகங்களைப் படித்திருக்கிறேன். படித்தும் வருகிறேன். மாலைமலரில் தாங்கள் எழுதிய ஜோதிடம் எனும் தேவரகசியம் புத்தகம் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. 76 வயது நடக்கிறது பணம் காசு வேண்டும் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. கிடைப்பதை வைத்து நல்லவிதமாக வாழ்ந்து வருகிறேன். எனது இறுதிக்காலம் ஓராண்டா அல்லது இரண்டு வருடமா? யாருக்கும் தொந்தரவு கொடுக்காத வகையில் பராசக்தி என் உயிரை சட்டென்று எடுத்துக்கொள் என்று தினமும் பூஜை செய்கிறேன். அப்படியே நடக்குமா? எனது மரணகாலம் எதுவென்று தயவு செய்து சொல்லுங்கள்.

பதில் :

(சிம்ம லக்னம், விருச்சிக ராசி. 1ல் சூரி, சுக். 2ல் புத, 4ல் சந், 6ல் கேது, 10ல் செவ், 11ல் சனி, 12ல் குரு, ராகு. 6-9-1943, பூப்பூக்கும் வேளை, விழுப்புரம்)

லக்னாதிபதி சூரியன், சுக்கிரனை பூரணமாக அஸ்தங்கம் செய்து, சுபத்துவமாகி, லக்னத்தில் அமர்ந்து, அது ராசிக்குப் பத்தாமிடமாக இருப்பதாலும், லக்னத்திற்கு பத்தில் வளர்பிறைச் சந்திரனின் பார்வை பெற்ற செவ்வாய் அமர்ந்து, அவர் சிம்மத்தையும் அதிலுள்ள சூரியனையும் பார்ப்பதாலும், தீயணைப்பு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்று இருக்கிறீர்கள்.

புதன் உச்சமாக இருப்பதால் உங்களுக்கும் ஓரளவு ஜோதிடம் வரும். நீங்களே ஒரு குட்டி ஜோதிடராகத்தான் இருப்பீர்கள். அப்படி இருக்கும்போது பிறந்த நேரம் சரியாகத் தெரியாமல் பூப்பூக்கும் வேளை என்று குறிப்பிட்டால் ஒரு ஜோதிடர் எதை வைத்து சரியான பலன் சொல்ல முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

மூன்று வருடங்களுக்கு முன் மாலைமலரில் வயதானவர்கள் சிலருக்கு மரண காலத்தை சொல்லப்போய் அடுத்தடுத்து எனது முடிவு எப்போது என்று ஏராளமான கேள்விகள் வந்து குவிந்துவிட்டன. அதிலிருந்து மரணத்தை சொல்வதை தவிர்த்து வருகிறேன். பிறந்த நேரம் துல்லியமாக இல்லாத உங்களுக்கு எந்த தசா, புக்தியில் மரணம் நிகழும் என்பதை தோராயமாகத்தான் சொல்ல முடியும்.

உங்களுடைய ஜாதக அமைப்பின்படி ஏழு மற்றும் எட்டாம் வீடுகளுக்கு அதிபதிகளான சனியும், குருவுமே மரண காலத்தை முடிவு செய்பவர்கள் ஆவார்கள். இவர்கள் மாரக ஸ்தானம் என்று சொல்லப்படும் மூன்று மற்றும் எட்டாம் வீடுகளோடு தொடர்பு கொள்ளும்போது மரணத்தை தருவார்கள்.

உங்களது சுமாரான நேரப்படி, தற்போது உங்களுக்கு சந்திர தசையில் குரு புக்தி இந்த வருடம் முடியும் வரை நடக்கிறது. அடுத்து வர இருக்கும் சனி புக்தி ஏழுக்குடையவன் புக்தி என்றாலும் புக்திநாதன் சனி லக்னத்திற்கு 11ல் நல்ல அமைப்பில் இருக்கிறார். அதனையடுத்து நடக்கக்கூடிய புதன் புக்தி இரண்டுக்குடையவனாகி, இரண்டாம் வீட்டிலேயே உச்சவலுவோடு, சுபர் பார்வை தொடர்பு இன்றி இருக்கிறார்.

மேம்போக்காக பார்க்கும்போது புதன் புக்தியில் உங்களுடைய மரணம் நிகழலாம் என்ற அமைப்பு இருந்தாலும் ஸ்திர லக்னத்திற்கு மூன்று, எட்டுக்குடையவர்கள்தான் மாரகாதிபதிகள் என்பதால் இங்கே உச்சம் பெற்ற புதன் உங்களுக்கு மரணம் தர மாட்டார். லக்னாதிபதி லக்னத்தில் அமர்ந்து சுபத்துவமாகி, எட்டுக்குடையவன் உச்சம் பெற்றால் தீர்க்காயுள் எனும் விதிப்படியும், பார்க்கும் கிரகத்தின் பலனை ராகு-கேதுக்கள் எடுத்து செய்வார்கள் எனும் விதிப்படியும், ஏழாம் அதிபதி சனியின் வீட்டில், எட்டாம் அதிபதி குருவின் பார்வையோடு அமர்ந்த கேது புக்தியின் பிற்பகுதியில் உங்கள் மரணம் நிகழும்.

ஆறுக்குடையவன் ஆறுக்கு ஆறில் மறைந்து, அவருக்கு வீடு கொடுத்தவர் உச்சமாகி, நட்பு வலுவோடு நல்ல அமைப்பில் இருப்பதால், நோயில் படுத்து அடுத்தவரை சார்ந்திருக்காமல், நீங்கள் நினைப்பது போலவே சட்டென்று உங்களுடைய முடிவு நிகழும். வாழ்த்துக்கள்.

3 thoughts on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 221 (22.01.19)

  1. Guruji ayya…na romba mana vethanai la irukn..saganum nu dhonudhu…yedhachu pirachanai ah varudhu…yen kalyana pathi peasa aarambichadhula irundhu ore kastamana pirachanai ah varudhu…yenu Sollunga ayya…date of birth : 13.05.1996,Time : 10.40 PM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *