adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 219 (25.12.18)
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 8681 99 8888

ராகேஷ், நியூஜெர்சி, யு.எஸ்.ஏ.

கேள்வி.

உங்களின் பெரிய விசிறி நான். 2015-ல் திருமணம் முடிந்து, 2017-ல் மனைவி  பிரிந்து விட்டாள். நாங்கள் சேருவோமா அல்லது விவாகரத்து நடக்குமா? எனக்கு மறுமணம் உள்ளதா? குழந்தை இருக்கிறதா, இல்லையா? ஒரே குழப்பமாக உள்ளது. அமைதி இல்லை. உங்களைத்தான் கடவுள் போல நம்பியிருக்கிறேன். பதில் கூறவும்.

பதில்.

(கணவன் 20-4-1982 காலை 5-28 ஹைதராபாத், மனைவி 11-6-1987 இரவு 8-56 ஹைதராபாத்)

மீனலக்னம், கும்ப ராசியாகி, லக்னத்திற்கு ஏழில் செவ்வாய், சனி அதுவே ராசிக்கு எட்டு என்றாகி லக்னாதிபதி குரு எட்டில் மறைந்த ஜாதகத்தைக் கொண்ட உங்களுடன், கடுமையான ஜென்மச்சனி நடக்கும் கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி பெண்ணை இணைத்தது தவறு.

அந்தப் பெண்ணிற்கு தனுசு லக்னமாகி, ஆறாம் அதிபதி சுக்கிரனின் தசையும், ஏழரைச் சனியும் நடந்து கொண்டிருக்கும் போது, உங்களைப் போன்ற ஒரு ஜாதக அமைப்பு கொண்டவரை இணைத்து வைத்தால் விவாகரத்து என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. பெண்ணின் ஜாதகப்படியும் லக்னத்திற்கு ஏழில் செவ்வாய் அதுவே ராசிக்கு எட்டு என்றாகி, ராசியில் சனி அமர்ந்து சுக்கிரனை பார்க்கிறார். திருமண நேரத்தில் ஒருவருக்கு பாபத்துவம் பெற்ற ஆறு, எட்டாம் அதிபதிகளின் தசை அல்லது புக்தி நடக்கக் கூடாது.

ஜாதகப்படி 2-7-க்குடைய செவ்வாயும், புதனும் பரிவர்த்தனையாகி தற்போது சனி தசையில் ராகு புத்தி நடப்பதால், உங்களுக்கு இன்னொரு திருமணம் உண்டு. லக்னாதிபதி வலு இழந்தாலே, 40 வயதிற்குப் பிறகுதான் நல்லவைகள் நடக்கும். உங்களுக்கு லக்னாதிபதி குரு எட்டில் மறைந்து அம்சத்தில் நீசம். 5-க்குடைய சந்திரனும் 12-ல் எட்டுக்குடையவனுடன் மறைந்திருக்கிறார், காரகனும் வலுவிழந்து, ஸ்தானாதிபதியும் மறைந்திருப்பதால் கடுமையான புத்திர தோஷம் இருக்கிறது.

8-12-ம் இடங்கள் குரு, சுக்கிர இருப்பு மற்றும் பார்வையால் சுபத்துவமாக இருப்பதால் அமெரிக்காவில் இருக்கிறீர்கள். வாழ்நாள் முழுக்க அங்கேதான் இருப்பீர்கள். இன்னொரு திருமணம் உண்டு. அந்தத் திருமணம் நிலைத்திருக்கும். லக்னாதிபதி குருவை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை செய்து கொள்ளுங்கள். புத்திர பாக்கியம் உண்டு, வாழ்த்துக்கள்.

வி. பத்மாவதி, ஈரோடு-2

கேள்வி.

இது எனது தங்கை மகள் ஜாதகம். நாங்கள் பார்த்த ஜோதிடர்கள் இது ஆயுள் தோஷ ஜாதகம் என்றும் பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் சொல்கிறார்கள். கூடுதலாக அனைத்து சுகங்களும் போய்விட்ட பாவ ஜாதகம் என்றும் சொல்கிறார்கள். எனது தங்கை மகளுக்கு ஆயுள் தீர்க்கமா அல்லது இது ஆயுள் தோஷம் உள்ள ஜாதகம்தானா? ஆயுள் பங்கம் எனில் எப்போது?

பதில்.

(மகர லக்னம், சிம்ம ராசி, 1ல் சுக், சனி, ராகு, 5ல் செவ், 7ல் குரு, கேது, 8ல் சந், 11ல் புத, 12ல் சூரி, 4-1-1991 காலை 8-18 ஈரோடு)

வேத ஜோதிடத்தில் எல்லாவிதமான தோஷ அமைப்புகளையும் நீக்கும் சக்தி  குருவின் பார்வைக்கு உண்டு என்று கூறப்பட்டிருக்கிறது. இதில் முக்கியமான விஷயம் குருவிற்கு பார்வை பலம் இருக்க வேண்டும் என்பதுதான். தங்கை மகளின் ஜாதகப்படி ஆயுள் தோஷ நிலைகள் இருப்பது உண்மைதான். ஆயுள் காரகனும், லக்னாதிபதியுமான சனி அஸ்தமனமாகி இருக்கிறார். ஆனால் சூரியனுடன் ஒரே ராசியில் இணையவில்லை. கூடுதலாக ராகுவுடனும் சனி மிக நெருக்கமாக இணைந்து கிரகணம் அடைந்திருக்கிறார். அஷ்டமாதிபதி சூரியனும் பன்னிரண்டில் மறைந்திருக்கிறார்.

எத்தனை குறைகள் இருந்தாலும், கேதுவுடன் கூடி உச்சனாக உள்ள குருவின் பார்வை லக்னத்திற்கும், லக்னாதிபதி சனிக்கும் கிடைப்பது அனைத்து தோஷங்களையும் நீக்குகின்ற ஒரு அமைப்பு. வலுப்பெற்ற குருவின் பார்வை அஸ்தமனம், கிரகணம், நீசம், பகை போன்ற அத்தனை வலுவிழந்த நிலைகளையும் தூக்கி நிறுத்தும் என்பதால் இந்த ஜாதகத்தில் லக்னாதிபதி சனியின் அஸ்தமனம், கிரகண தோஷம் அனைத்தும் நீங்குகிறது. மேலும் அஸ்தமன சனி வர்கோத்தமம் அடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

குருவின் பார்வை இங்கே லக்னத்திற்கும், லக்னாதிபதிக்கும் கிடைக்கவில்லை என்றால் இந்த ஜாதகம் ஆயுள் குற்றமுள்ள ஜாதகம்தான். விதியை விட விதிவிலக்குகளை அதிகம் புரிந்து வைத்திருக்க வேண்டும் என்று நான் அடிக்கடி குறிப்பிடுவது இதனைத்தான், ஆயுள்தோஷம் இந்த பெண்ணிற்கு இல்லை

பி. சீனிவாசன், சென்னை-113.

கேள்வி.

அரசாங்கத்தில் வாட்ச்மேனாக இருக்கிறேன். கடுமையான கடன் தொல்லை. வரும் வருமானம் வட்டி கட்ட கூட போதவில்லை. திருமணம் நடைபெற்ற நாள் முதல் எனக்கும் மனைவிக்கும் தினமும் பிரச்சனை, அசிங்கம், அவமானம் போன்றவைகள் நடந்த வண்ணம் உள்ளது. தனியார் கம்பெனியில் வேலை செய்த நிம்மதி அரசு வேலையில் இல்லை. எட்டாம் வகுப்பு மட்டுமே படித்த நான் மேற்கொண்டு படிக்க விரும்புகிறேன். பதவி உயர்வு கிடைக்குமா? எப்போது கடன் தீரும்? மாமனார் வீட்டில் நல்ல நட்பு இல்லை. நான் நல்லது மட்டுமே நினைக்கிறேன். அவர்கள் என்னைப் புரிந்து கொள்ளவில்லை. வீட்டில் இருக்கும் சின்னச் சின்னப் பிரச்சனைகளை கூட மனைவி மாமனார் வீட்டில் சொல்வதால் என் மீது அவர்களுக்கு மரியாதை இல்லை. தயவு செய்து என் கேள்விக்கு பதில் தரவும்.

பதில்.

(மிதுன லக்னம், விருச்சிக ராசி. 2ல் குரு, 3ல் சனி, ராகு, 6-ல் சந், 9ல் கேது, 11-ல் சூரி, புத, சுக், செவ், 14-5-1979 காலை 9-40 சென்னை)

சூரியன் உச்சமாகி பத்தாமிடத்திற்கு அருகில் அமர்ந்து, செவ்வாய் சிம்மத்தைப் பார்த்ததால் அரசில் காவல் பணி கிடைத்த ஜாதகம் உங்களுடையது. ராசிக்கு 10க்குடைய சூரியனும் உச்சம், லக்னத்திற்கு 10-க்குடைய குருவும் உச்சம் என்பதால் நிரந்தர வருமானம் உள்ள அரசுப் பணி கிடைத்தது. சிம்மத்தில் சனி, ராகு இருப்பதால் இதைவிட மேலான பதவிக்கு வாய்ப்பு இல்லை. தற்போது நீச சந்திர தசை நடப்பதால் உங்களால் எதையும் நினைக்க மட்டுமே முடியும். அதை மன உறுதியோடு செயல்படுத்த முடியாது.

கடந்த சில வருடங்களாக கடுமையான ஏழரைச்சனி நடந்ததால், கடன் பிரச்சினைகள் அதிகமாக இருந்திருக்கும். அதிலும் நீச சந்திர தசையும், ஏழரைச் சனியும் இணைந்ததால் பிரச்சினைகள் கூடுதலாகவே இருந்திருக்கும். இனிமேல் படிப்படியாக பிரச்சினைகள் குறையும். 2020-ம் ஆண்டு முதல் ஓரளவிற்கு கடன் தொல்லைகள் இல்லாமல் இருப்பீர்கள். ஆறாமிடத்தை குரு பார்த்து அதிகமான சுபத்துவம் அடைவதால், கடன் தொல்லை நிரந்தரமாக தீராது. அடுத்த தீபாவளி முதல் மாமனார் வீட்டிலும் ஓரளவிற்கு மரியாதை கிடைக்கும். வாழ்த்துக்கள்.

ஏ. முனியாண்டி, சென்னை.

கேள்வி.

குருஜி ஐயாவிற்கு பணிவான வணக்கம். மகனுக்கு 2015-ல் மைத்துனர் மகளை திருமணம் செய்து வைத்தேன். மருமகள் படிப்பிற்காக மதுரையிலும், மகன் வேலைக்காக சென்னையிலும் இருந்தார்கள். மகன் அவ்வப்போது விடுமுறையில் மதுரை சென்று வந்தான். மருமகளின் படிப்பு முடிந்தவுடன் சென்னையில் வீடு பார்த்து மருமகள் அந்த வீட்டிற்கு வந்து பால் காய்ச்சி விட்டு அன்றே மதுரை சென்று விட்டாள். பின் சிறிது நாளில் தனது நண்பருடன் சேர்ந்து தலைமறைவாகி விட்டார். தற்போது விவாகரத்தாகி விட்டது. ஒரே மகன் வேதனையுடன் இருப்பது எங்களுக்கு சொல்ல முடியாத கவலையாக இருக்கிறது. மறுமணம் செய் வரும் வரன்கள் அனைத்தும் இரண்டாவது திருமண பெண்களாகவே வருகின்றனர். நாங்கள் முதல் மணப்பெண் அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இவனுக்கு எப்படி அமையும்? முதல் மணம் செய்யும் பெண்ணா அல்லது இரண்டாவதா? இவன் ஜாதகத்தில் குலதெய்வ கோபம், முன்னோர் சாபம் உள்ளதா? பரிகாரம் தேவை என்றாலும் செய்வதற்கு தயாராக உள்ளோம்.

பதில்.

(ரிஷப லக்னம், கடக ராசி. 3ல் சந், சுக், 4ல் சூரி, புத, செவ். 6ல் சனி, கேது, 9ல் குரு, 12ல் ராகு, 10-9-1985, இரவு 11- 02 மதுரை)

ஜாதகப்படி குறைபட்ட ஒரு பெண்தான் மகனுக்கு இரண்டாவதாக அமையும். அது இரண்டாவது திருமணமாக இருக்கலாம் அல்லது ஊரறிய நிச்சயமாகி திருமணம் நின்ற பெண்ணாக இருக்கலாம். இதுபோன்ற ஜாதகத்திற்கு திருமணமாகி தாம்பத்தியமே நடக்காத பெண்ணும் அமைவது உண்டு.

ஏழாமிடம், ஏழாம் அதிபதியை விட 11-மிடம், 11-ம் அதிபதி வலுவானால் இரண்டு திருமணம் என்பது விதி. அதன்படி 11-ம் அதிபதி குரு நீசமாகி வக்கிரம் பெற்று, சனியின் உச்சத்தாலும், சந்திர கேந்திரத்தாலும் முறையான நீசபங்கம் பெற்றதால், மகனுக்கு இரண்டாவது வாழ்க்கை நன்றாக இருக்கும். குரு நீசம் என்பதால் சிறிய குறையுள்ள பெண் அமைவார். அதுபோன்ற பெண்ணை தாராளமாக திருமணம் செய்து வைக்கலாம்.

குல தெய்வ கோபம், முன்னோர் சாபம் போன்ற ஜோதிடத்திற்கு சம்பந்தமில்லாத கேள்விகளை நீங்களாகவே கேட்பதால்தான், ஒரு ஜோதிடர் வாய்க்கு வந்த  எதையாவது சொல்லி, உங்களை திருப்திப்படுத்த பரிகாரம் சொல்லும் நிலைக்கு ஆளாகிறார். குலதெய்வம் என்பது அன்பே வடிவான, நம்மை என்றைக்கும் காப்பதற்கென்று உள்ள உயர்தெய்வம். அதற்கு கோபம் வந்தால் அது குல தெய்வமாகவே இருக்காது. வெறும் பரிகாரங்களுக்காக மட்டுமே சொல்லப்படும் இதுபோன்ற அறிவுக்கு ஒவ்வாத விஷயங்களை ஒதுக்கித் தள்ளி ஜோதிடத்தை ஒரு விஞ்ஞானமாக பார்க்க கற்றுக் கொள்ளுங்கள்.

3 thoughts on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 219 (25.12.18)

  1. சூ.கர்ணண்,
    பிறந்த தேதி&நேரம்&இடம்-05-05-1998, இரவு-10.15, கோவில்பட்டி.

    வணக்கம் குருஜி,
    நான் தொழில்நுட்ப கல்வி படித்துள்ளேன்.இரண்டரை வருடமாக அரசு தேர்வு முயற்சி செய்து வருகிறேன்.இப்போது வரை கிடைக்கவில்லை,கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை-ல் காத்திருக்கிறேன்.தற்காலிகமாக தனியார் கம்பெனிகளில் வேலை செய்கிறேன்.ஆனால் எங்கும் ஆறு மாத்த்திற்க்கு மேல் நிலைக்க முடியவில்லை.இது சம்மந்தமாக உள்ளூரில் ஜோதிடரை அனுகினால்
    ஒருவர் அரசு வேலை கிடைக்கும் என்றும்,மற்றொருவர் கிடைக்காது என்றும் கூறுகிறார்கள்.சிலர் ஜாதகத்தில் உத்தியோகத்திற்க்கான அமைப்பு இல்லை,இது தொழில் செய்வதற்க்கான ஜாதகம் என்கின்றனர்.மிகுந்த குழப்பத்தில் ஆழ்ந்துள்ளேன்,இதனால் தூக்கமும் வரமறுக்கிறது.நானே வீட்டிற்க்கு மூத்த மகன்,பெற்றோர் வயதானவர்கள்,தங்கை படிக்கிறாள்.இவ்வாறு குடும்பம் என்னை நம்பியே உள்ளது.எனக்கு அரசு வேலை கிடைக்குமா என்றும்,அவ்வாறு கிடைக்கும் என்றால் எந்த அரசுத்துறை-ல் எப்போது கிடைக்கும் எனக்கு வழிகாட்டும்படி பணிவன்புடன்
    வேண்டுகிறேன்.
    மாலை மலரில் எனக்கு பதில் கிடைக்கும் என நம்பிக்கையுடன்,
    சூ.கர்ணண்.
    நன்றி.

  2. GURIJI VANAKKAM,
    NAME:KARNAN
    DATE OF BIRTH: MAY 05 1998,TIME OF BIRTH: 10:15pm
    BIRTH PLACE:KOVILPATTI,TUTICORIN DST.

    AYYA ENAKKU GOVERNMENT JOB KIDAIKKUMA,FORIEGN POVENA……EPPOTHU NADAKKUM….

  3. ஐயா வணக்கம் எனக்கு விவகாரத்து முடிந்து 18 வருடம் ஆகிறது மறுமணம் செய்யவில்லை என் குழந்தைக்கு ,19 வயது அவள் படிப்புக்காக வெளியூா் இருக்கிறாள் அவளுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிப்பு வருகிறது நான் அடிக்கடி கோவில்க்கு சென்று வழிபடுகிறேன் எனக்கு என்ன செய்வதுஎன்று தொியவில்லை தங்களின்பதிலாக நான் காத்து இருக்கிறேன் ஐயா பிறந்த தேதி 24/11/2000 சுவாதி நட்சத்திரம் துலாம் ராசி அதிகாலை 3.45,க்கு பிறந்தாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *