ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888
ஏ. லாவண்யா, திருச்சி.
கேள்வி.
எனக்கு திருமண பாக்கியம் உள்ளதா? ஏழில் சனி இருப்பதால் திருமணம் இல்லை என்கிறார்கள். சில ஜோதிடர்கள் இரண்டாம் தாரம் என்கிறார்கள். சொந்தத்தில் திருமணம் செய்யலாமா? ஒரு ஜோதிடர் தாய்மாமன் மகன் வேண்டாம் என்கிறார். சொந்தத்தில் திருமணம் செய்தால் ஜாதகம் பார்க்கத் தேவையில்லை என்பது சரிதானா? மேற்படிப்பு படிக்க முடியுமா? லாவண்யா ஸ்ரீ என்று பெயர் மாற்றிக் கொள்ளலாமா? தற்போது பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உள்ளதால் எனது தாத்தா சொத்து என் தாயாருக்கு கிடைக்குமா? எப்போது கிடைக்கும்? செய்வினை பாதிப்பிற்காக பரிகாரங்களைச் செய்திருக்கிறோம். மிகவும் கஷ்டப்படுகிறோம். வாடகைக்கு அமையும் வீடும் வாஸ்து குறைபாடு உள்ள வீடாகவே அமைகிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் சென்ற சில மாதங்களில் ஏதாவது பிரச்சினை வந்து விடுகிறது. எனது எதிர்காலம் எப்படி இருக்கும்? இறைவன் அருளால் உங்களிடமிருந்து நல்ல பதில் கிடைக்க வேண்டும்.
பதில்.
(ரிஷப லக்கனம், கும்ப ராசி, 3ல் சூரி, புத, சுக், செவ், 5ல் கேது, 7ல் சனி, 10ல் சந், 11ல் ராகு, 12ல் குரு, 12-8-1987, அதிகாலை 1-24 தஞ்சை)
ஒரு கடிதத்தில் 104 கேள்வி கேட்டு இருக்கிறாய். உன்னுடைய கேள்விகள் அனைத்திற்கும் பதில் சொல்வதாக இருந்தால் ஒரு முழு மாலைமலரும் நிரம்பி விடும்.
கணவனைக் குறிக்கும் ஏழுக்குடைய செவ்வாய் நீசமாகி, ஏழில் சனி அமர்ந்து, ராசிக்கு 2-8ல் ராகு-கேதுக்கள் இருப்பதால் உனக்கு திருமணம் தாமதமாகிறது. ஏழில் சனி இருக்கும் அனைவருக்கும் திருமணம் ஆகாமல் போய் விடுவதில்லை. உனக்கு நிச்சயம் திருமண பாக்கியம் உண்டு.
ஏழில் அமர்ந்திருக்கும் சனியும், ஏழாம் அதிபதியான செவ்வாயும் புதனின் நட்சத்திரத்தில் அமர்ந்திருப்பதால் உனக்கு உறவில் திருமணம் நடைபெறும் அமைப்பு உள்ளது. ராசிக்கு ஏழாமிடத்தை குரு பார்ப்பது இதனை உறுதி செய்கிறது. குடும்பத்தில் உனக்கு பொருத்தமான அத்தை மகன் இருக்கும் பட்சத்தில் நெருங்கிய சொந்தத்தில் திருமணம் அமையும்.
உன்னுடைய ஜாதகத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு பலன் என்னவெனில், எட்டாம் அதிபதி சுபராகி 12ல் அமர்ந்து, எட்டாம் வீட்டையே பார்த்து, பன்னிரண்டாம் அதிபதி செவ்வாய் சுக்கிரனுடன் இணைந்து சுபத்துவம் ஆகியிருப்பதால், திருமணத்திற்கு பிறகு நீ தூர தேசத்திற்கு சென்று செட்டில் ஆவாய். எனவே இதற்கு ஏற்றார்போல மாப்பிள்ளை இருக்கிறாரா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும்.
தற்போது வெளிநாட்டை குறிக்கும் சர ராசியான கடகத்தில் இருக்கும் புதன் தசை நடப்பதும், அதன்பிறகு அந்நிய தேச வாசத்தைக் குறிக்கும் கேதுவின் தசை, மீண்டும் கடகத்தில் இருக்கும் சுக்கிரன், சூரியன், கடகாதிபதி சந்திரன், செவ்வாய் தசைகள் என சர ராசியில் உள்ள தசைகளே அடுத்தடுத்து உனக்கு நடக்க உள்ளதால் திருமணத்திற்கு பிறகு நீ நிரந்தரமாக தூர இடங்களில்தான் இருப்பாய்.
பெயரை லாவண்யா ஸ்ரீ என்று மாற்றிக் கொள்ளலாமா என்று கேட்டிருக்கிறாய். பெயரை மாற்றி வைத்துக் கொள்வதால் அத்தனை பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்றால் நமது பெருமை வாய்ந்த திருக்கோவில்களின் எந்த ஒரு வாயிலிலும், நம்முடைய நகரங்களின் சிக்னல்களிலும் பிச்சைக்காரர்களே இருக்க மாட்டார்கள். பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டத்தை செயல்படுத்துவதை விட அரசாங்கமே பெயரியல் நிபுணர்களை அழைத்து அனைவருக்கும் பெயரை மாற்றி வைத்திருக்கும்.
முறைப்பையனை திருமணம் செய்து கொள்ள ஜாதகப் பொருத்தம் பார்க்கத் தேவையில்லை என்பது உண்மைதான். முறைப்பையன், முறைப்பெண்ணிற்கு பொருத்தம் இல்லை என்றாலும் தெய்வ சம்மதத்தின் பேரில் திருமணம் செய்யலாம். பத்துப்பொருத்தம் என்பது கடந்த முப்பது, நாற்பது ஆண்டுகளாகத் தானே அதிகமாக பார்க்கப்படுகிறது. சென்ற தலைமுறையில் அத்தை, மாமன் பையனுக்கு பெண்ணை பொருத்தம் பார்க்காமல்தானே திருமணம் செய்து வைத்தார்கள்?
வாஸ்து என்பது ஆரோக்கியமாக வாழ மட்டும்தான். அதிர்ஷ்டமாக வாழ்வதற்கு அல்ல. நகரங்களில் தனி வீடுகள் கட்டமுடியாத நிலை உருவாகி, ஒரே குடியிருப்பில், ஒரே கட்டிடத்தில், குறுக்கும் நெடுக்குமாக, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று நான்கு திசைகளிலும் வாசல் வைத்து, பிளாட்டுகள் கட்டி குடியிருக்கும் இந்தக் காலத்தில் வாஸ்து என்பது தேவையற்ற ஒன்று.
வாஸ்துப்படி வீடு கட்டினால் காற்றோட்டமாக அந்த வீடு அமைந்து, அதில் வசிப்பவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்பதே உண்மை. இருக்கும் ஜன்னலை இறுக்க மூடிவிட்டு, ஏசியை போட்டுக்கொண்டு தூங்கும் இந்தக் ஒண்டுக் குடித்தன பிளாட் கலாசாரத்தில் வாஸ்துவிற்கு ஒரு முக்கியத்துவமும் இல்லை. ஜோதிடம் போன்று வாஸ்துவிற்கென்று இங்கே முறையான விதிகள் இல்லை. சொல்லப்படும் விதிகள் எல்லாம் கடந்த முப்பது ஆண்டுகளுக்குள் வாஸ்து நிபுணர்களாக உருவாக்கிக் கொண்டவைதான்.
செய்வினை, பில்லி சூனியம் என்பதெல்லாம் மனதைக் கட்டுப்படுத்த இயலாதவர்களையும், மனக்கட்டுப்பாடு இல்லாதவர்களையும் வெறுமனே பயமுறுத்தி, அவர்களின் மனதை பிறர் ஆளுமை செய்வதற்காக ஏற்பட்ட சில தந்திரங்கள் மட்டும்தான்.
செய்வினை என்பது உண்மையாக இருந்தால் இங்கே யாரும் நிம்மதியாக இருக்க முடியாது. ஒரு அரசியல் தலைவர் இன்னொரு தலைவருக்கு செய்வினை வைத்து சுலபமாக அவரை தோற்கடித்து விடலாம். தேர்தலுக்கு தேவை இருக்காது. செய்வினை செய்யத் தெரிந்தவர்தான் இந்த நாட்டின் முதல்வராக, மந்திரியாக இருப்பார். செய்வினை செய்யும் மந்திரவாதிகள் எல்லோரும் ஏன் ஏழைகளாகவே இருக்கிறார்கள்? அவர்கள் யாராவது ஒரு கோடீசுவரனுக்கு செய்வினை செய்து பணக்காரனாகி இருக்கலாமே என்று என்றைக்காவது யோசித்திருக்கிறாயா? உன்னைப்போல படித்த பெண்களே செய்வினையை நம்புவதுதான் துரதிர்ஷ்டம்.
ஜோதிடத்திற்கு அப்பாற்பட்ட ஒரு பதிலாக, பெண்களுக்கு தற்போது சொத்துரிமை கிடைத்திருப்பதால் அம்மாவிற்கு தாத்தா சொத்து கிடைக்குமா என்று கேட்டிருக்கிறாய். 1989-க்குப் பிறகு பிறந்த பெண்களுக்குத்தான் சொத்துரிமை என்று எங்கோ படித்த ஞாபகம். இதை உறுதி செய்து கொள்.
அடுத்தடுத்து குடும்பத்தில் நல்லவைகள் நடக்காததால் மனம் குழம்பிப் போய் இருக்கிறாய். இதுபோன்ற நிலைகளில் “எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்” என்கின்ற நிலையில் ஒருவர் இருப்பது இயல்புதான். நன்றாகப் படித்திருக்கிறாய். ஒருபோதும் மனதைத் தளர விடாதே. 33 வயதிற்கு பிறகு நிம்மதியான, அபாரமான வாழ்க்கை உனக்கு அமைய இருக்கிறது. பரம்பொருள் ஒருபோதும் உன்னைக் கைவிட மாட்டார். கவலைப்படாதே.
(08.01.2019 மாலை மலரில் வெளிவந்தது)
குருஜி வணக்கம் , நீங்கள் ஏற்காவிட்டாலும் என்னுடைய குரு நீங்கள் தான், மிக தெளிவான பதில்,நீங்கள் ஒரு முன் மாதிரி ஒரு ஜோதிடர் எப்படி பலன் சொல்ல வேண்டும் என்று,
ஜோதிடம் ஆவல் மட்டுமே என்னிடம் முதலில் இருந்தது ஆச்ரியம் என்னவென்றால் தங்களின் கட்டுரைகளை திரும்ப திரும்ப படித்தே நானும் ஒரு ஜோதிடராக மாறி கொண்டு இருக்கின்றேன். தங்களின் அறிவு சார்ந்த விளங்கள் என்னை ஜோதிடத்தில் மயக்க வைக்கின்றது, நீங்கள் பரம்பொருள் என்று குறிப்புடும் பொது நீங்கள் தான் என் அறிவுக்கு பரம் பொருளாக தெரிகின்றிர்கள், நீங்கள் சொன்ன அதியோகம் படி என் ஜாதகத்தில் 11 இல் முழு பௌர்னமி சந்திரன் (கடகத்தில்) ஆறாம் பார்வையில் லக்கினாதிபதி புதன் கேது உடன் ஆனால் 14 degree இடைவெளியுடன் சுபத்துவம் ஆவதால் நானும் ஒரு ஜோதிடர் ஆவேன் என்று தங்கள் கட்டுரை படித்த பிறகு தான் தெரித்தது, மிக்க நன்றி குருஜி, நீங்கள் அடிக்கடி மூல நூல்களை மட்டும் படிக்க சொல்லுவீர்கள் , எனக்கு தங்கள் கட்டுரை தான் மூல நூல். மிக்க நன்றி குரு அவர்களே, ராமசாமி, ஆதித்ய வேத ஜோதிட நிலையம் .