adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
my cart
குடும்பத்தைக் குலைக்கும் சனி..! -D-039

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி:8681 99 8888

ஒரு பாவகம், பாவகாதிபதி ஆகியவற்றோடு சனி, செவ்வாய், ராகு ஆகிய மூன்று  பாபக் கிரகங்களும் முழுமையாகத் தொடர்பு கொள்ளும்போது, வேறு சுபத்துவ நிலைகள் அங்கு இல்லாவிடில், அந்த பாவகமும், பாவகாதிபதியும் முழுமையாக செயலிழந்து போவார்கள் என்பது வேத ஜோதிட விதி.

ஜோதிடத்தில் 12 பாவகங்கள் சொல்லப்படுகின்றன. இதில் முதலாம் பாவமாகிய லக்னம் உங்களையும், இரண்டாவது உங்கள் குடும்பத்தையும், 3-உங்களின் இளைய சகோதரத்தையும், 4-அம்மா, 5-வாரிசு, 6-தாய்மாமன், 7-வாழ்க்கைத் துணை, 8-ஆயுள், 9-தந்தை, 10-தொழில், 11-மூத்தசகோதரம், இளையமனைவி, 12-விரயம் ஆகியவற்றை முக்கியமாகக் குறிக்கிறது

இதில் நான் மேலே சொன்ன சனி, செவ்வாய், ராகு ஆகிய மூன்று மிகப்பெரிய பாபக்கிரகங்களும் ஒட்டுமொத்தமாக, ஒரு பாவகத்தோடு தொடர்பு கொள்ளும் போது அந்த பாவகம் சுத்தமாக வலுவிழக்கிறது.

சனி, செவ்வாய், ராகு ஆகிய மூன்றிலும் சனியும், பாபத்துவம் பெற்ற ராகுவுமே உயிரிழப்பு போன்ற கொடுமையான விஷயங்களைச் செய்யக் கூடியவர்கள். அதிலும் சனி முழுமையான பாபத்துவ நிலையில் இருக்கும் பொழுது தன்னுடைய தசையில் கடுமையான கெடுபலன்களைச் செய்வார்.

குறிப்பாக இரண்டு, எட்டாமிடங்களில் பாபத்துவம் பெற்ற நிலையில் இருக்கும் சனி, தன்னுடைய தசையில் ஜாதகரின், குடும்ப உயிர்க் காரகத்துவத்தை தன்னுடைய வலுவுக்கேற்ற வகையில் பாதிப்பார். முழுமையான பாபத்துவ நிலையில் இருக்கும் சனி வாழ்க்கைத்துணையை உயிரிழக்க வைப்பார். பாபத்துவம் குறைவாக உள்ள சனி, டைவர்ஸ் போன்ற வகையில் துணையைப் பிரிய வைப்பார்.

கீழே ஒரு குடும்பத் தலைவரின் ஜாதகத்தைக் கொடுத்திருக்கிறேன். ஆறுமாத இடைவெளியில் மனைவியையும், 15 வயது மகனையும் இழந்தவர் இவர்.

14-12-1968, இரவு 10-45-க்கு சென்னையில் பிறந்த இவருடைய ஜாதகத்தில் சிம்ம லக்னம், கன்னி ராசியாகி, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டோடு சனி, செவ்வாய், ராகு மூவரும் தொடர்பு கொள்கிறார்கள். கூடவே அமாவாசையை நெருங்கிக் கொண்டிருக்கும் தேய்பிறைச் சந்திரனும் அங்கே இருக்கிறார். தற்போது இவருக்கு சனிதசையில், கேதுபுக்தி 27-1-2018 முதல் 7-3-2019 வரை நடந்து கொண்டிருக்கிறது.

மேம்போக்காக பார்க்கும்போது இரண்டாமிடத்தில் இருக்கும் பாபியரோடு சுபரான குரு இருப்பதைப் போலத் தோன்றினாலும், குருவும், புதனும் பரிவர்த்தனை அமைப்பில் இருப்பதால், குரு ஐந்தாமிடத்திற்கு திரும்ப வந்துவிட்ட  நிலையை அடைகிறார். எனவே ஜாதகரின் குடும்ப பாவகமான இரண்டாமிடம் சனி, செவ்வாய், ராகு-கேது, தேய்பிறைச் சந்திரன் ஆகிய ஒட்டுமொத்த பாபக் கிரகங்களின் இருப்பு, பார்வை போன்ற தொடர்புகளினால் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

ராகு, சனியின் சாரம் வாங்கியுள்ள நிலையில், கேது இந்த ஜாதகத்தின் விரையாதிபதியாகிய சந்திரனின் சாரத்திலும், சந்திரனுக்கு நெருக்கமாக இணைந்தும் இருக்கிறார். எனவே கேது இங்கே ஜாதகரின் குடும்பத்தை விரையம் செய்தாக வேண்டும்.

ஜாதகருக்கு சனி தசையில், கேது புக்தி ஆரம்பித்தவுடனேயே, கேது இரண்டாம் இடத்தில் அமர்ந்திருக்கும் மாரகாதிபதி புதனைப் போலவே செயல்பட்டு, புக்தியின்  ஆரம்பத்திலேயே மனைவியையும், ஆறு மாதங்களுக்குப் பிறகு 15 வயது மகனையும் உயிரிழக்கச் செய்து குடும்ப அமைப்பையே நிர்மூலம் ஆக்கிவிட்டார்.

சிம்ம லக்னத்திற்கு சனி தசை வருவது நல்லதல்ல என்று நான் அடிக்கடி எழுதுவது குறிப்பிடத்தக்கது. அப்படி சனிதசை வருமாயின் சனிக்கு வலுப் பெற்ற குருவின் தொடர்பு இருக்க வேண்டும். அல்லது சனி தன்னுடைய ஆறாம் வீட்டிலோ, எட்டு, இரண்டு போன்ற இடங்களிலோ அமராமல். ஆறாம் வீட்டிற்கு ஆறில் மறைந்து பதினோன்றிலோ, அல்லது பாபக் கிரகங்களுக்கே உரித்தான  இடமான பத்தாம் வீட்டிலோ அமர்ந்திருப்பது நல்லது.

இங்கே மூன்றாம் வீட்டில் உச்சமாகி இருந்தால் கூட அவருக்கு நிச்சயம் குரு போன்ற சுபக்கிரகங்களின் தொடர்பு இருந்தால் மட்டுமே நன்மைகள் இருக்கும். இல்லையெனில் அவரது கெடுபலன்களை மட்டுமே சனி தருவார்,

குறிப்பாக சனி தன்னுடைய தீய வீடான, ஆறாம் வீட்டிற்கு திரிகோண பாவகமான  இரண்டாம் வீட்டிலோ, இரண்டில் அமர்ந்திருக்கும் ராகு-கேதுக்களின் தொடர்போடு எட்டிலோ அமர்ந்திருந்தால், தனது தசையில் சிம்ம லக்னக்காரர்களின் குடும்பத்தை குலைக்கும் செயல்களில் ஈடுபடுவார். சனியின் இருப்பை விட அவரது பார்வை கொடியது எனும் நிலையில் எட்டில் இருக்கும் சனி ஜாதகருக்கு ஆயுளை மட்டும் தந்து ஜாதகரின் குடும்பத்தைப் பாதிப்பார்.

இரண்டாம் பாவகம் என்பது ஒருவரின் தனம், வாக்கு, குடும்பஸ்தானம் என்பதால் இங்கே சுபத்துவ, சூட்சும வலுவின்றி அமரும் சனி ஒருவருக்கு தொழில் சிக்கல்களையும், வருமானக் குறைவையும் கூடவே குடும்பத்தில் இழப்பு, குழப்பம், பிரிவு போன்ற சங்கடங்களையும் தருவார்.

இதுபோன்ற பலன்களை சனி கொடுக்கக் கூடாது என்றால், அவருக்கு கண்டிப்பாக வலுப் பெற்ற குருவின் பார்வை, இணைவு போன்ற தொடர்புகள் அல்லது மற்ற சுபர்களான சுக்கிரன், தனித்த புதன், வளர்பிறைச் சந்திரன் ஆகியோரின் தொடர்புகள் இருக்க வேண்டும். முக்கியமாக சனி, ராகுவுடன் சேர்ந்து பாபத்துவமடையாமல், கேதுவுடன் சேர்ந்து சூட்சும வலுப் பெற்றிருப்பது நல்லது.

இன்னொரு முக்கிய சூட்சும நிலையாக, மனைவியை இழந்தபோது இந்த ஜாதகரின் இருபது வயது மகளுக்கு அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசியாகி ஜென்மச் சனி நடப்பும், இறந்துபோன பதினைந்து வயது மகனுக்கு (7-4-2003, பகல் 3-45, சென்னை)  ரிஷப ராசியாகி அஷ்டமச் சனியும் நடந்து கொண்டிருந்தது.

குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கடுமையான ஜென்மச்சனி அல்லது அஷ்டமச்சனி நடைபெறும்போது, குடும்பத் தலைவருக்கோ, தலைவிக்கோ ஆறு, எட்டாமிடம் சம்பந்தப்பட்ட தசா,புக்திகள் நடக்குமாயின் தாங்க முடியாத உயிர் மற்றும் பொருளாதார இழப்புகள் அந்தக் குடும்பத்தில் நடைபெறுவதை நான் கவனித்திருக்கிறேன்.

எவ்வித ஆரோக்கியக் குறைபாடும் இன்றி, மிகவும் நன்றாக இருந்த இந்த ஜாதகரின் மனைவிக்கு திடீரென நோய்க்கான அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டு, 20 நாட்கள் மருத்துவ சிகிச்சை பெற்ற நிலையில் மருத்துவமனையிலேயே மரணமடைந்தார்.

மனைவி இறந்த ஆறு மாதங்களுக்குள், மாநில அளவில் நீச்சல் போட்டியில் பங்கு பெற்று வரும், நன்கு நீச்சல் அறிந்த 15 வயது மகன், பயிற்சியின்போது இருதய செயலிழப்பால் நீச்சல் குளத்திலேயே உயிரிழந்தார். இவர்கள் இருவரையும் ஒருசேர இழந்த இவரின் 20 வயது மகளின் மன அழுத்தத்தைப் பற்றி இங்கே சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஜென்மச் சனி அல்லது அஷ்டமச்சனி நேரங்களில் ஒருவருக்கு வயதுக்கேற்ற வகையில் கடுமையான மன அழுத்தம் இருக்க வேண்டும் என்பதற்காகவே நெருங்கிய உறவில் இழப்புகள் ஒருவருக்கு நடைபெறுகின்றன.

இங்கே மனைவியையும், மகனையும் ஆறுமாதங்களில் ஜாதகர் இழந்திருந்தாலும், இருபது வயதேயான அவரது மூத்த மகளுக்கு, அம்மா, தம்பி ஆகிய இருவரும் அடுத்தடுத்து இறந்தது மிகப்பெரிய இழப்பு.

சுபத்துவம் மற்றும் சூட்சும வலுப்பெறாத பாபக் கிரகங்கள் குடும்ப பாவத்தோடு தொடர்பு கொள்ளும்போது, குடும்ப அமைப்பை நிச்சயம் பாதிக்கவே செய்கின்றன. இதற்கு கோட்சார ரீதியில் நடந்துகொண்டிருக்கும் அமைப்பும் துணை செய்யும்.

கீழே கணவரை இழந்த இளம்பெண் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்திருக்கிறேன். இவர் 1-6-1980,  காலை 10-35-க்கு திருச்சியில் பிறந்திருக்கிறார். இவருக்கு கடக லக்னம், தனுசு ராசியாகி,  குடும்ப வீடான இரண்டாம் வீட்டில் செவ்வாய், சனி, ராகு, குரு ஆகிய நான்கு கிரகங்கள் அமர்ந்திருக்கின்றனர்.

ஒரு முக்கிய நிலையாக இங்கே குரு, பாபர்கள் மூவரையும் சுபத்துவப்படுத்தும் அமைப்பில் இருந்தாலும், ராகுவுடன் எட்டு டிகிரிக்குள் இணைந்து குருவே வலிமை இழந்த நிலையில், தனது திறனை இழந்து கேதுவின் மகம் நட்சத்திரத்திலும் அமர்ந்திருக்கிறார்.

இந்தப் பெண் செவ்வாய் தசை, சனி புக்தியில் கணவரை இழந்தார். 2017 பிப்ரவரி மாதம் அவரது கணவரின் மரணம் நிகழ்ந்தது. அந்த நேரத்தில் இந்தப் பெண்ணின் தனுசு ராசிக்கு கடுமையான ஜென்மச்சனி நடந்து கொண்டிருந்தது.

பிறந்த ஜாதகப்படி எட்டுக்குடையவனான சனி புக்தி நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில், கோட்சாரத்தில் இளம் வயதினருக்கு கடுமையான மன அழுத்தத்தை கொடுக்கக் கூடிய ஜென்மச் சனியும் ஜாதகிக்கு நடந்து கொண்டிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஒருவர் எதன் மேல் அதிகமான நம்பிக்கை வைத்திருக்கிறாரோ அந்த அமைப்பை சீர்குலைக்கும் வேலையில்தான் பிறந்த ஜாதகத்தில் பாபத்துவம் பெற்ற சனியும், கோட்சாரத்தில் ஜென்மச் சனியாகவும், அஷ்டமச் சனியாகவும் இருக்கும் சனியும்  செய்வார்கள். குறிப்பாகச் சொல்லப்போனால் எங்கே அடித்தால் வலிக்குமோ அங்கே சனி அடிப்பார். உலகமே இருண்டு விட்டது போன்ற ஒரு நிலையை அந்த நேரத்தில் நீங்கள் அடைவீர்கள்.

பிறந்த ஜாதகத்தில் பாபத்துவம் பெற்ற சனி, எந்த பாவகத்தொடு தொடர்பு கொள்கிறாரோ. அந்த பாவகத்தின்படியான இழப்புகள் உங்களுக்கு இருக்கும். நீங்கள் குடும்பத்தின் மேல் அக்கறை குறைவாக இருந்து தொழிலை முழுமூச்சாக கவனிப்பவராக இருந்தால் கடுமையான தொழில் சிக்கல்களை மேலே சொன்ன காலகட்டங்களில் சனி தருவார்.

தொழிலைவிட குடும்ப உறவுகளின் மேல் நீங்கள் அதிக அக்கறை கொண்டவராக இருந்தால், குடும்ப உறுப்பினர்களை சனி பாதித்து உங்களுக்கு மன அழுத்தத்தைத் தருவார், இன்னும் ஆழமாகச் சொன்னால் குடும்ப உறுப்பினர்களிலும் எவர் ஒருவர் மேல் உங்களுக்கு அதிகமான அன்பு அல்லது அதிக நம்பிக்கை இருக்கிறதோ அந்த உறவு பாதிப்படையும் வேலைகளை பாபத்துவம் பெற்ற சனி செய்வார்.

ஒன்பது கிரகங்களிலும் சனி ஒருவரே இரக்கமற்ற தண்டனைகளை விதிக்கும் கிரகம். இவர் ஒருவரே முழுமையான பாபக்கிரகமாக நம்முடைய கிரந்தங்களில் குறிப்பிடப்படுகிறார். மற்ற பாபர்களான செவ்வாய், ராகு-கேதுக்கள் முழுமையான பாபர்களாக நமது மூலநூல்களில் சொல்லப்படவில்லை.

சனி சுபத்துவ, சூட்சும வலுவோடு இருக்கிறாரா அல்லது பாபத்துவ வலுவோடு இருக்கிறாரா என்பதைக் கணிப்பதில் மிகப் பெரிய சிக்கல் இருக்கும். சனி என்ன செய்வார், அவர் எத்தகைய வலுவுடன் இருக்கிறார் என்பதைக் கணிக்க ஒருவருக்கு மிகப் பெரிய ஜோதிட ஞானமும், நீடித்த அனுபவமும் தேவைப்படும்.

ஜோதிடக் கணிப்புகளை தடுமாற வைப்பதில் முதல்நிலை வகிக்கும் கிரகம் ராகு என்றால், அந்த ராகுவுடன் இணைந்த சனி ஒரு ஜோதிடரை மிகவும் குழப்பி விடும் கிரகமாக இருப்பார்.

அடுத்த வெள்ளி தொடருவோம்.

 

One thought on “குடும்பத்தைக் குலைக்கும் சனி..! -D-039

  1. வணக்கம் ஐயா… அருமை. .ஐயா…மிகவும் தெளிவாக சனி பகவான் பற்றி விளக்கம் கொடுத்து புரியும் படி எழுதி உள்ளீர்கள்… அற்புதமான விளக்கங்கள் ஐயா…மிக்க நன்றி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *